``குடிப்பழக்கத்தில் இருந்து கணவரை மீட்பது எப்படி?'' - வாசகி வேதனை! #LetsSpeakRelationship

"சில நாள்கள் குடிக்காமல் இருந்தவர்கள், மறுபடியும் குடிக்க ஆரம்பிக்கும்போது, மாதம் ஒருமுறை குடித்துக்கொண்டிருந்தவர்கள் வாரம் ஒருமுறை என்றும், தினமும் இரவில் மட்டும் குடித்தவர்கள் மதியத்திலும் காலை நேரத்திலும் என படிப்படியாக குடிப்பதில் தீவிரமடைவார்கள்."
"என்னுடையது லவ் மேரேஜ். கல்யாணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகுதான் குழந்தை பிறந்திருக்கான். இப்போ குழந்தைக்கு ஒன்றரை வயசாகுது. என்னோட கணவர் என்னை நல்லாவே பார்த்துக்கிறார். ஆனா, அவர்கிட்ட இருக்கிற ஒரேயொரு பிரச்னை குடிப்பழக்கம்தான். குடிச்சிட்டா, நானே அவரை வெறுக்கும்படியா நடந்துக்கிறார். குடிப்பழக்கத்தைத் தவிர மத்த எந்த விஷயத்திலும் அவரைக் குறைசொல்ல முடியாது. அதே நேரம், என் கணவரை மதுவுக்கு அடிமைன்னும் சொல்லிட முடியாது. ஏன்னா, ஊரடங்கு நேரத்துல, 40 நாள்கள் டாஸ்மாக் எல்லாம் மூடிக்கிடந்தப்போ அவர் ஒருநாள்கூட குடிக்கல. ஆனா கடைகள் திறந்து மது கிடைக்க ஆரம்பிச்சதும் மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிட்டார்.

அவரோட நண்பர்கள் போன் பண்ணிக் கூப்பிட்டாலோ, அவருக்கே குடிக்கணும்கிற எண்ணம் வந்தாலோ வயிறுமுட்டக் குடிக்கிறார். தவிர, நான் கோயிலுக்கோ, சொந்தக்காரங்க வீட்டுக்கோ போயிட்டா, அளவுக்கு அதிகமா குடிக்கிறதை வழக்கமா வெச்சிருக்கார். குடியை நிறுத்தச்சொல்லி நான் பலமுறை பேசிப் பார்த்துட்டேன். அழுதும் பார்த்துட்டேன், சண்டைபோட்டும் பார்த்துட்டேன். எதற்கும் என் கணவர் அசைஞ்சுகொடுக்கல. லாக்டெளன் நேரத்துல 40 நாள்கள் அவர் குடிக்காம இருந்ததுபோலவே, தொடந்து அவர் குடிக்காம இருக்க வழி சொல்லுங்களேன் ப்ளீஸ்.
சமீபத்தில் விகடனின் uravugal@vikatan.com மெயிலுக்கு, தன் பிரச்னைக்கான தீர்வு கேட்டு வந்திருந்த வாசகியின் மெயில் இது.
தீர்வு சொல்கிறார் குடிநோயாளிகளுக்கான உளவியல் ஆலோசகர் சௌமியா.
’’நீங்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லோரும் நினைப்பதுபோல குடிப்பழக்கம் என்பது வெறும் பழக்கம் மட்டுமே கிடையாது. அது, 'ஆல்கஹாலிஸம்' என்று சொல்லக்கூடிய ஒருவித நோய். மனதையும் உடலையும் சேர்த்து பாதிக்கக்கூடியது இந்த நோய். குடிப்பவர்கள் மட்டுமல்லாது அவர்களுடைய குடும்பத்தினரும் இதனால் பாதிப்படைகிறார்கள் என்பதே இந்த நோயின் பெருந்துயரம்.

மது கிடைக்காததால் வேறு வழியில்லாமல்தான் உங்கள் கணவர் ஊரடங்கு காலத்தில் குடிக்காமல் இருந்திருப்பார். இதை நாங்கள் 'Forced Sobriety' என்று சொல்வோம். அதாவது, வேறு வழியில்லாமல் ஒன்றைச் செய்யாமல் இருப்பது. பொதுவாகவே மது அருந்துபவர்கள் குறிப்பிட்ட காலம் வரைக்கும், ‘தான் மது அருந்தாமல் இருப்பதாக’ சவால்கூட விடுவார்கள். அதைச் செய்தும் காட்டுவார்கள். சிலர் கோயில்களுக்கு மாலை அணிந்து விரதம்கூட கடைப்பிடிப்பார்கள். இதில் சிக்கல் என்னவென்றால், குறிப்பிட்ட காலம் குடிக்காமல் இருந்தவர்கள், அதன்பிறகு வழக்கத்தைவிடவும் அதிகமாகக் குடிக்கத் தொடங்கிவிடுவார்கள். குடிக்கக்கூடாது என்ற மனஉறுதியுடன்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அதன்பிறகும் அவர்கள் குடிப்பது என்பது அவர்களையும் மீறி நடக்கும்.
சில நாள்கள் குடிக்காமல் இருந்தவர்கள், மறுபடியும் குடிக்க ஆரம்பிக்கும்போது, மாதம் ஒருமுறை குடித்துக்கொண்டிருந்தவர்கள் வாரம் ஒருமுறை என்றும், தினமும் இரவில் மட்டும் குடித்தவர்கள் மதியத்திலும் காலை நேரத்திலும் என படிப்படியாக குடிப்பதில் தீவிரமடைவார்கள். சர்க்கரைநோயைப் போலவே குடிநோயையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பாதிப்பின் தன்மை கூடிவிடும். குடிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் உங்கள் கணவர் நல்ல மாதிரியாக இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அவரை இப்போதே குணப்படுத்தாவிட்டால் அவர் குடிக்காத நேரத்தில்கூட நீங்கள் வெறுக்கும்படியாக நடந்துகொள்ள ஆரம்பிப்பார்.

பிரச்னைக்கு மிகச்சரியாக முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள்கூட குடிப்பழக்கத்தால் மோசமான முடிவுகளை எடுத்துத் துன்பப்பட்டதை எங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். சொல்லப்போனால் இந்த நோயின் தன்மையே இதுதான். நீங்களும், உங்கள் வீட்டிலிருப்பவர்களும் உங்கள் கணவருக்கு அதிகமாக கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் நீண்ட நேரம் பசியோடு இருக்காமல் கவனித்துக்கொள்ள வேண்டும். பசியெடுக்கையில் குடிக்க வேண்டும் எனத் தோன்ற ஆரம்பித்துவிடும். முக்கியமாகக் காலந்தாழ்த்தாமல் உங்கள் கணவரை அருகிலிருக்கும் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச்சென்று, அவர்களுடைய ஆலோசனையின்படி நடந்துகொள்வது நல்லது. இந்த நேரத்தில் உளவியல் ஆலோசகரைச் சந்திக்க முடியாது என்றாலும், தொலைபேசி வாயிலாக ஆலோசனை பெறுங்கள். அவர்கள் சொல்கிற சிகிச்சை முறைகளைப் பின்பற்றி, உங்கள் கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்.’’
