Published:Updated:

அதிகம் பேசும் பெண்... அதை விரும்பாத ஆண்... எது தவறு?! - ஓர் உளவியல் பதில்

ஒரு பிரச்னையின்போது, பெண் தன் மனதிற்கு வெளியே மற்றவர்களுடன் பேசுவாள். அதை நம்மால் கேட்க முடியும். ஆனால் ஓர் ஆண், தன் மனதுக்குள்ளேயே பேசிக்கொள்வான்.

ஆண், பெண் பேச்சு
ஆண், பெண் பேச்சு

"உலகத்தின் கடைசி நாள் இன்றுதானா என்பதுபோல்

பேசிப் பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே..."

என்ற பாடல் வரிகளைப் போல, பெண்கள் எவ்வளவுதான் பேசினாலும் அவர்களிடம் வார்த்தைகள் குறைவதே இல்லை. ஒரு பெண், தன் தோழிகளுடன் கூடிப் பேசுவதில் காட்டும் அதீத ஆர்வத்தை, ஓர் ஆண் தன் நண்பர்களுடன் பேசுவதில் காட்டுவதில்லை. பேச்சில் ஆண், பெண் இருவரின் உளவியலும் வேறு வேறு. இந்த உளவியலைப் புரிந்துகொள்ளாத ஓர் ஆண், ஹாசினி டைப்பில் பேசிக்கொண்டேயிருக்கும் தன் காதலியிடம், 'கொஞ்சம் பேசாம இருடி, எப்போ பார்த்தாலும் தொனத்தொனன்னு பேசிட்டே இருக்க' என்று கூறினால் என்ன நடக்கும்? உடனே பிரேக்-அப்பும் பேக்-அப்பும்தான்!

ஆண், பெண் பேச்சு
ஆண், பெண் பேச்சு

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வரும் சண்டையே இந்தப் பேச்சால்தான். அதிகம் பேசுவது பெண்ணின் தவறும் இல்லை; அதிகம் பேசுவதை விரும்பாதது ஆணின் தவறும் இல்லை. இது, ஆண்-பெண் மூளை அமைப்பையும் அவர்களின் உளவியலையும் சார்ந்தது. இதைப் புரிந்துகொண்டாலே போதும்... தம்பதிகளுக்கு இடையே நடக்கும் சண்டைகள் முடிவுக்கு வந்துவிடும்.

ஆண்கள் மற்றும் பெண்களின் 'பேச்சு' பற்றிய உளவியலை, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலன் - பார்பரா பீஸ் தம்பதி, தங்களின் 'ஆண்கள் ஏன் கேட்பதில்லை' என்ற புத்தகத்தில் அழகாக விவரித்துள்ளனர். அதிலிருந்து...

ஆண், பெண் பேச்சு
ஆண், பெண் பேச்சு

நாம் எப்படிப் பேசுகிறோம்?

எந்த நாட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் பேசுவதை கேட்டுப்பாருங்கள். ஆண், பெண் மூளையின் வடிவமைப்பு, அவர்களை இரு வேறு விதமாகப் பேசவைப்பதைக் காணலாம். யார் யாரை நேசிக்கிறார்கள், யார் யாருடன் கோபமாக இருக்கிறார்கள் என்பது பற்றி சிறுமிகள் பேசுவார்கள். அவர்கள், சிறுசிறு குழுக்களாக விளையாடுவார்கள். உறவை வளர்க்க மற்றவர் பற்றிய ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். வளர்ந்த பின்னர் பெண்கள், உணவுக்கட்டுப்பாடு, தனிப்பட்ட உறவுகள், திருமணம், குழந்தைகள், காதலர்கள், குணநலன்கள், ஆடைகள், தனிப்பட்ட பிரச்னைகள் என எது பற்றியும் பேசுவார்கள்.

