Published:Updated:

அதிகரிக்கும் 50 வயதைக் கடந்த விவாகரத்துகள்... என்ன காரணம்?

Representational Image
Representational Image

தமிழகத்திலும் 50 வயதுக்கு மேற்பட்ட தம்பதியர் விவாகரத்து செய்வது அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன?

``கடந்த 27 ஆண்டுகளாக எங்களுடைய மூன்று பிள்ளைகளை வளர்த்தெடுத்தோம். ஒரு சிறந்த அறக்கட்டளையைக் கட்டமைத்தோம். உலக அளவில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாகவும் ஆக்கபூர்வமாகவும் வாழ்வதற்கு அது உதவியது. அறக்கட்டளைப் பணியில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளோம். ஆனால், வாழ்வின் அடுத்தகட்டத்துக்குச் செல்லும்போது ஒரு தம்பதியாக இணைந்து வளர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை."

Bill and Melinda Gates
Bill and Melinda Gates
AP Photo / Elaine Thompson

சில நாள்களுக்கு முன்பு தங்களது 27 ஆண்டுகால திருமண உறவினை முறித்துக்கொள்வது குறித்து உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவராக நம்பப்படும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரின் மனைவி மெலிண்டா கேட்ஸும் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம்தான் இது.

56 வயதாகும் மெலிண்டாவும் 65 வயதாகும் பில்கேட்ஸும் 27 ஆண்டுகளுக்குப் பிற திருமண உறவை முறித்துக்கொண்டது உலகளவில் பெரும் விவாதமானது. அதற்கான காரணமாகப் பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டன. இப்போது நாம் அந்த விவகாரத்துக்குள் நுழையப்போவதில்லை. தமிழகத்திலும் 50 வயதுக்கு மேற்பட்ட தம்பதியர் விவாகரத்து செய்வது அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் திருமண உறவு முறியாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

இதுகுறித்து வழக்கறிஞர் கற்பகத்திடம் பேசினோம், ``என்னிடம் வந்த இரு வழக்குகளை உதாரணமாகச் சொல்கிறேன். இரு தம்பதியருமே 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்; நன்றாகச் சம்பாதித்து செட்டில் ஆனவர்கள். முதலாவது தம்பதிக்குள் பணத்தால் பிரச்னை. கணவர் கை நிறையச் சம்பாதிக்கக் கூடியவர். மனைவியோ தாராளமாகச் செலவழிக்கக் கூடியவர். எவ்வளவு பணம் கொடுத்தாலும் மனைவி, `போதவில்லை’ எனச் சொல்லும் கேரக்டர்.

கற்பகம்
கற்பகம்

இத்தனை வருடங்களாக மனைவி கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்து வந்த கணவர் ஒரு கட்டத்துக்கு மேல் வெறுத்துவிட்டார். ஆனால், மனைவி விடவில்லை. கணவரை உடல் ரீதியாகத் துன்புறுத்தி பணம் கேட்கும் அளவுக்குச் சென்றிருக்கிறார். அதன் பிறகே, விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார் அந்தக் கணவர். இந்த வயசுல விவாகரத்து வாங்கி என்ன செய்யப் போறீங்க?’ என்று குடும்ப உறுப்பினர்கள் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு வழக்கில் கணவருக்கு 75 வயது, மனைவிக்கு 68 வயது. கணவர் குடும்ப வன்முறையில் ஈடுபடுகிறார் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார் மனைவி. `நான் வன்முறையிலெல்லாம் ஈடுபடவில்லை. என் பெயரில் ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. அவற்றை எப்படியாவது இப்போதே தன் பெயரில் மாற்றிக்கொள்ள வேண்டுமென என் மகன்தான் அவளை அப்படி புகார் கொடுக்க வைத்திருக்கிறான்’ என்கிறார் கணவர்.

விவாகரத்து ஆனாலும் சொத்துகள் யார் பெயரில் இருக்கின்றனவோ அவரது பெயரிலேயேதான் இருக்கும். சொத்துகளை மனைவி பெயருக்கோ… மகன் பெயருக்கோ… மாற்றித் தர வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை உதாரணத்துக்கு ஒற்றுமையாக இருந்த சமயத்தில் கணவர் தன் சம்பாத்தியத்தில் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த சொத்தைக் கூட விவாகரத்துக்குப் பிறகு, இது என் சம்பாத்தியத்தில் வாங்கிக் கொடுத்தது என்று உரிமை கோர முடியாது.

கணவனோ மனைவியோ யாருக்குத் தேவையோ அவர்கள் மீதமுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கு ஜீவனாம்சம் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம் அவ்வளவுதான். அதுகுறித்து நீதிமன்றமே தீர்மானிக்கும். இருவரும் பரஸ்பரம் பேசி பிரிகின்றனர் என்றால் மட்டுமே சொத்தில் ஆளுக்கு எவ்வளவு பங்கு என்பதை அவர்களே முடிவு செய்துகொள்வார்கள்.

Marriage
Marriage
Photo by Benita Elizabeth Vivin on Unsplash

ஆனால், இப்படி வழக்கு தொடர்ந்தால் மன உளைச்சலில் சொத்துகளை தன் பெயரில் மாற்றிக் கொடுத்துவிடுவார் என்பதுதான் மகனின் கணக்கு. இத்தனைக்கும் அப்பா இறந்ததும் அந்தச் சொத்து மகனுக்குத்தான் வரப் போகிறது. ஆனால், அதுவரை காத்திருக்க முடியாமல் குறுக்கு வழியில் பயணிக்கிறார்.

ஐம்பது அறுபது வயதுக்கு மேல் இங்கு விவாகரத்து கேட்டு வருகிறவர்களுக்குள் பணம் மற்றும் சொத்துகள் சார்ந்த பிரச்னைகள்தான் பெரும்பாலும் இருக்கின்றன. பல வழக்குகளில் அவர்கள் உறவு முறிவதற்கு காரணமாக அவர்களின் வாரிசுகளே இருப்பதுதான் ஆச்சர்யம். இதுதவிர இப்போதைய இளம் தலைமுறையினரின் போக்கைப் பார்த்து, நம்மாலும் இப்படித் தனித்து வாழ முடியும். நான் ஏன் என்னுடைய சுதந்திரத்தை இழக்க வேண்டும் என்று விவாகரத்து கோருகிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்கள் திடீரென்று ஏற்பட்ட பிரச்னையால் விவாகரத்து கோருகிறவர்கள் அல்ல. பல வருடங்களாக அவர்களுக்குள் ஒத்துப்போகாமலிருந்திருக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இணைந்து வாழ்ந்திருப்பார்கள். பிள்ளைகளையெல்லாம் செட்டில் செய்த பிறகு, இனிமேலும் நாம் இணைந்து வாழ வேண்டுமா என்ற எண்ணம் முளைக்கிறது. இளைய தலைமுறையினர் தங்களது ஒத்துவராத வாழ்க்கையை உடனடியாக முறித்துக்கொள்வதை அதிகமாகப் பார்க்கும் அவர்கள் நம்மாலும் அப்படி முடியும் என்று முடிவெடுக்கின்றனர்.

உளவியல் ஆலோசகர் திவ்யபிரபா
உளவியல் ஆலோசகர் திவ்யபிரபா

இந்த நவீன யுகத்தில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. பந்தத்துக்காக வாழ்ந்ததெல்லாம் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 20 வருடங்களுக்கு முன்பு இருந்த என் அம்மாவே பழைய சகிப்புத்தன்மையுடன் இல்லை. என் அப்பாவை எதிர்த்துக் கேள்வி கேட்கிறார். எல்லோருக்கும் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. காவல்நிலையத்தையும் நீதி மன்றத்தையும் எளிதாக அணுக முடிகிறது.

முன்பெல்லாம் காவல்நிலையத்துக்கோ நீதிமன்றங்களுக்கோ அவ்வளவு எளிதில் போய்விட மாட்டார்கள். குடும்ப கெளரவம் போய்விடும் என நினைப்பார்கள். ஆனால், இப்போது அப்படி அல்ல. விவாகரத்து என்பது டிரெண்டாகிவிட்டது. அதனால்தான் 50 வயதுக்கு மேலும் இப்போது விவாகரத்து அதிகமாகியிருக்கிறது” என்றார்.

அடுத்ததாக உளவியல் ஆலோசகர் திவ்யபிரபாவிடம் பேசினோம், ``ஐம்பது வயதைக் கடந்த பின்புகூட இப்போது விவாகரத்து செய்வது அதிகரித்திருப்பதற்கு காரணம் முன்பைவிட இப்போது அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதுதான். முன்பு பல்வேறு காரணங்களுக்காகத் திருமண வாழ்க்கையில் உள்ள இன்னல்களையும் இயலாமைகளையும் சகித்துக்கொண்டவர்கள்

இப்போது என்னுடைய வாழ்க்கை முக்கியம் என்னுடைய சந்தோஷம் முக்கியம் என்னுடைய அமைதி முக்கியம் என்னுடைய தனித்துவம் முக்கியம் என்று சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். முன்பெல்லாம் திருமண வாழ்க்கையில் தியாகம் அதிகமாக இருந்தது. இப்போதும் இருக்கிறது ஆனால், அது உச்சபட்ச அளவைத் தாண்டும்போது பிரச்னையாகிவிடுகிறது.

Elderly Couple
Elderly Couple

என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் குழந்தைகளுக்காக ஒன்றாக இருக்க வேண்டும் என்ற மனோபாவம் இப்போதும் இருக்கிறது. ஆனால், அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக் கதைகளை பார்க்கிறவர்கள் படிக்கிறவர்கள் `நான் ஏன் இன்னும் இந்த மாதிரியான ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும்?’ என்று விவாகரத்து செய்ய முன்வருகின்றனர்.

ஐம்பது, அறுபது வயதுக்கு மேல் பிரிந்து என்ன செய்யப் போகிறார்கள்? இன்னும் கொஞ்ச காலம்தானே சேர்ந்து வாழ்ந்து செத்துப் போகலாமே என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றலாம். ஆனால், அந்த வாழ்க்கைக்குள் இருப்பவர்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்தானே அந்தக் கொஞ்ச நாளாவது எனக்காக நான் வாழ்ந்துட்டுப் போறேனே என்கிற எண்ணம் வர ஆரம்பித்திருக்கிறது.

விட்டுக்கொடுத்தல்தானே குடும்ப வாழ்க்கை என்று சிலர் சொல்லலாம். உண்மைதான் அதில் மாற்றுக் கருத்து இல்லை. கணவனோ மனைவியோ திருமண உறவில் ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்துக்கொண்டும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டும் இருந்தால் அது பிரச்னை. கணவனும் மனைவியும் சரிசமமாக விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் பிரச்னை வராது. திருமணத்துக்கு ஜாதகம் பார்ப்பதைவிட தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகும் இணையின் கேரக்டரும், நம் கேரக்டரும் ஒத்துப் போகுமா என ஆராய்வது மிகவும் முக்கியம்.

ஒருவரின் கேரக்டரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு என் கணவர் இப்படித்தான் என் மனைவி இப்படித்தான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு இருவரும் அமர்ந்து நம் வாழ்க்கையைக் கடைசிவரை எப்படிக் கொண்டு செல்லப் போகிறோம். இடையில் ஏதாவது பிரச்னை வந்தால் அதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று மனம் விட்டுப் பேச வேண்டும்.

முதுமை
முதுமை
Pixabay

திருமண உறவில் ஒருவரின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிட்டால் அடுத்து உள்ள பிரச்னைகளை எளிதாகக் கடந்துவிடுவார்கள். அடிப்படைக்கே வழி இல்லை எனும்போதுதான் ஏராளமான உளவியல் ரீதியான பிரச்னைகள் வருகின்றன. அதனால் பேசிப் புரிந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் இந்த மாதிரியான பிரச்னைகளைத் தவிர்க்க ஒரே வழி.

கணவன் மனைவிக்குள் பிரச்னை வரும் எல்லா சூழலிலும் நாம் அவர்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழக் கஷ்டப்படுகிறார்கள் எனும்போது அவர்கள் பிரிவதால் தவறே கிடையாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு