முதுமைக்கு மரியாதை 20 - “மனசுக்குள்ளே பயமில்லை... அதனால, வயசாகிடுச்சேங்கிற பேச்சுக்கே இடமில்லை!”

- ஓவியர் `ஜெ...’ தம்பதி
ஓவியர் ஜெ... தமிழ்ப் பத்திரிகையுலகில் தவிர்க்க முடியாத பெயர். பிறந்தது தூத்துக்குடியில். படித்தது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம். படிப்பை முடித்துவிட்டு சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதியவர், வேலைக்குச் செல்ல விரும்பாமல் ஓவியங்கள் வரையத் தொடங்கினார். அன்று தொடங்கி கடந்த 64 ஆண்டுகளில் இவர் கைவண்ணத்தில் மிளிர்ந்த ஓவியங்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கானவை. இந்தப் பணி இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஓவியத்துறையில் நவீன தொழில் நுட்பங்கள் பல கிளைவிட்டு பரவியிருந் தாலும் இப்போதும் தூரிகையால் மட்டுமே வரைந்துகொண்டிருக்கும் ஓவியர் ஜெயராஜுக்கு உறுதுணை துணைவியார் ரெஜினா.

சென்னை சூளைமேட்டில் வசிக்கும் ஜெயராஜ் தம்பதியைச் சந்திக்கச் சென்றபோது அவர்களின் மகள் ஹில்டா வரவேற்றார். ``அப்பாவும் அம்மாவும் ஷாப்பிங் போயிருக்காங்க. இப்போ வந்திடுவாங்க” என்றவர் தொடர்ந்து, ``அம்மாவுக்கு 80-வது ஆண்டை கொண்டாட நான் ஆஸ்தி ரேலியாவுலேர்ந்து வந்திருக்கேன். தம்பி டிஸ்னி அமெரிக்காவுலேர்ந்து வந்து கிட்டிருக்கார்” என்றார்.
``அம்மாவுக்கு எண்பதா... அப்ப அப்பாவுக்கு?” என்றோம்.
``எண்பத்து நாலு’’ என்றவர் அடுத்து, ``அவர் கிட்ட வயசை மட்டும் கேட்டுடாதீங்க... கோபம் வந்துடும். இப்பக்கூட இந்தக் கொண்டாட்டமெல்லாம் எதுக்குன்னு கேட்கறார்” - நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோதே வீட்டுக்குள் நுழைந்தார்கள் ஜெயராஜ் தம்பதியர்.

``நீங்க பேசிக்கிட்டு இருந் ததையெல்லாம் கேட்டுட்டுத் தான் வர்றேன். வயசைப் பத்தி நாங்க நினைக்கறதே இல்லே. `உங்களுக்கு `84 வயசாமே... பார்த்தா தெரியலையே’-னு யாராவது கேட்டா, `இருக்கட்டுமே’ன்னு மட்டும் பதில் சொல்வேன். அதே நேரம் யார் கிட்டயும் `உங்களுக்கு என்ன வயசு’-ன்னு கேட்கவும் மாட்டேன். இப்போகூட என் பசங்க சொல்லித்தான் எங்க வயசே தெரியுது. அதுவுமில்லாம வரையத் தொடங்கிய சில ஆண்டுகள் லேயே வயசானவங்களோடு சேர்ந்து அவங்களோட எண்ண ஓட்டங்களுக்குத் தகுந்த வேலைகளையெல்லாம் செய்து முடிச்சுட்டேன். அத னால இந்தப் பருவம், எனக்கு சுமையா தெரியலை. சுகமாத் தான் இருக்கு” என்ற ஓவியர் ஜெயராஜைத் தொடர்ந்தார் அவர் மனைவி ரெஜினா.

``இப்பக்கூட பசங்களுக்காக ஷாப்பிங் போகலாம்னு நினைச்சோம். கிளம்பிட் டோம். இவர் வரையற ஓவியம் மாதிரி மனசு இளமையா இருந்துட்டா போதும். மற்ற படி உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை எங்களைப் பொறுத்தவரை பெரிசா கடைப்பிடிக்கறதில்ல. ஆசைப்பட்டதை கொஞ்சமா செய்து சாப்பிடுவோம். எல்லா டாக்டர்களும் சொல்ற வாக்கிங் விஷயத்தை மட்டும் நாங்க ஃபாலோ பண்றோம். அவ்வளவுதான்” என்றார்.
``கொரோனா காலத்துல எங்களால வெளியே போக முடியலைன்னாலும் எங்களுக்கான தேவைகளை நாங்களே நிறைவேத்திக் கிட்டோம். லாக்டௌன் நேரம் சண்டை போடறதுக்கும் உடனே சந்தோஷமா பேசற துக்கும் உதவியா இருந்தது. எல்லாரும் பயந்து வீட்டுக் குள்ளே அடைபட்டு இருந்த நேரத்துல, வீடு தேடி வந்து வேலை பார்த்த துப்புரவு தொழிலாளிங்க, கூரியர் ஆள், போஸ்ட்மேன், இ.பி ஆட்கள் போன்றவங்களோட தேவையறிஞ்சு உதவிகள் செய்தோம்” என்று சொன்ன மனைவி ரெஜி னாவை இடைமறித்துப் பேசினார் ஜெயராஜ்,
``இதை ஏன் அவங்க சொல்றாங்கன்னா... வயசானவங்களைத்தான் கொரோனா தாக்கும்ங்கிற பயம் பரவியிருந்த நேரத்துல நாங்க செய்த உதவிகள் எங்க வயசைப் பத்தி நினைக்க வைக்கலை. குறிப்பா... இப்போ வரைக்கும் மனசுக்குள்ளே பயமில்லை என்பதால வயசா கிடுச்சேங்கிற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

அடுத்து பேசிய ரெஜினா, ``ஒரு வேலையைச் செய்து முடிக்கணும்னு நினைச்சா அதை உடனே செய்துடுவார். குறித்த நேரத்துல பத்திரிகைகளுக்கு படம் போட்டுக் கொடுத்துடுவார். இப்ப கிறிஸ்துமஸ் வரப் போகுது. ஒவ்வொரு கிறிஸ்து மஸுக்கும் இவர்தான் ஸ்டார்ஸ், கிறிஸ்துமஸ் ட்ரீ, கிஃப்ட் பாக்ஸ் எல்லாம் செய்வார். இந்த வருஷமும் செய்யத் தொடங்கிட்டார். வண்டி ஓடும் வரை ஓடட்டும்னு நினைக்க மாட்டார். வண்டியை ஓட்டிகிட்டே இருப்பார். இவரோட அப்பா, அம்மா எல்லாரும் நூறு வயசு வரை நிறைவா வாழ்ந்தவங்க. எந்த ஒரு விசேஷத்துக்குப் போகும்போதும் எங்களுக்கு பத்து வயசு குறைஞ்சுடும். அங்கே மத்தவங்க எங்ககிட்ட பேசற விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்போம். அவங்க உணர்வுகளைப் புரிஞ்சுப்போம்” என்ற வரைத் தொடர்ந்தார் ஜெயராஜ்...
``பெரியவங்ககிட்ட மட்டுமல்ல... குழந்தைகள் விளையாட்டா சொல்ற விஷயங்களுக்கும் மதிப்பளிப்போம். எங்க பிள்ளைகளையும் நண்பர்களாகத் தான் வளர்த்தோம். இப்படி வயசு வித்தியாசமில்லாம எல்லார்கிட்டயும் பழகுறதால எங்க வயசைப் பத்தி கவலைப்படறதில்லை. ரெஜினா விசேஷங்களைப் பத்திச் சொன்னதாலே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்பறேன். ஒரு கப் பாயசத்தை பாதி அளவுல கொடுத்தாகூட மகிழ்ச்சியா ஏத்துப் போம். பக்கத்து இலையிலே முழு கப் பாயசம் இருக்கு. எனக்கு ஏன் பாதி கப் கொடுத்தேன்னு கேட்க மாட்டோம். குறைவாக கொடுத்தாலும் போதும். நிறைவா ஏத்துப்போம்.

குறிப்பா, நான்தான் பெரியவன்... எனக்கு எல்லாமே தெரியும்ங்கிற பந்தாவோட எல்லா விஷயத்துலேயும் மூக்கை நுழைக்கக் கூடாது. எல்லாருக்குமே எந்த வயசுலேயும் அனுசரணையும் அன்பும்தான் வாழ்க்கைக்கு அவசியம். அது இருந்தா போதும். வாழ்க்கை அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கும்” என்று சொன்ன ஓவியர் ஜெயராஜின் பேச்சு, அவருடைய ஓவியங் களைப் போல இளமையுடன் இருக்கிறது.
- துணை நிற்போம்...
ஆங்கிலம்... எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்!- 4 - பி.எஸ்.ராமமூர்த்தி
விமானத்தில் உங்களுக்காக அனுமதிக்கப்பட்ட பையுடன், உங்கள் இருக்கைக்கான பதிவு சீட்டுடன் தனியாளாக விமானத்தின் படிக்கட்டு களில் கால் வைக்கும்போது - முதன்முறை என்றால் கொஞ்சம் படபடப்பும் பெருமிதமும் இருக்கத்தான் செய்யும். உங்களின் படபடப்பைக் குறைக்கும்விதத்தில் விமானத்தின் நுழை வாயிலில் நிற்கும் பணிப்பெண் ஒரு மென் சிரிப்பைத் தவழவிட்டு `வெல்கம்’ என்று வரவேற்பார்.

அதற்கு, உங்களுக்கு ஏற்கெனவே தெரிந் திருக்கும் Thanks, Thanks a lot, Thank you very much என்கிற வார்த்தைகளில் ஒன்றை நன்றி சொல்லும்விதமாகக் கூறலாம். இந்த வார்த்தை உங்களுக்கு ஆங்கிலம் பேசுகிறோம் என்கிற தன்னம்பிக்கையைத் தரும். மேலும், உங்களின் இருக்கை எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிந்துகொள்ள, உங்கள் கையில் இருக்கும் இருக்கைக்கான பதிவுச் சீட்டைக் காண்பித்து, My seat number is 15 (மை சீட் நம்பர் இஸ் 15) அல்லது Please help (ப்ளீஸ் ஹெல்ப்) அல்லது Please guide me (ப்ளீஸ் கைடு மீ) - என் இருக்கை எண் 15... தயவுசெய்து உதவுங்கள் என்று கேட்கலாம்.
உங்கள் கோரிக்கைக்கு பதில் அளிக்கும்விதமாக அவர்... Seat No 15 is adjacent to the corridor (சீட் நம்பர் 15 இஸ் அட்ஜசென்ட் டு தி காரிடார்) என்பார். Corridor (காரிடார்) என்றால் இடைவழி - நடுவில் இருக்கும் நீண்ட வழிப்பாதை என்று அர்த்தம். Adjacent to the Corridor (அட்ஜசென்ட் டு தி காரிடார்) என்றால் இடைவழியில் ஒட்டியிருக்கும் இருக்கை என்பதாக அர்த்தம். இந்த இருக் கையை Aisle seat (எய்ல் சீட் - இந்தச் சொல்லில் உள்ள `s’ is silent - `எஸ்’ உச்சரிக்கக் கூடாது) - வழியோரத்து இருக்கை என்றும் கூறுவர்.
அடுத்து, உங்கள் இருக்கை, நடுவில் இருக்கும் இருக்கையாக இருந்தால் Seat No 15 is middle seat (சீட் நம்பர் 15 இஸ் மிடில் சீட்) - என்று குறிப்பிட்டுச் சொல்வார். ஜன்னலோர இருக்கையாக இருந்தால் Seat No 15 is window seat (சீட் நம்பர் 15 இஸ் விண்டோ சீட்) என்று பதிலளிப்பார். ஹாயாக உங்களுக்கான இருக்கைக் குச் சென்று அமரலாம்.
நம் பயணத்தை மேலும் இனிதாக்கிக்கொள்ள பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவரிடம் ஒரு மெல்லிய புன்னகையுடன் Hope you are comfortable (ஹோப் யூ ஆர் கம்ஃபர்டபுள்) - ‘நீங்கள் செளகர்யமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்’ என்று சொல்லலாம். Yes. Thanks. How about you (யெஸ். தேங்க்ஸ்.. ஹேள அபவுட் யூ) ‘ஆம்... நன்றி... நீங்கள் எவ்வாறு இருக் கிறீர்கள்’ என்று அவர் கேட்கும்போது... Yes. I am also comfortable. Thanks - (யெஸ். ஐ ஆம் ஆல்ஸோ கம்ஃபர்டபுள். தேங்க்ஸ்) - ‘ஆம் நானும் செளகர்யமாக அமர்ந்துள்ளேன்’ என்று பதில் அளித்து ஒரு பயண நட்பை வளர்த்துக்கொள்ளலாம்.
ULTIMATE (அல்டிமேட்)
இந்தச் சொல் ஆங்கிலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் இந்தச் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.
1) Final - இறுதி, Last - கடைசி - உதாரணத் துக்கு... Ultimate round என்றால் இறுதிச் சுற்று. Ultimate chance என்றால் கடைசி வாய்ப்பு.
2) Super - ஒப்பற்ற, Best - உயர்வான - உதா ரணத்துக்கு... UItimate acting - ஒப்பற்ற நடிப்பு, Ultimate scene - உயர்வான காட்சி.
- தொடர்ந்து பேசுவோம்...