ஆனால், சிறுவர்களைப் பொறுத்தமட்டில், யார் என்ன செய்தார்கள்... யார் எதில் சிறந்து விளங்குகிறார்கள், பொருள்கள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றியும், அவர்கள் வளர்ந்த பிறகு, விளையாட்டு, தொழில், செய்தி, அவர்கள் என்ன செய்தார்கள், எங்கே சென்றார்கள் என்பது பற்றியும், தொழில்நுட்பம், கார்கள், செல்போன்கள் போன்ற கருவிகள் பற்றியும்தான் பேச விரும்புவார்கள்.

காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும் கண்ணியமான தொடுதல்கள்!

ஆண் - பெண் மூளை அமைப்பும் பேசும் திறனும்!

'ஆண்கள் சிறந்த பேச்சாளர்கள் இல்லை. பெண்களோடு ஒப்பிடுகையில்' என்ற உண்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் அறிந்ததே. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் விரைவாகப் பேச ஆரம்பித்துவிடுவதோடு, மூன்று வயது சிறுவனைவிட மூன்று வயது சிறுமிக்கு அதிக வார்த்தைகள் தெரியும்.

ஆண், பெண் பேச்சு
ஆண், பெண் பேச்சு

ஆண்கள், இடது மூளையை முக்கியமாகப் பயன்படுத்துகிறார்கள். பேச்சுக்கான மையம் அதில் இல்லை என்பதால், பெரும்பாலும் ஆண்களைப் பொறுத்தவரை பேச்சும், மொழியும் முக்கியத் திறமைகளாக இருப்பதில்லை.

ஆனால், பெண்களின் இடது மூளையின் முன்புறத்திலும், வலது மூளையின் குறிப்பிட்ட சிறிய இடத்திலும் பேச்சுத்திறன் மையங்கள் இருக்கின்றன. மூளையின் இரண்டு புறங்களிலும் பேச்சுத்திறனுக்கான மையங்கள் இருப்பதால், பெண்கள் சிறப்பான பேச்சாளர்களாக இருக்கிறார்கள். பெண்கள் பேசுவதை ரசிக்கிறார்கள், ஏராளமாகப் பேசுகிறார்கள். பேச்சுக்காக, குறிப்பிட்ட பகுதிகள் இருப்பதால், மூளையின் மற்ற பகுதிகள் மற்ற பணிகளைச் செய்ய ஒதுக்கப்படுகின்றன. இதனால்தான், பேசும்போதே அவர்களால் பல வேலைகளைச் செய்யமுடிகிறது.

பேச்சை விரும்பும் பெண்கள்!

'பெண்கள், தொலைபேசியில் அதிக நேரம் பேசிக்கொண்டே இருப்பார்கள்' என்பது ஆண்களின் புலம்பல். தகவல்களை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்கான வழியாகத்தான் ஆண்கள் தொலைபேசியைக் கருதுகிறார்கள். ஆனால், பெண்கள் அதை உறவை வளர்ப்பதற்கான வழியாகக் காண்கிறார்கள். ஒரு பெண் தன் தோழியுடன் இரண்டு வாரம் சுற்றுலா சென்று திரும்பிய பிறகும், அவளுடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் பேச முடியும்!

ஆண், பெண் பேச்சு
ஆண், பெண் பேச்சு

பேச்சின் மூலமாக உறவை வளர்ப்பது என்ற முக்கியத்துவத்துடன் பெண்ணின் மூளை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே அதிகமாகப் பேசுபவர்கள் இத்தாலியப் பெண்கள். அவர்கள், ஒரு நாளைக்கு 6 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் வார்த்தைகள்வரை பேசுகிறார்கள். மேலும், 2 - 3 ஆயிரம் சத்தங்களையும், 8 - 10 ஆயிரம் உடல் மொழிகள், முகபாவங்கள், தலை அசைவுகள், சைகைகளைப் பயன்படுத்தி தகவல்தொடர்புகொள்கிறார்கள். இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்தால், சராசரியாக இவர்கள் 20 ஆயிரம் தகவல்கள்தொடர்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்கள் கருத்துகளைக் கூறுகிறார்கள்.

இத்தாலியப் பெண்ணின் பேச்சின் இந்தப் புள்ளிவிவரங்களோடு இத்தாலிய ஆணின் பேச்சை ஒப்பிடுகையில், அவன் 2 - 4 ஆயிரம் வார்த்தைகளையும், ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் சத்தங்களையும், 2 - 3 உடல்மொழி அசைவுகளையும் மட்டுமே பயன்படுத்துகிறான். இவற்றைக் கூட்டினால், இத்தாலிய ஆண் சராசரியாக ஏழாயிரம் தகவல் தொடர்புகளை மட்டுமே பயன்படுத்துகிறான். பெண்கள் பேசுவதில், இது மூன்றில் ஒரு பங்குதான்.

இதனால்தானோ என்னவோ, ஆண்களைவிட பெண்களுக்குத் தாடை வலி வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்கிறது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம்.

ஆண், பெண் பேச்சு
ஆண், பெண் பேச்சு

ஆண்களும் பேச்சும்!

பெண்ணின் வாக்கியங்களைவிட, ஆணின் வாக்கியங்கள் குறுகியவை. ஆனால், அதில் எளிய தொடக்கமும் தெளிவான கருத்தும், முடிவும் இருக்கும். அவனுக்கு என்ன தேவை, என்ன கூறவருகிறான் என்பதைப் புரிந்துகொள்வது எளிது.

ஓர் ஆணுடன் நீங்கள் பேச விரும்பினால், அவன் பேசும்போது குறுக்கிடாமல் இருப்பதுதான் சிறந்த வழி. ஆனால், இது பெண்களுக்கு சிக்கலானது. ஏனெனில், அவளைப் பொறுத்தவரை இருவரும் ஒரே சமயத்தில் பேசுவதுதான் உறவை வளர்க்கும் என்று நினைக்கிறாள். தான் இருப்பதை அவனுக்கு உணரச்செய்ய, அவன் பேசும்போதே அவளும் பேசத் தூண்டப்படுகிறாள். ஆனால், அவள் முரட்டுத்தனமாக இடையூறு செய்வதாக நினைத்து ஆண் வருத்தப்படுகிறான்.

பெண்கள் மறைமுகமானவர்கள்!

உலகெங்கும், ஆண்கள் பெண்களிடம் கூறும் வாசகம், 'கொஞ்சம் புரியுற மாதிரிதான் சொல்லேன்' என்பதுதான். பெண்கள் பேசும்போது, நேரடியாக எதையும் கூற மாட்டார்கள். தனக்கு என்ன தேவை என்பதை குறிப்பாகத்தான் கூறுவார்கள். மறைமுகமாகப் பேசுவது பெண்களின் தனித்தன்மை. அதற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் உண்டு. இந்த மறைமுகப் பேச்சு, உறவையும் பழக்கத்தையும் வளர்க்க, பிளவையும் பிணக்கத்தையும் தவிர்க்க உதவுகிறது.

ஆண், பெண் பேச்சு
ஆண், பெண் பேச்சு

ஆண்கள் நேரடியானவர்கள்!

ஆண்கள் பேசும் வாக்கியங்கள் குறுகியவை, நேரடியானவை. இவை வெளிப்படையாகவும் செயல் திறன் மிக்கவையாகவும் இருக்கும். இப்படிப்பட்ட பேச்சால் வர்த்தக ஒப்பந்தங்கள் விரைவாகத் திறமையுடன் பேசி முடிக்கப்படுகின்றன. இந்தப் பேச்சு மற்றவர்மீது நேரடியாக ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடியது. சமூகச் சூழல்களில் ஆண்கள் இப்படி நேரடியாகப் பேசுவது அதிர்ச்சியாகவும் முரட்டுத்தனமாகவும் மற்றவர்களுக்குத் தோன்றக்கூடும்.

மன அழுத்தமும் ஆண், பெண் பேச்சும்!

அழுத்தமுள்ள சூழலில் ஒரு பெண்ணின் பேச்சு தூண்டப்படுகிறது. மன அழுத்தம் உள்ள நேரத்தில் அவள் பேச ஆரம்பித்து, பேசிக்கொண்டே இருக்கிறாள். அவளால் தன் தோழிகளிடம் மணிக்கணக்காகத் தன் பிரச்னைகளைப் பற்றிப் பேச முடியும். நுட்பமாக விவரிக்க முடியும். பிறகு, அவர்கள் அனைவரும் அந்தப் பிரச்னைகளைப் பற்றி அலசி ஆராய்வார்கள். இப்படிப் பேசுவதால், பெரும்பாலும் அந்தப் பெண்ணுக்கு எந்தத் தீர்வும் கிடைத்துவிடாது. ஆனால் அந்தப் பேச்சு, பிரச்னைகள் முடிந்துவிட்டதைப் போன்ற ஒரு விடுதலையை அந்தப் பெண்ணுக்குத் தந்துவிடும்.

ஆண், பெண் பேச்சு
ஆண், பெண் பேச்சு

ஒரு பிரச்னையின்போது, பெண் தன் மனதிற்கு வெளியே மற்றவர்களுடன் பேசுவாள். அதை நம்மால் கேட்க முடியும். ஆனால் ஓர் ஆண், தன் மனத்திற்கு உள்ளேயே பேசிக்கொள்வான். அவனுக்கு ஒரு பிரச்னை என்றால், அவன் தனக்குத் தானே பேசிக்கொள்ள விரும்புகிறான். இதனால்தான் பிரச்னைகள் அழுத்தும்போதோ அல்லது மன அழுத்தம் ஏற்பட்டாலோ, ஓர் ஆண் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியாகிவிடுகிறான்.

இப்படிப் பல விஷயங்கள் ஆலன் - பார்பரா பீஸ் தம்பதியின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆண் பெண் இருவரின் பேச்சு, உளவியலுக்குப் பின் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளதைப் பற்றி மனநல ஆலோசகர் கண்ணனிடம் பேசினோம்.

"ஒரு பிரச்னை என்று வந்தால், அதை யாரிடமும் அதிகம் பகிர்ந்துகொள்ளாமல் சரிசெய்ய விரும்புவது ஆணின் உளவியல். ஆனால், அனைவரிடமும் அந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசித் தீர்வு காண நினைப்பது பெண்ணின் உளவியல். வேறுபட்ட உளவியல் கொண்ட இருவர் சேர்ந்து ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும்போது, அவர்களிடத்தே மேலும் ஒரு பிரச்னை தோன்றுவது இயல்பு.

மனநல ஆலோசகர் கண்ணன்
மனநல ஆலோசகர் கண்ணன்

பெண்கள் எப்போதும் குழுக்களாக இருக்கவும், அதிகம் உரையாடவும் விரும்புவார்கள்; உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் ஆண்கள், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இருந்தாலும் அதிகம் பேசாதவர்கள். உறவுகளோடு ஒப்பிடும்போது, தங்கள் வேலைகளுக்கும் திறமைக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் தருவதால் பேச்சைவிட செயல்களிலேயே அதிக கவனம் கொண்டவர்கள்.

ஒரு பெண் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அதற்கான காரணத்தை வெளியில் சொல்லிப் புலம்பியோ, அழுதோ ஆறுதல் தேடுவாள். ஆனால், மன அழுத்தத்தில் உள்ள ஓர் ஆண், அதற்கான காரணத்தைத் தன் மனைவி அல்லது நண்பர்களிடம்கூட வெளிப்படுத்துவதில்லை. இயற்கை, இவர்கள் இருவரையுமே சேர்ந்து வாழப் பணித்துள்ளது. எனவே, ஒரு சாராரின் இயல்பையும் உளவியலையும் மற்றொரு சாரார் புரிந்துகொள்ளும்போது, அவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகள் முடிவுக்கு வரும்" என்றார்.

ஆண், பெண் பேச்சு
ஆண், பெண் பேச்சு

மொத்தத்தில், அதிகமாகப் பேசுவது பெண்களின் குறையும் இல்லை. குறைவாகப் பேசுவது ஆண்களின் தவறும் இல்லை. இந்த உளவியலைப் புரிந்துகொண்டால் உறவுகளுக்கு இடையே எழும் வீணான விவாதங்களுக்கும் வாய்ப்பில்லை. புரிந்துகொள்ள முயல்வோம்!