கட்டுரைகள்
Published:Updated:

புறக்கணிக்கும் கணவர், எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு புதிய அன்பு; சரியா, தவறா?

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

நானும் கணவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். 13 வருட திருமண வாழ்க்கை. ஒரே ஒரு மகன். ஆரம்பத்தில் நாங்கள் மிடில் க்ளாஸாகத்தான் இருந்தோம். நானும் கணவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தோம். ‘ரெண்டு பேரும் நம்ம முதலாளிங்களுக்கு உழைச்சுக் கொடுக்குறதுக்கு பதிலா, நாமளே ஒரு தொழில் ஆரம்பிச்சு நம்ம உழைப்பை அதுல போடலாமே’ என்று சுயதொழில் ஐடியாவை நான் கொடுத்தேன். ரிஸ்க் எடுக்கத் தயங்கிய கணவரை, பேசிப் பேசி, நம்பிக்கை கொடுத்து சம்மதிக்க வைத்தேன்.

உணவு சேவை தொடர்பாக நாங்கள் தொடங்கிய பிசினஸ் சிறப்பாக பிக்அப் ஆனது. எங்கள் மாத வருமானம், முன்பைவிட நான்கு மடங்கானது. நாங்களே எதிர்பார்க்காத லாபம் கொட்டத் தொடங்கியது. இரண்டு வருடங்களில் எங்கள் பொருளாதார நிலைமை சிறப்பாக உயர்ந்தது. அதற்குப் பின் என் கணவர், ‘இனி நீ பிசினஸுக்கு வர வேண்டாம். வீட்டைப் பார்த்துட்டு ரெஸ்ட் எடு. நான் சப்போர்ட்டுக்கு ஆள் எடுத்துக்குறேன்’ என்றார். நானும் சம்மதித்தேன்.

புறக்கணிக்கும் கணவர், எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு புதிய அன்பு; 
சரியா, தவறா?

காலம் உருண்டோட, வீக் எண்ட் என்றால் பார்ட்டி, குடி, சூதாட்டம், வெளியூர், வெளிநாடு டூர்கள் என்று ஆடம்பர வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் அனுபவிக்க ஆரம்பித்தார் கணவர். கூடவே, பெண்கள் தொடர்பு. இதுவரை எனக்குத் தெரிந்து, அவர் மூன்று பெண்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து, எங்களுக்குள் பிரச்னையாகியிருக்கிறது. முதல் முறை மட்டும்தான், ‘அதெல்லாம் இல்லை’ என்று அச்சத்துடன் மறுத்தார். அடுத்த இரண்டு முறையும், ‘பணம் வந்ததுக்கு அப்புறம் ஆம்பளைங்க எல்லாம் அப்படித்தான் இருப்பாங்க. இதை நீ பெருசுபடுத்தி உன் நிம்மதியையும், என் நிம்மதியையும் கெடுக்காத. எனக்கு மனைவி, குடும்பம்னா அது நீ மட்டும்தான். வேற என்ன வேணும் உனக்கு?’ என்று அதை ஏதோ எனக்குச் செய்யும் கருணைபோல பேசினார்.

எனக்கும் கணவருக்கும் இடையில் நெருக்கம் எல்லாம் கரைந்துகொண்டே வந்தது. சமூகத்துக்காகவும், மகனுக்காகவும் கடமையென வாழ ஆரம்பித்தோம். ஆனாலும் அவர்மீதான அன்பு எனக்கு மாறவில்லை. முன்னர்போல் அவர் இல்லாமல் மாறிப்போனது, பணம் அவரை குடும்பத்திடமிருந்து தூரமாகப் பறித்துச் சென்றது குறித்தெல்லாம் நான் மருகினேன். அவரோ, ‘நான் செமையா சம்பாதிக்கிறேன், குடும்பத்துக்கு வேண்டியதைப் பண்ணுறேன், இதுக்கு மேல வேற என்ன வேணும்? என் சந்தோஷமெல்லாம் வேற...’ என்பதாகவே இருக்கிறார். மகனிடம்கூட முன்பிருந்த பாசம், பொறுப்பு எல்லாம் இப்போது இல்லை. சமீபத்தில் எனக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டபோது அவர் நடந்துகொண்ட விதத்தில் இருந்துதான் தெரிந்துகொண்டேன், உறுதிசெய்துகொண்டேன், என்மீது அவருக்கு இப்போது துளியும் அன்பு இல்லை என்பதை.

இந்நிலையில், நான் வழக்கமாகச் செல்லும் ஃபிட்னெஸ் க்ளாஸில் பழக்கமானார் அவர். விவாகரத்தானவர். குழந்தை இல்லை. என் வயதுதான். எங்களுக்கு இடையில் ஆரம்பத்தில் ஓர் ஆரோக்கியமான நட்பு ஏற்பட்டது. இருவர் குடும்பச் சூழல் பற்றியும் பகிர்ந்துகொண்டோம். பின்னர் ஒரு கட்டத்தில், அந்த நட்பு பரஸ்பர அக்கறையாக மாறியது. அவரது நல்லது கெட்டதில் என் கருத்துகளும், என் தினசரிகளில் அவர் ஆலோசனைகளுமாக ஒருவருக்கு ஒருவர் தரும் சிறப்பான எமோஷனல் சப்போர்ட், இருவருக்குமே மிகத் தேவையாக இருந்தது, இருக்கிறது. அக்கறை, இப்போது அன்பாகவும் மாறத் தொடங்குவதை இருவருமே உணர்கிறோம்.

புறக்கணிக்கும் கணவர், எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு புதிய அன்பு; 
சரியா, தவறா?

எங்களுக்குள் ஃபிசிக்கல் ரிலேஷன்ஷிப் தேவையாக இருக்கவில்லை. இந்த அன்பு எப்போதும் இதுபோலவே இருந்தால் போதும் என்றே நினைக்கிறோம். ஆனாலும், இது சரியா, நாளை இவரைப் பற்றி என் கணவருக்குத் தெரியவந்தால் அவரால் இந்த நட்பை, அன்பைப் புரிந்துகொள்ள முடியுமா, பிரச்னை ஏற்பட்டால் என்னால் சமாளிக்க முடியுமா என்றெல்லாம் குழப்பமாக இருக்கிறது. ‘உங்களுக்கு என்னால் ஏதாவது பிரச்னை என்றால் அந்த கணமே நான் உங்களிடமிருந்து விலகிவிடுவேன், எனக்கு உங்கள் நிம்மதிதான் முக்கியம்’ என்கிறார் அவர். விரக்தியான வாழ்க்கையில் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அன்பு சரியா, தவறா?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)