தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை 17 - ‘ஹெல்த் இஸ் வெல்த்!’

 மு.அருணாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
மு.அருணாசலம்

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

சென்ற இதழ் தொடர்ச்சி....

அவள் விகடன் அதுல்யா சீனியர் கேர் இணைந்து நடத்திய ‘ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சி, உலக முதியோர் தினத்தையொட்டி சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஆனந்த விகடன் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி யின் அஸோசியேட் ஸ்பான்சர்ஸ் தில்லை’ஸ் மசாலா மற்றும் பீ மார்க்கெட்.

இந்த நிகழ்ச்சியில் `முதியோரும் முதலீடும்’ பற்றி முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றிய பின்னர், பணத்தைப் பெருக்குவதற்கான வழியைத் தெரிந்துகொண்ட திருப்தியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் களின் முகங்கள் மலர... அடுத்து, ‘ஹெல்த் இஸ் வெல்த்’ என்பது குறித்து சிறப்புரையாற்றினார் பொது மருத்துவர் மு.அருணாசலம்.

“இன்றைய தலைமுறை மீது எனக்கு ஒரு கோபமுண்டு. மாற்ற வேண்டியதை மாற்றாமல், இன்றைய சந்தோஷம் என்ன... இன்றைய வாழ்க்கைக்கு என்ன வேண்டும் என்று கற்றுக்கொடுக்காமல் படிப்பே பிரதானமாக நினைக்கிறார்கள். எதைப் படித்தால் எவ்வளவு சம்பாதிக்க லாம் என்று பார்க்கிறார்கள். மற்றவர்களை விட அதிகமாக எப்படிச் சம்பாதிப்பது என்று போட்டி போடுகிறார்கள்.

 மு.அருணாசலம்
மு.அருணாசலம்

இன்று உலக நாடுகள் சில போரிட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மனித இனத்துக்கு முக்கியமான தேவை அமைதியான வாழ்க்கை. இந்த வாழ்க்கைக் குத் தேவையான பணமிருந்தாலும், அடிப்படை தேவை உடல்நலம்.

இதற்கு என்னவெல்லாம் தேவை? தேவையான, அவசியமான, சத்தான உணவு. அடுத்து உடற்பயிற்சி, அதற்கடுத்து மன அழுத்தம் இல்லாத சூழ்நிலை.

சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு அவர் சில முயல்களை வளர்த்துக் கொண்டிருந் தார். ஒரு முயல் புல்வெளியில் நுனிப் புல்லை மட்டும் மேய்ந்துவிட்டு அமைதி யாகப் படுத்துக் கொண்டது.

அப்போது அங்கிருந்த ஒரு குழந்தை அந்த முயலைப் பிடிக்கச் சென்றபோது, சில அடிகள் தள்ளிப்போய் நின்றது. முயலின் அப்போதைய நிலை தன்னைப் பாதுகாத்துக்கொள்வது மட்டும்தான்.

அதற்கு அமெரிக்காவைப் பார்க்க வேண்டும்; ஆப்பிரிக்காவைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் கிடையாது. அதற்குத் தேவை... குறிப்பிட்ட அளவு உணவு, ஓய்வு, பாதுகாப்பான, நிம்மதியான வாழ்க்கை மட்டும்தான். ஆக... இறைவன் படைத்த உயிரினங்கள் எல்லாமே தன் தேவைக்காக மட்டுமே வாழ்கின்றன. உயிருள்ளவரை சந்தோஷமாக வாழ்கின்றன. ஆனால், நாம் சந்தோஷமாக வாழ பல விஷயங் களைத் தேவையாக நினைக்கிறோம். அப்படி வாழ்ந்துவிட்டு சரியாக வாழ்ந் தோமா என்று தெரியாமலே இறந்து விடுகிறோம்.

நம் ஊரில் கோடைக்காலத்துக்கேற்ற காய்கறிகள், பழங்கள் நிறைய உண்டு. ஆனால், மாவட்டத்தைத் தாண்டி, மாநிலத்தைத் தாண்டி, வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுகிறோம். நமக்கு வரும் நோய்களுக் கெல்லாம் முக்கிய காரணமே விலங்கு களைப்போல் அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடாமல், வாய்க்கு ருசியானவற்றைத் தேடிப்பிடித்து சாப்பிடுவதுதான்.

உணவு என்பது உடலை இயக்கும் ஒரு பொருள். நாம் செல்லக்கூடிய இடத்துக்குத் தேவையான பெட்ரோலை வாகனத்தில் செலுத்தி இயக்குவதைப் போல நம் உடலுக்குத் தேவையான எரிபொருளைச் செலுத்தி இயங்கினால் போதும். ஆனால், தேவைக்கு அதிகமானதைச் சாப்பிட்டு விட்டு உடலில் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படிச் சேர்க்கப் படும் உணவு கொழுப்பாக மாறி முதலில் அடி வயிறு, பிறகு தொடை, கை கால்கள் என்று உடலை பருமனாக்கிவிடும்.

இப்படிச் சாப்பிடப்படும் உணவுகள் கொழுப்பாக ரத்தக் குழாய்களிலும் படியும். ரத்த ஓட்டம் குறைவாக உள்ள இடங்களில் கெட்டியாகும். இதில் முக்கியமான இடங்கள், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களும், இதயத் துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களும்.

உடற்பயிற்சி இல்லாமல், தேவை யானதை மட்டும் விலங்குகளைப்போல சாப்பிடாமல் தேவைக்கு அதிகமாக, வாய்க்கு ருசியாக மசாலா பொருள்களை, பருவத்துக்கு உதவாத வெளிநாட்டு உணவுகளை நாம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் அதிகம்.

மனிதன் நிறைய விஷயங்களில் பேராசை கொள்கிறான். முக்கியமாக உணவின் மீது. இந்த விஷயத்தில் பேராசைப்படவே கூடாது. இன்றைக்கு பல விஞ்ஞான ஆசிரியர்களுக்கு மலச்சிக்கல் ஒரு நோய் என்பதே தெரிவ தில்லை. எந்தக் காரணங்களால் மலச் சிக்கல் வரும் என்பது தெரிவதில்லை. உணவுடன் நம் உடலுக்குத் தேவையான நீரை அருந்த வேண்டும் என்று மாணவர்களுக்குச் சொல்லியும் கொடுப்பதில்லை.

காட்டில் இருக்கும் விலங்குகள், பறவைகள் தனக்குத் தேவையான உணவைத் தேடி சாப்பிட்டுவிட்டு, தேவையான நீரை அருந்திவிட்டு சூரியன் மறைந்தவுடன் ஓய்வெடுத்துக்கொள்ளும். ஆனால், நாம் இரவு முழுக்க எல்இடி விளக்கைப் போட்டுக் கொண்டு, கையிலிருக்கும் செல் போன் மூலம் இரவு நேரத்திலும் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறோம்.

விஞ்ஞானத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ... அப்படிப் பயன்படுத்தாமல் உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களில் பயன்படுத்திக் கொண்டிக் கிறோம். இதில் தாத்தா - பாட்டி களும், பேரன் - பேத்திகளும் அடங்குவர்.

இந்த நிலையில் முதியோருக்கு நான் சொல்லிக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்... சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்; நன்றாகத் தூங்க வேண்டும்; நடக்க வேண்டும்... அப்போதுதான் வளர்சிதை மாற்றம் சரியாக இருக்கும்.

முதுமைக்கு மரியாதை 17 - ‘ஹெல்த் இஸ் வெல்த்!’

தங்கும் வசதியுள்ள பெரிய ஹோட்டல் களில் மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் ஃப்ரீ என்பார்கள். இந்த விஷயத்தை மேலை நாட்டினர் அறிமுகப்படுத்தியதற்கு முக்கிய காரணம், காலை உணவை எந்தளவுக்கு எடுத்துக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்குச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான். மதியம் நடுத்தர உணவு, இரவு எளிதில் செரிக்கக் கூடிய உணவு இருந்தால் போதும்.

அதற்கடுத்து பத்து மணிக்கு படுக்கை. படுக்கையின்போது அன்றைக்கு நடந்த இனிமை யான நினைவுகளுடன் படுக்கச் சென்றீர்கள் என்றால் நிம்மதி யான உறக்கம் கிடைக்கும்.

ஜப்பான் நாட்டில் வசிப்பவர் களின் ஆயுள் இன்று அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், உணவுமுறை. நம் முன்னோர் களும் அரை வயிறு சாப்பிட்டு, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றார்கள். ஆனால், அதை நாம் மறந்து விட்டோம். பாரம்பர்யமான, நம் ஊரில் கிடைக்கக்கூடிய சீசன் காய்கறிகளை, பழங்களை அதிகமாகச் சேர்த்துக் கொள் ளுங்கள். பசிக்கும் நேரத்தில் நொறுக்குத் தீனியைக் குறைத்துக்கொண்டு நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரி, வெள்ளை முள்ளங்கி, கேரட், முட்டைகோஸ் போன்ற வற்றைச் சாப்பிடலாம்’’ என்றவர் தன்னிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட பெரியவர் ஒருவரைப் பற்றி பேசினார்.

``உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகி காலில் புண் ஏற்பட்டு காலை எடுக்க வேண்டிய நிலையில் அவர், என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். மறுநாள் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், முதல் நாள் மதியம் உறவினர் களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எட்டிப் பார்த்த நான், `இந்த நேரத்தில் எதுக்கு பிரியாணி... நாளைக்கு ஆபரேஷன்... உங்க சர்க்கரையின் அளவு குறை யாதே’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.

மறுநாள் காலை அவரைப் பார்த்தபோது சற்று கோபமாக என்னிடம், `என் காலை எடுக்கறதுக்கு கேவலம் நான் சாப்பிடும் உணவுதான் காரணம் என்று எனக்குத் தெரியாது டாக்டர். அப்படி யாராவது சொல்லியிருந்தால் இந்த நிலைக்கு நான் வந்திருக்க மாட்டேன்’ என்றார்.

சத்தான, சரியான உணவு எந்தளவு முக்கியமோ அதைவிட நாம் அருந்தும் தண்ணீர் மிக முக்கியம். நம் உடலில் 24 நேரமும் நடந்துகொண்டே இருக்கும் செரிமானம், ரத்த ஓட்டம், சிறுநீர் பிரிப்பு போன்றவற்றுக்கும் நீர் அருந்துவது முக்கியம். காலை முதல் இரவு வரை ஆறு முறை வேளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியம்

அதற்கடுத்து முதியோருக்கு ஏற்ற உடற்பயிற்சி - நடைப்பயிற்சி. வீட்டில் ஓய்வுபெற்று இருக்கும் முதுமைப் பருவத்தினரும் சூரிய ஒளியில் காலை - மாலை இரண்டு வேளையும் நடக்கலாம். கணவனுடன் மனைவியும் சேர்ந்து நடப்பது கூடுதல் சிறப்பு. இதனால் மன அழுத்தம் நீங்கும். மனதில் உள்ள கவலை கள் மறையும்” என்றவர்,

“கடந்துபோன நாள்களை நினைத்துக் கவலைப்படாதீர்கள். இன்றைய வாழ்க்கையை சந்தோஷமாக நினையுங்கள். பிடித்த மனிதர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். எத்தனை மனிதர்களை நீங்கள் தொட்டுச் செல்கிறீர்களே... அந்த அளவுக்கு உங்கள் ஆயுள் நீடிக்கும் என் கிறது சமீபத்திய ஆய்வு. அந்த நிலையுடன் எளிமையாக, யதார்த்தமான வாழ்க்கை நடத் துங்கள்” என்று விடை பெற்றார்.

பணபலம், உடல்நலம்... இந்த இரண்டுக்கும் அடுத்து இன்றைய சூழ்நிலையில் முதியோர் பாதுகாப்பு குறித்து சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் (வடக்கு) தா.ச.அன்பு ஐ.பி.எஸ் சிறப்புரையாற்றி னார். அந்த ஹைலைட்ஸ், அடுத்த இதழில்...

- துணை நிற்போம்...

 பி.எஸ்.ராமமூர்த்தி
பி.எஸ்.ராமமூர்த்தி

ஆங்கிலம்... எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்! - பி.எஸ்.ராமமூர்த்தி

மகனோ/மகளோ வெளிநாட்டில் இருக்க இன்றைய முதியோர் பலர் வெளிநாடுகளுக்குப் பயணப் படுகின்றனர். ஓரளவு ஆங்கில அறிவு இருந்தாலும் சிலருக்கு ஆங்கிலம் பேச, எழுத தயக்கங்கள் உள்ளன. மொழி தெரியாத ஊரில் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். நீட்டி, முழக்கித் தேவைக்கு அதிகமான வார்த்தைகளை மிகவும் அநாவசியமாகப் புகுத்தி வாக்கியங்களை முழ நீளமாக்கினால்தான் அது சிறந்த மொழி ஆளுமை என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு.

ஆங்கிலம் கற்பதற்கு, பேசுவதற்கு ஆர்வம் இருந்தால் போதும்; எளிதாகக் கற்கலாம். எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம். ஒரு மொழியைக் கற்க வயது எப்போதும் ஒரு தடையாக இருப்பதில்லை. படிப்பறிவும் சூழ்நிலையும் ஒருவருக்கு சாதகமாக இருந்தால் அவர் எங்கேயும் மற்றவர் துணையில்லாமல் சமாளித்து விடலாம். உதாரணத்துக்கு வெளியிடங் களுக்குச் செல்கிறீர்கள்... ஒருவர் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக `தேங்க்ஸ்' (Thanks) அல்லது `தேங்க்யூ' (Thank you) என்று சொல்லும்போது பதிலுக்கு... நீங்கள், ‘நோ மென்ஷன் ப்ளீஸ்’ (No mention please) - பரவாயில்லை, ‘வெல்கம்’ (Welcome) - வரவேற்கிறேன், ‘இட்ஸ் மை பிளஷர்’ (It is my pleasure) - அது எனக்கு மகிழ்ச்சி, ‘பிளஷர் இஸ் மைன்’ (Pleasure is mine) - மகிழ்ச்சி என்னுடையது...

இவற்றில் ஒன்றை... எந்த வார்த்தை உங்களின் நினைவில் இருக்கிறதோ... சட்டென்று உச்சரிக்க வருகிறதோ அதை, தகுந்த உடல்மொழியுடன் சிறு புன்னகையுடன் சொல்வது அவருக்கு மகிழ்ச்சியைத் தருவ தாகவும் அமையும்.

அடுத்து ஒருவரை நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நினைத்தால் ‘கங்கிராஜுலேஷன்’ அல்லது ‘கங்கிராட்ஸ்’ (Congratulations அல்லது Congrats) - பாராட்டுகள், ‘குட் ஷோ’ (Good show) நல்ல அல்லது சிறந்த நிகழ்வு, ‘ஹேட்ஸ் ஆஃப்’ (Hats off) - சபாஷ் தலைவணங்குகிறேன், ‘ஃபன்டாஸ்டிக்’ (Fantastic) அற்புதம் மற்றும் பிரமாதம், ‘குடோஸ்’ (Kudos) - புகழ்கிறேன் மற்றும் பெருமைப்படுகிறேன், ‘கீப் இட் அப்’ (Keep it up) தளராது தக்கவைத்துக்கொள் என்றெல்லாம் பாராட்டலாம். எதற்காக ஒரு பாராட்டுக்கு பலவிதமான வாக்கியங்களைச் சொல்கிறோம் என்றால் இவற்றில் ஏதாவது ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளலாம் என்ப தற்காகத்தான்.

அடுத்து, தற்போது பல இடங்களின் பெயர்கள் மாறிவருகின்றன. உதாரணத்துக்கு டாய்லெட் என்பதை ரெஸ்ட் ரூம் (Rest Room) என்கிறார்கள். பல இடங்களில் இந்த போர்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதை ஓய்வு எடுக்கும் அறை என்றே நினைத்துக் கொள்வோம். ஆனால், அதை கழிப்பறை என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட வார்த்தைகளையும் நாம் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

வெளிநாட்டுக்குப் பறப்பவர்கள், வெளியிடங்களில் ஜாலியாகச் சுற்றுபவர்கள் எல்லாரும் நல்ல ஆங்கிலம் பேசுகிறவர்கள் என்று சொல்ல முடியாது. உங்களைப் பொறுத்தவரை தைரியமாகவும் சரளமாகவும் பேசத் தெரிந்தால் போதும், எந்த வயதிலும் உலகம் சுற்ற லாம்.

- தொடர்ந்து பேசலாம்....