Published:Updated:

`இது புரிந்தால் செக்ஸுவல் ஃபேன்டஸியும் இன்பமே!' - காமத்துக்கு மரியாதை - 14

``செக்ஸுவல் ஃபேன்டஸி 11 வயதிலிருந்தே வர ஆரம்பித்துவிடும். அது டீன் ஏஜில் எதிர்பாலின ஈர்ப்பு, அவர்களை முத்தமிட்டால் எப்படியிருக்கும், அணைத்தால் எப்படியிருக்கும் என நினைத்துப் பார்க்க வைக்கும். இந்தக் கற்பனைகளை காதலிக்கும்போதோ, திருமணத்துக்குப் பிறகோ நிஜமாக்கிக்கொள்வார்கள்."

சங்க கால அக இலக்கியங்களில் `மடலேறுதல்' என்றொரு முறைபற்றி சில பாடல்கள் இருக்கும். காம வசப்பட்ட தலைவன், தான் விரும்பிய பெண்ணை அடைவதற்குச் செய்கிற ஒரு முயற்சிதான் இந்த மடலேறுதல். பனை மட்டையின் இரண்டு பக்கங்களும் கூரிய முள்போல இருக்கும். லேசாக கைப்பட்டாலும் கத்திபோல கீறி விடும். இப்படிப்பட்ட பனை மட்டையில் குதிரை போன்ற உருவத்தைச் செய்வான் தலைவன். இதுதான் மடல். இந்த மடலை, தலைவி வாழ்கிற ஊருக்குள்ளோ, தெருவுக்குள்ளோ எடுத்துச்சென்று, அதன் மேல் தலைவன் ஏறிக் கொள்வான். அவன் கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிந்திருப்பான். இவனுடைய நிலைமையைப் பார்த்து இரக்கப்பட்டு தலைவியின் பெற்றோரும் ஊராரும், அவளைத் தலைவனுடன் சேர்த்து வைக்கலாம். அல்லது ஊராரின் பரிகாசங்களை அந்தத் தலைவன் அனுபவிக்க நேரிடலாம். `உன் மீதான என் காதலை ஊரறியச் சொல்வதால் நான் அவமானப்பட்டாலும் பரவாயில்லை. நீ என்னைக் காதலிக்கவில்லையென்றால் நான் உயிரையும் விடுவேன்' என்று தன்னுயிரைப் பணயம் வைத்து தன் காதலைச் சொல்வதுதான் இந்த மடலேறுதல். இப்படி ஊரார் பார்க்க தன் காதலை வெளிப்படுத்துதல், இலக்கியங்களில், சினிமாக்களில் மட்டுமல்ல, கடந்த சில வருடங்களாகக் காதலைச் சொல்லும் நாள்களிலும் (Proposal day) நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தியேட்டரில், ஷாப்பிங் மாலில், கடற்கரையில் என பொது இடங்களில் எதிர்பாராவிதமாக ஆணோ அல்லது பெண்ணோ தன் காதலை, தான் காதலிப்பவரிடம் மண்டி போட்டு, ஒற்றை ரோஜா கொடுத்துத் தெரிவிப்பார்கள். மடலேறுதல் முதல் மண்டியிடுதல் வரை எல்லாமே காதலை வெளிப்படுத்தும் ஃபேன்டஸிதான். இதைப்போலவே காமத்திலும் ஃபேன்டஸி இருக்கிறது.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Thomas AE on Unsplash
காமசூத்ரா சொல்லும் `யோனிப்பொருத்தம்'; தாம்பத்திய உறவுக்கு ஏன் முக்கியம்? - காமத்துக்கு மரியாதை - 9

சில வெளிநாடுகளில் செக்ஸ் ஃபேன்டஸிக்காக, அறிமுகமில்லாதவர்களுடனும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள். `ஃப்ரீடம்@மிட்நைட்' என்ற மலையாள குறும்படத்தில்கூட `மலையுச்சியில், ஒரு டென்ட் போட்டு அதில் அறிமுகமில்லாத நபருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்' என்ற வசனம் இடம்பெறும். ஸோ, செக்ஸ் ஃபேன்டஸி நமக்கும் அறிமுகமான ஒன்றுதான். செக்ஸ் ஃபேன்டஸி என்றாலே, பலருக்கும் `50 ஷேட்ஸ் ஆஃப் கிரே' என்கிற ஆங்கிலப்படம்தான் நினைவுக்கு வரும். இணையைத் துன்புறுத்தி பாலியல் இன்பம் அனுபவிக்கிற காட்சிகள் நிறைந்த படம் அது.

