Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 2 - தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

பிரச்னை என்பது இரு கோடுகள் மாதிரி...

முதுமைக்கு மரியாதை! - 2 - தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

பிரச்னை என்பது இரு கோடுகள் மாதிரி...

Published:Updated:
முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
முதுமைக்கு மரியாதை

“முதுமைப் பருவத்தை மனிதகுலம் மட்டுமன்றி ஒவ்வோர் உயிரினமும் ஒரு நாள் சந்தித்தே ஆக வேண்டும் என்பதே இயற்கை. முதுமை வேதனையும் வருத்தமும் தருமா என்றால், இல்லவே இல்லை. உறுதியாக இல்லை. உடல் முதுமை அடையும்போது உள்ளத்தை இளமையாக வைத்துக்கொண்டால் போதும்… வேதனைக் கோடுகள் முகத்தில் படியாது. வெறுமை நிழலும் வாழ்க்கையில் விழாது என்பதே நிஜம்” என்று நம்மிடம் பேசத் தொடங்கினார், சென்னையைச் சேர்ந்த முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.

“முதுமைப் பருவத்தை வயதை வைத்தோ, தோற்றத்தை வைத்தோ சொல்ல முடியாத நிலையில் எதை வைத்துதான் சொல்வது என்ற கேள்வி பலருக்கு எழலாம். என்னைப் பார்க்க வருகிறவர்கள் சிலர், ‘டாக்டர் முதுமைக்குள்ளே நான் காலடி எடுத்து வெச்சுட்டேனா...’ என்று கேட்பார்கள்.

அவர்களிடம் என்னுடைய நாற்பது வருட மருத்துவ அனுபவத்திலிருந்து சில விஷயங்களைச் சொல்வேன்.

முதுமைக்கென்று தனியான அறிகுறியே இல்லை. உங்கள் வயது நாற்பது, ஐம்பது என்று போய்க்கொண்டே இருக்கும்போது திடீரென்று முதுமைக்கான அறிகுறி வந்துவிடாது. உங்கள் கண் பார்வை சற்று குறையலாம்; கேட்கும் திறன் மந்தமாகலாம். கை, கால்களில் லேசான நடுக்கம் ஏற்படலாம். எப்போதாவது கால் தடுமாறலாம். கீழே ஏதாவது பொருள் விழுந்துவிட்டால் யாராவது எடுத்துக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கலாம்.

வி.எஸ்.நடராஜன்
வி.எஸ்.நடராஜன்

இரவு நேரத்தில் தொடர்ச்சியான தூக்கம் வராது. அடிக்கடி பாத்ரூம் போக வேண்டிய நிலைமை ஏற்படலாம். அப்போதுதான் நடந்த சம்பவங்கள்கூட மறந்து போகலாம். உதாரணத்துக்கு, ஒருவர் பற்றிய எல்லா விஷயங்களும் நினைவில் இருக்கும். ஆனால், சட்டென்று அவர் பெயரை மறந்துவிடுவோம். வேறு பெயரில் அழைப்போம். வீட்டை பூட்டியிருப்போம். கொஞ்ச நேரத்தில் வீட்டைப் பூட்டினோமா, நன்றாகப் பூட்டினோமா என்று தவிப்போம். உடல் முழுக்க ஒருவித வலி இருக்கிற மாதிரியே இருக்கும். சின்னதாக அடிபட்டால் கூட அந்த வலி பல நாள்கள் தொடரும்.

இதையெல்லாம் வைத்து முதுமைப் பருவம் வந்து விட்டது என்று நினைக்கத் தோன்றினாலும் வேறு சில காரணங்களாலும் இந்த அறிகுறிகள் வரலாம்” என்றவர் தன்னைச் சந்திக்க வந்த ஒருவரின் நிலையைச் சொன்னார்... “ஐம்பதைக் கடந்தவர் அவர். ‘டாக்டர் என்னை செக் பண்ணி இனிவரும் நாள்களில் நான் எப்படியிருக்கணும்னு சொல்லுங்க’ என்றார்.

‘நீங்க முதல்ல உங்க உடம்புல இருக்கிற பிரச்னை என்னன்னு உங்க குடும்ப டாக்டர்கிட்டே போய் கேளுங்க. அப்புறமா என்னை வந்து பாருங்க’ என்று அனுப்பி வைத்தேன். சென்றவர் பல மாதங்களுக்குப் பிறகு வந்தார். ஆள் மெலிந்திருந்தார். ‘வாங்க எப்படியிருக்கீங்க? அடையாளமே தெரியலையே’ என்றேன்.

