Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 14 - “வயசாகலாம், தோல் சுருங்கலாம்... மனசும் சந்தோஷமும் சுருங்கிடக்கூடாது!”

ரேவதி சங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி சங்கரன்

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - 80-லும் எனர்ஜி குறையாத ரேவதி சங்கரன்

முதுமைக்கு மரியாதை! - 14 - “வயசாகலாம், தோல் சுருங்கலாம்... மனசும் சந்தோஷமும் சுருங்கிடக்கூடாது!”

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - 80-லும் எனர்ஜி குறையாத ரேவதி சங்கரன்

Published:Updated:
ரேவதி சங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி சங்கரன்

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு... வயது கூடக்கூட நகைச்சுவை உணர்வு அதிகரிக்க வேண்டும் என்பார்கள். அதற்குச் சிறந்த உதாரணம், ரேவதி சங்கரன். இவர் பிறந்து வளர்ந்தது மதுரையில். கடந்த 50 ஆண்டுகளாக சென்னைவாசி. ஆனாலும், கிராமிய வாழ் வியலுக்கான ஆலோசனைகள் மற்றும் ஆன்மிக கருத்துகளை எல்லாத் திசை யினருக்கும் கொண்டுசேர்ப்பதையே பிரதானப் பணியாகச் செய்துவருகிறார்.

ரேவதிக்கு 80 வயது ஆகிறதாம். பொய் என்கின்றன, இவரின் குறும்பும், உற்சாகம் ததும்பும் பேச்சாற்றலும். அவருடனான சந்திப்பில் அப்படியோர் உணர்வுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

“நடிகை பானுமதி அம்மாவோட கடைசி காலத்துல அவரைச் சந்திச்சுப் பேசினேன். பூ வாடுறதுபோல இயலாமை ஏற்படுத்துற முதுமையின் தாக்கத்தை அவரின் உணர்வுகள் வெளிப்படுத்தின. வயசாகலாம், தோல் சுருங்கலாம்... எதுக்காகவும் மனசும் சந்தோஷமும் சுருங்கிடவே கூடாதுனு அப்பதான் அழுத்தமா புரிஞ்சது. முதுமையும் ஒருவித அழகுதான். ஆரோக்கியமான உணவுப்பழக்கம், நல்ல மனிதர்களுடனான சிநேகம், பயனுள்ள தகவல்களைத் தேடித்தேடி கத்துக்கிறது... இவைதான் என் உடல் நலனுக்கும் மனநலனுக்கும் காரணம். நடக்க முடியாம அடங்கி உட்காரும்வரை என் வாய்க்கும் கால்களுக்கும் ஓய்வே கிடையாது!” - அகத்தின் அழகு தன் முகத் திலும் ஒளிவீசுவதற்கான சீக்ரெட் சொல்லி ஆரம்பித்தவர், மீடியா பயணத்தை ரீவைண்டு செய்தார்.

முதுமைக்கு மரியாதை! - 14 - “வயசாகலாம், தோல் சுருங்கலாம்... மனசும் சந்தோஷமும் சுருங்கிடக்கூடாது!”

“சின்ன வயசுல ரேடியோவுல சினிமா பாடல்களைக் கேட்டு, பாடுவேன்; ஆடு வேன். என் குடும்பத்தினர் கைதட்டிச் சிரிப்பாங்க. இதுபோலவே மத்தவங்களை மகிழ்விக்கணும்னு அப்போ என் மனசுல ஊன்றின விதைதான், என் இத்தனை வருஷ செயல்பாடுகளுக்கான தடம். முறைப்படி இசையும் நடனமும் கத்துக் கிட்டேன். காலேஜ்ல பயங்கரமான அராத்து நான். 19 வயசுல கல்யாணம். என் வீட்டுக்காரர் வேலை விஷயமா, கொல்கத்தாவுலயும் ஹைதராபாத்லயும் சில வருஷங்கள் வசிச்சோம். அதுக்கப் புறமா சென்னைதான் நிரந்தர விலாசம்.

பட்டணத்துல படிச்சிருந்தாலும், நான் பழங்காலத்து மனுஷிதான். குடும்பத்துக்கு அப்புறமாதான் எல்லாமேனு பழைய புராணம்தான் பேசுவேன். அதனாலதான், 30 வயசுக்கு அப்புறமா எனக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்ய ஆரம்பிச்சேன். விளம்பரப் படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சு, 60-க்கும் அதிகமான விளம் பரங்கள்ல நடிச்சதெல்லாம் தனிக்கதை. இதே வீட்டுலதான் திலீப்குமார்ங்கிற இளம் இசையமைப்பாளருடன் சில விளம்பரங்களுக்காக ஒண்ணா வேலை செஞ்சேன். பிற்காலத்துல ஏ.ஆர்.ரஹ் மானா பெரிய உயரத்துக்குப் போனார் அந்தப் புள்ளை.

ஒருமுறை கே.பாலசந்தர் சார் கிட்டேருந்து அழைப்பு வந்துச்சு. ‘சார், நீங்க அடிப்பீங்கன்னு சொல்றாங்களே...’னு கேட்டேன். ‘நல்லா நடிக்கலைனா லேசா ரெண்டு தட்டு தட்டுவேன்’னு சொன்னார். ‘என்னை யாராச்சும் அடிச்சா, திருப்பி அடுச்சுடுவேன். நான் ரொம்ப பொல் லாதவ...’னு சொன்னேன். என் சுபாவத்தை ரசிச்சு சிரிச்சார். அவரோட சீரியல்கள்ல எனக்கு வித்தியாசமான வேஷங்களைக் கொடுத்தார்” - சின்னத்திரை வாயிலாக மக்களின் மனதில் குடிகொண்ட ரேவதி, வட்டார மொழிகளுக்கு ஏற்ப இசைப் பேருரை (ஹரிகதா காலட்சேபம்) வழங்கு வதில் நிபுணர்.

“வட்டார மொழியில பேசுறப்போ நாம சொல்லுற கருத்து மக்கள்கிட்ட விரைவா போய்ச் சேரும். 2003-ல் ஏவி.மெய்யப்ப செட்டியாரோட ஆவணப்படத்தைத் தொகுத்து வழங்கினப்போதான் இந்த ரூட்டைப் பிடிச்சேன். கூடவே, ஆடல், பாடல், மிமிக்ரினு மக்களை மகிழ்விக்க என்னவெல்லாம் பண்ண முடியுமோ அதையெல்லாம் கூச்சம் பார்க்காம பண்ணுவேன். என்னோடது விவசாயக் குடும்பம். சின்ன வயசுல இயற்கை வாழ் வியலுடன் இணைஞ்சுதான் வளர்ந்தேன். பிழைப்புக்காகப் பட்டணத்துக்காரியா வாழ்ந்தாலும், கிராமத்துப் பெண்களின் உணர்வுதான் எனக்குள்ளாறயும் இருக்கு. அது என் பேச்சுல அதிகமா வெளிப்படும். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாதான் ஃபேஷன் விஷயத்துல எனக்கு ரோல் மாடல். அடர்நிற புடவை, ஆரம், ஒட்டி யாணம்னு கலர்ஃபுல்லா டிரஸ் பண்ணிக் கப் பிடிக்கும்.

என் அபிமான நடிகரான என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல்கள் முதல் லேட் டஸ்ட் ‘விருமன்’ பாடல்கள்வரை எல்லா வித பாடல் ட்யூன்லயும் சொந்தக் கருத்து களைச் சேர்த்துப் பாடுவேன். நாம சொல் லுறது நல்ல விஷயம்னாலும், அது கேட் கிறவங்களுக்குச் சோர்வை ஏற்படுத்திடக் கூடாது. அதனாலதான், மக்களின் ரசனைக்கேற்ப பாடல்கள் மூலமாவே மெசேஜையும் சொல்லிடுறேன். ஒருமுறை உடல் உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்ச்சி யில நடிகர் விவேக்கும் நானும் கலந்து கிட்டோம். அவர் சிறப்பா பேசி முடிச் சுட்டார். இதுக்கு மேல நாம என்ன பேசுறதுனு யோசிச்சேன்...

‘மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

உடலை தானம் செய்யும்போது வள்ளல் ஆகலாம்

உறுப்பைத் தந்து உயிரைக் காக்கும் தியாகி ஆகலாம்

மறைந்த பின்பும் உதவுகின்ற நண்பன் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்...’

- அஞ்சே வரிகள்தான் பேசினேன். விவேக் உட்பட எல்லோரும் அசந்துட் டாங்க. காலத்துக்கு ஏத்த மாதிரி நம்மை அப்டேட் பண்ணிக்கிறதுதானே புத்திசாலித்தனம்...” கலகலவென சிரிப் பவர், ‘மிடில் கிளாஸ் மாதவன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பதுடன், பின்னணியும் பாடியிருக்கிறார்.

“ரஜினி சாருக்கு அம்மாவா, ‘எந்திரன்’ படத்துல நடிக்கிற வாய்ப்பை முதல்ல மறுத்தேன். ‘ஏன் கழுத மறுக்கிறே...?’னு உரிமையா திட்டினார் எஸ்.பி.முத்துராமன் சார். ‘முதல்வன்’, ‘அந்நியன்’ படங்கள்ல நான் நடிக்க மறுத்ததை டைரக்டர் ஷங்கர் நினைவூட்டவே, மறுக்க முடியாத அன்புக்காக அந்தப் படத்துல நடிச்சேன். சினிமாவுல நான் நானா இருக்க முடியலை யோனு தோணுது. அதனாலதான், நடிக்கிறது, பாடுறது, டப்பிங் கொடுக் கிறதுன்னு எல்லா சினிமா வாய்ப்பையும் தவிர்க்கிறேன்” என்பவர், கணவருடன் முதுமை வாழ்க்கையையும் இனிமையாகக் கழிக்கிறார்.

“என் ரெண்டு பசங்களும் வெளிநாட்டுல இருக்காங்க. ஜாடிக்கு ஏத்த மூடியா என் வீட்டுக்காரர் சங்கரனும் நானும் குறும்பும் குதூகலமுமா இருக்கோம். எல்லாத் தேவைகளையும் நாங்களே பார்த்துக் கிறோம். எங்க வாழ்க்கையில வெறுமைக் கும் கவலைக்கும் இடமில்லை. ரெண்டு பேர்ல யாரோட உயிர் வேணாலும் முதல்ல பிரியலாம். தீபத்துல எண்ணெய் மற்றும் திரியை, கணவன் - மனைவியுடன் ஒப்பிட்டு, ஒண்ணு இன்னொன்றை முந்திக்கிட்டு பிரியும்னு சொல்வாங்க. இதுபோலத்தான் வாழ்க்கையும். ஒவ் வொரு நாளையும் அர்த்தமுள்ளதா அமைச்சுக்கிட்டா, வாழுற காலம் மகிழ்ச்சியானதா அமையும்!” அர்த்தத் துடன் முடிக்கிறார் ரேவதி.

- துணை நிற்போம்...

*****

முதுமைக்கு மரியாதை! - 14 - “வயசாகலாம், தோல் சுருங்கலாம்... மனசும் சந்தோஷமும் சுருங்கிடக்கூடாது!”

முதுமைப் பருவத்தில் வொர்க் அவுட் செய்யலாமா?

`இதுநாள் வரைதான் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. இப்போது பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு நேரமிருக்கிறது. இந்த முதுமைப் பருவத்தில் உடற்பயிற்சி செய்தால் அதை நம் உடல் ஏற்றுக்கொள்ளுமா, நம்மால் இளைஞர்களைப் போல் செய்ய முடியுமா, அப்படிச் செய்தால் உடலில் வேறு ஏதாவது பிரச்னைகள் வருமா' என பல சந்தேகங்கள் இன்று முதியோர்களிடம் உள்ளன.

இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில், ``உண்மை யில் முதுமைக்கு ஏற்ற முக்கிய டானிக் எளிய உடற்பயிற்சியே” என்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

தொடர்ந்து நம்மிடம் பேசியவர், முதியோர் நலனுக்கான எளிய பயிற்சிகள் குறித்துப் பட்டியலிட்டார்... ``உடற்பயிற்சிகள் செய்ய வயது வரம்பே கிடையாது. உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விடும் முதிய பருவத்தினருக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். புதிதாக நடைப்பயிற்சி செய்யத் தொடங்குபவர்கள், நடக்கும் தூரத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக்கொள்ள வேண்டும். முதல் நாளே பல கி.மீ தூரம் நடக்கிறேன் என்று ஆர்வக்கோளாறில் தொடங்கினால், இரண்டாம் நாள் உடலில் சோர்வு ஏற்பட்டு விடும். நடக்க சிரமப்படுவார்கள்.

வாய்ப்பிருந்தால், அருகிலிருக்கும் இயற்கை சூழ்ந்த இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. பறவைகளின் குரல் ஒலிகளும், தாவரங் களின் வாசனையும் துணை நிற்க நடைப்பயிற்சி செய்வது கூடுதல் பலன்களைக் கொடுக்கும். பழகிவிட்டால், அதன் பலன்களை உணர்ந்து, தவறாமல் நடைப்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவீர்கள்.

அடுத்தது, எடைக்குறைப்பு மற்றும் உடலை பலமாக்கும் பயிற்சிகள். சீனியர் சிட்டிசன்ஸ் உடற்பயிற்சிகளைத் தொடங்கும்முன் ஏதாவது உடல்நல பிரச்னைகள் இருந்தால் முதலில் அவற்றைச் சரி செய்ய வேண்டும். 50 வயதுக்கு மேல் ஆரோக்கியம் குறையத் தொடங்கும். இன்றைய சூழலில் நிறைய பேருக்கு முதுகு மற்றும் கழுத்து வலிகள் இருக்கின்றன. ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் முதியோருக்கு இந்த வலிகள் அதிகமாகும். முதலில் வலிகளை மருத்துவப் பரிந்துரையின்படி சரிசெய்துகொண்டு பிறகு, வொர்க் அவுட் செய்ய ஆரம்பிக்கலாம்.

பொதுவாக முதியோருக்குக் கழுத்தை நன்றாகத் திருப்பி, கைகளைப் பின்புறமாக நீட்டி பயன்படுத்தும் வேலைகள் குறைந்துவிடும். உதாரணத்துக்கு, சமை யலறையில் இருக்கும் மூத்த வயது பெண்கள் எதிரில் உள்ள பொருள்களை எளிதாக எடுத்துப் பயன்படுத்துவார்களே தவிர, கீழே இருக்கும் பொருள்களையும், பின்புறம் இருக்கும் பொருள் களையும் எடுக்க மற்றவரை அழைப்பார்கள்.

இப்படிப் பயன்படுத்த முடியாத நிலை நீடித்தால் கழுத்தில், கைகால் மூட்டுகளில் பிரச்னை வரும். இதைத் தவிர்க்க உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி யாளரின் உதவியுடன், வயதுக்கும் எடைக்கும் தகுந்தாற்போல் எளிய பயிற்சிகளைத் தொடங்கலாம். இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முதுமையை விரட்டலாம். தமக்கான பணிகளை யாருடைய உதவியும் இல்லாமல் தாமே செய்துகொள்ளலாம்.

அதற்கடுத்தது, மனதுக்கும் உடலுக்குமான பயிற்சிகள். இளமையில் இருக்கும் வேகம் முதுமையில் குறையும். நினைத்ததை உடனே செயல்படுத்த முடியாது. மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஒருவருடைய உருவம் மனதில் இருந் தாலும் சட்டென்று அவருடைய பெயர் நினைவுக்கு வராது. இப்படிப்பட்டவர்களுக்கு உடலுக்கும் மனதுக்குமான பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பயிற்சியின் மூலம் உடலின் இயக்கங்கள், இருப்பிடங்கள் மற்றும் செயல்களை உணரும் திறன் அதிகரிக்கும். முக்கியமாக மனதுக்கும் உடலுக்குமான இணக்கத்தை பலப்படுத்தும்” என்றவர்,

அனைத்து வயதினருக்கும் சொன்னவை... ``எல்லாப் பயிற்சிகளையும் இளம் வயதில் தொடங்கு வதுதான் சிறந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலில் நிறைய பேருக்கு முதுகு மற்றும் கழுத்துவலிகள் அதிகரித்துள்ளன. அந்த வலிகள், வெறும் வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலால், சரியாக உட்கார்ந்து வேலை செய்யாததால் வந்தது என்றால் முதலில் அதைச் சரி செய்து கொண்டு, பிறகு வொர்க் அவுட் செய்ய ஆரம்பிக்க லாம்.

முதியோர் அவர்களுக்கான தேவைகளை முடிந்தவரை மற்றவர்களை எதிர்பார்க்காமல் செய்து கொள்வது சிறப்பு. குறிப்பாக, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம். பாது காப்பான முறையில் மாடிப்படிகளில் ஏறி இறங்க லாம். கை, கால்களுக்குப் பயிற்சி கொடுக்கலாம்.

அந்தக் காலத்துப் பெண்கள் வயல் வேலையும் பார்த்துக்கொண்டு, சமையல், குழந்தை வளர்ப்பு என்று வீட்டு வேலைகளையும் பார்த்தார்கள். ஃபிட்னெஸ் அவர்களுடைய வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது. காலப்போக்கில் எல்லா வேலை களுக்கும் எந்திரங்களைச் சார்ந்து வாழப் பழகி விட்டதால் உடல் உழைப்பு குறைந்து விட்டது. அதனால் ஃபிட்னெஸ்ஸைத் தனியாகவும் வாழ்க்கை யைத் தனியாகவும் பார்க்க ஆரம்பித்து விட்டோம். அதுதான் இன்றைக்கு வெயிட் டிரெய்னிங் என்ற பெயரில் மாறி வொர்க் அவுட்டாக வந்திருக்கிறது” என்றார் முத்தாய்ப்பாக.

******

 கணவருடன்...
கணவருடன்...

வயிறும் மனசும் கெடக் கூடாது!

தனது உணவு முறை குறித்துப் பேசிய ரேவதி சங்கரன், “நகரத்துல வளர்ந்தாலும் கிராமிய வாழ்க்கை முறைதான் எனக்கும் என் கணவருக் கும் பிடிக்கும். வாரத்துல தலா 2 - 3 வேளைக்குக் கேழ்வரகுக் களியும் பழைய சோறும் விரும்பிச் சாப்பிடுவோம். பொதுவா, காலையில கேழ்வரகுக் கஞ்சி, மதியத்துக்குப் பொரியலுடன் சாம்பார் அல்லது ரசம், இரவுல எளிதா ஜீரணமாகும் டிபன் உணவுகளை எடுத்துப்போம். மோர் அதிகமா குடிப்போம். செக்கு எண்ணெய்தான் பயன்படுத்து வோம். வெளி நிகழ்ச்சிகள்ல அரை வயிறு சாப்பாடுதான் சாப்பிடுவோம்.

வயிறு சரியில்லைனா, கண்டந்திப்பிலி ரசத்தைச் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவோம். என்ன சூழல் வந்தாலும் வீட்டு உணவு மட்டும்தான் சாப்பிடுவோம். எங்களோட இத்தனை வருஷ அனுபவத்துல, ஒருமுறை கூட உணவகங்கள்ல ஆர்டர் பண்ணி நாங்க சாப்பிட்டதில்லை. வயித் தையும் மனசையும் கெடுத்துக்கிட்டா தொந்தரவு தான்னு சொல்லுவாங்க. அந்த விஷயத்துல நாங்க ரொம்பவே எச்சரிக்கையுடனும் பொறுப் புடனும் செயல்படுறோம்” என்று அனுபவ ஆலோசனைகளைக் கூறினார்.

****

வாசகியின் அனுபவம்

முதுமை குறித்த உங்கள் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், வித்தியாசமான நபர்கள், உணர்வுகள், உதவிகள், கடமைகள், கருவிகள் என்று எதுவாக இருந்தாலும் பகிரலாம் என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். ஏராளமான அனுபவங்கள், அறிவுரைகள்... அவற்றில் ஒன்று..

பரிசு ரூ.250 பெறுகிறது

நடைப்பயிற்சி நண்பன்!

சமீபத்தில் எங்கள் வீட்டின் அருகிலிருந்த தனியார் விளையாட்டுப் பயிற்சி மையத்தில் என் மகளைச் சேர்த்துவிட்டு வந்தேன். தினமும் மாலை நேர வகுப்பில் அவளுடன் சென்று நானும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஒரு மணி நேர விளையாட்டுப் பயிற்சி வகுப்பு அவளுக்கு நடக்க, நான் அந்த ஒரு மணி நேரத்தை நடைப் பயிற்சிக்காகப் பயன்படுத்தினேன். இதனால் நீண்ட நாள்களாக எனக்கிருந்த உடல் உபாதையில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் நம் உடல்நலனுக்கு ஒரு மணி நேர எளிய பயிற்சி மிக அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட, இப்போது நானும் என் மகளும் ரொம்ப பிஸி. தினசரி நேரத்துடன் வகுப்புக்குக் கிளம்பி விடுகிறோம்.

- ரா.ஹேமாவதி, மேட்டூர் அணை