கட்டுரைகள்
Published:Updated:

வரதட்சணைக் கொடுமைகள் ஒழிவதில்லை: படுத்தும் புகுந்த வீட்டினரைத் திருத்துவது எப்படி?

ஒரு வாசகியின் கடிதம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வாசகியின் கடிதம்

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

நாங்கள் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். நான், தங்கை என வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள். எனக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, மாப்பிள்ளை வீட்டினர் 100 பவுன் நகை கேட்டனர். எங்கள் வீட்டில், ‘நகையை டிமாண்ட் செய்து கேட்பவர்கள் எங்களுக்கு வேண்டாம்’ என்று மறுத்துவிட்டனர். ஆனால், இந்த சம்பந்தத்தை இருவீட்டுக்கும் இடையிலிருந்து பேசிய உறவினர், ‘நகையெல்லாம் சும்மா சபைக்குத்தான் கேக்குறாங்க, உங்க பொண்ணை மகள்போல பார்த்துக்குவங்க’ என்றெல்லாம் விடாது பேசி என் அம்மாவையும், அப்பாவையும் மூளைச்சலவை செய்தார். 100 பவுன் நகை, சீர் எல்லாம் போட்டுச் சிறப்பாகத் திருமணத்தை முடித்தனர் என் பெற்றோர்.

வரதட்சணைக் கொடுமைகள் ஒழிவதில்லை: படுத்தும் புகுந்த வீட்டினரைத் திருத்துவது எப்படி?

ஆனால், நாள்கள் செல்லச் செல்லத்தான் தெரிந்தது புகுந்த வீட்டினரின் பேராசை. திருமணம் முடிந்த ஒரு மாதத்தில், ‘நகையெல்லாம் கொடும்மா, லாக்கர்ல பத்திரமா வெச்சுடலாம்’ என்று கேட்டு வாங்கினார் கணவர். ஆனால், அவர்கள் 100 பவுன் சரியாக இருக்கிறதா என எடை பார்க்கத்தான் அப்படிக் கேட்டு வாங்கினார்கள் என்று எனக்குப் பிறகுதான் புரிந்தது. செய்த சீர்வரிசையில் குறை சொல்லி, மரச்சாமான்கள் முதல் வெள்ளிப்பொருள்கள் வரை திருமணத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை ஒன்றன் பின் ஒன்றாகப் புதிதாகக் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். தீபாவளி சீர், பொங்கல் சீர், வளைகாப்பு, குழந்தைக்குக் காதுகுத்து வரை ஒவ்வொரு விசேஷத்துக்கும், ‘இவையெல்லாம் வேண்டும்’ என்று நகை உட்பட லிஸ்ட் தருவார்கள். எங்கள் பெற்றோர் அதை அப்படியே செய்ய வேண்டும். சமீபத்தில் ஒரு புது வீடு கட்டினார்கள். கிரகப்பிரவேசத்துக்கு வழக்கம்போல ஒரு சீர் லிஸ்ட் கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்தான். ஆனால் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக, சீருடன் கூடவே அந்த வீட்டுக்கு சோபா, டி.வி, டைனிங் டேபிள், ஏ.சி என எல்லாப் பொருள்களையும் என் அப்பா வீட்டின் ‘செய்முறை’யாகச் செய்யச் சொன்னார்கள்.

வரதட்சணைக் கொடுமைகள் ஒழிவதில்லை: படுத்தும் புகுந்த வீட்டினரைத் திருத்துவது எப்படி?

மாமனார், மாமியார், கணவர் என்று மூவருக்குமே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு எங்கள் வீட்டில் இருந்து வாங்கிக்கொள்ளும் கீழ்த்தரமான எண்ணமே இருக்கிறது. என் அப்பா ஒரு கட்டத்தில் வெறுத்து, ‘இந்தப் பேராசைக்காரங்களுக்கு எவ்ளோ கொடுத்தாலும் பத்தாது. தப்புப் பண்ணிட்டோம். டைவர்ஸ் பண்ணிடுவோம். நீ வந்துடும்மா’ என்றார். என் அம்மா, ‘இவ்ளோ செலவு செஞ்சு, புள்ளையையும் வாழாமக் கூட்டிட்டு வரணுமா? வந்ததுக்கு அப்புறம் அவ வாழ்க்கை என்னாகும்? இவ தங்கச்சிக்கு வேற இப்போ மாப்பிள்ளை பார்த்திட்டிருக்கோம்’ என்றார். எனக்கும் அம்மா சொன்னதுதான் சரியென்று பட்டது.

இந்நிலையில், மாமனாரும் கணவரும் பார்த்துக்கொண்டிருந்த கூரியர் பிசினஸில் திடீரென்று நஷ்டம் ஏற்பட, அதைச் சமாளிக்க என் நகைகளையெல்லாம் வாங்கி அடகுவைத்தார் கணவர். இந்நிலையில், இப்போது என் தங்கைக்கு ஒரு வரன் முடிவாகியிருக்கிறது. என் திருமணத்தில் பட்ட பாடத்தால், மாப்பிள்ளை வீட்டைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டோம். நல்ல குணம் உள்ள சம்பந்தம். இப்போது என் புகுந்த வீட்டில், ‘உன் தங்கச்சி கல்யாணத்துக்கு அப்புறம் உங்கப்பாகிட்ட என்ன காசு இருக்கும்னு தெரியல. அதனால, செலவோட செலவா உன் நகையையெல்லாம் இப்போவே அடகிலிருந்து மீட்கச் சொல்லு’ என்கின்றனர். ‘நீங்க உங்க பிசினஸுக்கு என் நகையை அடகு வெச்சதுக்கு எங்கப்பா ஏன் மீட்கணும்? நீங்கதான் திருப்பணும்’ என்றேன் நான். ஆனால், நகையை மீட்டுக்கொடுக்கச் சொல்லிப் படுத்திக்கொண்டிருக்கின்றனர். போலீஸில் புகார் கொடுக்கலாம் என்றுகூட நினைத்துவிட்டேன். தங்கை கல்யாணம் நெருங்குகையில் பிரச்னை வேண்டாம் என்றும் தோன்றுகிறது. எப்படித்தான் திருத்துவது என் புகுந்த வீட்டினரை?!

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)