மகன் பேசவில்லை, கடன், தற்கொலை எண்ணம்..! வாசகிக்கு நிபுணர்களின் ஆலோசனை #LetsSpeakRelationship

பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை. அதை அவர்கள், ஒருபோதும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.
சமீபத்தில், விகடனின் uravugal@vikatan.com (இந்த மெயில் ஐடி-க்கு வாசகர்கள் அனுப்பும் குடும்ப உறவுகள் குறித்த சிக்கல்களுக்கு, தகுந்த நிபுணர்கள் மூலம் ஆலோசனைகளைக் கூறிவருகிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் அனுப்பலாம்) என்ற மெயிலுக்கு, பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன், வாசகி ஒருவரிடமிருந்து மெயில் ஒன்று வந்திருந்தது. அதில், தன் பிரச்னைகளைக் கூறியிருந்த ஒரு தாய், தற்கொலை செய்துகொள்ளலாம்போல உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மனநிலையின் தீவிரத்தை உணர்ந்த நாங்கள், முதலில் அவரின் மெயில் ஐடி-யில் அவரைத் தொடர்புகொண்டு ஆறுதலான வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்திவிட்டு, உடனடியாகத் தகுந்த நிபுணர்களிடம் பேசி, அவரின் பிரச்னைக்கான ஆலோசனைகளைப் பெற்றோம். அவற்றை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.
"எனக்கு ஒரே மகன். அவனுக்குத் திருமணமானதிலிருந்து என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். என்னை கவனித்துக்கொள்வதும் இல்லை. கடன் பிரச்னைகள் வேறு உள்ளன. என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளலாம்போல இருக்கிறது. இதிலிருந்து விடுபட ஏதாவது தீர்வு சொல்லுங்கள்." - இதுதான் அந்த வாசகியின் கேள்வி.
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் சந்திக்கும் குடும்பச் சிக்கல்தான் இது. ஆனால், இது ஒருவரை தற்கொலை எண்ணம்வரை கொண்டுசெல்கிறது எனும்போது, அதன் வீரியத்தை உணர முடிகிறது. எனவே, உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கரிடம் இந்தப் பிரச்னையைக் கூறி தீர்வுகளைக் கேட்டோம்.
"உங்கள் மகனுக்கு நடந்தது காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பது தெரியவில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால், உங்கள் மகனும் மருமகளும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நிச்சயமாகத் தனிமை தேவைப்படும். அதனால், திருமணம் முடிந்த சில காலம் வரைக்கும் அவர்கள் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் போகலாம். எனவே, இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
'என் மகன் என்னை இடைஞ்சலாக நினைக்கிறான்' என்று நீங்களாகவே முடிவுசெய்துகொள்ளாதீர்கள். மேலும், எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. இவ்வளவு மன அழுத்தத்தில் உள்ள நீங்கள், உங்கள் மகனிடம் இதுபற்றி மனம்விட்டுப் பேசினீர்களா என்பதுபற்றி உங்கள் மெயிலில் எதுவும் குறிப்பிடவில்லை. ஒருவேளை, இன்னும் உங்கள் மன வருத்தத்தைப் பற்றி உங்கள் மகனிடம் பேசவில்லையென்றால், உடனடியாகப் பேசிவிடுங்கள்.

பிள்ளைகளுக்குத் திருமணமாகி, அவர்களுக்கென ஒரு குடும்பம் வந்த பிறகு, பெற்றோர் மீதான பாசம் நீறு பூத்த நெருப்பாக மாறிவிடுகிறது. அதனால்தான் பல பெற்றோர்கள், 'திருமணத்துக்கு முன் என் மகன் என்மீது பாசமாக இருந்தான். திருமணத்துக்குப் பிறகு பாசமில்லாமல் போய்விட்டான். எல்லாவற்றுக்கும் காரணம் புதிதாக வந்த மருமகள்தான்' என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் மகன் என்றுமே உங்கள் மகன்தான். ஆயிரம் புது உறவுகள் வந்தாலும் குழந்தைகளுக்குத் தாய்தான் முதல் உறவு. அதுவும் தாய்-மகன் எனும்போது, இந்தப் பாசம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். அதை உங்கள் மகன், முன்புபோல வெளிப்படுத்தாமல் போனாலும், அவர் மனதுக்குள் உங்கள் மீதான பாசம் அப்படியேதான் இருக்கும்.
அடுத்தது கடன் பிரச்னை. கடன் வாங்கியது நீங்களா, உங்கள் கணவரா அல்லது உங்கள் மகனா என்பது பற்றி உங்கள் கேள்வியில் விளக்கம் இல்லை. எது எப்படியிருந்தாலும், உங்கள் கடன் பிரச்னையை மகன்தான் தீர்க்க வேண்டுமென்றால், அது தொடர்பாக உங்கள் மகனிடம் வெளிப்படையாகப் பேசுங்கள்.

எப்போதும் கஷ்டங்களை மனதில் வைத்துப் புதைக்காதீர்கள். அது, உங்களை விபரீத முடிவுகள் எடுப்பது பற்றி யோசிக்க வைக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள நம்பிக்கைக்குரியவரிடம் உங்கள் பிரச்னைகள் பற்றி மனம்விட்டுப் பேசினால், உங்கள் மன அழுத்தம் குறையும். உங்கள் மகனிடம் மனம்விட்டுப் பேசினால் மட்டுமே உங்கள் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். தற்கொலை பற்றியெல்லாம் தயவுசெய்து யோசிக்காதீர்கள்" என்றார்.
ஒருவேளை, நம் வாசகியை அவருடைய மகன் கவனித்துக்கொள்ளவில்லை அல்லது பராமரிக்கவில்லையென்றால், சட்டரீதியாக என்ன செய்யலாம் என்று வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் கேட்டோம்.
"பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளவேண்டியது பிள்ளைகளின் கடமை. அதை அவர்கள் ஒருபோதும் மறக்கவும், மறுக்கவும் முடியாது. இந்தக் கடமையிலிருந்து தவறும் பிள்ளைகள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். உங்களை கவனிக்கத் தவறும்பட்சத்தில், உங்கள் மகனிடம் 'ஜீவனாம்சம்' கேட்டு வழக்குத் தொடரலாம். உங்கள் மகனின் வருமானத்திற்கு ஏற்ப உங்களுக்கு ஜீவனாம்சத் தொகை கிடைக்கும். தவிர, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு மசோதாவின்படி, பெற்றோரை கவனிக்காத மகன் மற்றும் மருமகளுக்கு, தண்டனைகூட கிடைக்கலாம்'' என்றார்.