Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 12 - காரும் பங்களாவும் நிரந்தரமில்லை... அன்பே எல்லாவற்றுக்கும் அடிப்படை!

நடிகர் டெல்லி கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
நடிகர் டெல்லி கணேஷ்

நடிகர் டெல்லி கணேஷ்

முதுமைக்கு மரியாதை! - 12 - காரும் பங்களாவும் நிரந்தரமில்லை... அன்பே எல்லாவற்றுக்கும் அடிப்படை!

நடிகர் டெல்லி கணேஷ்

Published:Updated:
நடிகர் டெல்லி கணேஷ்
பிரீமியம் ஸ்டோரி
நடிகர் டெல்லி கணேஷ்

நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தின் மொத்த வடிவத்தையும் தன்னுள் ஏற்றிக் கொண்டு, அதை நம் மனதுக்குள் கச்சித மாகக் கடத்தும் கலைஞர் டெல்லி கணேஷ். இவர் நடித்த `அபூர்வ சகோதரர்கள்', `சிந்து பைரவி', `நாயகன்', `ராகவேந்திரா', `மைக்கேல் மதன காமராஜன்', `அவ்வை சண்முகி', `ஆஹா', `தெனாலி', `ஆனந்தம்' படங்களின் கதாபாத்திரங்கள் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பவை.

1964 முதல் 1974 வரை இந்திய ராணுவத்தின் விமானப் படையில் பணியாற்றி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி 79-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் டெல்லி கணேஷின் கம்பீரம் இன்றும் தொடர்கிறது. சென்னை, நெசப்பாக்கத்தில் மனைவி, மகனுடன் வசிக்கும் டெல்லி கணேஷின் தோற்றமும் குரல் வளமும் முதுமையை விரட்டியடிக்கிறது. 1977-ம் ஆண்டு `பட்டினப்பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநர் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட டெல்லி கணேஷை முதுமைக்கு மரியாதை தொடருக்காகச் சந்தித்தோம்.

``இந்தியாவின் வட துருவமான ஜம்முவில் விமானப் படையில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். என் மனைவி தங்கம், தென்கோடியான திருவனந்த புரத்தில் இருந்தார். அத்தை மகள் என்பதால் வீட்டு விசேஷங்களில் மட்டும் எப்பவாவது பார்த்துப்போம். எனக்கு தங்கத்தைப் பிடிச்சுப்போய் லெட்டர் போடுவேன். பதில் லெட்டர் வரும். இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிஞ்சுபோய் கண்டிச்சாங்க. லெட்டருக்கு பதிலாக மாசத்துக்கு ஒரு தடவை கால் புக் செய்து பேசிப்போம். இப்படி நாலு வருஷங்கள் ஓடுச்சு. ஒருகட்டத்துல இனியும் தாமதிக்கக் கூடாதுன்னு பொண்ணு கேட்டு வந்து, சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சென்னையில் செட்டில் ஆனோம்.

முதுமைக்கு மரியாதை! - 12 - காரும் பங்களாவும் நிரந்தரமில்லை... அன்பே எல்லாவற்றுக்கும் அடிப்படை!

மனைவி, அக்கவுன்ட்டன்ட் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்த்துட்டு இருந்தாங்க. இரண்டு மகள்கள், ஒரு மகன்... நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போகிற சூழ்நிலையில குழந்தைகளை வளர்க்க எங்க மாமியாரும், என் மச்சினியும் உதவினாங்க. இன்னிக்கு எல்லாரும் பெரியவங்களாகிட்டாங்க. பொண்

ணுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிட்டோம். பையன் எங்களோட தான் இருக்கார்” என்றவரிடம்,

``இப்போதைய நிலையில் முதுமையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?” என்று கேட்டோம்.

``ரொம்ப சந்தோஷமா இருக்கோம். வயசைப் பத்தியே நினைக்கறதில்லை. எதையும் கஷ்டமா நினைச்சா... ரொம்ப கஷ்டமாயிடும். முக்கியமா வயதாக ஆக எங்களுக்குள்ளே அண்டர்ஸ்டாண்டிங் அதிகமாகிட்டே இருக்கு. ஆரம்ப காலத்துல நான் ரொம்ப ஸ்டிரிக்ட். காலையிலே காபி வர கொஞ்சம் லேட் டானாலும் `வேண்டாம்'னு சொல்லிடு வேன். மதியம் சாப்பாடு சரியில்லைன்னா எழுந்து போயிடுவேன். ஆனா, என் மனைவி என்னை எதிர்த்துப் பேசவே மாட்டாங்க. பேசினால்தானே சண்டை. அந்த வயசுல மத்தவங்க சிரமம் எனக்கு பெரிசா தெரிஞ்சதில்லை.

இப்ப அப்படியில்ல. காலையில என் மனைவி காபி கொண்டு வர லேட்டானா, நானே சமையலறைக்குப் போய் காபி போட்டுக் குடிச்சிடுவேன். ஷூட்டிங் போறதா இருந்தா எனக்குத் தேவை யானதை நானே எடுத்து வெச்சுக்கறேன். நான் நல்லா சமைப்பேன் என்பதால் அவங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கறதில்லை. எனக்கு என்ன தேவையோ அதை நானே செய்துப்பேன். அவங்களுக்கு ஏதாவது தேவையாயிருந்தா செய்து கொடுப்பேன். ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறது ஆறுதலாயிருக்கு. அன்பு இன்னும் அதிகமாகுது.

 ரிலாக்ஸ் டைம்...
ரிலாக்ஸ் டைம்...

என் மூத்த பொண்ணு சென்னையிலே இருக்கறதாலே அப்பப்ப வந்து எங்களைப் பார்த்துக்கறா. சின்னவள் பெங்களூருல இருக்கா. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களைப் பார்க்க வந்துடுவா. பொண் ணுங்க எங்களை வந்து பார்க்கும்போதெல்லாம் என் மனைவிக்கு சுறுசுறுப்பு அதிக மாயிடும். முக்கியமா என் மகன் எங்களோடவே இருக்கறதாலே குறை யொன்றும் இல்லை எங்களுக்கு” என்றார் சந்தோஷமான குரலில்.

``தற்போதைய சூழ்நிலையில் உள்ள முதியோர், இத்தனை நாள்கள் உழைச்சது போதும்... இனிவரும் வாழ்க்கையைத் தனிமையாகக் கழிக்க விரும்புவதாகச் சொல்கிறார்களே...” என்றோம்.

 மகனுடன்...
மகனுடன்...

``என்னைப் பொறுத்தவரை இது சரியானதா படலை. நான் கூட்டுக் குடும்பத்தை விரும்பறேன். என்னால தனியா வாழ முடியாது. இப்பகூட சில நாள்களுக்கு முன்னே என் மனைவிக்கு கொரோனாவுக் கான அறிகுறி இருந்ததா உணர்ந்தோம். என் பொண்ணு தன் வீட்டுக்கு வரச் சொல் லிட்டா. என் பொண்ணு வீட்டுல எனக்குத் தேவையானதைக் கொடுத்தாலும் என் நினைப்பெல்லாம் என் வீட்டைச் சுத்தி தான் இருந்தது. ஒருத்தருக்கொருத்தர் அன்பா, ஆதரவா இருக்கறதுதான் சந்தோஷமான வாழ்க்கை.

இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்லணும். கல்யாணமானதும் தற்போதைய சூழ்நிலையில் மகனும் மருமகளும்தான் தனியா இருக்க விரும்பறாங்க. ஆனா, அவங்களுக்குக் குழந்தை பிறந்ததும் அம்மாவும் அப்பாவையும் கூப்பிடுவாங்க. அப்ப மட்டும் உறவுகள் வேண்டும் என்று நினைப்பாங்க. எங்கப்பாவுக்கு ரெண்டு மனைவிகள். எங்கம்மா இறந்த பிறகு, ரெண்டாவது கல்யாணம் பண்ணிக் கிட்டார். எங்கம்மாவுக்கு பிறந்தவங்க மூணு பேரு. ரெண்டாவது மனைவிக்குப் பிறந்தவங்களையும் சேர்த்து மூத்த மகனா இருந்து நான்தான் பார்த்துக்கிட்டேன். உறவுகள் மூலம் எனக்குக் கிடைச்ச பாடங்களும் பலமும் அதிகம். அந்த உறவு களை நான் நேசிக்கிறேன்.

முதுமைக்கு மரியாதை! - 12 - காரும் பங்களாவும் நிரந்தரமில்லை... அன்பே எல்லாவற்றுக்கும் அடிப்படை!

இப்பகூட ஷூட்டிங் ஸ்பாட்டுல என்னைவிட்டு இன்றைய இளம் தலை முறை நடிகர்கள் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தா, அவங்கள அழைச்சு, எங்கிட்ட உட்கார வெச்சுப் பேசுவேன். அவங்களுக்கு ஏதாவது அசெளகர்யமா இருந்தா தீர்த்து வைப்பேன். உறவுகளுக்

கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கறேன். அப்படி அவங்களோட பேசும்போது பழகும்போது அவங்களுக்குள் இருக்கும் எனர்ஜி என்னையும் தொற்றிக்கொள்ளும். எதையும் கவலைப்படாமல் இருந்தாலே சந்தோஷம் தானா வந்துடும்.

வயசானாலே கோபம் அதிக மாயிட்டதா உணர்வாங்க சிலர். அது இயலாமையின் வெளிப்பாடு. கோபம் வராத மனிதன் உணர்ச்சியற்றவன்னு அர்த்தம். இப்பவும் எனக்கு அப்பப்ப கோபம் வருது. அப்படி எனக்கு கோபம் வரும் நேரத்துல என் மனைவி அமைதியா போயிடுவாங்க. அடுத்த முறை அவங் களைப் பார்க்கும்போது அதை மறந்து போயிடுவேன். கண்ணாலேயே `என்ன’ என்கிற கேள்வியும் `ஒண்ணுமில்லை’ என்கிற பதிலும் தன்னால வந்துடும். ஈகோவுக்கு இடம்கொடுக்கறதில்லை.

எல்லாத்தையும் மீறி வயசுன்னு ஒண்ணு இருக்கு. அதையும் நாம கவனிச்சுக்கணும். குறிப்பா இப்போதைய நிலையில ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்க றோம். அதுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துட்டு வர்றோம். இதை நடிகர் சங்கத்துலேயும் சொன்னேன். என் நண்பர்களுக்கும் இதை வலியுறுத்திட்டு வர்றேன்.

அடுத்து உணவு முறை... ராணுவத்துல இருந்தப்ப ஒரு வேளைக்கு 15 சப்பாத்தி சாப்பிடுவேன். இப்ப ஒண்ணுதான். சில விஷயங்கள் தன்னால குறைஞ்சுடும். சில விஷயங்களை நாமதான் குறைச்சுக்கணும்.

 இளமையில்....
இளமையில்....

ஆரம்பத்துலேர்ந்தே என் மனைவி எதுக்கும் ஆசைப்பட மாட்டாங்க. தனக்கு என்ன தேவையோ அது போதும்னு நினைப்பாங்க. அவங்க ஆசைப்பட்டு கேட்டது வைரத் தோடு மட்டும்தான். நான் வாங்கி கொடுத்ததைத்தான் இன்னிக்கு வரைக்கும் போட்டுட்டு இருக்காங்க. நாம எதையும் கொண்டு வரலை. எதையும் கொண்டு போகப் போறதில்லை. செங்கல்லும் சிமென்ட்டும் கொண்டு கட்டிய பங்களாவும், நட்டும் போல்ட்டும் கொண்ட சொகுசு கார்களும் நிரந்தர மில்லை. அன்பே எல்லா வற்றுக்கும் அடிப்படை” என்றவர்,

முடிவாக சொன்ன மெசேஜ், “இன்றைய தலைமுறையினருக்கு நாம் பாடம் நடத்த முடியாது. அனுபவங்கள்தாம் பாடம். அந்த அனுபவங்களும் அன்பான குடும்பமும் எல்லாருக்கும் கிடைக்கும். அதைப் புரிஞ்சுக்கிட்டு வாழணும். நாங்க புரிஞ்சுக் கிட்டோம். இந்த வயசுலே யேயும் சந்தோஷமா வாழ றோம்” என்றார் தன் மனைவி யைப் பார்த்தபடி. அதை ஆமோதித்தார் திருமதி டெல்லி கணேஷ்.

- துணை நிற்போம்...

***

எதைத் தவிர்ப்பது... எதைச் சேர்ப்பது?

பெரும்பாலான சீனியர்களுக்கு பசி உணர்வு அதிகமிருக்காது. அப்படிப்பட்டவர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை எடுத்துக்கொள்ளாமல் அவ்வப்போது இடைவெளிவிட்டு சிறிது சிறிதாக உணவு எடுத்துக்கொள்ளலாம். இடையிடையே மோர் குடிக்கலாம்.

அன்றாட உணவில் இட்லி, தோசை, பொங்கல், சாதம், சப்பாத்தி என அரிசி, கோதுமை போன்றவற்றையே அதிகம் உண்ணக் கூடாது. சிறுதானிய உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இத்துடன் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளை அளவோடு சேர்க்க வேண்டும். கீரைகளை இரவு உணவில் தவிர்க்க வேண்டும்.

முதுமைக்கு மரியாதை! - 12 - காரும் பங்களாவும் நிரந்தரமில்லை... அன்பே எல்லாவற்றுக்கும் அடிப்படை!

பலர் ஐம்பது வயதைக் கடந்தாலே நடைப்பயிற்சி போதும் என்று நினைத்துவிடுகிறார்கள். நடைப்பயிற்சியுடன் எளிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம். தளர்ந்துவரும் தசைகள் ஓரளவு உறுதியாக இருப்பதற்கும், கொழுப்புச் சத்து அதிக அளவு சேராமல் இருப்பதற்கும் இது உதவும்.

டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது என்று வீட்டுக்குள்ளே அடைந்துவிடாமல் காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள், மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் சூரிய ஒளி படும் இடத்தில் அமரலாம். இதனால் வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

உணவில் ருசிக்காக மட்டும் இல்லை, உடலின் ஆரோக்கியத்துக்கும் உப்பு அவசியத்தேவை. உப்பை அளவுக்கு அதிகமாக உண்ணும் சில முதியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புண்டு. ஆகையால், உடலில் எந்த நோய் இல்லாமல் இருந்தாலும் உப்பின் அளவை சிறிது குறைத்து உண்ணுவது நல்லது.

- முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன், சென்னை

முதுமை அனுபவம்...

முதுமை குறித்த உங்கள் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், வித்தியாசமான நபர்கள், உணர்வுகள், உதவிகள், கடமைகள், கருவிகள் என்று எதுவாக இருந்தாலும் பகிரலாம் என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். ஏராளமான அனுபவங்கள், அறிவுரைகள்... அவற்றில் ஒன்று..

பரிசு ரூ.250 பெறுகிறது

சர்ப்ரைஸ் வேண்டாமே!

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசிக்கும் ஒரு பெண்ணுக்கு 70-வது பிறந்தநாள் வந்தது. அன்றைய தினம் அவருக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று 10 பெண்கள் சேர்ந்து கேக், பூங்கொத்துடன் அவர் வீட்டுக்குப் போனோம். பழைய நைட்டி யுடன், கஞ்சி குடித்துக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்த அவர் எல்லோரையும் வரவேற்றார். அவர் சந்தோஷப்பட்டதைவிட அதிகமாக சங்கடப்பட்டார். முன்பே தெரிந்திருந்தால் உங்கள் எல்லோருக்கும் சாப்பிட ஏதாவது வாங்கி வைத்திருப்பேனே, தாம்பூலமும் தந்திருப்பேனே என்று மிகவும் வருத்தப்பட்டார்.

இன்னொரு தோழியின் 60-வது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவர் மகன் குடும்பத்தோடு இரண்டு நாள்கள் முன் வந்து இறங்கினான். ஸ்டார் ஹோட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்ததை ரகசியமாக வைத்திருந்தான். தோழியோ அவள் பஜனைக் குழுவோடு சில கோயில்களுக்கு டூர் போகவும் ஒரு கோயிலில் பஜனை செய்யவும் திட்டமிட்டு இருந்தாள். இப்போது அவள் பாடு திண்டாட்டமாகி விட்டது.

மூத்த குடிமக்கள் எதையும் முன்கூட்டித் திட்டமிட்டு நடத்துவதை மிகவும் விரும்புவார்கள். மேலும் அதை பற்றி முதலிலேயே மனக்கண்களில் ஓட்டிப் பார்த்து மகிழ்வார்கள். எனவே பெரியவர்கள் சம்பந்தப்பட்டதை அவர்களிடமே கேட்டு அவர்கள் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப ஏற்பாடு செய்யலாமே.

- மீனலோசனி பட்டாபிராமன், சென்னை-92