Published:Updated:

``விட்டு விலகவும் முடியலை; தொட்டுத் தொடரவும் முடியலை"-காதல் உறவில் ஊசலாட்டம் ஏன்?| OPEN-ஆ பேசலாமா-7

காதல் முறிவு

இரு மனங்களும் ஒன்றவே முடியாது என்றாகும்போது அது பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஆகவேதான் எப்படியேனும் பொருந்த வைக்க இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். கூடிய விரைவில் எல்லாம் செட் ஆகிவிடும் என அசட்டு நம்பிக்கை கொள்கிறோம்.

``விட்டு விலகவும் முடியலை; தொட்டுத் தொடரவும் முடியலை"-காதல் உறவில் ஊசலாட்டம் ஏன்?| OPEN-ஆ பேசலாமா-7

இரு மனங்களும் ஒன்றவே முடியாது என்றாகும்போது அது பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஆகவேதான் எப்படியேனும் பொருந்த வைக்க இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். கூடிய விரைவில் எல்லாம் செட் ஆகிவிடும் என அசட்டு நம்பிக்கை கொள்கிறோம்.

Published:Updated:
காதல் முறிவு

காதல் உறவினை பிரேக்-அப் செய்வது என்பது இன்றைக்கு மிகவும் இயல்பான செயலாகக் கருதப்பட்டாலுமேகூட, தீவிர பிணைப்பு கொண்ட இணையருக்கு அது வலிமிக்கது. ஒத்துவராத உறவைத் தொடர்வதைக் காட்டிலும் பிரிவது நல்லதுதான் என்று அதை ஏற்றுக்கொண்டு பக்குவத்தோடு கடந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். பிரிந்து விடுவதா, சேர்ந்து வாழ்வதா என்கிற ஊசலாட்டமான மனநிலையைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். நடைமுறைப்படி இந்த உறவு நிலைக்காது என்று தெரிந்த பிறகு, அந்த உறவிலிருந்து வெளியேறும் எண்ணம் ஒரு பக்கமும், உணர்வுபூர்வமான அணுக்கத்தின் விளைவே முற்றாக வெளியேற முடியாத தவிப்பு ஒரு பக்கமும் இருக்க, மதில் மேல் பூனை போல் எந்தப் பக்கம் குதிப்பது என அவர்கள் குழப்பத் துடனேயே இருப்பார்கள். விட்டு விலகவும் முடியவில்லை... தொட்டுத் தொடரவும் முடியவில்லை என்கிற இந்த ஊசலாட்ட மனநிலையை எப்படிப் பார்க்கலாம் என்பதை இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்...

``இவர்களை விட்டுவிட்டால் வேறு ஒரு துணை கிடைக்காமல் போய் விடுமோ என்கிற அச்சம்கூட இந்த மனநிலைக்குக் காரணமாக இருக்கிறது" என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்...

ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

``அழகு, பேச்சு, திறமை எனப் பல்வேறு காரணிகளின் விளைவான ஈர்ப்புக்கு ஆளாகித்தான் காதல் உறவுக்குள் செல்கிறார்கள். அந்த ஈர்ப்பைக் கடந்து பார்க்கையில் வாழ்க்கை முற்றிலும் வேறாக இருக்கிறது. அவர்கள் நம்மை மதிக்கிறார்களா, புரிந்து கொள்கிறார்களா, நம் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா, நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்களா, ஒரு பிரச்னையை எப்படி அணுகுகிறார்கள் என்று பல விஷயங்களில் மாறுபாடு இருக்கும்போது அங்கே ஏமாற்றம் வருகிறது. நாம் விரும்பியவர்தான் என்றாலும், நம் உணர்வை அவர் மதிப்பதே இல்லை என்கிறபோது இயல்பாக ஒரு விலக்கம் உண்டாகும்.

நம் மீது அக்கறை எடுத்துக்கொள்ளாமல் அவர்களது ஆதிக்கத்தைச் செலுத்துகிறார்கள் என்கிறபோது அந்த உறவில் மாட்டிக்கொண்டிருப்பதைப் போன்று தோன்றும். இப்படியான சூழலில்தான் அந்த உறவைத் துண்டித்து வெளியேற வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்குள் உருவாகிறது. அப்படியிருந்தும் உடல் ரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ ஏதேனும் ஒரு பிணைப்பு இருக்கிறபோதும், அவர்களுடன் நாம் கழித்த மகிழ்ச்சியான தருணங்களை நினைக்கும்போதும் இந்த உறவைவிட்டு வெளியே வர முடியாத மனநிலைக்கும் செல்கின்றனர்.

காதல் உறவுக்கான எல்லைகளைத் தெளிவாக வகுத்துக் கொள்ளாததுதான் இந்த ஊசலாட்டத்துக்குக் காரணம். ஆண் - பெண் உறவுக்குள் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற எதுவாக இருந்தாலும் அது எதுவரை என்கிற எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒன்றிரண்டு நல்ல குணங்களைக் கருத்தில் கொண்டு நமக்கு ஒத்துவராத மற்ற எல்லா செயல்களையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கை முழுவதும் வாழ முடியுமா என்பதை நாம்தான் முடிவெடுக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை, அவ நம்பிக்கை காரணமாக இவர்களை விட்டால் இன்னொருவர் கிடைக்க மாட்டார்களோ என ஒத்து வராத உறவையே இறுக்கிப் பிடிக்கப் பார்ப்பார்கள். அவர்களால் அந்த உறவை வெற்றிகரமாகத் தொடரவும் முடியாது.

``விட்டு விலகவும் முடியலை; தொட்டுத் தொடரவும் முடியலை"-காதல் உறவில் ஊசலாட்டம் ஏன்?| OPEN-ஆ பேசலாமா-7

முடிவெடுக்கும் ஆளுமைத்திறனற்றவர்கள் இருக்கிறார்கள். காதல் மட்டுமல்ல வேலை மற்றும் குடும்பம் சார்ந்துகூட அவர்களுக்கு உறுதியான முடிவுகளை எடுக்கத் தெரியாது. காதல், வேலை, சமூக சூழல் என எல்லாவற்றிலும் எதையும் முன் நகர்த்தாமல் புலம்பிக்கொண்டு மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தனி வகை. பொதுவாகவே, காதல் உறவைத் துண்டிப்பது என்கிற முடிவுக்கு வரும் முன்னர் அது பற்றி நன்கு ஆராய வேண்டியது அவசியம். அவசர முடிவாக அது இருந்துவிடக் கூடாது. பிரேக் அப் என்று முடிவெடுத்துவிட்டால் அதில் உறுதியாக நிற்க வேண்டும். அதில் எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது.

உறுதியான முடிவை எடுக்கத் தயங்குவதுதான் பிரச்னையே. எடுக்கிற முடிவை நல்ல முடிவாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது. காதல் உறவு எப்போதும் அதே பரவசத்துடன் இருக்காது. குழப்பமே இல்லாமல் முடிவெடுத்து நகர்ந்து விட வேண்டும். அப்படிக் கடக்க முடியாத சூழலில் இன்னோர் உறவுக்குள் செல்வதுகூட தீர்வாக அமையலாம். இந்த உறவில் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அதைப் படிப்பினையாக எடுத்துக்கொண்டு அடுத்த உறவுக்குள் செல்லும்போது அதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் படிப்பினைதான் இந்த உறவிலிருந்து நாம் பெற்றது என்று திருப்தி கொள்ளலாம்" என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

``காதல் உறவில் நமது தோல்வியை ஒத்துக்கொள்ள மறுப்பதே இந்த இரண்டுக்கும் நடுவே அல்லாடும் மனநிலைக்குக் காரணம்" என்கிறார் மானுடவியலாளர் மோகன் நூகுலா...

``நாம் நம் உணர்வுகளுக்குப் போர்வை போர்த்திக்கொண்டு ஒரு நாகரிகத்தைக் கையாள்கிறோம். இந்த நாகரிகத்தின் சிக்கல் என்னவென்றால் எதிரே இருக்கும் ஒரு மனித உயிரும் விலங்குதான் என்பதை அது மறக்க வைத்துவிடுகிறது. என்னதான் காதல் இருந்தாலும் வாழ்நாளின் இறுதி வரைக்கும் அது நீடித்திருக்கும் என்பதற்கான உத்தரவாதம் விலங்கினப் பண்பில் கிடையாது.

மோகன் நூகுலா
மோகன் நூகுலா
படம் : சொ.பாலசுப்ரமணியன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தால் ஆரம்பத்தில் ஒரு ஜோடி விடிய விடிய பேசிக்கொண்டிருப்பார்கள். அதே ஜோடி பத்து அல்லது இருபது நாள்களில் அங்கொரு மூலைக்கும் இங்கொரு மூலைக்குமாக 10 மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கும் காட்சியைப் பார்த்திருப்போம். காதலின் பரவசத்தை வாழ்நாள் முழுமைக்கும் தக்க வைக்க முடியாது என்பதற்கான உதாரணமே இது. நீண்ட நெடிய தூரம் இந்த உறவைக் கொண்டு போவதில்தான் பல இடர்ப்பாடுகள் நிறைந்திருக்கின்றன.

இங்கே காதல் என்பது மன ஒற்றுமையிலிருந்து உருக்கொள்வதில்லை. அது இன்ன பிற ஈர்ப்புகளின் வழியே உருவாகிறது. அதிலும் குறிப்பாக, உடல் சார்ந்த ஈர்ப்புதான் அதில் முதன்மையானதாக இருக்கிறது. அப்படியான சூழலில் இரண்டு மனங்களும் பொருந்திப் போகவில்லை என்றால் ஒருவரை ஒருவர் காயப்படுத்த வேண்டிய சூழல் உருவாகும்.

உடல் சார்ந்த ஈர்ப்பின் விளைவாக உண்டாகும் காதலை உளவியல் ரீதியிலும் பொருத்த முயற்சி செய்கிறோம். அந்த இரு மனங்களும் பொருந்தாதபோது அந்த முயற்சி தோல்வியுறுகிறது. அந்தத் தோல்வியை ஒத்துக்கொள்ள மனமின்றி திரும்பத் திரும்ப மன ரீதியான ஒட்டுதலை உண்டாக்க முயற்சி செய்துகொண்டே இருப்பதன் விளைவே இந்த ஊசலாட்டம். ஒவ்வொருவரது ஆளுமைக்குத் தகுந்தாற்போல் இதன் படிநிலைகள் மாறும். இதன் அடிப்படையில் இயங்கும் மனநிலை என்னவென்றால், உடலளவில் ஒன்றியவர்கள் மனதளவில் ஒன்றுவதற்காகப் போராடித் தோற்கிறார்கள் என்பதுதான்.

காதலிக்கும்போது நமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டங்களை நாம் வகுக்க ஆரம்பித்துவிடுகிறோம். இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம், வீடு கட்டலாம், கார் வாங்கலாம் என ஒரு ஸ்கிர்ப்டை தயார் செய்துவிடுகிறோம். இப்படியான சூழலில் இரு மனங்களும் ஒன்றவே முடியாது என்றாகும்போது, அது பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. ஆகவேதான் எப்படியேனும் பொருந்த வைக்க இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். கூடிய விரைவில் எல்லாம் செட் ஆகிவிடும் என அசட்டு நம்பிக்கை கொள்கிறோம். நடைமுறை யதார்த்தம் இந்த எதிர்பார்ப்புக்கு நேரெதிராக இருக்கையில்தான் இந்தக் குழப்பமே உண்டாகிறது.

பிரிவு
பிரிவு

ஆண் - பெண் இருவருக்குள்ளும் நல்லதொரு பிணைப்பை உண்டாக்க காமம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அதுவும் ஓர் எல்லைக்குள் இருக்கும் வரையில்தான் சாத்தியம் என்பதை பண்டைய சமூகம் அறிந்து வைத்திருந்தது. முந்தைய தலைமுறை களில் பார்த்தால் கணவன் - மனைவி இருவரும் சந்திக்கும் நேரமே குறைவாகத்தான் இருக்கும். தாம்பத்ய உறவு கொள்வதற்காகக் காத்திருக்கும் சூழல் நிலவியது. இன்றைக்கு அப்படியான காத்திருப்பு தேவையில்லை. நினைத்த மாத்திரத்தில் பாலுறவு கொள்ள முடியும் என்கிற சூழல் உண்டாகிவிட்டது. கட்டுப்பாடற்ற அந்த வெளிகூட சில நேரங்களில் சலிப்பை உண்டாக்க காரணமாகிறது.

இன்றைய உறவுகளின் சிக்கல் என்னவென்றால் அது இயல்பாக இல்லை. எதிர்ப்பாலினத்தவரை எளிதில் கையாண்டுவிட முடியும் என அசட்டுத்தனமாக நம்புகிறார்கள். அது கடினமானது. அதே போன்று உறவைத் துண்டிப்பதும் எளிதான காரியமல்ல. அப்படி முடியும் என்றால் தினமும் ஒருவரோடு உறவு கொண்டபடி இருக்கலாம். மனித மனம் இயல்பாகவே நீண்ட நெடிய உறவைத்தான் கோருகிறது. வாழ்க்கை முழுவதும் நீடிக்கக்கூடியது என்கிற நம்பிக்கை இருப்பதால்தான் காதல் உறவில் விமர்சனங்களும் கேள்விகளும் எழுகின்றன.

உறவு அதன் இயல்பில்தான் இயங்கும். நாம் அதற்கு மாறாக ஒரு புரொகிராமிங் செய்கிறோம். அந்த முயற்சியின் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் வறட்டுப் பிடிவாதம் கொண்டிருக்கிறோம். பழைய ரேடியோ பெட்டியை எப்படியும் சரி செய்து பாட்டு கேட்டு விடலாம் என்று வயதானாவர்கள் ஸ்க்ரூடிரைவரை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் என்னென்னவோ முயற்சிகள் செய்துகொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அது போலதான் ஒத்து வராத உறவும். அதை ஒத்துப்போக வைக்க அந்த ரேடியோ தாத்தாவைப்போல போராடுகிறோம். அந்த ரேடியோ ஓடாது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்" என்கிறார் மோகன் நூகுலா.

பார்வைக் கோணம்

சாக்‌ஷி சிவம், தொழில் முனைவோர்: ``கருத்து வேறுபாட்டால பிரிஞ்சாலும், அவங்க கூட இருந்த மகிழ்ச்சியான தருணங்களை ஏதாவது ஒரு விஷயம் நினைவுபடுத்திக்கிட்டே இருக்கும். நண்பர்கள்கிட்ட பேசுறப்போ, எங்கயாவது போறப்போ எல்லாம் நினைவு வரும், நாங்க ரெண்டு பேரும் இங்க வந்திருக்கோம்லன்னு... இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ல கப்பிள் வீடியோ பார்க்குறப்போ நாமும் இப்படித்தான இருந்தோம், ஒண்ணா இருந்தா இப்படித்தான இருந்திருப்போம்னு தோணும். தாலி கட்டி முடிச்சதும் முத்தம் கொடுக்கிற காட்சிகளையெல்லாம் பார்க்குறப்போ அந்த இடத்துல நம்ம விரும்புனவங்களை பொருத்திப் பார்க்குறது இயல்பாவே மாறிடுச்சு.

அவங்களையும், அவங்களோடான நினைவுகளையும் மனசுல இருந்து டெலிட் பண்ணிட்டா இந்தப் பிரச்னையே இருக்காது. ஆனா, அப்படி ஒட்டு மொத்தமா டெலிட் பண்றதும், தூக்கி வீசுறதும் சாத்தியமே இல்லைன்னு நினைக்குறேன். வேற வேற நடவடிக்கைகள் வழியா மனசை மடை மாற்றலாம்னு இறங்கும்போது அது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகுதுங்குறதுதான் முக்கியம்.

``விட்டு விலகவும் முடியலை; தொட்டுத் தொடரவும் முடியலை"-காதல் உறவில் ஊசலாட்டம் ஏன்?| OPEN-ஆ பேசலாமா-7

புதிய நபர்களோட நட்பு பாராட்டுறது வழியா இந்த உறவோட நினைவுகளில் இருந்து தப்பிக்கலாம். இப்படியா நினைச்சு அதை நோக்கி நகர்றப்போ அதுல சிலர் அடுத்தகட்டத்துக்கு மூவ் பண்ணுவாங்க. லவ் ரிலேஷன்ஷிப் ஒரு பாதின்னா ஓப்பன் ரிலேஷன்ஷிப் இன்னொரு பாதி. என்னால அதை நோக்கி மூவ் ஆகவும் முடியலை. ``அவன்தான் உன் லைஃப்ல இல்லைல" அப்படின்னு கேட்டிருக்காங்க. அதுக்கு எங்கிட்ட பதில் இல்லை. அந்தக் காதல்லயும் முழுமை இல்லாம ஒரு எல்லையைத் தாண்டி இன்னொருத்தங்களையும் உள்ள அனுமதிக்க முடியாம மைண்ட் ப்ளாக் ஆகிடுச்சு. புதுசா சந்திக்கிற ஒருத்தங்களோட ஏதோவொரு குணாம்சம் பிடிச்சிருந்தால்கூட இது நம்ம விரும்புனவங்ககிட்ட இருந்திருந்தா நல்லாருக்குமேன்னுதான் தோணுது.

இந்தக் காதல் சார்ந்த நினைவுகளில் இருந்து வெளியேறணும்னு நான் எவ்வளவு தூரம் எகிறிக்குதிக்கிறனோ, அதுக்கும் இரண்டு மடங்கு தூரம் திரும்ப வந்துடுறேன். அப்படியும் இல்லாம இப்படியும் இல்லாம இருக்கிற இந்த ஊசலாட்டத்துக்குத் தீர்வுன்னு பொதுவா எதையும் சொல்லிட முடியாது. அதை எப்படி அணுகுறாங்களோ அதுக்குத் தகுந்த மாதிரி மாறும். இந்த ஞாபகங்கள் எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிற மாதிரி ஒரு ஆள் வாழ்க்கையில வர்றப்ப இது மாறுறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு நினைக்குறேன். இல்லைன்னா இந்த ரெண்டும் இல்லாத மனநிலையையே இயல்பா எடுத்துக்கிட்டுப் போகணும். இதைத்தாண்டி வேற தீர்வு எதுவும் இல்லைன்னு நினைக்குறேன்.”

சிவசங்கர், கட்டடப் பொறியாளர்: ``இது மாதிரியான மனநிலை இன்னைக்கு உருவானதுன்னு சொல்ல முடியாது. நீண்ட காலமாவே இருந்துட்டு வர்றதுதான். ஒவ்வோர் உறவுலயும் அதுக்கான கமிட்மென்ட் காரணமா விடலாமா வேண்டாமாங்குற குழப்பத்துலயே இருப்பாங்க. வாழ்க்கைக்கு செட் ஆக மாட்டாங்கங்குற முடிவை எடுத்தப்புறமும் அவங்க அந்த உறவுல நீடிக்கிறதுக்கு என்ன மாதிரியான பிணைப்பு காரணமா இருக்குன்னு பார்க்கணும். எது அவங்களை அந்த உறவுல இன்னும் தக்க வெச்சிருக்குங்கிறதுதான் முக்கியம். எமோஷனலா ஒரு பிணைப்பு உண்டாகியிருந்தா அவ்வளவு சீக்கிரத்துல வெளியேற முடியாது. இந்த ஊசலாட்டமான உறவுல வெறுப்பும் பயமும் எதிரெதிர் புள்ளிகள்ல இருக்கு.

சிவசங்கர்
சிவசங்கர்

அவங்க ஒத்து வர மாட்டங்கன்னு முடிவெடுக்கிற அளவுக்கு வர்றப்ப அங்க வெறுப்பு இயல்பா இருக்கும். அதுதான் அந்த உறவுல இருந்து வெளிய போகச் சொல்லுது. அப்ப இன்னொரு புள்ளியில இருக்கிற பயம் அதைத் தடுக்குது. வெளிய போனா இன்னொருத்தங்க கிடைப்பாங்களா, ஒருவேளை அவங்க இவங்களைவிட மோசமா இருந்துட்டா என்ன பண்றதுங்குற பயம் இருக்கு. வெறுப்பு இல்லாத இடத்துலகூட ஒத்து வரலைங்குற எண்ணம் வரலாம். ஆண் - பெண் உறவுல இது இயல்பா நடக்கிறதுதான். இதைத்தாண்டி வர்றது சவாலானதுதான். ஆனா, அதைத் தாண்டி, வர்றதைத் தவிர வேற வழியில்லைன்னு ஏத்துக்கிட்டு கடந்து வர்றதுதான் நல்லது."