உண்மையில் செக்ஸுவல் ஃபேன்டஸி என்றால் என்ன; இது தாம்பத்திய வாழ்க்கையை இன்னும் மகிழ்ச்சியாக்குமா; அல்லது செக்ஸுவல் ஃபேன்டஸி என்றாலே இணையைத் துன்பப்படுத்தி காமம் அனுபவிப்பதுதானா... மருத்துவ உளவியலாளர் ராஜவர்மனிடம் பேசினோம்.

``நீங்கள் ஒரு கார் வாங்கப் போகிறீர்கள் என்றால், வாங்கிய பிறகு அதை எப்படியெல்லாம் ஓட்டப்போகிறீர்கள் என்று மனதுக்குள் கற்பனை செய்துபார்ப்பீர்கள் அல்லவா? அதைப்போலவே உங்கள் இணையுடனான காம வாழ்க்கையை எப்படியெல்லாம் புதிது புதிதாக என்ஜாய் செய்யலாம் என்று கற்பனை செய்துபார்ப்பதுதான் செக்ஸுவல் ஃபேன்டஸி. இதை விதவிதமாக, அதே நேரம் சரியாகச் செய்தால், உங்கள் தாம்பத்திய உறவு செம கலர்ஃபுல்லாக இருக்கும். மற்றபடி, எல்லா விஷயங்களிலும் ப்ளஸ், மைனஸ் இருப்பதுபோல செக்ஸுவல் ஃபேன்டஸியிலும் இருக்கின்றன" என்றவர் தொடர்ந்தார்.

மருத்துவ உளவியலாளர் ராஜவர்மன்.
மருத்துவ உளவியலாளர் ராஜவர்மன்.

``மறுபடியும் கார் உதாரணத்துக்கே வருகிறேன். விதவிதமாக ஓட்டிப் பார்க்க வேண்டும்; கொஞ்சம் ஸ்டன்ட்டும் செய்துபார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் ஓகே. ஆனால், காரை இடித்து நாசம் செய்து, தானும் விபத்தில் சிக்கிக்கொண்டால்... இந்த ஆர்வக்கோளாறு இயல்பை ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா? இதேபோலதான் செக்ஸுவல் ஃபேன்டஸியிலும் கணவன், மனைவி இருவருக்குமே விருப்பம் இருக்க வேண்டும். கூடவே, செல்லக் கடிகளைத்தாண்டி ஒருவரையொருவர் துன்புறுத்தவும் கூடாது.

சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள், செக்ஸுவல் ஃபேன்டஸி 11 வயதிலிருந்தே வர ஆரம்பித்துவிடும். அது டீன் ஏஜில் எதிர்பாலின ஈர்ப்பு, அவர்களை முத்தமிட்டால் எப்படியிருக்கும், அணைத்தால் எப்படியிருக்கும் என நினைத்துப் பார்க்க வைக்கும். இந்தக் கற்பனைகளையெல்லாம் காதலிக்கும்போதோ, திருமணத்துக்குப் பிறகோ நிஜமாக்கிக்கொள்வார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், செக்ஸுவல் ஃபேன்டஸி என்பது இயல்பான ஒன்றுதான். தாம்பத்திய உறவுக்கு முந்தைய `முன் விளையாட்டுகள்' எல்லாமே செக்ஸுவல் ஃபேன்டஸிதான். வீட்டுக்குள்ளே வெவ்வேறு இடங்களில் உறவுகொள்வது, விதவிதமான ஆடைகள் அணிந்தபடி முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது, இருட்டைத் தவிர்த்து மெல்லிய வெளிச்சத்தில் உறவுகொள்வது, ஓரல் செக்ஸ், 69 ஷேப் என எல்லாமே செக்ஸுவல் ஃபேன்டஸிதான்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by cottonbro from Pexels
விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! -  காமத்துக்கு மரியாதை - 12

இதை வாசிக்கும்போது, ஒரு சிலருக்கு செக்ஸுவல் ஃபேன்டஸி என்றாலே புதிதாகத் திருமணமானவர்களுக்கும் இளம் வயதினருக்கும் மட்டும்தானோ என்று தோன்றலாம். ஆனால், அனைத்து வயதினரும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். அவரவர் கற்பனைகளுக்கேற்றபடி, உறவு வைத்துக்கொள்ளலாம். இந்த நிலை வரைக்கும் செக்ஸுவல் ஃபேன்டஸி நல்ல விஷயம்தான். தம்பதியரின் இரவு வாழ்க்கை இனிமையாக இருக்க கட்டாயம் தேவையும்கூட. சரி, இது எந்த இடத்தில் தவறாகலாம் என்பதையும் சொல்கிறேன்.

எந்நேரமும் `அப்படி செக்ஸ் வெச்சுக்கலாமா; இப்படி செக்ஸ் வெச்சுக்கலாமா' என யோசித்து யோசித்து எந்த வேலையும் செய்ய முடியாமல் போனால், உங்கள் செக்ஸுவல் ஃபேன்டஸி அளவுக்கு அதிகமாகச் சென்றுகொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்கள் கற்பனைகளை நிறுத்திவிட்டு, கவனத்தை வேலையில் செலுத்துங்கள். தூங்குவதற்கு ஒருசில மணி நேரத்துக்கு முன்பாக செக்ஸ் கற்பனைகளில் ஈடுபட்டுக்கொள்ளலாம் என மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.

உங்கள் லைஃப் பார்ட்னரை தவிர்த்து மற்றவர்களைப் பார்க்கும்போது `இவருடன் அப்படி செக்ஸ் வெச்சுக்கிட்டா' என்று தோன்றினால், உங்கள் சமூக வாழ்க்கை கெடப்போகிறது என்று அர்த்தம். உடனடியாக இந்த எண்ணத்திலிருந்து வெளியே வந்து விடுங்கள். `முயற்சி செஞ்சு பார்த்துட்டேன். முடியல டாக்டர்' என்பவர்கள் உடனடியாக உளவியல் நிபுணரைப் பார்த்து விடுங்கள். இந்த மனநிலை குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் `பீடோ பிலியா'வாக மாறலாம்.

ஒரு சிலர், அடுத்தவர் குளிப்பதை, இயற்கை உபாதைகள் வெளியேற்றுவதைப் பார்க்க விரும்புவார்கள். இவர்களும் உடனடியாக உளவியல் நிபுணர்களைப் பார்க்க வேண்டியவர்களே...

சிலர், தன் நிர்வாணத்தை அடுத்தவர் பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள். இன்னும் சிலர் அடுத்தவரையோ, தன் இணையையோ துன்பப்படுத்தி, அவர் துடித்துக்கொண்டிருக்கிற நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். செக்ஸுவல் ஃபேன்டஸியில் எவையெல்லாம் தவறோ, அவை அத்தனையும் சட்டப்படி குற்றம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

காமத்துக்கு  மரியாதை
காமத்துக்கு மரியாதை

கணவனும் மனைவியும் பரஸ்பரம் பேசி, `செக்ஸில் புதுசா இப்படி ட்ரை பண்ணலாம்' என்று முயற்சி செய்வதுதான் செக்ஸுவல் ஃபேன்டஸி. அதையும், பிரியாணிபோல வாரத்துக்கு ஒருமுறைதான் முயற்சி செய்ய வேண்டும். தினமும் செய்தால், சலிப்பாகிவிடும்" என்கிறார் மருத்துவ உளவியலாளர் ராஜவர்மன்.

காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசப் போகிறோம்; தெரிந்துகொள்ளப் போகிறோம்; காமத்துக்கும் வக்கிரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்; கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடவிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.

மரியாதை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு