ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை 19 - பத்து வருஷத்துக்கொருமுறை லைஃப்ஸ்டைலை மாத்தலைனா போர் அடிச்சுடும்!

நடிகர் சிவகுமார்
News
நடிகர் சிவகுமார்

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - நடிகர் சிவகுமார்

கோயம்புத்தூரில் சூலூர் பக்கத்தில் இருக்கும் காசிகவுண்டன்புதூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர்; அந்தக் கிராமத்தில் பள்ளி இறுதி வகுப்பை முடித்து, சென்னைக்கு வந்து ஓவியக் கல்லூரியில் பயின்றவர்; பிறகு சினிமா துறையில் நுழைந்தவர் பழனிசாமி என்கிற நடிகர் சிவகுமார். நடிப்புத்துறையில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தனி மனித வாழ்க்கைப் பயணத்தில் பலருக்கு எடுத்துக்காட்டாக, ‘திரையுலக மார்க்கண்டேயன்’ என்கிற முத்திரையுடன் 80 வயதைக் கடந்து உற்சாகமாக வலம்வருகிறார். இன்றுவரை எனர்ஜி குறையாமல் இயங்குபவர் அதற்கான காரணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“நாம வளர்றோம். கல்யாணம் பண்ணிக் கறோம். குழந்தை பெத்துக்கறோம். படிக்க வெக்கறோம். அவங்கள ஆளாக்குறோம். அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெக்கறோம். அதுக்குள்ள நம்ம கடமை முடிஞ்சு, வேலையிலேருந்து ரிட்டையர் ஆயிடுவோம். அப்புறம் அவன் சம்பாதிப்பான். அவன் குடும்பத்தோட சேர்ந்து வாழுவோம். முதல்ல குடும்பத் தலைவனா நாம இருந்தோம். இப்ப அவன் குடும்பத் தலைவனாயிடுவான். நாம ஒதுக்கப்படுவோம். இந்த விஷயத்தை பலரால சகிச்சுக்க முடியாது. ‘நான் வளர்த்த பையன்... அவங்கிட்ட நான் என்ன கேட்கறது’ என்கிற ஈகோ வந்துடும். பிரச்னை ஆரம்பிக்கும்.

முதுமைக்கு மரியாதை 19 - பத்து வருஷத்துக்கொருமுறை லைஃப்ஸ்டைலை மாத்தலைனா போர் அடிச்சுடும்!

குறிப்பா, வேலையிலேர்ந்து ரிட்டையர் ஆனவங்க. அடுத்தகட்டமா வீட்டுல என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுப் போயிடுவாங்க. ரிட்டையர்மென்ட்டுக்குப் பிறகு என்ன செய்யலாம் என்கிற பிளானே இல்லாம வாழ்ந்து கரைஞ்சுடுவாங்க. ஓவியர் கோபுலு தொண்ணூறு வயசு வரைக்கும் வாழ்ந்தார். அவர், ‘ஒவ்வொரு பத்து வருஷத்துக்கும் ஒருமுறை லைஃப் ஸ்டைலை மாத்திக்கணும். இல்லேன்னா போர் அடிச்சுடும்’னு சொல்வார்.

நான் அறிந்தோ, அறியாமலோ என் வாழ்க்கை, அப்படியே அமைஞ்சுடுச்சு. கல்வியே அவசியமில்லாத ஊர்ல பிறந் தவன் நான். எங்க ஊர்ல சிலருக்கு பத்து ஏக்கர், அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கும். அவங்க நிலத்துல இருபது குடும்பங்கள் கூலி வேலை பார்க்கும். வானம் பார்த்த பூமியில ஆடி மாசமும், ஐப்பசி மாசமும் மழை பெய்யும். அந்த நேரத்துல விதைச் சுட்டு அதுக்குப் பிறகும் அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் வேலை பார்த்தா போதும். அந்த வேலைக்கான கூலி கிடைச்சுடும். வயிறு வளர்க்கத்தானே வேலை பார்க்கணும். அதுக்கான வழி கிடைச்ச பிறகு எதுக்குப் படிக்கணும்?

படிச்சா ஊரை விட்டுப் போகணும். அதுவும் எந்த ஊருன்னு தெரியாது. எதுக்கு அங்கே போய் கஷ்டப்படணும்... நம்ம ஊர்லயே இருந்துடலாம்கிற மன நிலையோட இருந்த ஜனங்களுக்கு மத்தியில படிக்கப்போன ஏழெட்டு பிள்ளைங்கள்ல நானும் ஒருத்தன்.

அப்படி படிக்கப் போய் பள்ளி இறுதி வகுப்பை முதன்முதலா எங்க கிராமத்துல முடிச்சவன் நான் ஒருத்தன்தான்.

அதுக்குப் பிறகு இன்ஜினீயரிங் காலேஜ் போலாம்னு முடிவு பண்ணோம். அப்ப எங்க ஊரு வாத்தியார் குமாரசாமி, ‘நீ படிக்கறதைவிட, படம் வரையறதுல கெட்டிக்காரன். மெட்ராஸ்ல ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்னு ஒண்ணு இருக்கு. அதுல சேர்ந்து படி’ன்னு சொன்னார்.

மனைவியுடன்...
மனைவியுடன்...

கிராமத்துலேர்ந்து மெட்ராஸுக்கு வந்து ஓவியக் கல்லூரியில சேர்ந்து படிச்சேன். அந்த நேரத்துல இந்தியா பூரா வலம்வந்து பல ஓவியங்கள் வரைஞ்சேன். மோகன் ஆர்ட்ஸ்ல அப்ரன்ட்டிஸா கொஞ்ச காலம் வேலை பார்த்தேன். ஆனாலும் ‘இந்த மாதிரி ஓவியங்கள் பத்திரிகைகள்லதான் எடுபடும்... இப்ப மாடர்ன் ஆர்ட்தான் டிரெண்டு. நீ இதுவரைக்கும் வரைஞ்சது செல்லுபடியாகாது’ங்கிற நிலை வந்தது. அப்பதான்... அடுத்து என்னங்கிற கேள்வி எழுந்தது.

பிரஷ், பேப்பர் எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சுட்டு... நாடகங்கள் மூலமா நடிப்புத்துறைக்குள்ளே வந்தேன். நாடகத்துல நடிச்சதும் டயலாக் எப்படி பேசறது, பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கணும்னு பழகிடுச்சு. சினிமா துறைக்குள்ளே நுழைஞ்சு, 192 படங்கள்ல நடிச்சேன். நாப்பது வருஷத்துல வீடு வாங்கிட்டோம். கார் வாங்கிட்டோம். கல்யாணம் பண்ணி, பிள்ளைக்குட்டி பெத்துக்கிட்டோம். ஆனா, ஒரு நடிகனா சாதனை செய்துட்டோம், இமயமலை ஏறி கொடி நாட்டிட்டோம்னு சொல்ல முடியாத நிலையில 2005 ஜனவரி மாசம் 19-ம் தேதி... இனிமே மேக்கப் போடற தில்லை, நடிக்கறதில்லைன்னு முடிவு பண்ணேன். அப்ப எனக்கு 64 வயசு. அடுத்து என்ன செய்யுறது?

‘எங்களோட புத்தகக் காட்சியில நீங்க வந்து பேசணும்’னு ஈரோடுல இருந்து ஓர் அழைப்பு. முடியாதுன்னு சொல்லியும், ‘உங்களால முடியும்’னு 2006-ல ஒரு தேதியைச் சொல்லிட்டுப் போயிட்டாங்க.

 மகன்களுடன்...
மகன்களுடன்...

அஞ்சாயிரம் பேர் முன்னாடி தேமதுரத் தமிழோசை என்ற தலைப்புல அன்றாடம் நமக்குள்ளே நடக்கிற விஷயங்கள்ல ஆரம்பிச்சு... உலகத்துல நடக்கற யுத்தங் களைப் பத்தி சொல்லி... ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கருத்தை நிலை நிறுத்தி, ராமாயணத்துலேர்ந்து சில கதைகளையும் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய சில பாடல்களையும் சொல்லி முடிச்சேன். ஒன்றரை மணி நேரம் பேசி முடிச்சப்போ இவ்வளவு பெரிய கூட்டத்தை இவ்வளவு நேரம் நம்மால எப்படி உட்காரவைக்க முடிஞ்சதுன்னு எனக்கே ஆச்சர்யமாயிருந்தது.

டயலாக் பேசுறது எனக்குப் பழகின விஷயம். ஆனா, ஜனங்களை நம் கண் எதிரே கட்டிப்போட்டு உட்கார வெச்சுப் பேசினது புதுசு. அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவங்க... அடுத்த வருஷமும் நீங்களே வந்து பேசுங்கன்னு சொல்லிட்டாங்க.

2007-ல ‘தமிழ் சினிமாவில் தமிழ்’ என்கிற தலைப்புல சின்ன வயசுல மனப்பாடம் செய்து இப்ப வரைக்கும் என் நினைவுல இருக்கும் பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்களைப் பேசி திரைத்துறையில் தமிழ் வளர்ந்த, வளர்த்த கதையை ஒண்ணே முக்கால் மணி நேரம் பேசினேன்.

67 வயசுல கம்ப ராமாயணத்தைக் கையில எடுத்தேன். ராமாயணத்தை இதுவரைக்கும் மொத்தமா யாரும் பேசினதில்லை. பகுதி பகுதியாத்தான் பேசுவாங்க. அப்பதான் என்னையும் அறியாம இலக்கியத்தின் மேலே ஈடுபாடு வந்தது. ராமாயணத்துல இருக்கிற பத்தாயிரத்து சொச்சம் பாட்டை ஆயிரமா சுருக்கி, அதுலருந்து நூறு பாட்டை மனப்பாடம் செய்து தொகுத்து - கம்ப ராமாயணம் இவ்வளவுதான்னு மொத்த ராமாயணத்தையும் எட்டாயிரம் பேர் முன்னாடி ரெண்டு மணி நேரம் இருபது நிமிஷத்துல பேசினேன்.

அடுத்து மகாபாரதம்... இதையெல்லாம் முடிக்கும்போது ஏழெட்டு வருஷங்கள் ஓடிப்போச்சு. அதற்கெடுத்து திருக்குறளைக் கையிலெடுத்தேன்.

இதையெல்லாம் எதுக்காகச் சொல்ல வர்றேன்னா... ஒரு மனிதன் முதல்ல உடல்ரீதியா பலமாயிருக்கணும். எனக்கு குடி, சிகரெட் பழக்கம் கிடையாது. காபி, டீ குடிச்சு அறுபத்து மூணு வருஷங் களாச்சு. யோகா பயிற்சியைக் குறிப்பிட்ட வயசு வரைக்கும் தீவிரமா செய்தேன். இப்ப அடிப்படை யோகா பயிற்சியை மட்டும் செய்துட்டு காலையில நாற்பதுலேருந்து அம்பது நிமிஷங்கள் வரை நடக்கறேன்.

அடுத்து மனரீதியா பலம் வேணும். என் வீட்டைப் பொறுத்தவரை எங்கம்மா வையும் என் சம்சாரத்தையும் கோயில் கட்டிக் கும்பிடணும். படிக்காத தாய், படிக்கப் போடான்னு அனுப்பினாங்க. என் சம்சாரம் பி.ஏ படிச்சவங்க. கல்யாணமாகி 49 வருஷங்கள்ல ‘இவன் சரியா நடிப்பானா, கம்ப ராமாயணத்தை ஒழுங்கா பேசுவானா’-ன்னு மறந்துகூட என்மேல சந்தேகப்பட்டதில்லை. பசங்களெல்லாம் எனக்கு கடவுள் கொடுத்த வரம். ‘திருக்குறளைப் பத்தி பேசப்போறேன், வீடியோ எடுக்கணும்’னு சொன்னதும் செலவைப் பத்தி கவலைப் படாம பதினஞ்சு லட்ச ரூபாயை செலவு செய்யத் தயாராயிருக்காங்க. இது அப்பாவுக்காகக் கொடுக்கறதில்லை... அவர் செய்யுற வேலைக்கு... அவ்வளவு தான்.

இதுக்கப்புறம் மேடையேறி நிறைய நேரம் பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். 1961-ல இருந்து திரையுலகுல நடந்த சம்பவங்களை, உண்மைகளைத் தொகுத்து 61 வருஷங்கள் டைரி எழுதி வெச்சிருக்கேன். அதை யெல்லாம் வீடியோவா ஷூட் பண்ணி வெளியிட தயாராயிட்டேன்” என்று உற்சாகத்துடன் பேசியவர், முத்தாய்ப்பாக தன் இளமை ரகசியத்தைப் பகிர்ந்தார்...

“உங்க உயிர் இருக்கிறவரை நீங்க ஆக்டிவ்வா இருந்தா முதுமையாவே உணர மாட்டீங்க... இதுதான் நிஜம்.”

- துணை நிற்போம்...

ஆங்கிலம்... எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்! - பி.எஸ்.ராமமூர்த்தி

பொதுவாக பயணிகள் மற்றும் விருந்தினர்கள் காத்திருக்கும் இடத்தை ‘லவுன்ஜ்’ (Lounge) என்று அழைக்கிறார்கள். விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் புறப்பட வேண்டிய நேரத்துக்கு முன்பாக வந்துவிட்டால் வசதியாக அமர்ந்துகொள்ள ‘லவுன்ஜ்’ இருக்கும்.

அப்படி காத்திருக்கும்நிலையில் பல இடங் களுக்குச் செல்பவர்களுக்குப் புறப்படுவதற்கான நேரத்துக்கான அறிவிப்புகள் வரும். இதை ‘அனவுன்ஸ்மென்ட்’ (Announcement) என்பார்கள். அதேபோல் விழிப்பு உணர்வு தொடர்பான அறிவிப்பு களும் வரும். இதை ‘அவேர்னெஸ்’ (Awareness) என்பார்கள். கோவிட் காலத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புகள் பரவலாக இருந்தன. அடுத்து, உங்கள் கவனத்தை ஈர்த்து... உஷார்படுத்த, எச்சரிக்கை தரும் விதமாக சில அறிவிப்புகளும் வரலாம். இவற்றை ‘அலெர்ட்’ (Alert) என்பார்கள். உதா ரணத்துக்கு Flood alert - வெள்ள அபாயம், Fire alert - தீ அபாயம் போன்ற முன்னெச்சரிக்கை அறிவிப்புகள்

Announcement, Awareness, Alert - இந்த மூன்று வார்த்தைகளும் A என்கிற எழுத்தில் ஆரம்பிக்கின்றன என்பது சிறப்பு என்பதுடன் நாம் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும். இந்த அறிவிப்புகள் பயணிகள் விழித்துக்கொள்ள/தயாராகும் பொருட்டு அறிவிக்கப்படுபவை.

 பி.எஸ்.ராமமூர்த்தி
பி.எஸ்.ராமமூர்த்தி

அடுத்து, இந்த அறிவிப்புகள் உங்கள் கவனத்தில் வந்துவிட்ட நிலையில், இவை நமக்கானவையா என்று எப்படித் தெளிவுபடுத்திக்கொள்வது?

பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் தயங் காமல் கேட்கலாம்... ‘இஸ் ட் ஃபார் மீ?’ (Is it for me?) - இந்த அறிவிப்பு எனக்கானதா என்று சுருக்கமாகவும் அல்லது ‘இஸ் திஸ் அனவுன்ஸ்மென்ட் ஃபார் மீ?’ (Is this announcementmeant for me?) - இந்த அறிவிப்பு என் தொடர்பானதா என்றும் கேட்கலாம்.

இந்த இடத்தில் நம் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களின் ஆங்கில வார்த்தைகளையும் புரிந்துகொள்வது அவசியமாகிறது. நீங்கள் மேற்படி கேள்வியைக் கேட்ட நிலையில் பதில் அளிப்பவர், ‘யெஸ் சார். யூ ஷுட் நெள புரொசீடு டு கவுன்ட்டர் நம்பர்.16’ (Yes Sir. You should now proceed to counter No.16) - `ஆமாம் சார். நீங்கள் கவுன்ட்டர் நம்பர் 16-க்கு செல்லும்படியான அறிவிப்பு இது' என்று சொல்லலாம். மேற்படி அறிவிப்பு உங்களுக் கானது இல்லை என்றால், ‘நோ சார். தி இஸ் நாட் ஃபார் யூ’ (No Sir. This is not for you) - என்று சொல்லலாம். இந்த பதில்களை வைத்து உங்களுக்கான அடுத்த செயல் களைத் தொடரலாம்.

அடுத்து A எழுத்தில் தொடங்கும் இன்னொரு வார்த்தையையும் கற்றுக் கொள்வோம். அந்த நான்காவது வார்த்தை, இன்று பரவலாகப் பேசப்படும் `Awesome' (ஆஸம்). இதற்கான அர்த்தம்... மிகவும் அருமை, சிறப்பு, உன்னதம், பாராட்டக்கூடியது என்பதாகும்.

உதாரணத்துக்கு.. ‘இட் இஸ் ஆன் ஆஸம் பர்ஃபார்மன்ஸ்’ (It is an awesome performance) - இந்த நிகழ்வு மிகவும் பிரமாதம். ‘தி ஸ்வீட் இஸ் ஆஸம்’ (The sweet is awesome) - `இந்த இனிப்பு அற்புதம்; சூப்பர்' போன்ற வார்த்தைகளை

Awesome உடன் சேர்த்துப் பயன்படுத்துவது சிறப்பாக அமையும்.

- தொடர்ந்து பேசுவோம்...