ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை - 15 - 45 வயதுக்கு மேல் சிறுநீர்க் கசிவு... டயப்பர் மட்டுமே தீர்வல்ல!

முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
News
முதுமைக்கு மரியாதை

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

சமீபத்தில் முதியோர் நலத்துக்கு உதவும் உபகரணங்கள் குறித்த செய்திகளைச் சேகரித்துக்கொண்டிருந்த போது, `உங்கள் கடையில் அதிகமாக விற்கப்படும் ஒரு பொருள் எது?’ என்று கேட்டோம். அவர்கள் சொன்ன பதில், டயப்பர்.

பல மெடிக்கல் ஷாப்களிலும், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களிலும் விசாரித்தபோது, அது உண்மை என்றே தெரிந்தது. இது குறித்து முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம் பேசினோம். தன்னைச் சந்திக்க வந்த பேஷன்ட்டின் அனுபவத்துடன் பேசத் தொடங்கினார்.

``என்னிடம் ஏற்கெனவே மருத்துவ ஆலோசனை பெற்று வருபவரிடமிருந்து சமீபத்தில் ஒரு போன் வந்தது. `டாக்டர் உங்களைச் சந்திக்கணும். அப்பாயின்ட்மென்ட் கிடைக் குமா?’ என்றார். வரச்சொன்னேன்.

 வி.எஸ்.நடராஜன்
வி.எஸ்.நடராஜன்

`டாக்டர் இந்த முறை என் மனைவியை அழைச்சுட்டு வர்றேன். சில ஆலோசனைகள் தரணும்’ என்றார். என்னிடம் தன் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் சொன்னார். இந்த பாதிப்பு பல முதியோர் வெளியில் சொல்ல வெட்கப்படும் விஷயம். ஆனால், அதற்கு அவசியமில்லை” என்று தொடர்ந்து பேசிய டாக்டர் வி.எஸ்.நடராஜன்...

``பெண்களில் சிலர் தமக்கு வரும் நோய் களைப் பற்றி வெளியே சொல்லவோ, டாக்டரிடம் செல்லவோ தயங்குவார்கள். வயதானால் சில தொல்லைகள் வருவது சகஜம், அதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். தன் தொல்லைகளைச் சொல்லி கணவருக்கோ மற்றும் குடும் பத்தினருக்கோ சிரமம் கொடுக்கக் கூடாது என்று எண்ணுவதுண்டு. சில பெண்கள் கூச்சப்பட்டுக்கொண்டு வெளியே தன் பிரச்னைகளைச் சொல்வது இல்லை. குறிப்பாக, சிறுநீரைக் கட்டுப்படுத்த முடி யாமல் கசிவால் ஏற்படும் தொல்லைகள். இது ஆண்களுக்கும் ஏற்படுவதுண்டு. இதற்காக மருத்துவரிடம் சென்றால் தக்க சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்” என்றவர், சிறுநீர்க் கசிவுக்கான காரணங் களைச் சொன்னார்.

``பொதுவாக, சிறுநீர்ப்பை நிரம்பியதும் ஒருவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு எழும். கழிப்பறை இல்லாத இடங்களில், அந்த உணர்வை அடக்கி வைப்போம். இந்தக் கட்டுப்பாடு இயல் பாகவே நம் சிறுநீர்ப் பையில் இருக்கிறது. இதை இழக்கும்போது சிறுநீர்க் கசிவு பிரச்னை ஏற்படுகிறது. சிலருக்கு மிக அரிதாக ஏற்படும் இந்தப் பிரச்னை, சிலருக்கு அடிக்கடி ஏற்படும். குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. கர்ப்பம், குழந்தைப்பேறு, மாதவிடாய் நின்றுபோவது என உடல் ரீதியான மாற்றங்களின் விளைவாக இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் ஏற்படும். புகைப் பழக்கம் உள்ளவர்கள், நரம்புக் கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கும் இது வரலாம்.

நம்முடைய கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கழிவது சிறுநீர் அடங்காமை அல்லது `யூரினரி இன்கான்டினென்ஸ்' (Urinary incontinence) என்று அழைக்கப் படுகிறது. இருமினாலோ, தும்மினாலோ, சிரித்தாலோ, எடை தூக்கும்போதோ, அவர்களுடைய கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கழிவது `ஸ்டெரஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்' (Stress urinary incontinence) என்று அழைக்கப்படும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றிய உடனேயே அதைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனேயே சிறுநீர் பிரிந்து விடுவதை (Over active bladder) மிகைப்புச் சிறுநீர்ப்பை நோய்க்குறி என்கிறோம். இவர்களுக்கு தண்ணீர் ஓடும் சப்தம் கேட்டால்கூட அவசரமாக சிறுநீர் கழிந்துவிடும். சிறுநீர்த் தாரையில் அடைப்பு ஏற்பட்டால், நிரம்பி வழியும் நீர்க்கசிவு (Overflow Incontinence) ஏற்படலாம்.

இந்தப் பிரச்னையுடன் என்னிடம் வருபவர்களிடம்... இருமும் போதும் அல்லது அவசரமாகப் போக வேண்டும் என்று தோன்றிய உடனேயே கசிகிறதா? அடிக்கடி சிறுநீர் போக வேண்டிய நிலைமை உள்ளதா? பகலில் எத்தனை முறையும், இரவில் எத்தனை முறையும் சிறுநீர் கழிக் கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் தோராயமாக எவ்வளவு சிறுநீர் கழிக்கிறீர்கள்? உங்களுடைய இரவு தூக்கம் எப்படி உள்ளது? சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலையால் உங்கள் தூக்கம் கலைகிறதா அல்லது பல காரணங்களால் தூங்க முடியாத நிலையில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா போன்ற விவரங்களை முதலில் கேட்டுக்கொள்வேன்.

முதுமைக்கு மரியாதை - 15 - 45 வயதுக்கு மேல் சிறுநீர்க் கசிவு... டயப்பர் மட்டுமே தீர்வல்ல!

இதற்கு பல பரிசோதனைகள் உள்ளன. முழுமையான சிறுநீர்ப் பரிசோதனை, நீர்த்தாரை மற்றும் பிறப்புறுப்பில் கல் அல்லது கட்டி ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய அல்ட்ரா சோனோகிராம் உதவும். மலம் இறுகியுள்ளதா என்பதைக் கண்டறிவதும் அவசியம். ரத்தத்தில் சர்க்கரை, உப்புச்சத்து அதிகரித்து உள்ளதா என்பதைக் கண்டறிந்தும் சிறுநீர்க் கசிவைக் குணப்படுத்தலாம்” என்று விளக்கமாகச் சொன்னார்.

“சிறுநீர்க் கசிவு என்பது உயிருக்கு ஆபத்தைத் தரக்கூடிய பிரச்னையே இல்லை. ஆனால், முதியோர் பலர் படுக்கையிலோ, கழிவறைக்குச் செல்லும் முன்போ சிறுநீர்க் கசிவு ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று அவசர அவசர மாகக் கழிப்பறைக்கு ஓடுகிறார்கள். இதனால் கீழே விழுந்துவிடும் ஆபத்தும் ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள் டயப் பரைப் பயன்படுத்துவதில் தவறில்லை. மேலும், அதிக தொலைவு பயணம் செய் பவர்களும் டயப்பர் பயன்படுத்தலாம்.முறையாகப் பரிசோதனை செய்து கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர்க் கசிவு ஏற்பட்டால் மாத்திரைகளைப் பரிந்துரைப் போம். முதுமை நிலையில் நோயுற்று படுக் கையிலேயே இருப்பவர்களுக்கு சிறுநீர்த் தாரையில் செய்யும் அறுவைசிகிச்சை மூலம் நீர்க்கசிவைக் கட்டுப்படுத்த முடியும்.

சிறுநீர்க் கசிவை மறைக்கவோ, அலட் சியப்படுத்தவோ வேண்டியது இல்லை. தக்க சிகிச்சை பெற்று நீங்களும் சுதந்திர பறவையாய் சுற்றி வரலாம்” என்றார் முடிவாக.

- துணை நிற்போம்...

****

எளிய பயிற்சி

பெண்களுக்கு அடிவயிற்றுத் தசை பலவீன மாக இருந்தால் சிறுநீர்க் கசிவு ஏற்படும். இந்தத் தசை வலுப்பெற சிறப்பு உடற்பயிற்சி (Pelvic Muscles Exercise) செய்ய வேண்டும். அதாவது, ஆசனவாயை இறுக்கி உள்ளே இழுத்து சிறிது நேரம் கழித்து விடுதல். அதே போல் சிறுநீரை அடக்கிக்கொள்வது போல் செய்து சிறிது நேரம் கழித்து தளர்த்துதல். இந்த இரண்டு பயிற்சிகளையும் ஒரே சமயத்தில் செய்ய வேண்டும். சுமார் 20 - 30 தடவை இநதப் பயிற்சிகளை காலையிலும் மாலை யிலும் செய்தால் சிறுநீர்க் கசிவு கட்டுக்குள் அடங்கும்.

டயப்பர் விற்பனை

2021-ம் ஆண்டில் இந்தியாவின் வயது வந்தோருக்கான டயப்பர் சந்தை இந்திய ரூபாய் மதிப்பில் 907 கோடியை எட்டியது. 2027-ம் ஆண்டில் 1,607 கோடியை எட்டும் என்று ஐஎம்ஏஆர்சி (International Market Analysis Research and Consulting Group - IMARC) கணக்கிட்டுள்ளது.

முதுமைக்கு மரியாதை - 15 - 45 வயதுக்கு மேல் சிறுநீர்க் கசிவு... டயப்பர் மட்டுமே தீர்வல்ல!

முதுமை அனுபவம் - அம்மா..!

அன்று அம்மாவின் மூச்சில் வித்தியாசம். சிறு விசும்பல். உணவு விழுங்க சிரமம். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையை சரணடைந்தோம்.

தனக்கு வந்திருக்கும் நோய் பற்றியோ, சிகிச்சை பற்றியோ அம்மாவுக்கு எதுவும் தெரியாது.

ரத்தம் ஏற்றுவதற்காகவும், மருந்து செலுத்துவதற்காகவும், பரிசோதனைகளுக்காகவும், அம்மாவின் இரு கைகளிலும், நரம்புகளைத் தேடி ஊசிகள் துளைத்து விளையாடும் வேளைகளில், கண்களில் நீர்வழிய கதறும் அம்மாவைக் காண்பது பெரும் துயரம்.

‘அம்மாவுக்கு ரத்தம் தேவை’' என்ற குறுஞ்செய்தி கண்டு, ஊர், பேர், திசை தெரியாத எத்தனையோ கர்ணன்கள் ஓடோடி வந்து குருதிக்கொடை தந்தார்கள்.

ஆறு மாதங்கள் கடந்ததும் தாயின் முகத்தில் மலர்ச்சி. ஆனால், காலம் கருணையற்றது. திடீரென அம்மாவை இப்படி கட்டிலோடு சுருண்டு படுக்க வைத்துவிட்டது.

நடமாடும் வரை மட்டுமே நிம்மதியான வாழ்க்கை. படுத்துவிட்டால், உறவுகளுக்கு அன்பே வலி தரும். அதை அம்மா உணர்ந்திருந்தாள்.

‘‘எப்படியாவது, என்னை நடக்க வச்சுடு. யார் துணையும் இல்லாம, நானே பாத்ரூம் போகணும். அதுபோதும். டாக்டர்கிட்ட கூட்டிட்டுபோயி இந்த ஒருமுறை மட்டும் என்னை காப்பாத்தி விட்டுரு…’’ கையெடுத்துக் கும்பிட்டு சொன்னபோது, நெஞ்சம் பதறியது. மனம் கனத்தது.

‘இனி, நடக்கணும். நான் நடக்கணும். யார் துணை யுமின்றி நடக்கணும்’ - அதுதான் அம்மாவின் ஆசை.

பெற்ற பிள்ளைகள், மருமகள், பேரன், பேத்தி என்று உறவுகளைக்கூட, உதவிக்கு (?) அழைப்பதில் அம்மாவுக்கு சங்கடம், சங்கோஜம்.

முதியோர்களே இப்படிதான், தேவைகளைச் சொல்வதில் ஒரு தயக்கம். உதவி கேட்பதில் ஒரு வெட்கம். வலிகளே தேவலை என்று தாங்கிக் கொள்வார்கள்.

அம்மாவின் கரங்கள் பற்றிக்கொள்ள, புது இரும்புக் கரங்கள் தேவைப்படுவது புரிந்தது. கணவரை அழைத்துக்கொண்டு அண்ணாசாலைக்கு விரைந்தேன்.

“இது வசதியாக இருக்கும். இதையே வாங்குங்க…’’ என்று பரிந்துரைத்த வாக்கருடன் அம்மா முன் ஆஜரானோம்.

வாக்கரைப் பார்த்ததும் அம்மாவிடம் பரவசம். சரேலென எழுந்து அமர்ந்தார். கண்களில் புதிய ஒளி. வாக்கரைத் தொட்டு, இரு கைகளையும் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

வாக்கரின் இரு கைப்பிடிகளில், தன் கைகளைப் பொருத்திக்கொண்டார், அழுத்திப் பிடித்து எழுந்து நின்றார்.

பத்து நாள்களுக்குப் பிறகு அறையில் இருந்து யார் துணையின்றி, ஹாலுக்கு சென்றார், சோபாவில் அமர்ந்தார்.

‘அம்மா, மீண்டும் உயிர்பெற்றுவிட்டாள்’ என்று நிம்மதியுற்றோம்.

இத்தனை நாள், எங்களைப் பற்றி நடந்து கொண்டிருந்த, தாயின் கரங்கள், இப்போது வாக்கரை பற்றிக்கொண்டிருந்தது. அதில், கொஞ்சம் சோகம். நிறைய சந்தோஷம்.

அம்மாவின் வாக்கர் பேசப்போவதில்லை. துடிப் பதற்கு, இதயமில்லை. யோசிக்க மனம் இல்லை. ஆனாலும் அது, வாடி வதங்கிக் கொண்டிருந்த என் தாயை உயிர்ப்பித்திருக்கிறது.

வாழ்க்கை முழுக்க ஓடியாடி, உழைத்து ஜெயித்து ஓய்ந்து துவண்டு சரிந்த கால்களை மீண்டும் தத்தி, தத்தியாவது நடக்க வைத்து, நம்பிக்கை தந்திருக்கிறது.

இப்போது நாளும், பொழுதும் தன் முன் அசை வற்று இருக்கும் வாக்கரை பார்த்துக்கொண்டே அம்மாவின் பொழுதுகள் கரைகின்றன.

வசதிகளால், பொன், பொருளால் அல்ல... அன்பால், நெகிழ்வால், முதியோரை மகிழ்விக்கும் இல்லங்களே, ஆனந்தம் விளையாடும் வீடு.

- எம்.சபரி, சென்னை-33

முதுமைக்கு மரியாதை - 15 - 45 வயதுக்கு மேல் சிறுநீர்க் கசிவு... டயப்பர் மட்டுமே தீர்வல்ல!