மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை - 22 - “மனசை பதினாறா வெச்சுக்க... உடம்பை மனசுக்கேத்த மாதிரி மாத்திக்க!”

நடிகை சச்சு
பிரீமியம் ஸ்டோரி
News
நடிகை சச்சு

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - நடிகை சச்சு

1948-ம் ஆண்டு பிறந்த நடிகை சச்சு, நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 500-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும், பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், சில பல விளம்பரப் படங்களிலும் நடித்தவர். திரைத்துறையில் 70 ஆண்டுகளைக் கடந்தவர். சமீபத்தில் இவர் நடித்த படம், `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.’

அடுத்து ஒரு படத்தில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தையில் இருக்கும் சச்சுவை முதுமைக்கு மரியாதை தொடருக்காகச் சந்தித்தோம். ``எதுக்காக இந்தத் தொடரில என்னை பேசச் சொல்றீங்கன்னு தெரியல. எனக்கு வயசே ஆகலைங்க. முதுமைக்கும் எனக்கும் சம்பந்தமே யில்லைங்க’’ என்று உற்சாக மாகப் பேசத் தொடங்கினார்...

“எப்படிம்மா இந்த வயசு லேயும் ஆக்டிவ்வா இருக் கீங்க’ன்றதுதான் நேர்ல என்னை பார்க்கிற எல்லாரும் கேட்கிற முதல் கேள்வி. அதுக்கு முக்கியமான காரணம்... எதிர்பார்ப் பில்லாத வாழ்க்கை. மனசுல எந்த அழுத்தத்தையும் ஏத்திக்க மாட்டேன். எல்லா வயசுலேயும் ஏதோ ஒரு விஷயத் துலே எல்லாருக்கும் அப்பப்ப மன அழுத்தம் வரத்தான் செய்யும். என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படி வரும்போது வேற விஷயங்கள்ல என் கவனத்தைச் செலுத்துவேன். எப்பவும் மனசை ஆக்டிவ்வா வெச்சுப்பேன்.

நடிகை சச்சு
நடிகை சச்சு

எங்கக் குடும்பம் ரொம்ப பெரிசு. என் அப்பா அட்வகேட். அம்மா ஹவுஸ் வொயிஃப். அப்பா குடும்பத்தாருக்கு சினிமான்னா பிடிக்காது. அம்மா குடும்பத் தாருக்குப் பிடிக்கும். நாலு வயசுல `ராணி’ படத்துல அறிமுகமாகிட்டேன். அடுத்து, குழந்தையை மையமா வெச்சு அண்ணா எழுதிய `சொர்க்க வாசல்’, ஜெமினியின் `ஔவையார்’, நாகேஸ்வர ராவ் நடிச்ச `தேவதாஸ்’, எஸ்.வி.ரங்காராவ் நடிச்ச `மாயா பஜார்’ போன்ற படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சுட்டு வந்தேன். ஆறு வயசுல என் அக்கா நடிகை மாடி லட்சுமியுடன் சேர்ந்து பரத நாட்டியம் கத்துக்கிட்டேன். தொடர்ந்து அக்காவோட சேர்ந்து நிறைய நாட்டிய நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டேன். 12, 13 வயசுல `கலையரசி’ படத்துல எம்.ஜி.ஆருக்கும் `கோடீஸ்வரன்’ படத்துல சிவாஜிக்கும் தங்கையா நடிச்சேன்.

இப்படி திரையுலகுல என் வயசுக்கேத்த கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிச்சிட்டிருந்தபோது, 15 வயசுல ஏவி.எம்மின் `வீரத் திருமகன்’ படத்துல கதாநாயகியா `ரோஜா மலரே ராஜ குமாரி’ன்னு பாடினேன். அந்தப் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டுச்சு. குடும்ப சூழ்நிலை காரணமா சினிமாவை விடவும் முடியலை. அப்ப தான் ஸ்ரீதர் சார் `காதலிக்க நேரமில்லை’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார்.

 முதல் படம் `ராணி'யில்...
முதல் படம் `ராணி'யில்...

நாகேஷ் சாருக்கு ஜோடியா அந்தப் படத்துல நடிச்சேன். என் வாழ்க்கையில மறக்க முடியாத படம் அது. அந்தப் படத்துக்குப் பிறகு, சின்னச் சின்ன காமெடி ரோல்ஸ் வந்தது. ஆனா, ஒப்புக் கலை. நல்ல கேரக்டருக்காக காத்திருந்தேன். கிடைக்கலை. ஒருகட்டத்துல நாடகத் துறையில என் கவனத்தைச் செலுத்தி னேன். ஏ.ஆர்.எஸ்ஸுடன் சேர்ந்து `மெழுகு பொம்மைகள்’ என்கிற நாடகத் துல நடிச்சேன். அந்த நாடகம்தான் பிறகு சிவாஜி சார் நடித்த `பைலட் பிரேம்நாத்’ என்கிற பெயர்ல படமாச்சு. அந்த நேரத்துல நாடகத்துறையில் எனக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைச்சது. ஆடியன்ஸும் `காமெடி வேண்டாம்... இப்படியே நடிக்கலாம்’ னு சொன்னாங்க. இப்படி இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து வந்ததுக்கு காரணம் என் குடும்பத்தாரோட சப்போர்ட்” என்று தன் வாழ்க்கைப் பயணத்தின் முன்கதைச் சுருக்கத்தைப் பகிர்ந்தவர், சற்று நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்...

`` `இன்னிக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். நாளைக்கு எதுவும் சம்பாதிக்க முடியாமலும் போகலாம். இப்போதைய தேவைக்கு எது அவசியமோ... அதுக்கு மட்டும் செலவு செய். மீதியை எடுத்து வை’ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க. அதை உணர்ந்து செலவு செய்தேன்.

இப்ப எனக்கு 74 வயசு. சீனியர் சிட்டிசனாயிட்டாலும் எனக்குத் தேவை யான எதையும் தவிர்க்கிறதில்லை. நல்லா டிரஸ் பண்ணிப்பேன். வெளியிடங் களுக்குப் போவேன். வீட்டை சுத்தமா வெச்சுப்பேன். ஒரு விஷயம் சலிப்பைத் தந்தா அடுத்த விஷயத்தைக் கவனிப்பேன். டிவி பார்ப்பேன். யூடியூப் பார்ப்பேன். முக்கியமா அன்னிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் தொடர்புல இருக்கிற என் சக நடிகைகளோட பேசுவேன். திடீர்னு ஒரு கெட் டுகெதருக்கு ஏற்பாடு செய்வேன். இப்படிப்பட்ட செயல்கள் என் வயசைப் பத்தி நினைக்க வைக்கிறதில்லை. நடிகர் நம்பியார் சாமி `மனசை என்னிக்கும் பதினாறா வெச்சுக்க. உடம்பை மனசுக் கேத்த மாதிரி மாத்திக்க’ன்னு அடிக்கடி சொல்வார். அதை இன்னிக்கும் கடைப் பிடிக்கிறேன்.

 `வீரத் திருமகன்' படத்தில்...
`வீரத் திருமகன்' படத்தில்...

எந்த வயசுலேயும் நமக்கான வாழ்க் கையை நாமே வாழலாம். காலையில எழுந்ததும் பூச்செடிகளுக்குத் தண்ணி ஊத்தறது. என் செல்லப் பிராணியோட விளையாடுறதுனு என்னால் முடிஞ்சதை யெல்லாம் செய்துடுவேன். ரசிக்க வேண்டிய விஷயங்களை ரசிப்பேன். பாராட்ட வேண்டிய விஷயங்களை மனம்திறந்து பாராட்டுவேன்” என்றவர் முத்தாய்ப்பாக சொன்னார்...