‘ஆமாம் டாக்டர். நீங்க சொன்ன மாதிரியே எங்க குடும்ப டாக்டரைப் பார்த்தேன். அவர் என்னை முழுக்க பரிசோதிச்சுப் பார்த்துட்டு, ரத்த அழுத்தம் இருக்கு. நான் எழுதித்தரும் மாத்திரையை தினமும் போடுங்கன்னு சொன்னார். நாமதான் நல்லாயிருக்கோமே... வயசா கலையே... நமக்கு எதுக்கு மாத்திரைனு போடலை. திடீர்னு ஒருநாள் மயங்கி விழுந்துட்டேன். மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்காங்க. ஹார்ட் அட்டாக்னு சொன்னாங்க. ஏதோ பிழைச்சு உங்க முன்னாடி நிக்கிறேன்’ என்றார்.

‘பயப்படாதீங்க. இனிமே ஒண்ணும் ஆகாது’ என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.

இப்படி வேறு சில காரணங்களாலும் முதுமைப் பருவத்துக்கான அறிகுறிகள் வரலாம். ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை இருந்தாலும், ரத்த அழுத்தம் இருந்தாலும் கை, கால்களில் நடுக்கம் ஏற்படலாம். உடல் முழுவதிலும் வலி ஏற்படலாம். மயக்கம் வருகிற மாதிரி இருக்கும். உட்கார்ந்துகொண்டே இருக்கலாமா என்று தோன்றும். இவற்றுடன் சேர்த்து உங்கள் வயதையும் கணக்கிட்டு முதுமைப் பருவத்துக்கான அறிகுறி என்று நினைத்துக் கொள்ளலாமே தவிர, இவைதான் முதுமைக்கான அறிகுறி என்று உறுதியாகச் சொல்ல முடியாது” என்றவர் அடுத்து மனநல பாதிப்பு குறித்து விரிவாகப் பேசினார்.

“பிறந்த நாளிலிருந்து வரும் நாள்கள் வயதை அதிகரித்துக்கொண்டே போனாலும் இது மனதுக்குத் தெரியாது. மனம் குரங்கு மாதிரி தாவிக்கொண்டே போகும். முதுமைத் தோற்றத்தில் உள்ள சிலரைப் பார்த்தால் தெரியும். காற்றிலே கோடு போடுவார்கள். விரல்களை வைத்துக் கணக்கு போடுவார்கள். கன்னத்தில் கைவைத்து மோட்டு வளையைப் பார்த்து தலையசைத்துக் கொண்டே இருப்பார்கள். பேச்சுத் துணை க்கு ஆள் இருந்தால் பழைய கதைகள் சொல்வார்கள்.

இதையும் மனது வைத்தால் சரி செய்ய முடியும். முதலில் அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். உங்களுக்கான ரிடையர்ட் மென்ட் காலத்துக்கு ஓர் அட்டவணையைத் தயார் செய்து கொள்ளலாம்.

முதுமைக்கு மரியாதை! - 2 - தோள் கொடுப்போம்...  துணை நிற்போம்!

உதாரணத்துக்கு நீங்கள் ஐம்பது வயதைத் தாண்டுகிறவர் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அலுவலகத்தில் இன்னும் பத்து வருடங்களில் ஓய்வுக்காலம் என்று வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த நேரத்தில் என்னென்ன செய்யலாம் என்று நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

ஊரில் சொந்தமாக நிலங்கள் இருந்தால் மற்றவர்களின் துணையுடன் பராமரிப்பது. வீட்டைச் சுற்றித் தோட்டம் அமைப்பது. சந்திக்க வேண்டும் என்று நினைத்தவர் களைச் சந்திப்பது, போக வேண்டும் என்று நினைத்த ஊர்களுக்குச் சென்று வருவது. புத்தகங்கள் படிப்பது, சினிமா பார்ப்பது, இசையை ரசிப்பது, உறவுகளுடன் வசிப்பவர்கள் பேரக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியில் செல்வது என்று பல விஷயங்கள் இருக்கின்றன.

இப்படி மனதை ஓர் ஆரோக்கியமான நிலையில் வைத்துக்கொள்ள உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளலாம். அதற்குப் பிராணாயாமமும் உதவும். பிராணாயாமம் மூலம் ஐம்புலன்களை அடக்கும் வலிமை பெறலாம், ஆயுளையும் கூட்டலாம், வயதின் பாதிப்புகளைக் குறைத்து இளமையுடன் இருக்கலாம். ஆனால், இவற்றை முறை தெரியாமலோ, புத்தகத்தில் பார்த்துப் படித்தோ செய்யக் கூடாது. தகுதியானவர்களிடம் முறையாகப் பயிற்சி பெற்றுச் செய்வது நல்லது.

