ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை 18 - அடுத்தவரின் கதையைக் கேளுங்கள்... உங்களின் ஜாதகத்தைச் சொல்லாதீர்கள்!

முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
News
முதுமைக்கு மரியாதை

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

சென்ற இதழ் தொடர்ச்சி....

அவள் விகடன் அதுல்யா சீனியர் கேர் இணைந்து நடத்திய ‘ஹலோ சீனியர்ஸ்’ நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஆனந்த விகடன் அலுவலகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சியின் அஸோசியேட் ஸ்பான்சர்ஸ் தில்லை’ஸ் மசாலா மற்றும் பீ மார்க்கெட்.

இந்த நிகழ்ச்சியில் `முதியோரும் முதலீடும்’ பற்றி முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றிய பின்னர், ‘ஹெல்த் இஸ் வெல்த்’ என்பது குறித்து சிறப்புரையாற்றினார் பொது மருத்துவர் மு.அருணாசலம்.

அடுத்து இன்றைய சூழ்நிலையில் முதியோர் பாதுகாப்பு குறித்து சிறப்புரை யாற்றிய சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் (வடக்கு) தா.ச.அன்பு ஐ.பி.எஸ், “முதுமையில் உள்ளவர்கள் தங்களின் பாதுகாப்புக்கு எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், அவர்களிடம் எந்தெந்த விஷயங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதற்கு காவல்துறை எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும் என்ற சிந்தனையுடன் இங்கு வந்தேன். ஆனால், முதுமையில் அடியெடுத்து வைப்பவர்களும் எதிர்காலத்தில் எப்படி யெல்லாம் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்கிற உணர்வுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக் கிறது.

முதுமைக்கு மரியாதை 18 - அடுத்தவரின் கதையைக் கேளுங்கள்... உங்களின் ஜாதகத்தைச் சொல்லாதீர்கள்!

முதியோர் மீதான குற்றங்கள் இந்தியா வைப் பொறுத்தவரை எங்கெல்லாம் அதிகமாக நடக்கின்றன என்பதைப் பார்க்கும்முன் இந்தியாவில் எந்த மாநிலங்களில் முதியோர் அதிகமாக வசிக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். சமீபத்திய புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது மூத்த வயதினர் அதிக முள்ள மாநிலமாக கேரளா உள்ளது. அதற்கடுத்த நிலையில் தமிழ்நாடு உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னையில் அதிக அளவில் முதியோர் வசிக்கிறார்கள்.

இவர்களில் தம்பதியாக வசிப்பவர்கள், தனியாக வசிப்பவர்கள் என்று இரண்டு வகையினர் இருந்தாலும், முதியோருக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் குறைவே என்றுதான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் பணத்துக்காக நடத்தப் படும் கொலைகள் பிரதானமாகத் தெரிந் தாலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றங்கள் மிகக் குறைவே.

இந்தக் குற்றங்கள் செயின் பறிப்பு, ஒரிஜினல் நகைகளைப் பெற்று போலி நகைகளைத் தருவது, வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களை மிரட்டித் திருடுவது போன்றவையாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட நடக்கும் குற்றங்கள், முதியோர்களுக்குத் தெரிந்தவர்களின் மூலமாக நடக்கின்றன. பால் கவர் போடுவோர், பேப்பர் போடுவோர், காஸ் இணைப்பு தருபவர், வாட்டர் கேன் போடுபவர்கள் தரும் தகவல்களின் மூலமாகவே நடக்கின்றன. இவை தவிர நயமாகப் பேசி ஏமாற்றுபவர்களும், வட்டி பணம் அதிகம் கிடைக்கிறது என்று திசை திருப்புவர்களின் மூலமாகமும் குற்றங்கள் நடக்கின்றன.

இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவர்கள் மூத்த குடிமக்கள்தான். வீட்டில் வேலையில்லாமல் இருக்கும் பெரியவர்கள் பேச ஆள் கிடைத்தால் தன் வீட்டில் நடக்கும் மொத்த விஷயத் தையும் கொட்டிவிடுகிறார்கள். என் பையன் அமெரிக்காவில் இருக்கிறான், பெண் டெல்லியில் இருக்கிறாள், அவர்கள் மாதம் இவ்வளவு பணத்தை அனுப்புகிறார்கள்; இந்த வங்கியில் எங்களுக்கு அக்கவுன்ட் உள்ளது, இந்த தேதியில் ஏடிஎம்மில் பணம் எடுத்து, செலவு போக மீதியைச் சேர்த்து வைக்கிறோம் என்று தங்கள் வீட்டின் மொத்த வரலாற்றையும் கொட்டி விடுவார்கள்.

நேரம் போக வேண்டும், பேச ஆள் கிடைத்தால் போதும் என்று நினைப் பவர்கள், தங்களுடன் பேசுபவர்களின் கதையைக் கேட்கலாம். உங்கள் ஜாதகம் மொத்தத்தையும் சொல்லக் கூடாது.  அத்துடன் எங்களுக்கு பாதுகாப் பாக இவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் இருக்கிறார்கள்; காவல் துறையில் எனக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய ஓடோடி வருவார்கள் என்றும் சொல்லி வையுங்கள். கூட்டுக்குடும்பம் உடைந்து வரும் சூழலில் உங்களைப் பற்றித் தெரிந்த, உங்களுக்கு உதவக்கூடியவர்களுடன் தொடர்பில் இருங்கள்.

இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய இடங்களில் சிசிடிவிகளைப் பொருத்தியிருக்கிறோம். தொடர்ந்து அவற்றைக் கண்காணித்து வருகிறோம். இதனால் செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் குறைந்து வருகின்றன. மேலும், குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாகத் தீர்வு காண்கிறோம்.

மேலும் ஏதோ ஒரு மனநிலையில் வழி தெரியாமல் போகும் மூத்த குடிமக்களைக் கண்டுபிடித்து, உரியவர்களிடம் சேர்த்து வருகிறோம்.

அத்துடன் முதியோர்களின் குறை களைத் தெரிவிக்க சேவை எண்களும் உள்ளன. அவற்றையும் தீர்த்து வைக் கிறோம்.

பெருகிவரும் மக்கள்தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழக காவல்துறை அவர்களின் பாதுகாப்புக்கு மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. இன்றைக்கு மட்டுமல்ல... என்றைக்கும் முதியோருக்கு நண்பனாகக் காவல்துறை செயல்படும்’’ என்று உறுதியளித்து விடைபெற்றார்.

முடிவாக அவள் விகடனுடன் ஹலோ சீனியர்ஸ் நிகழ்ச்சியை இணைந்து நடத்திய அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் பொது மேலாளர் தர்மேந் திரா, “இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திய `அவள் விகடன்’ இதழுக்கு நன்றி சொல்லும் நேரத்தில் இத்தனை சீனியர் சிட்டிசன்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்தது மகிழ்ச்சியைத் தருகிறது. எங்கள் நிறுவனம் சீனியர் சிட்டிசன்களுக்கு எல்லாவகையிலும் உதவ தயாராக இருக் கிறது’’ என்றார்.

வந்திருந்த சீனியர்ஸ் அனைவரும் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு விடை பெற்றபோது, அஸோசியேட் ஸ்பான் சர்ஸ்  தில்லை’ஸ் மசாலா மற்றும் பீமார்க் கெட்டின் அன்பளிப்பு பொருள்கள் வழங்கப்பட்டன.

- துணை நிற்போம்...

ஆங்கிலம்... எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்! 2 - பி.எஸ்.ராமமூர்த்தி

வெளிநாட்டில் இருக்கும் மகனிடமிருந்தோ அல்லது மகளிடமிருந்தோ திடீர் அழைப்பு, “அம்மா... அப்பா ரெண்டு பேரும் கொஞ்சநாள் எங்களோட இருந்துட்டுப் போங்க...” என ஆசையாக அழைக்கிறார்கள்... போக வேண்டும் என்று ஆசைப்பட்ட இடத்துக்கு இப்போது மகன்/மகள் அழைக்கிறார் என்பது சந்தோஷத்தைத் தந்தாலும், எப்படிப் போவது, மொழி தெரியாத ஊரில் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள் முதியோர் பலர்.

இந்தத் தயக்கத்தை முதலில் துடைத்தெறியுங்கள். ஒரு மொழியைப் பேசுவதற்கும், கற்று உணர்ந்து கொள்வதற்கும் வயது எப்போதும் தடையாக இருக் காது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

உதாரணத்துக்கு வெளிநாட்டுக்குச் செல்ல முடிவாகிவிட்டது. குறிப்பிட்ட நாள் அன்று விமான நிலையத்துக்கு வந்துவிட்டீர்கள். ஏற்கெனவே உங்கள் பிள்ளைகள் சொன்னபடி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் Arrival - வந்து சேரும் இடம் / Departure - புறப்படும் இடம் என்கிற அறிவிப்பு பலகையைப் பார்த்து புறப்படும் இடத்துக்கு வந்து விட்டீர்கள்... இருந்தாலும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்று சந்தேகம். இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக் கிறீர்கள். எப்படிக் கேட்பது?

I have come to the place of Departure. Is it right (ஐ ஹாவ் கம் டு தி பிளேஸ் ஆப் டெப்பார்சர். இஸ் இட் ரைட்) - ‘நான் புறப்படும் இடத்துக்கு வந்துள்ளேன். இது சரிதானா?’ என்று கேட்கலாம் அல்லது I am now in Departure place. Am I right (ஐ யம் நெள இன் டெப்பார்சர் பிளேஸ்.ஆம் ஐ ரைட்) - ‘நான் புறப்படும் இடத்தில் உள்ளேன். அது சரிதானா?’ என்று கேட்கலாம்.

சில நேரங்களில் புறப்படும் இடத்துக்கு வந்து விட்டாலும் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்கிற குழப்பம் இருக்கும். அதற்கு Which side to go? (விச் சைடு டு கோ) - `எந்தத் திசையில் செல்ல வேண்டும்?' என்று கேட்கலாம்.

 பி.எஸ்.ராமமூர்த்தி
பி.எஸ்.ராமமூர்த்தி

அப்போது நமக்கு பதில் அளிப்பவர்களின் வார்த்தைகளையும் புரிந்துகொள்ள வேண் டியது அவசியம். நீங்கள் ஏர்போர்ட்டில் சந்திக்கிற மனிதர்கள் பெரும்பாலும் உங்களுக்கு பதில் சொல்லும்போது right/left - வலது/இடது என்று சொல்லிவிட்டுக் கடந்துவிடுவார்கள். சிலர் Move to your right/left (மூவ் டு யுவர் ரைட்/லெஃப்ட்) - ‘உங்கள் வலது/இடது பக்கம் செல்லவும்’ என்று சொன்னால் அதற்கேற்ப நீங்கள் செல்லலாம்.

இதில் உங்களுக்குத் தேவையான வார்த்தை right/left - வலது/இடது என்பது மட்டுமே. அதைப் புரிந்துகொண்டு நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு தைரியமாகச் செல்லலாம்.

அடுத்து, உங்களின் சந்தேகத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஒலிப்பெருக்கியில் அல்லது உங்கள் டிக்கெட்டைக் கொடுத்து பரிசோதித்தவர் Go to counter No.18 for documents verification - (கோ டு கவுன்டர் நம்பர் 18 ஃபார் டாக்குமென்ட்ஸ் வெரிஃபிகேஷன்) - ‘பயணம் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட், டிக்கெட், விசா போன்றவற்றைப் பரிசோதிக்கும் பொருட்டு கவுன்டர் நம்பர் 18-க்குச் செல்லவும்’ என்று கூறலாம். இதில் கவுன்டர் எண்ணை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதும். அந்த இடத்துக்குச் சென்றுவிட்டால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

பொதுவாக பிரயாணிகள் மற்றும் விருந்தினர்கள் காத்திருக்கும் இடத்தை Lounge (லவுன்ஜ்) என்று அழைக்கிறார்கள். முன்பெல்லாம் Waiting Place (வெயிட்டிங் பிளேஸ்) - காத்திருக்கும் இடம் என்று அழைக்கப்பட்டது இப்போது ‘லவுன்ஜ்’ என்று அழைக்கப்படுகிறது. காத்திருக்கும் இத்தகைய இடத்தை விமான நிலையங்களில், பெரிய ஹோட்டல்களில் பார்க்கலாம்.

நீங்கள் புறப்பட வேண்டிய நேரத்துக்கு முன்பாக வந்துவிட்டாலோ அல்லது உங்களைச் சந்திக்க வேண்டியவர்களுக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டாலோ இந்த இடத்தில் வசதியாக அமர்ந்து கொள்ளலாம். ரிலாக்ஸ்டாக வெளிநாட்டுக்குப் பறக்கலாம்.

- தொடர்ந்து பேசலாம்....

முதியோர்களின் குறைகளைத் தெரிவிக்க...

முதியோர்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் குறை களைத் தெரிவிப்பதற்கு தமிழக அரசின் உதவி எண்கள்:

தொலைபேசி எண்: 044 - 24350375,

செல்பேசி/வாட்ஸ்அப் எண்: 93612 72792