‘`இன்றைய சூழ்நிலையில பல பெற் றோர் தனிமையைத்தான் விரும்பறாங்க. உங்களுக்கு நேரமிருந்தா அவங்களைச் சந்தியுங்க. முடிஞ்சா அவங்களை வெளியே கூட்டிட்டுப் போய் சந்தோஷப் படுத்துங்க. அவங்களுக்கு மட்டுமல்ல... உங்களையும் இந்தச் சந்திப்புகள் சந்தோஷமாக்கும்” என்றார் நிறைவாக.

- துணை நிற்போம்...

ஆங்கிலம்... எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்! - 6 - பி.எஸ்.ராமமூர்த்தி

தமிழ்நாட்டில் முக்கியமான பல இடங்களில் இப்போது ஆங்கிலம் பேசுவது அவசியமாகி வருகிறது. குறிப்பாக வங்கிகளில்!

புதிதாக சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர் வங்கியின் கிளைக்குச் சென்று, “வணக்கம் சார். நான் சேமிப்புக் கணக்கு ஒன்றை தொடங்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு உதவ முடியுமா?” என்பதை `Good morning sir.

I want to open a Savings Bank account. Can you please help me?' என்று சின்ன சின்ன ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி வங்கி ஊழியரிடம் கேட்கலாம்.

அதற்கு அவர், “நிச்சயமாக. அது சம்பந்தப்பட்ட சில விதிமுறைகளை உங்களுக்கு விளக்குகிறேன்” என்பதை `Sure sir. Let me explain the formalities' என்று ஆங்கிலத்தில் பதிலளித்து சில படிவங்களைக் கொடுத்து, அவருக்குத் தேவையான உங்களுடைய சான்றிதழ் களைப் பெற்றுக்கொண்டு உங்கள் பெயருக்கான சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டதை உறுதி செய்வார். பிறகு நீங்கள், “எப்போது என் சேமிப்பு கணக்கு புத்தகம், காசோலை புத்தகம் கொடுப்பீர்கள்?” என்பதை, `When will you give me the pass book and cheque book?' என்று ஆங்கிலத்தில் கேட்கலாம்.

 பி.எஸ்.ராமமூர்த்தி
பி.எஸ்.ராமமூர்த்தி

அதற்கான நிலையை உங்களுக்குப் புரிய வைக்க, “உடனே கொடுத்து விடுவோம்” - `Right away or right now' அல்லது “பத்து நிமிடங்கள் காத்திருக்கவும். கொடுத்து விடுவோம். நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்” - `Please wait for ten minutes. I will hand over' அல்லது `You can collect them' என்று பதிலளிப்பார். அதற்கேற்ப உங்கள் அடுத்த செயலைத் தொடரலாம்.

சில நாள்களுக்குப் பிறகு உங்களுடைய பாஸ்புக்கில் குறிப்பீடுகள் பதிவு செய்யும் பொருட்டு செல்கிறீர்கள் என்றால் அப்போது எளிதான ஆங்கிலத்தில் நீங்கள் தைரியமாக உரையாடலாம்.

நீங்கள், “வணக்கம் சார். என்னுடைய பாஸ் புக்கை அப்டேட் செய்து கொடுக்க முடியுமா?” என்பதை ஆங்கிலத்தில் `Good morning sir. Can you kindly update my passbook?' என்று கேட்கலாம். அதற்கு வங்கி ஊழியர், “தாராள

மாக... கொடுங்கள். அப்டேட் பண்ணிக் கொடுக்கிறேன்” - `Yes please. I will update your passbook and return' என்று சொன்னதும், நீங்கள் `Thank you sir' என்று உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ள லாம்.

இங்கே ஒரு விஷயத்தை கவனத் தில் கொள்ளுங்கள். ஒரு வாக்கியத்தில் please, kindly இந்த இரண்டு சொற்களையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதும். உதாரணத்துக்கு... `Can you please kindly update my passbook?' என்பது தவறு. அதை `Can you please update my passbook?' அல்லது `Can you kindly update my passbook?' என்று சரியான முறையில் கேட்கலாம்.

- தொடர்ந்து பேசலாம்...