Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 13 - சீனியர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கொடூரன்கள்! - ரவி ஐபிஎஸ் (ஓய்வு)

முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

முதுமைக்கு மரியாதை! - 13 - சீனியர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கொடூரன்கள்! - ரவி ஐபிஎஸ் (ஓய்வு)

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

Published:Updated:
முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

தற்போது நம்மிடம் உள்ள தொழில்நுட்ப விஷயங்களான கைப்பேசி, இணையம், கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, முதியோர்களைக் குறிவைத்து அவர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நீங்கள் இத்தனை லட்சம் ரூபாய் வென்றுள்ளீர்கள் என்ற விளம்பரம் தொடங்கி இந்த ஸ்க்ராட்ச் கார்டினை சுரண்டினால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்னும் செய்திகளை அனுப்பு வது என மோசடி வலைபின்னல்கள் தொடர்கின்றன.

ஏமாற்ற நினைப்பவர்கள் கொடுக்கும் இணைப்பைத் தொடர்வதன் மூலம், உங்களுக்கு இத்தனை லட்சம் பரிசு விழுந்திருக்கிறது, இதை நேரடியாக உங்கள் அக்கவுன்ட்டுக்கு உடனே டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ள இதை க்ளிக் செய்யுங்கள் என்று ஒரு பட்டனையோ, லிங்கையோ காட்டு கிறார்கள். அதை நம்பி க்ளிக் செய்ததும், நேரடியாக நம்முடைய கூகுள்பே அல்லது போன்பே அப்ளிகேஷன் திறந்து குறிப்பிட்ட ஒரு தொகையுடன் அந்தப் பக்கம் நிற்கும், அந்த நிமிடம் பணம் கிடைக்கிறதே எனும் ஆசையில் பிற யோசனை ஏதுமற்று உடனே அதை பிராசஸ் செய்ய நம்முடைய UPI Pin Number-ஐ கொடுத்தவுடன் நம்முடைய அக்கவுன்டிலிருந்து அந்த மோசடி யாளர்களின் அக்கவுன்டுக்கு பணம் சென்று சேர்ந்திருக்கும்.

ரவி ஐபிஎஸ்
ரவி ஐபிஎஸ்

இத்தகைய மோசடி சார்ந்த செய்திகள் முதியோரையும் தாக்கும் நிலையில் இதுகுறித்து, காவல் துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வுபெற்ற ரவி ஐபிஎஸ் அவர் களிடம் பேசினோம்.

``மனிதன் வாழும் நாள்கள் அதிகரிக்க அதிகரிக்க இன்று அவர்களின் பிரச்னை களும் அதிகரிக்கின்றன. இதில் தனியாக வசிக்கும் முதியோரின் பிரச்னைகள் அபாயகரமானவை. அவர்களின் உடைமைக்கும் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. அதற்கு உதாரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாப்பூரில் நடந்த கொலை சம்பவம். நம்பிக்கைக்குரிய கார் டிரைவரே அந்தத் தம்பதியரைக் கொன்றது கொடூரம்.

இந்தச் சம்பவத்தின் மூலம் முதியோர்கள் மட்டுமல்லர்... அனைத்து வயதினருமே தங்களுடைய பர்சனல் விஷயங்களை மற்றவர்களிடம் பகிரக் கூடாது. மற்றவர் கள் முன் பேசக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்போது எல்லோ ருடைய கைகளிலும் செல்போன் இருப்பதால் வெளியிடங்களில், பயண நேரங்களில் பேசுகிறார்கள். குறிப்பாக, முதியோர் சற்று உரத்த குரலில் இந்த இடத்துக்குச் செல்கிறேன். அந்த இடத்தில் இறங்கு கிறேன். அவரைப் பார்க்கி றேன். இந்தப் பணியைச் செய்கிறேன் என்று மொத்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இது மிகவும் தவறு.

முதுமைக்கு மரியாதை! - 13 - சீனியர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கொடூரன்கள்! - ரவி ஐபிஎஸ் (ஓய்வு)

அடுத்தது, முதியோரைக் குறிவைத்து நடக்கும் சைபர் குற்றங்கள்... `வங்கியிலிருந்து பேசுகிறோம். உங்களுடைய KYC-யை அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கு இதுதானே’ என்று ஆரம்பிப் பார்கள். உட்கார்ந்த இடத்திலேயே வேலை நடக்கிறது என்பதற்காக, சரியான வங்கிக் கணக்கு எண்ணையும் அவர்கள் கேட்கும் தகவலையும் தெரிவித்து விடுகிறார்கள்.

உங்களுக்குப் பரிச்சயமில்லாத எண்ணில் இருந்து போன் வந்தால் உடனே எடுக்காதீர்கள். அந்த எண் யாருடையது என்பதை அறிந்துகொள்ள இப்போது நிறைய வசதிகள் உள்ளன. இதற்கு மற்றவர்களின் உதவியையும் நாடலாம். அடுத்து, போன் மூலம் உங்கள் வீட்டு முகவரி, உங்களுக்கு நெருக்க மானவர்களின் தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்கு எண், கிளை, பாஸ்வேர்டு போன்றவற்றை பகிர வேண்டாம். முக்கிய மாக OTP, PIN எண்களைப் பகிரவே வேண்டாம்.

வீட்டில் குடும்பத் தலைவராக முதியோர் இருக்கும்பட்சத்தில் காஸ் இணைப்பு, ரேஷன் இணைப்பு, வங்கி இருப்பு போன்ற விவரங்களைப் பெற, தெரிந்துகொள்ள போன் அவசியத் தேவைதான். இந்த விவரங்களைப் பெறும் அளவுக்கு போன் இருந்தால் போதும். விலையுயர்ந்த போன்களும், அதி நவீன அப்டேட் கொண்ட போன்களும் வேண்டவே வேண்டாம்.

சில நேரங்களில் முதியோரின் போனுக்கு, `இந்த இடத்தில் விபத்து நடந்திருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ளவர்போல் தெரிகிறது. நீங்கள் வர முடியுமா, உங்களை அழைத்து வர நாங்கள் வரட்டுமா’ என்கிற அழைப்புகளும் வருகின்றன. இந்த விஷயத்தில் பதற்ற மடைந்துவிடாதீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். பிறகு, மற்றவற்றை யோசிக்கலாம்.

அதேபோல் போனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்கு மயங்கிவிடாதீர்கள். தேவையில்லாத அந்த லிங்க்கை டௌன்லோடு செய்யா தீர்கள். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது உங்களுடைய பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

அடுத்து ATM. பணம் எடுக்க ஏடிஎம் செல்லும்போது அதிக கவனம் தேவை. ஏடிஎம் மெஷினில் உங்களுக்கான பணம் வரவில்லையே என்று பதற்றமடையா தீர்கள். முன்பின் தெரியாதவர்களின் உதவியை நாடாதீர்கள். பணம் கிடைக்க வில்லையென்றால் ஏடிஎம் அறையிலேயே புகார் செய்ய எண்கள் குறிக்கப் பட்டிருக்கும். அதற்கு போன் செய்து தகவல் தெரிவிக்கலாம் அல்லது உங்கள் வங்கிக் கிளைக்குத் தொடர்பு கொண்டு தகவல் சொல்லலாம்.

தற்போது முதியோர்களைக் குறிவைத்து ஓய்வுபெற்ற பிறகு சம்பாதிக்கலாம் என்கிற விளம்பரங்கள் பல வருகின்றன. இந்த விளம்பரங்களை முழுவதுமாக நம்பி விடாதீர்கள். தீர விசாரித்த பிறகு செயலில் இறங்குவது சிறந்தது.

கூட்டுக்குடும்பங்கள் அரிதாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு செல்போன் அவசியமாகி விட்டது. செல்போன் உபயோகிக்கும் முதியோர், முக்கியமான எண்களை உடனடியாக எடுத்துப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது அவசியம்.

முதுமைக்கு மரியாதை! - 13 - சீனியர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கொடூரன்கள்! - ரவி ஐபிஎஸ் (ஓய்வு)

அதேபோல் நெருங்கிய நண்பர் களுடனும் குடும்பத்தினருடனும் இணைந்து வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து உதவிகளை, தேவைகளைப் பகிரலாம். செல்போன் பயன்படுத்தும் விஷயத்தில் பிள்ளைகள், வயதான பெற்றோர்களுடன் நேரம் ஒதுக்கி எந்தெந்த அப்ளிகேஷன் களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுத்தருவது முக்கியமான கடமை’’ என்றவர்,

``சைபர் குற்றங்களில் எந்த மாதிரியான விஷயங்களில் ஏமாற்றப்பட்டாலும் மற்றவர்களிடத்தில் பகிர்வது மிகமிக முக்கியம். தான் ஏமாற்றப்பட்ட விஷயத்தைப் பிறரிடம் பகிர்வதை அவமானமென்றோ, அசிங்கமென்றோ நினைத்துப் பகிராமல் இருப்பது, மேலும் மேலும் இத்தகைய மோசடியாளர்கள் வேகத்துடன் செயல்படுவதற்குத்தான் உதவியாக இருக்கும். வெளிப்படையாகப் பகிர்வது, உங்கள் உறவுகள், நட்புகள் உட்பட பலர் உஷாராக இருப்பதற்கு உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்” என்று எச்சரித்தார்.

- துணை நிற்போம்...

****

நடைப்பயிற்சியில் கவனம்...

“நடைப்பயிற்சி செல்பவர்கள் இருள்சூழ்ந்த வேளையிலும், ஜன நடமாட்டம் இல்லாத இடங்களிலும் நடைப்பயிற்சி செய்ய வேண்டாம். உங்களுக்கு அந்த நேரம்தான் வசதியாக இருக்கிறது என்றால் கையில் செல்போன் இருக்கட்டும். அதில் முக்கியமான எண்களை உடனே பயன்படுத்தும்படி அமைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக அருகில் உள்ள காவல் நிலையத் தின் எண்ணையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். வாக்கிங் ஸ்டிக் ஒன்றும் உடனிருப்பது நல்லது” என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ரவி ஐபிஎஸ்.

புகார் அளிக்க...

* சைபர் குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் 1930 என்ற எண்ணுக்குப் புகார் அளிக்கலாம்.

* அரசாங்கத்தின் வலைதளப்பக்கம் www.cybercrime.gov.in என்ற தளத்தில் நீங்கள் புகார் தரலாம். இந்த வலைதளத்தில் உங்களுடைய புகாரைப் பதிவு செய்த பின்னர் புகார் விசாரணைக்கு வரும்போது காவல்துறையே உங்களைத் தொடர்பு கொண்டு விசாரிப்பார்கள்.

* உங்களுக்கு அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யலாம்.

* சைபர் குற்றங்களை விசாரிப்பதற்கென்று இருக்கும் சிறப்புப் பிரிவு களிலும் நீங்கள் புகாரளிக்கலாம்.

சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, ஏதாவது உதவி தேவைப்பட்டாலோ அதற்கு அரசின்‌ உதவி எண்ணும் உள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிப்பதற்கு உதவும் எண்: 155260. இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு விடையை அறிந்துகொள்ளலாம்.

ப்ரித்திவிராஜ் - ஜெயஸ்ரீ
ப்ரித்திவிராஜ் - ஜெயஸ்ரீ

முதியோருக்கான முக்கிய பொருள்கள்!

`வரும் முன் காப்போம்’ என்கிற நோக்கில் முதியோர்களின் எதிர்கால உடல் நலனைக் கருத்தில்கொண்டு தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஏராளம். முதியோர்களுக்கான சிறப்புப் பொருள் களான வாக்கிங் ஸ்டிக், வழுக்காத மிதியடிகள், காலணிகள், கழிவறைக்கான கைப்பிடிகள், சாய்ந்து உட்கார குஷன்கள், டயாப்பர்கள் இப்படிப்பட்ட பொருள்களை வெவ்வேறு இடங்களில் தேடி அலைந்து வாங்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இதற்காக பிரத்யேகமான விற்பனை நிலையங்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் சென்னையில் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது அடையாரில் `ஓல்டு இஸ் கோல்டு’ விற்பனை நிலையம்.

ஆரம்பத்தில் அடையாரில் தொடங்கப்பட்ட கடை சிறிய இடத்தில் இருந்ததோடு, பொருள்களைத் தேடிவருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே அதைக் காலி செய்துவிட்டு, இந்திரா நகர், அண்ணாநகர் ஆகிய இரண்டு இடங்களில் தற்போது புதிதாகக் கடைகளைத் திறந் துள்ளனர் ப்ரித்திவிராஜ் - ஜெயஸ்ரீ தம்பதியர்.

முதுமைக்கு மரியாதை! - 13 - சீனியர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கொடூரன்கள்! - ரவி ஐபிஎஸ் (ஓய்வு)

இப்படிப்பட்ட விற்பனை நிலையம் தொடங்கப்பட்ட நோக்கத்தைப் பகிர்ந்தார் ப்ரித்திவிராஜ்... ``எங்கம்மாவுக்கு வயசான காலத்தில் கண் பார்வை குறைஞ்சுடுச்சு. சுதந்திரமா வாழ்ந்து பழகினவங்க அவங்க. முதுமையை அவங்க சிரமமா நினைக்கக் கூடாதுன்னு அவங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுக்க நினைச்சேன். ஆனா, ஒவ்வொரு பொருளும் வெவ்வேறு இடங்கள்லதான் கிடைச்சது. குறிப்பா, வாக்கிங் ஸ்டிக் வாங்கணும்னா டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குப் போகணும், கழிவறைக்கான கைப்பிடிகள் வாங்கணும்னா ஹார்டுவேர்ஸ் கடைக்குப் போகணும், செப்பல் வாங்கணும்னா ஷூ மார்ட்டுக்குப் போகணும், வீல் சேர் வாங்கணும்னா சர்ஜிக்கல் ஸ்டோர்ஸுக்குப் போகணும். அதுவுமில்லாம நமக்குக் கிடைக்கும் பொருள்கள், நாம எதிர்பார்க்கிற மாதிரி இருக்காது.

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தப் பொருள்களையெல்லாம் ஒண்ணா சேகரித்து விற்பனை செய்தா என்னன்னு யோசனை வந்தது. நானும் என் மனைவியும் செயலில் இறங்கினோம். அப்படி பத்தாண்டு களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த விற்பனை நிலையம். இப்ப முதியோர்களைப் பாதுகாக்கும் விழிப்பு உணர்வு அதிகமாகிட்டு வருது. முதியோர் களுக்குத் தேவையான பொருள்களை பிரத்யேகமா வரவழைச்சுட்டு விற்பனை செய்துட்டு வர்றோம்” என்றார்.

“எங்ககிட்டே வரும் நிறைய பேர் எங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பா அம்மாவுக்குத் தேவையான பொருள்களை அவங்க வசதிக்கேற்ப வாங்கித் தர முடியுமான்னு கேட்பாங்க. அப்படிப்பட்டவங்க வீடுகளுக்கு நேரில் சென்று பாத்ரூமில் இருந்து படுக்கையறை வரை அவங்களுக்குத் தேவையான, பயன்படுத்தக்கூடிய பொருள்களையும் சப்ளை செய்கிறோம்” என்கிறார் ஜெயஸ்ரீ.