கட்டுரைகள்
Published:Updated:

என் அக்கா விரும்பியவரை எனக்கு மணமுடிக்கும் சூழல்; நிறுத்துவது எப்படி?

பெண் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் டைரி

பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்

என் அப்பா ஒரு விவசாயி. அம்மா எங்கள் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். அக்கா, நான் என எங்கள் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள். என் அம்மாவின் அண்ணன் மகனான அத்தானுக்கும், என் அக்காவுக்கும் திருமணம் செய்வது என சிறு வயது முதலே இரு வீட்டினரும் வேடிக்கை

யாகவும் விருப்பமாகவும் பேசிவந்தார்கள். அதனால், அத்தானுக்கும் அக்காவுக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு விருப்பம் இருந்தது. எதிர்காலத்தில் இரு வீட்டினரும் நமக்குத் திருமணம் செய்துவைக்கப்போகிறார்கள்தானே என்ற நம்பிக்கையிலும் உரிமையிலும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இருவரும் காதலித்தார்கள் என்று சொல்ல முடியாது என்றாலும், இருவருமே தங்கள் இருவருக்கும்

தான் திருமணம் என்று நம்பிக் காத்திருந்தார்கள். விசேஷம், திருவிழா என்று சந்தித்துப் பேசிக்கொள்ளும்போது, அவ்வளவு வெட்கம், சந்தோஷம், கேலி, கிண்டல் என்று இருப்பார்கள்.

என் அக்கா விரும்பியவரை எனக்கு மணமுடிக்கும் சூழல்; நிறுத்துவது எப்படி?

அத்தான் வேலைக்குச் சென்று செட்டிலாகி, அக்காவும் படிப்பை முடித்தபோது, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பது தொடர்பான பேச்சு இரு வீட்டிலும் எழுந்தது. அனைவருக்குமே சந்தோஷம். ஆனால் ஜாதகம் பார்த்தபோது, இருவருக்கும் பொருந்தவே இல்லை என்றும், மீறிச் செய்தால் இதெல்லாம் நடக்கலாம் என்றும் சில விபரீதங்களை ஜோசியர் பட்டியலிட, அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். ஆனாலும் மனது கேட்காமல் இரு வீட்டினரும் இன்னும் சில ஜோசியர்

களிடமும் போய்ப் பொருத்தம் பார்க்க, பார்த்த அனைவருமே ‘இவர்கள் இருவருக்கும் பொருத்தம் இல்லை, திருமணம் செய்யக் கூடாது’ என்றே சொல்ல, பெரியவர்கள் வேறுவழியின்றி அந்த விருப்பத்தைக் கைவிட்டனர். அக்காவும் அத்தானும் உடைந்துபோனார்கள். இருவருக்கும் இடையில் ஒரு பிரியம் இருந்தது என்றாலும், அதைக் காதல் என்று சொல்ல முடியாது என்பதால், பெற்றோரிடம் சென்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. அது அப்படியே முடிந்துபோனது.

சில மாதங்களில், என் அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். நல்ல வரன் அமைய, உடனடியாகத் திருமணமும் முடிந்தது. இப்போது அக்கா வெளியூரில் வசிக்கிறாள். அக்காவும் மாமாவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. ஆனால் அத்தானுக்குத் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், அவருக்கு என்னைத் திருமணம் செய்துவைக்க வீட்டுப் பெரியவர்கள் பேசினார்கள். எங்கள் இருவருக்கும் ஜாதகம் பார்த்தனர். நன்றாகப் பொருந்தியுள்ளதாகக் கூறி, இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று பேச்சளவில் முடிவுசெய்துவிட்டனர். எனக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை. ஆனால், திருமணத்தில் என் முடிவை என் வீடு கேட்பதாக இல்லை. காரணத்தை என்னால் வெளிப்படையாகவும் கூற முடியவில்லை.

என் அக்கா விரும்பியவரை எனக்கு மணமுடிக்கும் சூழல்; நிறுத்துவது எப்படி?

என் அக்காவிடம், ‘இது எப்படி சரியா இருக்கும்? நீயாச்சும் வீட்டுல ஏதாச்சும் காரணத்தைச் சொல்லி இதை நிறுத்து’ என்றேன். அவளோ, ‘நான் என்ன அவரை லவ் பண்ணினேனா? இது நடந்தா நல்லா இருக்கும்னு ரெண்டு பேரும் விரும்பினோம், ஆனா நடக்கல, அவ்வளவுதான். உனக்குப் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லு. ஆனா அதுக்குக் காரணமா என்னைச் சொல்லி நீ ஏதாச்சும் இப்போ பேசி, நல்லா போயிட்டு இருக்குற என் வாழ்க்கையை சிக்கல் ஆக்கிடாதே’ என்கிறாள்.

அவள் சொல்வதும் சரிதான். இதைப் பற்றி அத்தானிடமே, ‘நீங்க என் அக்காவை விரும்புனீங்க. ஆனா என்னை எப்படிக் கல்யாணம் பண்ணிப்பீங்க? என்னால எப்படி உங்களைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்?’ என்று கேட்டுவிட்டேன். ‘அது முறைப்பொண்ணுன்னு விளையாட்டா பேசினேன். அதையெல்லாம் நீ சீரியஸா எடுத்துக்கிட்டியா?’ என்று, அவர்கள் பிரியத்துக்கு சாட்சியாக இருந்த என்னிடமே சொல்கிறார். மேலும், ‘அப்படியெல்லாம் எனக்கு ஒரு குழப்பமும் இல்ல, நீயும் குழம்ப வேண்டாம்’ என்கிறார்.

என் பிரச்னையை யார்தான் புரிந்துகொள்வார்கள்? என் அக்கா விரும்பியவரை, என் அக்காவை விரும்பியவரை என்னால் எப்படித் திருமணம் செய்துகொள்ள முடியும்? இந்தக் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)