Election bannerElection banner
Published:Updated:

பேசாக் கதைகள் - 4 | என்னைவிட மூத்தபெண்ணோடு தொடர்பு, குற்ற உணர்வில் தவிக்கிறேன்... விடுபடுவது எப்படி?

பேசாக் கதைகள்
பேசாக் கதைகள் ( Representational Image )

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

என்னோட பேரை வெளியிட வேண்டாம்ங்கிற வேண்டுகோளோட அந்த மெயிலை அனுப்பியிருந்தார் முகமறியாத அந்த நண்பர்.

"பல வருடங்களா என்னை கொன்னுக்கிட்டிருக்கிற விஷயத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். என்னைவிட மூணு வயது மூத்த எனது உறவுக்கார பெண் ஒருத்தி 15 வருடங்களுக்கு முன்னால என் வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சா... அவளோட திருமணத்திற்கு பின்னால ஒரு குழந்தை பிறந்தபின்புதான் அவளோட நான் பழக நேர்ந்தது... அவள் என்மேல கொண்ட ஈர்ப்பால இரண்டாவது குழந்தைகூட பெத்துக்கலே. கணவனோட உடலாலும் இணையலே. இன்னைக்கு வரைக்கும்.... நாங்க பலமுறை உடலாலும் மனதாலும் இணைஞ்சிருக்கோம்... எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தபிறகும் அவள் அதை பெரிசா எடுத்துக்காம என்னை விட்டு விலக மறுக்கிறா... தவறு... ரெண்டு பேருமே தப்பு செய்றோமேன்னு தெரிஞ்சும் எங்கள் உறவு தொடருது... மனைவியோட நான் மகிழ்ச்சியா வாழ நினைச்சாலும் என் குற்ற உணர்ச்சி என்னை கொல்லுது... அவளோட இருந்த நினைவுகளே மனைவியுடன் இணையும்போது தோன்றி என்னை கொல்லுது. அவளும் என்னை விட்டு விலக மறுக்கிறா. இரு தலைக்கொள்ளியா தவிக்கிறேன்... இதெல்லாம் அவள் கணவனுக்கோ என் மனைவிக்கோ தெரியாது. அவளை மறக்கவும் முடியாம விலகவும் முடியாம என் மனைவியோட முழு மனதோடு வாழவும் முடியாம தவிக்கிறேன்... அவளும் இதே சூழ்நிலையிலதான் இருக்கா. நான் நிம்மதியாக தூங்கி பல மாதங்களாகுது சார்..."

காதல்
காதல்
Representational Image

நண்பா, உங்க மெயிலைப் படிக்கும்போது குற்ற உணர்வால நீங்க ரொம்பவே தவிக்கிறமாதிரி ஒரு தொனி இருக்கு. ஆனா, அது உண்மையில்ல. இப்படி யோசிக்கிறதன்மூலமா நீங்க உங்க தவற்றை நியாயப்படுத்திக்கிறீங்க. புரியும்படி சொல்லனும்னா, 'இந்தத் தவற்றுக்கு பிராயச்சித்தமா நான் குற்ற உணர்வுக்குள்ளாயிட்டேன்... அதனால அந்தத் தப்பைத் தொடர்ந்து செய்யலாம்'ன்னு உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கிறீங்க. உங்களுக்குத் திருமணமாகுறதுக்கு முன்னால அந்தப் பெண் உங்க வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சிருக்காங்க. இன்னொரு பெண்ணோட முறைகேடான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செஞ்சுக்கிட்டதே தவறு. திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த பிறகும் அந்த உறவைத் தொடர்ந்துக்கிட்டிருக்கீங்க. உங்க அப்பா அம்மா, அப்பாவியான உங்க மனைவி, உங்க குழந்தை... எல்லாரையும் ஏமாத்தியிருக்கீங்க. இன்னைக்கு வரைக்கும் ஏமாத்திக்கிட்டிருக்கீங்க. அந்தப் பெண்ணும் அப்படித்தான். 'அவள் என்மேல கொண்ட ஈர்ப்பால இரண்டாவது குழந்தை பெத்துக்கலே. கணவனோட உடலாலும் இணையலே'ங்கிறதெல்லாம் பெருமிதப்படுற விஷயமில்லை நண்பா. தன் கணவனை, குழந்தையை மட்டுமில்லே... உங்களையும் அவங்க ஏமாத்திக்கிட்டிருக்காங்க.

