Published:Updated:

மகன்களுக்கான மரபைக் கட்டமைக்கும் தந்தைகள்! - ஓர் உளவியல் பார்வை #MyVikatan

தந்தை
தந்தை ( Robert_Selvaraj )

என்றைக்குமே கண நேர உரையாடலாகவே இருக்கும் அப்பாவின் அழைப்பு. 5 நிமிடத்துக்கு உள்ளாகவே முடியும் உரையாடலின் இறுதியில்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"ஹலோ அப்பா. சொல்லுங்கப்பா."

"என்னடா எங்க இருக்க, வீட்லயா... வேலைலயா?"

"வீட்லதான் பா. டியூட்டி நைட்டு."

"ஏதோ புது இன்வெஸ்ட்மென்ட் பண்ணப்போறேன் அப்படி இப்படின்ன. என்ன ஆச்சு?"

பின் அது பற்றி நான் விளக்க, அதில் உள்ள பிரச்னையை மட்டும் காரணம் காட்டி இது வேண்டாம் அது வேண்டாம் என்பார் என் அப்பா.

Father son
Father son
Haydn Golden on Unsplash

என்றைக்குமே கண நேர உரையாடலாகவே இருக்கும் அப்பாவின் அழைப்பு. 5 நிமிடத்துக்கு உள்ளாகவே முடியும் உரையாடலின் இறுதியில்,

"என்ன, சாப்பிட்டியா?" என்று கேட்பார்.

கொஞ்சம் அதட்டும் தொனிக்கும் அன்பின் தொனிக்கும் இடைப்பட்ட நூலிடை குணத்தின் கேள்வி வெளிப்பாடு அது. இதுதான் என்று இல்லை, பொதுவாகவே எது குறித்தான உரையாடலின்போதும் இதே போன்ற ஓர் உரையாடல் கோவையைக் கடைப்பிடிக்கும் வாடிக்கையானவர் என் அப்பா. ஏன் ஓர் அப்பா- மகன் உரையாடல் மிகச் சுருங்கியதாகக் குறுகியதாக, பெரும்பாலும் நின்றுவிடுகிறது என்று கொஞ்சம் ஆழ்ந்து யோசிக்கையில் அதிலுள்ள உளவியலும் தந்தை பிம்பம் குறித்தான ஆழமான பார்வையையும் உணரலாம்.

தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று தந்தை - மகன் உறவு குறித்தான கற்பிதங்கள் சில இருந்தாலும் தந்தை - மகன் உறவு பெரும்பாலும் முரண் சார்ந்ததாகவே அமைகிறது. இருவருக்கும் உள்ள முரண்பாடுகளே தந்தை - மகன் உறவுக்கான முரணியக்கமாக அமைகிறது. இந்த முரணியக்கமே இந்த உன்னதமான மற்றும் சிக்கலான உறவுக்கு வரலாறு தொட்டும் சமூகம் தொட்டும் இலக்கணமாக அமைகிறது.

Father, Son
Father, Son
Mael BALLAND on Unsplash

தந்தை குறித்தான நம் ஆழ்மன பிம்பங்களே நம் செயலிலும் நம் சிந்தனையிலும் நம் வேலையிலும் பிரதிபலிக்கும் என்று உலகப் புகழ்பெற்ற மனோதத்துவவியலின் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்டு கூறுகிறார்.

தந்தைகள் ஒரு மரபைக் கட்டமைப்பவர்கள். ஒரு பெரும் மரபைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை அடுத்த தலைமுறைக்கு அடிக்கோடிட்டு காண்பிப்பவர்கள். எல்லா தந்தையினுடைய இயக்கமும் குறிப்பிட்ட இந்த உளவியலைச் சார்ந்தே அமைவதாகத் தோன்றுகிறது. ஒரு தந்தை உருவாக்கும் மரபைத் தொடர்வதற்கு அவர் உருவாக்கும் மக்களின் நீட்சி சார்ந்தே அந்த தந்தை சாதாரண தந்தையா அல்லது மனித குலத்தின் தந்தையா என்று வரையறுக்கப்படுகிறார்.

வாழ்வில் நாம் மேம்பட்ட ஒரு நிலையை அடைய வேண்டும் என்றால் நாம் எவ்வளவு சீக்கிரம் நம் தந்தையை அவருடைய வளர்ந்த சூழல் சார்ந்து, அவர் முன்னெடுத்த கருத்தியல் சார்ந்து புரிந்துகொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
மணிசங்கரன். பா.ந.

இங்கே தந்தை அல்லது தந்தை பிம்பம் என்று குறிப்பிடப்படுபவர் மரபணு சார்ந்த நம் உயிரியல் தந்தையாகவும் இருக்கலாம் அல்லது கருத்தியல் அறம் சார்ந்த ஒரு சமூக தந்தையாகவும் இருக்கலாம். உதாரணமாக, நம் தந்தை மரபணு சார்ந்த நம்மை உருவாக்கிய உயிரியல் தந்தை. அதுவே, திருவள்ளுவர் கருத்தியல் அறம் சார்ந்த சமூக தந்தை.

Father, son
Father, son
Pixabay

நம் தந்தையும் திருவள்ளுவரும் அவர்கள் உருவாக்கும் மரபில் ஒரே மாதிரியானவர்களே. ஆனால், நம் தந்தை உருவாக்கும் மரபு என்பது மிகவும் சுருங்கியதாக, அவருடைய வாரிசுகளை மட்டும் உள்ளடக்கியதாக அமைகிறது. இதுவே, திருவள்ளுவர் உருவாக்கிய மரபு என்பது பரந்து விரிந்து ஒரு பெரும் மக்கள் திரளுக்கான மரபாக முன்னிறுத்தப்படுகிறது. அதனால் அவர் ஓர் இனத்தின் தந்தையாக அடையாளப்படுத்தப்படுகிறார்.

தந்தை உருவாக்கும் இத்தகைய மரபில், மகனுக்குத் தோன்றும் முரண்பாடுகளே தந்தை மீதான ஒரு காழ்ப்புணர்ச்சியை உருவாக்குகிறது. பதின்ம வயதைக் கடக்கும் ஒரு மகனுக்கு, தன் தந்தையின் மீது எழும் இயல்பான வெறுப்பு ஏற்கத்தக்கதே. ஏனெனில், இயல்பாகவே தந்தைகள் தன் செயலிலும் சிந்தனையிலும் ஒரு தலைமுறைக்கு முன்பாகவே தேங்கி விட்டதாக ஒரு மகன் கருதுகிறான்.

Father, Son
Father, Son
Pixabay

அவ்வாறாகக் கருதும் ஒரு மகன், தந்தை முன்னிறுத்தும் மரபில் எதையெல்லாம் தவறு என்று கருதுகிறானோ அதைக் களைந்து அந்த இடத்தில் எதையெல்லாம் அவன் சரி என்று கருதுகிறனோ அதை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து, தந்தை மீது பழியையும் வெறுப்பையும் உமிழ்பவன் தன் தலையில்தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்குச் சமம்.

அப்பாவின் கண்கள்ல நான் பார்த்த மரியாதை..! - பெண்ணின் குற்ற உணர்வும் அரசு வேலை கனவும் #MyVikatan

வரலாறு நெடுகிலும் இதுபோல் தந்தையின் பால் முரண்பட்டு அவர் சென்ற பாதையை விடுத்து புதிய பாதையைக் கண்டு வெற்றி கொள்பவர்களே நினைவு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறாக உயர்ந்து, வெற்றிகொள்ளும் மகனைப் பார்க்கும் தந்தை அகமகிழ்வார், உச்சி முகர்வார்.

இதைத்தான் வள்ளுவர் பெருந்தகை,

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல்

(அதிகாரம்: புதல்வரைப் பெறுதல், குறள் எண்: 70)

என்று கூறுகிறார்.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது என் தந்தையிடமிருந்து வந்த அழைப்பை நான் தவறவிட்டதாக என் கைபேசி திரை காட்டுகிறது.

மீண்டும் நான் மேலே சொன்ன பாணி உரையாடலைத்தான் என் தந்தை கடைப்பிடிப்பார்.

இந்த முறை நான் அவரிடம் புதிதாக வாங்க இருக்கும் வயலினைப் பற்றிக் கூறப் போகிறேன். கண்டிப்பாக நேர விரயம், பண விரயம் என்றும் உன் வேலையில் கவனத்தைச் செலுத்து என்றும்தான் சொல்வார். சொல்லட்டுமே.

Father, son
Father, son
Pixabay

தந்தைகளை உங்களிடம் பேச அனுமதியுங்கள். பேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள். அவர் ஒரு விஷயத்தைப் பேசி முடிக்கும் முன் இடைமறிக்காதீர்கள். அவர் சொல்வதற்கு எதிராகத்தான் நீங்கள் முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று அவரிடம் சொல்லாதீர்கள். ஆனால், அகலக் கால் வைப்பதாகத் தோன்றினால் அதற்கு முன் அவரிடமும் ஆலோசனை கேளுங்கள். நாம் ஒன்றும் அதனால் குறைந்துவிடப் போவதில்லை. தந்தைகள் நம்மை வாழ்த்தவே அவதரித்தவர்கள்.

ஆனால், எந்நேரமும் அன்பைப் பொழியும் தாயைப்போல் அந்த வாழ்த்து நேரடியாக வெளிப்படாது. தந்தையின் வாழ்த்துகள் மறைமுகமாகத் திட்டும், அதட்டும், கண்டிக்கும் மிடுக்குடன்தான் இருக்கும். அத்தகைய அதட்டல்கள் நம்மை ஊக்கப்படுத்தவே அன்றி வேறு எதற்கும் இல்லை. ஒரு நல்ல தாய் நம்மை அன்புக்கு, பாசத்துக்கு கருணைக்குப் பழக்குவாள் என்றால், ஒரு நல்ல தந்தை நம்மை விமர்சனங்களுக்குப் பக்குவப்படுத்தி பழக்குவார்.

எதிர்காலத்தில் பணி இடத்திலோ சமூக வெளியிலோ நம் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் யாவும் எப்படிப்பட்ட சாரம் உடையதாக இருக்கும் என்று ஒரு மாதிரியை நம் பதின்ம வயதில் நம் தந்தை நமக்கு காட்டி இருப்பார். அதனால் தந்தையின் அன்பு கண்டிப்பில்தான் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுவதே இயற்கை நியதி.

Old man
Old man
Clément Falize on Unsplash

வாழ்வில் நாம் மேம்பட்ட ஒரு நிலையை அடைய வேண்டும் என்றால் நாம் எவ்வளவு சீக்கிரம் நம் தந்தையை அவருடைய வளர்ந்த சூழல் சார்ந்து, அவர் முன்னெடுத்த கருத்தியல் சார்ந்து புரிந்து கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

தந்தைகளைப் போற்றுவோம்.

தந்தைகளைக் கொண்டாடுவோம்.

- மணிசங்கரன். பா.ந.

நெல்லிக்குப்பம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு