லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை 16 - உங்கள் பாதுகாப்பு, உங்கள் நலம், உங்கள் பணம், ஆலோசிக்கலாம்... அலர்ட் ஆகலாம்!

 வ.நாகப்பன் -  மு.அருணாசலம் -  தா.ச.அன்பு ஐ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
வ.நாகப்பன் - மு.அருணாசலம் - தா.ச.அன்பு ஐ.பி.எஸ்

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

* ஒரு பக்கம் விலைவாசி உயர்வு... மறுபக்கம் சேமித்த பணத்தின் வட்டி விகிதம் குறைவு - இந்த இரண்டுக்கும் இடையில் ஓய்வுபெற்ற முதியோர் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத் தில் நிம்மதியாக வாழ முடியுமா?

* இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன், இன்று வாழ்க்கை வசதிகள் அதிகரித் திருக்கும்போதும் ஆரோக்கிய மாக வாழ்கின்றானா?

* இன்றைய சூழ்நிலையில் முதியோரை குறிவைத்து நடத்தப் படும் குற்றங்கள் அநேகம்... அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

 வ.நாகப்பன்
வ.நாகப்பன்

இப்படி பணபலம், உடல்நலம், வாழ்க்கைச்சூழல் என்கிற மூன்று முக்கியமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்விதமாக அமைந்தது, அவள் விகடன் – அதுல்யா சீனியர் கேர் இணைந்து நடத்திய `ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சி. உலகமெங்கும் அக்டோபர் 1-ம் தேதி முதியோர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், முதுமைக்கு மரியாதை தரும் வகையில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள ஆனந்த விகடன் அலுவலகத்தில் அக்டோபர் 2-ம் தேதி காலை ‘ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் அஸோசியேட் ஸ்பான்சர்ஸ் தில்லை’ஸ் மசாலா மற்றும் பீ மார்க்கெட்.

உங்கள் பாதுகாப்பு… உங்கள் நலம்… உங்கள் பணம்… ஆலோசிக்கலாம்... அலர்ட் ஆகலாம் என்று அனைவரையும் அழைத்திருந்த இந்த நிகழ்ச்சியில் `முதியோரும் முதலீடும்’ பற்றி முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றிய போது... ``இங்கே வந்திருக்கும் பலர் முதியோராக இல்லாமல் மூத்த பருவத்துக் குச் செல்லவிருப்பவர்கள் என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சீனியர் சிட்டிசன்களாகும் முன்பே திட்டமிட வேண்டும் என்று நினைத்து வந்திருப்பவர்களுக்கு நன்றி.

மனிதனின் வாழ்நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் 30 வருடங்கள் வேலை பார்த்து 60 வயதில் வீட்டில் அமர்ந்து வருமானமே இல்லாமல் செலவு செய்கிற நிலைக்கு வந்துவிட்டோம்.

குடிக்கும் நீரை கூட விலைகொடுத்து வாங்குகிறோம். நமக்கான தேவைகளும் அதிகரித்துவிட்டன. கூட்டுக் குடும்பங்கள் அரிதாகிவிட்ட நிலையில் சொந்தக்காலில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் முதியோரும் இருக்கின்றனர்.

 வ.நாகப்பன் -  மு.அருணாசலம் -  தா.ச.அன்பு ஐ.பி.எஸ்
வ.நாகப்பன் - மு.அருணாசலம் - தா.ச.அன்பு ஐ.பி.எஸ்

அடுத்து வேகமாக வளர்ந்து வரும் விலையேற்றம். சென்ற வருடம் நூறு ரூபாய்க்கு வாங்கிய பொருளை இன்றைக்கு 112 ரூபாய்க்கு வாங்குகிறோம். ஆனால், வங்கியில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்துக்கான வட்டி நூறு ரூபாய்க்கு ஓராண்டுக்குப் பிறகு 106 ரூபாய்தான் கிடைக்கிறது. தேவைப்படும் இந்த ஆறு ரூபாய்க்கு என்ன செய்வது? ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் பணத்தில் இருந்து எடுப்போம். இப்படி எடுத்துக்கொண்டே இருந்தால் சேமிப்பு பணம் மொத்தமும் கரைந்துவிடும். ஆனால், மருத்துவச் செலவு உட்பட தேவைக்கேற்ற செலவு களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதற்கான தீர்வு என்ன? தேவைக்கான பணத்தைச் சேர்க்க... தங்கத்தை வாங்கி வைக்கலாமா, அதிக வட்டி தரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டு வைக்கலாமா, டிரேடிங் செய்ய லாமா, பங்குச் சந்தையில் இறங்கலாமா, மியூச்சுவல் ஃபண்டு சரியாக இருக்குமா என்று பலவித யோசனைகள் வரலாம்.

இப்படியெல்லாம் யோசிக்கும் முன், நம் பணம் இந்த இடத்தில் பாதுகாப்பாக இருக்கும் என்கிற மன நிம்மதி வேண்டும். அப்படிப் பார்க்கும்போது இந்தியா விலுள்ள மூத்த குடிமக்களுக்கு, சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் (Senior Citizens’ Savings Scheme - SCSS), பிரதம மந்திரி முதலீட்டுத் திட்டம் (Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY), ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரங்கள், மத்திய - மாநில அரசின் கடன் பத்திரங்கள் உள்ளன. இவற்றில் முதலீடு செய்யலாம். இவை நீண்டகால வாழ்க்கைக்கு பாது காப்பானவையும்கூட. இவற்றுக்கான வட்டி விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. இவற்றில் வருமான வரி விலக்கு கொண் டதைத் தேர்ந்தெடுக்கலாம்.

முதுமைக்கு மரியாதை 16 - உங்கள் பாதுகாப்பு, உங்கள் நலம், உங்கள் பணம், ஆலோசிக்கலாம்... அலர்ட் ஆகலாம்!

முதுமை பருவத்தினரின் வருமானத் துக்கு இரண்டு கூடைகள் தேவைப்படும். ஒன்று வருமானத்துக்கான கூடை, இரண்டாவது வருமானத்தைக் கூட்டும் கூடை. முதல் கூடையில் வரும் வருமானம் அன்றாட செலவுகளுக்கும் தேவைகளுக் கும் போதுமானதாக இருக்கிறது; இதற்கு மேல் வேண்டாம் என மன நிம்மதியுடன் இருக்கிறேன் என்றால் பிரச்னை இல்லை. ஆனால், வருமானத்துக்கு மேல் செலவு இருக்கிறது என்றால் வருமானத்தைக் கூட்டும் செயலில் இறங்க வேண்டும்.

அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்பதற்காக, நீங்களும் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு திட்டத்தில் சேர்ந்து ஏமாந்துவிடக் கூடாது. உங்கள் பணத்தை எந்த இடத்தில் முதலீடு செய் தால் பாதுகாப்பாக இருக்கும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டு களிலும் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் வளர்ந்து வரும் நிறுவனமா, தரமான முன்னணி நிறுவனமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல் மொத்த பணத்தை யும் ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல் பல பாகங்களாகப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். தற்போது முதலீடு பற்றி நிறைய விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடக்கின்றன. பத்திரிகைகளில் முதலீடு பற்றி விரிவான செய்திகள் வருகின்றன. அவற்றின் அடிப்படையில் தெளிவான முடிவை எடுக்கலாம்.

முக்கியமாக, நம் குடும்பத்துக்கென்று ஃபேமிலி டாக்டர், ஃபேமிலி லாயர் என்று இருப்பதுபோல, நம்பிக்கையான குடும்ப நிதி ஆலோசகர் ஒருவரை அணுகலாம். அவர், உங்களுக்குள்ள சொத்து விவரம், கையில் உள்ள இருப்பு, முதலீடு செய்ய நினைக்கும் தொகை, இனிவரும் வாழ்க்கைத் தேவைக்கான பணம் முதலியவற்றை விசாரித்து சில யோசனைகளை வழங்கி உதவுவார்’’ என்று முடித்தபோது,

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர், “கோல்டு ஃபண்டு வருமானத்தை உயர்த்துமா?’’ என்கிற கேள்வியை எழுப்பி னார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, “தங்கத்தின் விலையேற்றம் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், பணம் இருக்கும்போது தங்க நகைகளை வாங்கி வைத்துக்கொண்டால் தேவையானபோது விற்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள். இதில் ஓரளவு லாபம் கிடைத்தாலும், எதிர்பார்க்கும் அளவு லாபம் கிடைப்பது சிரமம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, வெளி நாட்டில் இருந்துதான் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. பண வீக்கத்தைப் பொறுத்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுமே தவிர, இன்றைய பணவீக்கத்தைப் பொறுத்து பெரிதாக லாபம் இருக்காது. வாங்கிய தங்கத்தைத் தேவையான நேரத்தில் விற்கும்போது பழைய நகை, சேதாரம் என்று வாங்கிய விலைதான் கிடைக்கும்.

முதுமைக்கு மரியாதை 16 - உங்கள் பாதுகாப்பு, உங்கள் நலம், உங்கள் பணம், ஆலோசிக்கலாம்... அலர்ட் ஆகலாம்!

உங்கள் பயன்பாட்டுக்காக தங்க நகை களை வாங்கிப் பயன்படுத்துவதில் தவறில்லை. அதை முதலீடாகக் கருதுவது தான் தவறு. இன்றைய சூழ்நிலையில், மொத்தமாக நகைகளை வாங்கி வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் சிரமம்.

தற்போது மத்திய அரசு தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சில திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப் பாட்டில் இருப்பதால், பாதுகாப்பானவை என்பதுடன், முதலீடு செய்த பணத்துக் கேற்ற வட்டியும் கிடைக்கும். தேவையான போது பணமாகவும் பெறலாம்’’ என்றார்.

பணத்தைப் பெருக்குவதற்கான வழியைத் தெரிந்துகொண்ட திருப்தி யுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் களின் முகங்கள் மலர... அடுத்து, ‘ஹெல்த் இஸ் வெல்த்’ என்பது குறித்து பொது மருத்துவர் மு.அருணாசலம், முதியோர் பாதுகாப்பு குறித்து சென்னை, பெருநகர கூடுதல் ஆணையர் (வடக்கு) தா.ச.அன்பு ஐ.பி.எஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அந்த ஹைலைட்ஸ், அடுத்த இதழில்...

- துணை நிற்போம்...

****

முதுமைக்கு மரியாதை 16 - உங்கள் பாதுகாப்பு, உங்கள் நலம், உங்கள் பணம், ஆலோசிக்கலாம்... அலர்ட் ஆகலாம்!

இந்தியாவில் முதியோர் அதிகமுள்ள மாநிலங்கள்...

`இந்தியாவில் 2021-ம் ஆண்டில் முதியவர்கள்' என்ற தலைப்பிலான ஆவணத்தை மத்திய புள்ளியியல் துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில் நாட்டில் தற்போது கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள்

தொகையில் முதியவர்களின் பங்கு 16.5 சத விகிதம். அடுத்த இடத்தில் தமிழகத்தில் முதியவர்களின் எண்ணிக்கை 13.6 சதவிகிதமாக இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் இமாசலப் பிரதேசம் 13.1%, பஞ்சாப் 12.6%, ஆந்திரா 12.4% ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதேபோல, நாட்டிலேயே முதியவர்கள் மிகக் குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை 7.7 சதவிகிதமாக இருக்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உத்தரப்பிரதேசம் 8.1%, அஸ்ஸாம் 8.2% ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

வரும் 2031-ம் ஆண்டில் அதிகபட்சமாக கேரளாவில் 20.9 சதவிகித முதியவர்கள் இருப்பார்கள். தமிழகத்தில் 18.2%, இமாச்சலில் 17.1%, ஆந்திராவில் 16.4%, பஞ்சாபில் 16.2% என்ற விகிதத்தில் முதியவர்களின் எண்ணிக்கை இருக்கும் என இந்த புள்ளிவிவர ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.