நம் குடும்ப கட்டமைப்பு, உலகத்துல வேறெங்குமே இல்லாத அளவுக்கு கட்டுக்கோப்பானது நண்பா. காதல் திருமணத்தை விடுங்க... அங்கேகூட ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க நேரம் கிடைக்குது. வீட்டுல அப்பா அம்மா பார்த்துச் செஞ்சு வைக்கிற திருமணங்கள்ல, அந்த நிமிடம் வரைக்கும் முகமறியாம, சில முடிச்சுகள்ல இணையுற கணவன்-மனைவிங்கிற உறவு, எல்லா சுக துக்கங்களையும் ஏத்துக்கிட்டு காலம் முழுவதும் தொடருதே... அதுக்குக் காரணம் என்னன்னு யோசிச்சிருக்கீங்களா... நம்பிக்கை... நம்பிக்கைங்கிற இழையிலதான் இல்லற வாழ்க்கைங்கிற பந்தமே பிணைக்கப்பட்டிருக்கு. கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம்னு ஆரம்பிச்சு இன்னைக்கு லிவ்விங் டுகெதர் வரைக்கும் நம்ம வாழ்க்கை முறை மாறி வந்திருக்கலாம். ஆனாலும் எல்லா இடங்கள்லயுமே நம்பிங்கைங்கிற அச்சுலதான் சுழன்றுக்கிட்டிருக்கு. அந்த நம்பிக்கை அறுந்துச்சுன்னா குடும்பம்ங்கிற வண்டி நிலைகுலைஞ்சிடும்.

Couple
Couple
Representational Image

எங்கோ பிறந்து, பெத்தவங்களையும் ரத்த உறவுகளையும் விட்டுட்டு நீங்கதான் உலகம்ன்னு உங்களை நம்பி வந்த உங்க மனைவிக்கு நீங்க செய்றது எவ்வளவு பெரிய துரோகம்...! இதுவரைக்கும் உங்கமேல சந்தேகத்தோட நிழல்கூட விழலேன்னா அதுக்கு நீங்க லாகவமா தப்பு பண்றீங்கன்னு அர்த்தமில்லை நண்பா. உங்க மனைவி உங்களை அப்பழுக்கில்லாத மனுஷனா நினைச்சுக்கிட்டிருக்காங்கன்னு அர்த்தம். இவ்வளவு காலம் நீங்க ஒரு தவறான தொடர்புல இருக்கிறதை உங்க மனைவி அரசல் புரசலாக்கூட கேள்விப்பட்டிருக்கலாம். இதுவரைக்கும் உங்கக்கிட்ட அதுபத்தி கேக்காம இருக்காங்கன்னா அதுக்குக் காரணம், அவங்க உங்கமேல வச்சிருக்கிற நம்பிக்கை.

உங்க மேல அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு குடும்பத்தை இழந்திடாதீங்க நண்பா. உங்களோட தொடர்புல இருக்கிற பெண், உங்களை முழுமையா பயன்படுத்திக்கிட்டிருக்காங்க. உண்மையைச் சொல்லனும்னா, உங்க வாழ்க்கை மேலயோ, உங்கள் மேலயோ அவங்களுக்குப் பெரிசா அக்கறையில்லை. அவங்க கணவர்கிட்ட கிடைக்காத அன்போ, அரவணைப்போ... ஏதோ ஒரு விஷயம் உங்ககிட்ட கிடைக்குது... அதை அவங்க இழக்கத் தயாராயில்லை. அவங்க வாழ்க்கைக்குள்ள பாதுகாப்பா இருந்துக்கிட்டு, 'உன்னால எல்லாத்தையும் இழந்துட்டேன்'னு உங்களை நம்பவச்சு ஏமாத்துறாங்க. அவங்ககிட்ட இருந்து விலகுறதுதான் உங்களுக்கு நல்லது.

அவங்க குடும்பச்சூழல் எப்படின்னு யூகிக்க முடியலே... எப்படியிருந்தாலும் அது அவங்க பிரச்னை. அதுபத்தி நீங்க ஏன் கவலைப்படனும்..? கணவர், குழந்தைன்னு அவங்களுக்கு பாதுகாப்பான ஒரு வாழ்க்கையிருக்கு. அதுல தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

நம்ம சமூகம் இங்கே சில வரம்புகளை உருவாக்கி வச்சிருக்கு நண்பா. அதுக்குக் காரணம், அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழனும்ங்கிறதுதான். அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம வாழ்ந்துட்டுப்போறது வேறொரு வகை. ஆனா, உங்க மெயிலைப் படிக்கிறபோது நீங்க அப்படிப்பட்டவர் இல்லேன்னு புரியுது. முதல்ல அந்த வலையிலருந்து உங்களை விடுவிச்சுக்கோங்க நண்பா.

Couple
Couple
Representational Image

உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்குமான உறவு சட்ட விரோதம். நீங்களும் அந்தப் பெண்ணும் அவங்கவங்க குடும்பத்துக்குச் செஞ்சுக்கிட்டிருக்கிறது நம்பிக்கை துரோகம். எந்த விதத்துலயும் நியாயப்படுத்த முடியாத தவறு. அதுமட்டுமில்லே... நம் சமூகம் வகுத்து வச்சுருக்கிற அறத்துக்கு முழுக்க எதிரானது நண்பா. உங்களைப் பொறுத்தவரை நீங்க உங்க உறவுகளுக்கு மட்டுமில்லாம, அந்தப் பெண்ணுக்கும், அவங்க கணவருக்கும் அவங்க குழந்தைக்கும் சேர்த்து துரோகம் செஞ்சுக்கிட்டிருக்கீங்க.