அடுத்து தியானம். வயது அதிகமாக அதிகமாக மனம் எதையெல்லாமோ சிந்தித்துக்கொண்டே இருக்கும். சிதறி ஓடும் எண்ணங்களை ஒருநிலைப்படுத்த தியானம் உதவும். மனம் அமைதி அடையும். தெளிவான சிந்தனை கிடைக்கும். மனதை ஒருநிலைப் படுத்தி, நாம் நினைத்த தைச் சாதிக்கக்கூடிய தெளிவு பிறக்கும். மனோபலம், சகிப்புத் தன்மை, எதையும் எதிர்நோக்கும் பாங்கும் கிடைக்கும்” என்று விளக்கியவர், அடுத்து தன்னை சந்திக்க வந்த பெண் பற்றி சொன்னார்.

“அந்தம்மா அப்பப்ப என்னைப் பார்க்க வருவாங்க. ஆலோசனை கேட்பாங்க. எந்த விஷயத்தைச் சொன்னாலும் திருப்திப்பட மாட்டாங்க. ‘எல்லாம் சரி டாக்டர். நீங்க சொல்றதையெல்லாம் செய்யுறேன். ஆனாலும் மனசு ரொம்ப வெறுமையா யிருக்கு’ம்பாங்க.

ஒருநாள், ‘உங்களால எதையும் செய்ய முடியும்னு நினைச்சுக்கோங்க. மத்த வங்களுக்கு உதவணும்னு முடிவெடுங்க. பெரிசா இல்லாட்டாலும் உங்களால என்ன செய்ய முடியுமோ... அதைச் செய்யுங்க. ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம். கடைசி காலத்துல இருக்கறோம்னு நினைக்காதீங்க. உங்களைப் பத்தியே நினைச்சுட்டு இருந்தா இளமை திரும்ப வந்துடாது.

யார் உங்ககிட்ட பேச வந்தாலும் உங்க பிரச்னையைப் பத்தியே சொல்லாதீங்க. அவங்களுக்கு என்ன பிரச்னைன்னு விசாரிங்க. அந்தப் பிரச்னைக்கு உங்க அனுபவத்துல சில தீர்வுகள் சொல்லலாம். உங்களால முடிஞ்சா உதவலாம்.

பிரச்னை என்பது இரு கோடுகள் மாதிரி... அவங்க பிரச்னை பெரிசா இருக்கும் போது, உங்க பிரச்னை சின்னதா தெரியும்’ என்று அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு அந்தம்மா என்னைப் பார்க்க வரவே இல்லை.

பல நாள்கள் கழித்து வெளியிடத்தில் அவரைப் பார்த்த போது முகத்தில் மகிழ்ச்சியும், நல்ல முதிர்ச்சியும் நிறைந் திருந்தது” என்றவர்,

அடுத்ததாக, “இயல்பான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அவர்களுக்கு மனோ தைரியம் இருந்தாலும் முதுமைப் பருவத்தை எட்டும்போது உடல்ரீதியாக சில பிரச்னைகளும் சங்கடங்களும் வரவே செய்யும். அந்த நேரத்தில் அவர்களுக்கு பெரும் துணையாக இருப்பது சுற்றி யிருப்பவர்களின் அன்பும் அரவணைப்பும் ஆதரவும்தான்” என்றார்.

- துணை நிற்போம்...

******

ஜப்பானியர்கள் அதிக நாள்கள் வாழும் காரணம்...

உலகின் மிக வயதான குடிமக்களைக் கொண்டுள்ள நாடாக ஜப்பான் உள்ளது. அதன் மக்கள்தொகையில் 27 சதவிகிதத்தினர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 2014ஆம் ஆண்டில் 25.8 சதவிகிதமாக இருந்தது, இது ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் ஜப்பானிய மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் (32.2%) மூத்த குடிமக்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானியர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் ஊரில் இருந்து கிடைக்கும் புதிய உணவையே சாப்பிடுகிறார்கள். தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட காய்கறிகளாக இருந்தாலும் சரி அல்லது மீன்களாக இருந்தாலும் சரி... சமைக்கப்பட்ட உடனே அந்த உணவு அவர்களின் மேசைக்கு வந்து விடும். அத்துடன் மிதமான தீயில்தான் உணவைச் சமைக்கிறார்கள். இதனால் உணவுப் பொருள்களில் உள்ள ஊட்டச் சத்துகளின் அளவு குறையாமல் அப்படியே கிடைக்கின்றன. மேலும் ஜப்பானியர்கள் உணவை மெதுவாகவும், அளவாகவும் சாப்பிடு கிறார்கள். இதனால் செரிமான மண்டலம் சீராக வும், ஆரோக்கியமாகவும் செயல்பட்டு உடலும் உறுதியாக இருக்க உதவுகிறது. நீண்ட நாள்கள் வாழ முடிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism