ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை 21 - முதியோரைத் தாக்கும் குளிர்காலம்... பாதுகாப்பாக இருப்பது எப்படி?

குளிர்காலம்
பிரீமியம் ஸ்டோரி
News
குளிர்காலம்

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

ஆதித்யன் குகன்
ஆதித்யன் குகன்

``குளிர்காலம் தொடங்கிவிட்டது. சில்லிடும் ஈரக்காற்றால் அனைத்து இடங்களும் ஒருவித ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த இதமான தட்ப வெப்பநிலை கிருமிகள் செழித்து வளர உதவும். விளைவு, சாதாரண ஜலதோஷம், தும்மலில் தொடங்கி, காய்ச்சல், சுவாசப் பிரச்னை என ஆரோக்கியம் கெடுவதுடன், பலரை ஒரேயடியாக முடக்கிப்போட்டுவிடும். குறிப்பாக, குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது முதியோர்கள்தான். ஆனால், சிறிது கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தக் குளிர்காலத்தையும் கொண்டாடலாம்” என்கிறார், கோவையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஆதித்யன் குகன்.

``உலக அளவில் வெப்பமயமாதல் அதிகரித்துவரும் நிலையில், மாறிவரும் பருவச் சூழ்நிலையில் முன்பைவிட குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதிலிருந்து முதியோர் தங்களைத் தற் காத்துக் கொள்ள இருப்பிடம், உண்ணும் உணவு, உடுத்தும் உடைகளை முறையாகப் பராமரித்தாலே போதும்” என்றவர், குளிர்காலத்தில் முதியோருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளையும் அவற்றிலிருந்து சுலபமாக விடுபடுவதற்கான வழிமுறை களையும் விவரித்தார்...

``குளிர்காலத்தில் முதியோர்களுக்கு வரும் இருமல், சளித் தொல்லைகளில் நிமோனியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒருவகை வைரஸ் தொற்று. ஈரப்பதம் காரணமாக இந்த வைரஸ் அவர்களை எளிதாகத் தாக்கும். குளிர்காலத்தில் அவர்கள் குறைவான உணவை எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறை வாக இருக்கும். நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்றும் சக்தியும் குறையும்.

அடுத்து குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக அருந்துவதால் சிறுநீரக பாதிப்பும் ஏற்படலாம். மேலும், நீரிழிவு நோயுள்ளவர்களும், பிற நோய்களுக்காக மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடியவர்களாகவும் முதியோர் இருப்பதால், இதுதான் காரணம் என்று இல்லாமல் ஏதோ ஒரு காரணத்தால் குளிர்காலத்தில் பாதிப்பு அதிகமாகும்.

முதுமைக்கு மரியாதை 21 - முதியோரைத் தாக்கும் குளிர்காலம்... பாதுகாப்பாக இருப்பது எப்படி?

குளிர்காலத்தில் சருமம் சுருக்கமாகி, வறண்டு போகும். உதடுகள், பாதங்களில் வெடிப்பு ஏற்படும். உடனடி நிவாரணத் துக்காக அவர்களை அறியாமல் அந்த நேரத்தில் சொறிந்து விட்டால் ரத்தம் கசிந்து, புண்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்தப் புண் குணமாகப் பல நாள்களாகும். குறிப்பாக, மழை மற்றும் குளிர்காலத்தில் சுற்றுப்புறம் மட்டுமல்லாமல் வசிக்கும் இடமும் தரையும் ஈரப்பதத்துடன் இருப்ப தால் இடறி விழுவதற்கும் வாய்ப்புண்டு” என்றவர் இந்த பாதிப்புகளைத் தவிர்ப்பது குறித்து விளக்கினார்.

``சுமார் 50 வயதைக் கடந்தவர்கள் ஒரு முறை நிமோனியா தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் போதும். சிலருக்கு மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் இரண்டாவது ஊசியை போட்டுக் கொள்ளலாம். இந்தத் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏதும் இருக்காது. இது சளி, காய்ச்சல் வராமல் தடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இந்த நோய் வராமல் தடுக்கும்.

முதியோர் குளிர்காலத்தில் எளிதில் செரிமானமாகும் சூடான கிச்சடி, பொங்கல் போன்றவற்றை காலை உண வாக எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் சேர்க்கப்படும் பருப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகு என எல்லாப் பொருள்களுமே இந்தத் தருணத் தில் உடலுக்கு நன்மை பயக்கும். சாதாரணமாக நாம் குடிக்கும் சுக்கு மல்லி காபி இந்தக் காலத்துக்கு மிகச் சிறந்த பானம். சுக்கு மல்லியுடன் இரண்டு மிளகையும் பொடித்துச் சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது. சளி முதல் சகலத்தையும் விரட்டிவிடும்.

குளிர்காலத்தில் பால் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. அப்படிக் குடித்தாலும், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்துக் குடிக்கலாம். இதனால் கபத்தின் குணம் குறையும். அரிசி, கோதுமைக்குப் பதிலாக, கம்பு, ராகி போன்ற சிறுதானியங் களில் கஞ்சி தயாரித்துச் சாப்பிடலாம். முளைகட்டிய பயறு சுண்டலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குளிர் காலத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆரஞ்சுப் பழத் துக்கு இதுதான் சீஸன். ஆனால், சளி, ஜல தோஷம் இருப்பவர்கள், ஆரஞ்சை தவிர்த்துவிட்டு, நெல்லிக்காய் சாப்பிட லாம்.

நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீரை சூடாக்கி, கண்கள்படும் இடத்தில் வைத்துக்கொண்டு பார்க்கும்போதெல்லாம் அருந்தலாம். மூச்சுத் திணறல் இருப்பவர்கள் தினமும் காலையும் மாலையும் ஆவி பிடிக்க லாம். தலைக்கு தேங்காய் எண்ணெய் வைக்கலாம். குளிப்பதற்கு முன்னர், தேங்காய் எண்ணெய் வைத்துக்கொண்டு குளிக்கலாம். இதனால் தலையில் உள்ள சருமம் வறண்டு முடி உதிர்வது தடுக்கப் படும். சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய்யை எடுத்து விரல்களால் சருமத்தில் அழுத்தித் தடவிக்கொள்ளலாம்.

வீட்டுக்குள்ளேயும் வெளியிலும் காலணி அணிந்து நடப்பது நல்லது. அத்துடன் ஒரே அறையில் அடைந்து கிடக்காமல் காற்றோட்டமான இடத்தில் அமரலாம். படுக்கையறை ஜன்னல்களை காலை வேளையில் திறந்து வைக்கலாம். தினமும் பயன்படுத்தும் போர்வை, படுக்கை விரிப்புகளை வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது சிறந்தது. முக்கியமாக பாத்ரூமை உலர்வாக வைத்துக் கொள்வதும் கழிப்பறையைப் பயன்படுத்தும்போது வழுக்கி விழாமல் இருக்க, கைப்பிடிகளை அமைத்துக் கொள்வது நல்லது. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும் அறையின் கதவு, ஜன்னல்களுக்குக் கொசு வலையைப் பயன்படுத்துவதும் அவசியம்.

முன்னெச்சரிக்கையாகக் குளிர் காலத்தில் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய மருத்துவப் பரிசோதனைகளை, மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்படி அவசியம் கடைப் பிடிக்க வேண்டும்” என்று சொன்னவர், குளிர்காலத்தில் செய்ய வேண்டிய எளிய உடற்பயிற்சிகளையும் விவரித்தார்...

``சிலருக்கு தினமும் வாக்கிங் செல்வது வழக்கமாகி இருக்கும். அவர்கள் குளிர்காலத்தில் அதிகாலை வேளையில் வாக்கிங் செல்வதைத் தவிர்க்கலாம். அப்படிச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள்... ஷூ - சாக்ஸ், கைகளில் உறைகள், ஸ்வெட்டர், காதில் பஞ்சு வைத்துக்கொண்டு நடைப் பயிற்சிக்குச் செல்லலாம்.

முடியாதவர்கள் மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம், தோப்புக்கரணம் போடலாம், நின்ற இடத்தில் ஜாகிங் செய்யலாம். ஒன்றுமே செய்ய இயலாதவர்கள் காலை 6 முதல் 7.30 மணி வரையிலும், மாலை நேரத்தில் 4 முதல் 5.30 மணி வரையிலும் காலாற நடந்து வரலாம்” என்றவர் முடிவாக...

``குளிர்காலத்தில் சில பாதிப்புகள் வருவது சகஜம்தான் என்று இருந்துவிடக் கூடாது. பாதிப்பின் தீவிரம் அதிகமாகும் போது மருத்துவ ஆலோசனை அவசியம். நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று நாள்களைக் கடத்தக் கூடாது.

இப்போதெல்லாம் மருத்துவர்கள் ஆன் லைனிலேயே ஆலோசனை வழங்கு கிறார்கள். அவர்களிடம் தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் பெறலாம். முக்கியமாக, சாதாரண விஷயத்துக்கெல்லாம் மருத்துவரைப் பார்க்க வேண்டுமா என்ற நினைப்பில் சுய மருத்துவம் வேண்டவே வேண்டாம்” என்று முடித்தார்.

- துணை நிற்போம்...

ஆங்கிலம்... எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்! - 5 - எஸ்.ராமமூர்த்தி

பொதுவாக நாம் அதிகம் புழங்கும், அவசியம் பேச வேண்டிய இடத்தில், மொழி தெரியாத ஊரில் ஆங்கிலத்தில் எப்படி உரையாடலாம் என்பதை இந்த இதழில் பார்ப்போம்...

ஒரு ஹெல்த் கிளினிக்கில், ``டாக்டர் இரண்டு நாள்களாக எனக்கு உடம்பு சரியில்லை. தாங்க முடியாத தலைவலி, உடம்புவலி மற்றும் காய்ச்சல்” என்று மருத்துவரிடம் சொல்லும்போது, I am not well for the past two days. I have severe headache, bodyache and fever என்று எளிய சொற்களில் டாக்டருக்கு விளக்கலாம்.

மருத்துவர் பரிசோதனைக்குப் பிறகு, “கவலைப்பட வேண்டாம். நான் மருந்துச் சீட்டு கொடுத்துள்ளேன். மூன்று நாள்களுக்குச் சாப்பிடுங்கள். நீங்கள் குணமடைந்து விடுவீர்கள்” என்பதை ஆங்கிலத்தில் Don’t worry. I have prescribed medicines for three days. You will become alright என்று பதிலளிக்கும்போது, “நன்றி டாக்டர்” என்பதை Thank you doctor என்று கூறலாம்.

 பி.எஸ்.ராமமூர்த்தி
பி.எஸ்.ராமமூர்த்தி

அடுத்து வெளியிடங்களில் உங்கள் வயதை யொத்த மூத்த வயதினரைச் சந்திக்கும்போது, “நீங்கள் எவ்வாறு உங்கள் நேரத்தைக் கழிக் கிறீர்கள்?” என்பதை ஆங்கிலத்தில் How do you spend your day? என்று கேட்கலாம். பதிலுக்கு ஆங்கிலத்தில் அவர், I spend most of my time at home. Of course, I go out for walking in the evening என்று பதிலளிக்கும்போது ‘பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பேன். எனினும் இயல்பாக மாலையில் நடப்பதற்காக வெளியில் செல்வேன்’ என்று சொன்னதை தமிழில் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.

அதற்கடுத்து. “உங்களுடைய நாள்தோறும் செய்யக்கூடிய பழக்கவழக்கங்கள் என்ன?” என்று நீங்கள் ஆங்கிலத்தில் பேச நினைப்பதை, What are your daily routines? என்று கேட்கலாம். Walking, reading books and watching TV are my daily routines என்று அவர் பதில் அளிப்பதை “வாக்கிங் போவது, புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது எனது அன்றாட பழக்கவழக்கங்கள்” என்று தமிழில் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

உங்களுடைய பொழுதுபோக்குகள் என்ன? - What are your hobbies?

பேப்பர் மற்றும் புத்தகம் படிப்பது, பேரன்களோடு நேரத்தைச் செல விடுவது, அவர்களுக்கு கதை சொல்வது போன்றவை என் பொழுது போக்குகள்... Reading newspapers and books, spending time with grand children and telling them stories are my hobbies.

மேற்படி ஆங்கிலச் சொற்கள், வார்த்தைகள் எல்லாமே எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பேசக்கூடிய சொற்றொடர்கள்தான். இவற்றை அவ்வப்போது தேவையான இடங்களில் பயன்படுத்தும்போது ஆங்கிலம் எளிதில் வசப்படும்.

- தொடர்ந்து பேசலாம்...