Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 11 - முதியோர் வசிக்கும் வீடுகள்... கவனிக்கவேண்டிய அடிப்படை விஷயங்கள்...

முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - `ஆர்க்கிடெக்ட் ' சரோஜினி திரு

முதுமைக்கு மரியாதை! - 11 - முதியோர் வசிக்கும் வீடுகள்... கவனிக்கவேண்டிய அடிப்படை விஷயங்கள்...

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - `ஆர்க்கிடெக்ட் ' சரோஜினி திரு

Published:Updated:
முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

வீடு... எங்கு சென்று வந்தாலும் மனதை அமைதியாக்கும் இடம். சில நாள்களில் நம்மை உற்சாகப்படுத்தும் வீடு, வேறொரு நாளில் முற்றிலும் மாறுபட்ட மனநிலைக்குக் கொண்டு செல்லும். இதற்கு முக்கிய காரணம், வீட்டில் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் பொருள்கள்தான். வீட்டில் உள்ள பொருள்கள் அந்தந்த இடத்தில் இருக்கும்போது வீடே விஸ்தாரமாகத் தோன்றும். மனதும் அதைவிட அதிக விஸ்தாரமாக விரியும்.

``சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் என்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவார்கள். முக்கியமாக இப்படிப்பட்ட சுத்தமான வீடு மூத்த பருவத்தினருக்கு மிக முக்கியம்” என்கிறார், சென்னையைச் சேர்ந்த ஆர்க்கிடெக்ட்டும் இன்டீரியர் டெகரேட்டருமான சரோஜினி திரு.

குடும்பத்தில் முதியவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் குறைவு. தனக்குப் பிடித்த குறைந்த அளவு உணவு, விழித்திருக்கும்போது தான் விரும்பியதைப் படிப்பது, பார்ப்பது, மற்றவர்களுடன் உரையாடுவது, தனக்குத் தேவையான பொருள்களைக் கேட்டுப் பெறுவது அல்லது வீட்டில் உள்ள வற்றை தாங்களே எடுத்துக் கொள்வது, ஓய்வெடுக்க நினைக்கும் போது படுக்கைக்குச் சென்றுவிடுவது என்று முதியோரின் வாழ்க்கை முறை அளவாகச் சுருங்கிவிடும். இப்படிப்பட்டவர்களின் தேவை யைப் பூர்த்தி செய்ய, அவர்கள் மன நிறைவுடன் வாழ வீடு எப்படி அமைந்திருக்க வேண்டும்? சரோஜினி திருவிடம் கேட்டோம்...

 சரோஜினி திரு
சரோஜினி திரு

முக்கியமான விஷயங்கள் இரண்டு...

``சீனியர் சிட்டிசன்களுக்காக இரண்டு விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். முதலில், வீட்டில் உள்ள அனைத்து அறை களின் தரையும் ஒரே மட்டமாக இருக்க வேண்டும். பழைய வீடுகளில் வாசல்படி, முற்றம், தாழ்வாரம், பூஜையறை, படுக்கையறைகள் வெவ்வேறு மட்டங்களில் இருக்கும். இப்போது அப்பார்ட்மென்டுகளில் இப்படிப்பட்ட நிலை இல்லை என்றாலும், சில வீடுகளில் நுழை வாயிலில் கதவு இருக்கும் இடம் சற்று உயர்ந்தோ, அடுத்து கழி வறைகள் உயர்ந்தோ, தாழ்ந்தோ இருக்கின்றன. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் ஒரே மட்டத்தில் இருப்பது நல்லது.

அடுத்து, அறைகளின் நுழை வாயில்... மூத்த பருவத்தினர் நடந்து செல்வதற்கு வசதியாக சற்று அகல மாக அமைக்கலாம். இப்போது நிறைய வீடுகளில் இரண்டு கதவுகள் இருந்தாலும் ஒரே ஒரு கதவை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மற்றொரு கதவை மூடியே வைத்திருக்கிறார்கள். அப்படி யில்லாமல் மூத்த பருவத்தினர் பயன் படுத்தும் வகையில் அவர்கள் உபயோகப் படுத்தும் நேரத்தில் வாயிலை அகலமாக்கும் விதத்தில் இரண்டு கதவுகளையும் சுலப மாகத் திறந்து மூடும் வகையில் அமைக்க லாம். இந்த இரண்டு முக்கிய விஷயங் களான ஒரே மட்டத்தில் அறைகள், அகலமான வாசல்கள்... மூத்த பருவத்தினர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீல் சேரை உபயோகப்படுத்தும் நிலை வரும்போது மிகவும் உதவும்.

வழுக்காத டைல்ஸ்...

புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள், வீட்டில் முதியோர் இருக்கும்நிலையில் தரையில் பதிக்கப்படும் டைல்ஸை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். வீடுகளில் பெரிய டிசைன் உள்ள டைல்ஸை தவிர்த்து. சிம்பிள் டிசைன்ஸ் பொருத்தமாக இருக்கும். வீட்டுத் தரைக்கு நேச்சுரல் மார்பிள்ஸ் போடுவதைத் தவிர்க்கவும். ஏனென்றால், அதற்கு குளிர்ச்சித்தன்மை அதிகம். அதாவது, தரையிலிருந்து மூன்று அடிக்கு அதன் குளிர்ச்சி இருக்கும். இதனால் வீட்டில் உள்ள முதியோருக்கு மூட்டுவலி போன்ற பிரச்னைகள் வரலாம். அடுத்து அதிக வழவழப்பான தரையில் மூத்த பருவத் தினர் கால்களை அழுத்தம் கொடுத்து நடக்கும்போது கால் விரல்களில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

தரை அழகாக இருக்க வேண்டும் என்ப தற்காக வெள்ளை டைல்ஸை சிலர் பதிப்பார்கள். இதைத் தவிர்க்கவும். இந்த டைல்ஸில் தண்ணீர் மற்றும் எண்ணெய் சிந்தினால் மங்கும் பார்வை கொண்ட மூத்த பருவத்தினருக்குத் தெரியாது. அதில் கால்வைத்து விழ வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே மேற்படி டைல்ஸ் பதித்த வீடுகளில் வசிப்பவர்களாக இருந்தால் முதியோர்களின் நலம் கருதி மாற்றலாம் அல்லது முன்னெச்சரிக்கை உணர்வுடன் அவர்களை இருக்கச் செய்யலாம். அடுத்து, முதியோர் கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வது அடிக்கடி நடக்கும். எனவே, அவர்களுக்குக் கால்களில் இடறாதபடி தரையில் பொருள்களை அடைக்காமல், சிதறவிடாமல் இருப்பது சிறப்பு.

குறிப்பாக, குளியலறைக்கு மார்பிள்ஸ் பதிக்கவே கூடாது. குளியலறை டைல்ஸில் கறுப்பு மற்றும் வெள்ளையைத் தவிர்க்க வும். சில வீடுகளில் தண்ணீரின் நிறம் மங்கலாக இருக்கும். அந்த வீடுகளில் குளியலறையில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற டைல்ஸ் பதிக்கலாம். பாத்ரூமில் தண்ணீர் தேங்கி நிற்காமல் உடனடியாக வழிவதுபோல் இருக்க வேண்டும். அதே போல் திட்டுத் திட்டாக இல்லாமல் உலர்ந்த தன்மையுடன் இருப்பதும் அவசியம். கண்ணாடி அணியாமல் மூத்த பருவத்தினர் பாத்ரூமுக்குள் நுழையும் போதும் குளிக்கும்போதும் அவர்களுக்கு வசதியாக பாத்ரூமின் மூன்று பக்கங் களிலும், கழிப்பிடத்தைப் பயன்படுத்தும் போது உட்கார்ந்து எழுந்துகொள்ள வசதியாக கைப்பிடிகள் இருப்பது மிக முக்கியம்.

முன்பெல்லாம் கழிவறை தனியாகவும், குளியலறை தனியாகவும் இருக்கும். இப்போது ஒரே அறையில் இரண்டும் அமைந்துவிடுகின்றன. எனவே கழிப்பிடத் தில் பயன்படுத்தும் தண்ணீர், குளிக்கும் இடத்தில் சிதறாமல் இருக்க இடையில் மெல்லிய திரை பயன்படுத்தலாம். இவை எல்லாவற்றையும்விட சிறந்த தீர்வு கழி வறையும் குளியலறையும் தனித்தனியாக இருப்பதே!

முதுமைக்கு மரியாதை! - 11 - முதியோர் வசிக்கும் வீடுகள்... கவனிக்கவேண்டிய அடிப்படை விஷயங்கள்...

வெளிச்சம் முக்கியம்!

வீடு வாங்கும்போதும், வாடகைக்குக் குடிவரும்போதும் ஜன்னல்கள் இருக்கின்ற னவா எனத் தேடுவார்கள். ஆனால், குடிவந்ததும் அந்த ஜன்னல்களைத் திறந்து வைக்கிறார்களா என்பதுதான் கேள்வி. குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிப்போர், `ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வீட்டுக்குள் தூசு வரும், கொசு வரும், பிரைவசி இல்லை’ என்று திறப்பதே இல்லை. அது ஆரோக்கியமானதே அல்ல. மூத்தோர் வசிக்கும் வீடுகளில் தினமும் குறிப்பிட்ட மணி நேரத்துக்கு சூரிய வெளிச்சமானது வீட்டுக்குள் வர வேண்டும்.

வெயில் என்பது இயற்கையான கிருமி நாசினி. மூத்த பருவத்தினருக்கு உடலில் ஒருவித துர்வாடை வருவதற்கு வாய்ப் பிருக்கிறது. காற்றோட்டமான, சூரிய வெளிச்சம் வரும் வீடுகளில் இந்த துர்வாடை தவிர்க்கப்படும். மேலும் பார்வை மங்கலாக உணரும் மூத்தோர் வீட்டிலுள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க உதவும். ஜன்னல்களைத் திறக்கா மலிருக்கச் சொல்கிற காரணங்களைத் தவிர்க்கத் திரைச்சீலைகள் உதவியாக இருக்கும். ஜன்னல்களைத் திறந்து வைத்து ‘ஷியர் கர்ட்டன்’ (Sheer Curtain)களைப் பயன்படுத்தலாம். இவை வெளிச்சத்தையும் வீட்டுக்குள் அனுமதிக்கும். அதேநேரம் பிரைவசியும் பாதுகாக்கப்படும். சாதாரண திரைச்சீலைகளும் ஓகே. திரைச்சீலைகள் பயன்படுத்தும்போது பகல் வேளையில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம், இரவில் மூடி வைக்கலாம்.

இருக்கையும் படுக்கையும்...

வயதானவர்களுக்குத் தாழ்வான குஷன் வைத்த இருக்கையிலிருந்தும், உயரம் குறைந்த படுக்கையிலிருந்தும் எழுந் திருப்பது சிரமமாக இருக்கும். இதைத் தவிர்க்க கால் முட்டிகளின் உயரத்தில் இருக்கையும் படுக்கையும் இருப்பது அவசியம், அவர்கள் கால்களை அழுந்த ஊன்றி, எழுந்துகொள்ள சிரமப்படுவார்கள் என்பதால் அவர்களின் உயரத்துக்கேற்ப இருக்கைகள், படுக்கைகளை வாங்கலாம் அல்லது ஏற்கெனவே வாங்கியுள்ள உயரம் குறைவான மேஜை, கட்டிலை மாற்றியமைத்து உதவலாம். இப்போது கிடைக்கும் தரமான பிளாஸ்டிக் நாற் காலிகள் உட்கார்ந்து எழுந்துகொள்ள வசதியாகவே இருக்கின்றன.

அம்மா - அப்பா என இருவரும் நம்முடன் வசிக்கிறார்கள் என்கிற நிலை யில் டபுள் பெட் போடுவதற்குப் பதிலாக, தனித்தனியே இரண்டு சிங்கிள் பெட் வாங்கி வைக்கலாம். இரவில் கழிவறைக்குச் செல்ல படுக்கையிலிருந்து இறங்கவும் ஏறவும் இந்த அமைப்பு வசதியாக இருக்கும். அடுத்து விளக்கை அணைப்பதற் கும் போடுவதற்கும் வசதியாக படுக்கை யின் அருகில் அதற்கான ஸ்விட்ச் இருப்பது நல்லது. இப்போது ரிமோட் சிஸ்டத்தில் ஃபேன், லைட்டுகளை இயக்க வசதி வந்துவிட்டது. தேவையானபோது அதைப் பயன்படுத்திக்கொள்ள உதவும்.

ஒரே ஃபிளாட்டில் அம்மா - அப்பா வுடன் இருப்பவர்கள் அவர்களுக்கான அறைகளிலேயே உறங்குகின்றனர். அதுவும் இரவு நேரத்தில் ஏசியைப் போட்டுக்கொண்டு கதவை அழுந்த மூடிவிட்டால் ஹாலில் நடக்கும் விஷயம் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் முதியோர் இருக்கும் அறையில் அவசரத் துக்கு உதவ மற்றவர்களும் கேட்கும் வகை யில் காலிங் பெல் போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். முதியோருக் கான செல்போன்கள் அவர்கள் அருகில் இருந்தாலும் செல்போனில் நம்பரைத் தேடி உதவிக்கு அழைக்க நேரமாகும் நிலையில் இந்த காலிங் பெல் உதவும்’’ என்கிறார்.

தனிமையை விரும்பும் பெற்றோருக்கு...

மூத்த பருவத்தினர் மட்டும் வசிக்க புதிதாக வீடு அல்லது ஃபிளாட் வாங்குவ தாக இருந்தால் எப்படிப்பட்ட வீட்டை வாங்குவது அவர்களின் நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு உதவும் என்று கேட்டோம்...

``தற்போதைய சூழ்நிலையில் நகரங் களில் அப்பா - அம்மா; மகன் - மருமகள் வாழும் வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அம்மாவுக்குத்தான் உண்டு என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். ஆனால், `இதுநாள் வரை உழைத்ததுபோதும், எங்களுக்குத் தேவையானதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்... எங்களைத் தனியே விடுங்கள்' என்றுதான் பெற்றோர் நினைக்கிறார்கள். உதாரணத்துக்கு... எங்களைப் பார்க்க நினைக்கும் என் பெற்றோர் முன்கூட்டியே வரும் தேதியைச் சொல்லிவிடுவார்கள். நான்கைந்து நாள்கள் அல்லது அதிகபட்சம் ஒரு வாரத் துக்கு எங்களுடன் தங்குவார்கள். சந் தோஷமாக இருப்பார்கள். பிறகு அவர்கள் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள்.

முதுமைக்கு மரியாதை! - 11 - முதியோர் வசிக்கும் வீடுகள்... கவனிக்கவேண்டிய அடிப்படை விஷயங்கள்...

இப்படி தனியாக வசிக்கும் பெற் றோருக்கு புதிதாக வீடு வாங்குவதாக இருந்தால் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை... அவசரத்துக்கு உதவும் வீட்டுக்கு அருகிலேயே மருத்துவமனைகள், போக்குவரத்து வசதி. ஃபிளாட்டாக இருந்தால் லிஃப்ட் வசதி அவசியம். ஒரே அடுக்கில் புதிதாக வீடு கட்டும்போது படிகள் 10 இன்ச் அகலமும் 6 இன்ச் உயரமும் இருந்தால்தான் ஏறுவதற்கு வசதியாக இருக்கும். பத்து படிகள் ஏறியதும் `மிட் லேண்டிங்’ எனப்படும் பகுதி இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. மிட் லேண்டிங் பகுதி இருந்தால் எத்தனை முறை படிகளில் ஏறி இறங் கினாலும் கால்கள் வலிக்காது. படிகளின் உயரம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அளவு வேறுபட்டால் கால் மூட்டுகளுக்குச் சிரமம் தரும். படிகளுக்கான டைல்ஸ் சொரசொரப்புத் தன்மையுடன் இருப்பது சிறப்பு. அகலப் பகுதியையும் உயரப் பகுதியையும் வேறு வேறு கலர்களில் வைத்துக் கொள்வது இன்னும் சிறப்பு.

மூத்தோரின் உடல் ஆரோக்கியத்தைப் பேண அவர்களுக்கு வசதியான நேரத்தில் தேவையான உடற்பயிற்சிகள் செய்ய, விருப்பமான உணவை அவர்களே சமைத்துக்கொள்ள தேவைக்கேற்ப இட வசதியுடன் காற்றோட்டமான, 24 மணி நேர மின்சாரம், குடிநீர் வசதியுடன் உள்ள வீடுகளாகத் தேர்வு செய்யலாம். குறிப்பாக, படுக்கையறைக்குப் பக்கத்தில் பாத்ரூம் இருப்பது நல்லது.

சிலர் நமக்குப் பிறகு நம் பிள்ளைகள் பயன்படுத்துவார்கள் என்று தேவைக்கு அதிகமான பரப்பளவில் வீடு வாங்கிக் கொள்வார்கள். இளைய வயதினர் 40 அடி நடப்பதற்கும் முதியோர் அந்தத் தூரத்தை கடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலும் வயது அதிகமாக

ஆக பத்தடி நடப்பதற்கே சிரமம் ஏற்பட லாம். அப்படிப்பட்ட நிலையில் குறைந்த பரப்பளவு கொண்ட இடம் போதும்” என்று முடித்தார்.

- துணை நிற்போம்...

***

முதுமை அனுபவம்...

பரிசு ரூ.250 பெறுகிறது

முதுமை குறித்த உங்கள் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், வித்தியாசமான நபர்கள், உணர்வுகள், உதவிகள், கடமைகள், கருவிகள் என்று எதுவாக இருந்தாலும் பகிரலாம் என்று வாசகர்களிடம் கேட்டிருந் தோம். ஏராளமான அனுபவங்கள், அறிவுரைகள்... அவற்றில் ஒன்று..

முதுமைக்கு மரியாதை! - 11 - முதியோர் வசிக்கும் வீடுகள்... கவனிக்கவேண்டிய அடிப்படை விஷயங்கள்...

‘80 இயர்ஸ்’ யங் பாட்டி

என் பாட்டிக்கு 80 வயதாகிறது. சிரித்த முகமாக ஆரோக்கியமாக இருப்பார். எல்லோருடனும் அன்பாகப் பேசுவதும், எதை யும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இவர் ஸ்பெஷா லிட்டி. ரசித்து, ருசித்து எதையும் வீணாக்காது சாப்பிடுவார்.

சமையல், தையல், எம்ப்ராய்டரி போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர். சமையல் சம்பந்தமாக பக்கத்து வீடுகளுக்கு உதவிக்குச் செல்வார். எல்லோர் பெயரையும் நினைவில் வைத்திருந்து சரியாக பெயர் சொல்லி அழைப்பார். பாட்டுக்கு ரசிகர். கர்னாடக சங்கீதம் மட்டுமன்றி சினிமா பாடல்களையும் நேசிப்பார்.

சமீபத்தில் அவர் வீட்டுக்குச் சென்றிருந் தேன். பாட்டி வீட்டில் இல்லை, “எங்கே?’ என்றேன்.

“எதிர்வீட்டு பொண்ணு வித்தியாசமா கோலம் போட்டிருந்தாளாம் அதைக் கத் துண்டு வர போயிருக்கா” என்றார் அத்தை.

கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்போருக்கு வயது ஏறுவதேயில்லை என்பதற்கு என் பாட்டி சிறந்த உதாரணம்.

-  ஸ்ரீமல்லிகா குரு, சென்னை-33