எல்லாருமே ஒரு வேல்யூ சிஸ்டத்துக்குள்ளதான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ஆளுமையும் மனப்பாங்கும்தான் வாழ்க்கையோட போக்கைத் தீர்மானிக்கும். நம் வேல்யூ சிஸ்டத்தை வச்சுத்தான் இந்த சமூகத்துல நமக்கான மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். நீங்க உங்க மனைவியைவிட உங்க குழந்தையைப் பத்தி அதிகம் யோசிக்கணும். பிள்ளைகளோட ரோல்மாடலே அப்பாதான். உங்க குழந்தை உங்களை ரோல்மாடலா எடுத்துக்க முடியுமா?

உங்க தொடர்பு, உங்க மனைவிக்கும் அந்தப் பெண்ணோட கணவருக்கும் தெரியாதுன்னு சொல்லியிருக்கீங்க. இந்த நிமிடமே அந்தப் பெண்ணுக்கிட்ட பேசுங்க. இதுநாள் வரைக்கும் நடந்தது கடந்து போகட்டும். இந்த நிமிடத்துல இருந்து நீ உனக்கான வாழ்க்கையை, உன் குழந்தைக்கான வாழ்க்கையை வாழுன்னு சொல்லிட்டு மொத்தமா விலகுங்க. எல்லாத்தையும் மறந்துட்டு உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிங்க.

ஒருவேளை இந்த முறைகேடான உறவு பத்தி உங்க மனைவிக்குத் தெரிஞ்சா அவங்க என்னமாதிரி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு யோசிக்க முடியுதா? உங்களை வெறுத்து ஒதுக்கலாம். நீங்களே வேணாம்னுகூட முடிவு செய்யலாம். இந்த மோசமான சூழல்ல உங்க பெற்றோரும்கூட உங்களை கைவிடலாம். அந்தத் தருணத்தை கொஞ்சம் கற்பனை செஞ்சு பாருங்க... பலபேரோட வாழ்க்கை இதுல சம்பந்தப்பட்டிருக்கு நண்பா. உங்க மெயிலைப் படிக்கிறப்போ உங்களுக்கு இப்போ மனநல ஆலோசனையும் தேவையாயிருக்குன்னு உணரமுடியுது.

மனநல மருத்துவரும், குடும்ப உறவுகள் தொடர்பா நிறைய ஆய்வு செஞ்சு எழுதிக்கிட்டிருக்கிறவருமான சிவபாலன் இளங்கோவன் சில ஆலோசனைகள் சொல்றார்.
மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

"இந்தத் தொடர்பு உருவாக, அந்தப் பெண்ணின் மனநிலை, தனிமை உணர்ச்சி, மன உளைச்சல், ஆறுதலற்ற நிலை என பல காரணங்கள் இருக்கலாம். அந்த இளைஞருக்கு திருமணமானபிறகும் அந்த உறவு தொடர்கிறது. இப்போது இருவரும் தனிநபர்கள் இல்லை. இரண்டு பேருக்குமே தனித்தனிக் குடும்பங்கள் இருக்கு. ஒவ்வொருவரையும் சார்ந்து சில மனிதர்கள் இருக்காங்க. இவர்களின் உறவு தொடர்வது, இரண்டு குடும்பங்களையுமே பாதிப்படையச் செய்யும். 'என்னால் இதிலிருந்து வெளியே வரமுடியவில்லை. கஷ்டமாக இருக்கு'ன்னு இப்போதுள்ள சிரமங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் நாளடைவுல இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படும். கண்ணியமும் மதிப்பும் போய்விடும். இதனால் ஏற்படும் எல்லாப் பிரச்னைகளும் இருவரின் குழந்தைகள் உள்பட எல்லோரையும் பாதிக்கும். இதிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால், இரண்டு பேரும் அமர்ந்து பேசி 'இனிமேல் என் வாழ்க்கையில் நீ இல்லை... உன் வாழ்க்கையில் நான் இல்லை' என்கிற முடிவை உடனடியாக எடுக்க வேண்டும். அது எளிதல்ல. கடினமான முடிவுதான். மன அழுத்தத்தையும் உளைச்சலையும் தரும்தான். ஆனால் வேறு வழியில்லை. அதைத்தாண்டித்தான் வரவேண்டும். ஒருவேளை, இப்படியே பேசிக்கொண்டு இந்த உறவைத் தொடர்ந்தால் விளைவு மிக மோசமாக இருக்கும். இழப்புகள் பெரிதாக இருக்கும்..." என்கிறார் அவர்.

நண்பா... உங்களுக்கு உங்க குடும்பத்து மேல அக்கறையிருக்கு. குழந்தையோட எதிர்காலத்து மேல அக்கறையிருக்கு. அதனால யோசிக்காம முடிவெடுங்க. ஒரு விபத்து மாதிரி கடந்து மீண்டு வாங்க... உங்க புது வாழ்க்கைக்கு வாழ்த்துகள் நண்பா!

வாசகர்களே... உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு