ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை -23 - தாத்தா - பாட்டி Vs பேரன் - பேத்திகள்... உறவு பலமானால் வாழ்நாள் வசந்தமாகும்!

ஜெகலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெகலட்சுமி

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

“முதியோர் இல்லத்தில் தங்குவேன்னு ஒருபோதும் நான் நினைச்சதில்லை. ஆனால், அந்தச் சூழ்நிலைக்கு வந்துட்டேன்” என்கிறார் முதியோர் இல்லத்தில் நாம் சந்தித்த சென்னையைச் சேர்ந்த ஜெகலட்சுமி.

வாழ்க்கைப் பயணத்தில் சில நிமிடங்களில் நாம் கோடீஸ்வரனாகவோ, பிச்சைக்காரனாகவோ மாறிவிடலாம். ஆனால், அந்தப் பயணம் ஓடிக் கொண்டேதான் இருக்கும். அப்படித்தான் முதுமைப் பருவமும்.

முதுமை என்கிறபோது முதுமை இல்லங்கள் பற்றிய சிந்தனையும் இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கடந்த பத்தாண்டுகளில், விரும்பியோ, விருப்பம் இல்லாமலோ முதியோர் இல்லங்களில் கடைசி காலத்தைக் கழிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

``சென்னை சைதாப்பேட்டையிலதான் பிறந்து வளர்ந்தேன். 30 வருஷங்களுக்கு முன்னால என் கணவர் இறந்துட்டார். எங்களுக்குக் குழந்தைங்க இல்ல. என் வயித்தைக் கழுவ எக்ஸ்போர்ட் கம்பெனியில 20 வருஷங்கள் வேலை பார்த்தேன். வயசான பிறகு வேலைக்குப் போக முடியலை. சொந்த வீடு வாங்க ஒருத்தர்கிட்ட கொடுத்த பணத்தை வாங்கிட்டு அவர் என்னை ஏமாத்திட்டார். இந்த நிலையிலே சைதாப்பேட்டை ஆத்துல விழுந்து செத்துடலாம்னு போனேன். யாரோ ஒரு புண்ணியவான் என்னைக் காப்பாத்தி கரை சேர்த்தார்.

இந்த விஷயம் தெரிஞ்சதும் என் நாத்தனார் பொண்ணு ஓடிவந்து என்னைக் கூட்டிக்கிட்டு போனாள். தன்னோடவே வச்சிக்கிறேன்னு அவள் சொன்னதால என் வீட்டுல இருந்த எல்லா பொருள்களையும் வந்த விலைக்கு வித்துட்டு அவள் வீட்டுக்குப் போனேன். அவள் வீட்டுல கொஞ்ச நாள்தான் வச்சிருந்தாள். அதுக்கு மேல எனக்கும் அங்கே இருக்கப் பிடிக்கலை. வேற எங்க போறதுன்னும் தெரியலை. அந்த நிலையிலேதான் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா இங்க வந்து சேர்ந்தேன்” என்று கூறும் ஜெகலட்சுமி, கடந்த நான்கு ஆண்டுகளாக `அருவி’ முதியோர் இல்லத்தில் இருக்கிறார். இவரைப் போன்றோர் ஒருபுறம் இருக்க... பண வசதி படைத்தோர் பலரின் முதுமைப் பருவமும் பணம் கொடுத்து தங்கும் பல முதியோர் இல்லங்களில் கழிகின்றன என்பதும் இன்னொரு பக்கம் தொடர்கதையாகிறது.

இந்த நிலையில் வறுமையால் வாடும் முதியோர்களின் நிலையை உணர்ந்து தகுதிசார் சமூகப் பணியாளர்கள் ரேச்சல் விக்டர், ஆஸ்பி ஜாஸ்சன் ஆகிய இருவரால் 1993-ம் ஆண்டு `அருவி’ என்கிற தொண்டு நிறுவனம் தொடங்கப் பட்டது. அதை இன்றுவரை சிறப்பாகச் செயல்படுத்திவரும் ஆஸ்பியிடம் முதியோர் நிலை குறித்துப் பேசினோம். “வீட்டில் சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோர்களை பாரமாக நினைத்து முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதற்காகவும் முதியோர் இல்லங்கள் பெருகக் கூடாது என்ற நோக்கிலும் 1970-களில் சமூக சேவகர் டாக்டர் கிருஷ்ணன் நாயர், பகல் பராமரிப்பு மையங்களாக `டே கேர்’ சென்டர்களை ஆரம்பித்தார்.

முதுமைக்கு மரியாதை -23 - தாத்தா - பாட்டி Vs பேரன் - பேத்திகள்... உறவு பலமானால் வாழ்நாள் வசந்தமாகும்!

இந்த சென்டர்கள் ஆரம்பிக்கப் பட்டதன் முக்கிய நோக்கமே வீட்டில் சரியான உணவில்லாமல் வாடும் முதியோர்களுக்கு சத்தான உணவளிப் பதும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை, ஆலோசனைகளை வழங்குவதாகவும் இருந்தது. மேலும் முதியோர்கள் ஒன்று சேரும்போது அவர்களுக்குள் பேசிக்கொள்வது அவர்களின் மனபாரத்தைக் குறைக்கும் என்பதற்காகவும் தொடங்கப்பட்டது. ஆனால், டே கேர் சென்டர்கள் பல இருந் தாலும் முதியோர் இல்லங்கள் தொடங்கப் படுவது தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது. இதற்கு முக்கிய காரணம், வீட்டில் உள்ள வயதானவர்கள் தங்களை விட்டு விலகினால் போதும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப் பிடத்தைத் தர மறுக்கிறார்கள்.

எங்கள் முதியோர் இல்லத்தில் ஒரு அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து சேர்த்தார் ஒருவர். அந்தப் பெண்ணிடம் முதியோர் இல்லத்தில் தங்க சம்மதம் பெற்றுக்கொண்டு எங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் அவரிடம் பெற்றுக் கொண்டு சேர்த்துக் கொண்டோம். சில மாதங்களுக்குப் பிறகு தான் தெரிந்தது, அந்தப் பெண்ணை இங்கு அழைத்து வந்து சேர்த்ததே அவர் மகன்தான் என்பது.

ஒருபக்கம் இப்படிப்பட்ட நிலை என்றால் இன்னொரு பக்கம் சில முதியோர், மகனுக்குத் திருமணம் செய்து வைத்த பிறகு, மருமகள் வந்த பிறகு அவர்களுடன் வாழ முடியாமல், தாங்கள் அநாதை என்று முதியோர் இல்லத்துக்கு வந்துவிடுகிறார்கள். சொந்த வீட்டில் வாழப் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி... பிச்சையெடுத்து, பிளாட் பாரத்தில் படுத்து, உடல் நலிவுற்று... பிறகு, கண்டெடுக்கப்பட்டு முதியோர் இல்லத்துக்கு வந்து சேருபவர்களும் உண்டு.

ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு பிரச்னைகள். இது வசதி படைத்தவர்களின் வாழ்க்கையிலும் நடக்கிறது. அது வேறு விதமாக இருக்கிறது. பணம் இருந்தும் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லங் களில் அநாதைகளாக வாழ்க்கையைக் கழிப்பவர்களின் கதை, தனிக்கதை” என்றவர், இதற்கான தீர்வு குறித்தும் பேசினார்...

``கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துவிட்ட நிலையில் பெற்றோருடன் வசிக்கும் நிலையில் உள்ளவர்கள் தங்கள் குழந்தை களை, தாத்தா - பாட்டியுடன் அவசியம் பேசச் சொல்ல வேண்டும். இது குழந்தைகளின் பாதுகாப்புக்கும் ஆரோக் கியமான வளர்ச்சிக்கும் உதவும். எல்லா தாத்தா - பாட்டிகளுக்கும் தன் மகன் - மகளை வளர்த்தபோது செலுத்திய அன்பையும் பாசத்தையும்விட பேரன் - பேத்திகளிடம் செலுத்தும் அன்பும் பாசமும் அதீதமாகவே இருக்கும்.

எனக்குத் தெரிந்து ஒரு பள்ளியில் பெற்றோர்களை வரவழைத்து `பேரன்ட்ஸ் டே’ கொண்டாடுவது போல `கிராண்ட் பேரன்ட்ஸ் டே’ என்கிற நாளையும் கொண்டாடுகிறார்கள். அந்த நாள், வயதானவர்களுக்கு ஓர் உத்வேகத்தையும் தாங்களும் சமூகத்தால் மதிக்கப்படுகிறோம் என்கிற அங்கீகாரத்தையும் தருகிறது. அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக் கிறது. அந்த ஒரு நாள் மட்டுமல்லாமல் வீட்டிலும் தாத்தா - பாட்டிகளின் பேரன் - பேத்திகளின் உறவு பலமானால் முதியோர்களின் மீதியுள்ள வாழ்நாள்கள் சிறப்பாக அமையும்.

அடுத்து, எங்கள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சிக்காக வரும் தகுதிசார் சமூகப்பணி மாணவர்கள், முதி யோர்களைச் சந்திக்கச் செல்லும் போது அவர்களிடம், `ஒவ்வொரு முதியோரின் தனித்திறனைக் கண்டறியுங்கள். பாரம்பர்யமான பல விஷயங்கள் நம் முதியோர் களிடம் புதைந்துவிடுகின்றன. அதை வெளிக்கொண்டு வாருங்கள்’ என்போம். அந்த வகையில் முதியோர்களிடம் கேட்டறியும் கை வைத்தியங்கள், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, மண் மணக்கும் சமையல் குறிப்புகளை நூலாக வெளியிடலாம். அது எல்லாருக்கும் பயன்படும்; முதியோர்களுக்கான அங்கீகாரமாகவும் இருக்கும்” என் றவர் தொடர்ந்து,

“இன்றைய சூழ்நிலையில் நாங் களே பல டே கேர் சென்டர்களை நடத்திக்கொண்டிருந்தாலும் அதையும் மீறி சில முதியோர் இல்லங்களை நிர்வகிப்பதை எங்களால் தவிர்க்க முடிவதில்லை. கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வரும் நிலையில், இன்றைய இளைஞர்கள் பலர் மனநல ஆலோசகர்களைத் தவிர்க்க... முதியோர்களிடம் தங்களுக்குத் தேவையான ஆலோ சனைகளை, அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதில் தவறே இல்லை. இது, `வாழ்க்கையே முடிந்து போய் விட்டது. நமக்கு என்று யாருமே இல்லை’ என்ற எண்ணத்தில் இருப் பவர்களின் சிந்தனையை மாற்றி, `உங்கள் மீது அக்கறை காட்ட நாங்கள் இருக்கிறோம்’ என்று புரியவைக்கும். இதுதான் முதி யோருக்கான மரியாதையாகவும் அவர்களுக்கான அங்கீகாரமாகவும் இருக்கும்” என்றார் நிறைவாக.

- துணை நிற்போம்...

முதுமைக்கு மரியாதை -23 - தாத்தா - பாட்டி Vs பேரன் - பேத்திகள்... உறவு பலமானால் வாழ்நாள் வசந்தமாகும்!

சட்டம் மட்டுமே உதவுமா?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 10.38 கோடி. இறப்பு விகிதம் குறைந்துவரும் தற்போதைய சூழ்நிலையில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை பல மடங்காக உயரும் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

சீனியர் சிட்டிசன்களின் வாழ்வை எளிதாக்க பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு வருகிறது. குறிப்பாக முதியோர்கள், வயதான பெற்றோர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும், அவர் களுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2007-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது `பெற்றோர் பராமரிப்பு மூத்த குடிமக்கள் நலச்சட்டம்.’

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற பொறுப்பு, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு உள்ளதென்றும், ஆதரவற்ற முதியோர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும், மாவட்டம்தோறும் முதியோர் பராமரிப்பு இல்லங் களை உருவாக்க வேண்டும், பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள் தரும் புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல விதிகள் உருவாக்கப்பட்டன.அதற்கான செயல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இந்தியாவில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக் கையைக் கணக்கிட்டு அதற்கேற்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

 பி.எஸ்.ராமமூர்த்தி
பி.எஸ்.ராமமூர்த்தி

ஆங்கிலம்... எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்! - 7 - பி.எஸ்.ராமமூர்த்தி

நமக்குத் தேவையான பொருள்களை ஒரே இடத்தில் வாங்கும் கடைகள் மட்டுமல்லாமல், சினிமா தியேட்டர், உணவகங்கள், விளையாட்டு மையங்கள் போன்றவற்றையும் அதே இடத்தில் கொண்ட மால்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வருகின்றன. தற்போது இவை குடும்பத்தினர் கொண்டாடும் பொழுது போக்கு மையங்களாகவும் உள்ளன. இப்படிப்பட்ட இடங்களில் நமக்குத் தேவையான விவரங்களைப் பெற சின்னச் சின்ன ஆங்கிலச் சொற்கள் உதவும்.

உதாரணத்துக்கு, மாலுக்குள் சென்றதும் உங்கள் வாகனத்தைப் பாதுகாப்பாக நிறுத்த, ‘தற்போது எந்த இடம் காலியாக உள்ளது?’ என்பதை நுழைவாயிலில் இருக்கும் பணியாளரிடம், ‘Where is parking slot available now?’ என்று கேட்கலாம். அவர், ‘ஃபேஸ்- 2-ல் இடம் உள்ளது சார். அங்கே வசதியாக நிறுத்திக்கொள்ளலாம்’ என்பதை, ‘Sir, Parking space is now available in phase 2. You may comfortably park your vehicle there’ என்று பதில் சொன்னதும், அடுத்த கேள்வியாக ‘பார்க்கிங் சார்ஜ் எவ்வளவு கட்ட வேண்டும்?’ என்பதை ‘How much is the parking charge?’ என்று ஆங்கிலத்தில் கேட்கலாம். அவர், ‘ஒரு மணி நேரம் அடிப்படையில் ஒவ்வொரு மணிக்கும் Rs.50/- கட்ட வேண்டும் சார்’ என்பதை ஆங்கிலத்தில் ‘It is on an hourly basis. Rs.50/- per hour is payable sir’ என்று கூறியதும் வசதியாக உங்களுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு வரலாம்.

மாலுக்குள் நுழைந்துவிட்டீர்கள்... உங்களுக்குத் தேவையான பொருள் ஷூ. அந்தக் கடை எங்குள்ளது என்று தெரியாத நிலையில் மாலில் ஆங்காங்கே Help desk அமைக்கப்பட்டு அங்கு உதவி செய்ய உள்ளவரிடம் ‘நான் எந்த இடத்தில் பிராண்டடு ஷூ பார்த்து வாங்க முடியும்?’ என்பதை ‘Where can I buy branded shoes?’ என்று நீங்கள் கேட்க... அவர், ‘Please go to ‘B’ Block in the third floor. Branded shoes will be available in plenty there’ என்று பதிலளிப்பதை, ‘நீங்கள் மூன்றாவது தளத்தில் ‘பி’ பிளாக் செல்லுங்கள். ஏராளமான பிராண்டடு ஷூக்கள் அங்கே இருக்கும்’ என்று புரிந்துகொண்டு உங்களுக்குத் தேவையான ஷூக்களை வாங்கலாம்.

இங்கு ‘ஷூ’ என்பது உதாரணத்துக் காகச் சொல்லப்பட்ட ஒன்றே. உங்களுக் குத் தேவையான பொருள்கள் துணிகள், அழகு சாதனங்கள், நகைகள் என்று எதுவாக இருக்கிறதோ அதற்கேற்ப, நீங்கள் கேட்கும் கேள்வியில் ‘ஷூ’ (Shoe) என்பதற்கு பதிலாக Clothes, Beauty products, Jewels என்று மாற்றிக்கொண்டு கேள்வி கேளுங்கள். நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பதில் கிடைக்கும்.

அடுத்து, ‘உணவு அருந்துமிடம் அதே தளத்தில் உள்ளதா?’ என்பதை - ‘Is the food court available on the same floor?’ என்று ஆங்கிலத்தில் கேட்க ‘Yes sir. Food court is also available on the same floor’ என்று பதிலளிப்பார். அதை ‘ஆமாம். அதே தளத்தில்தான் அதுவும் உள்ளது’ என்று புரிந்துகொண்டு மால்களில் வலம் வரலாம்.

- தொடர்ந்து பேசலாம்...

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

வெளிநாடுகளில் வாழ்ந்த அவள் விகடன் வாசகர்கள், அங்கு தங்கள் வேலை, தொழில், வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, அரசியல், ரிலேஷன்ஷிப் குறித்து எங்களுக்கு எழுதி அனுப்பலாம்; தேர்ந்தெடுக்கப்படுபவை இதழில் பிரசுரிக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். வாசகர்கள் அனுப்பியவற்றில் சங்கராபுரத்தைச் சேர்ந்த இல.தமிழ்க்குயில் எழுதிய இந்தப் பகிர்வு பரிசு ரூ.300 பெறுகிறது.

பண்பால் உயர்ந்த மக்கள்!

என் கணவர், 2003 முதல் 2005 வரை, மூன்றாண்டுகள் ஆப்பிரிக்காவில் உள்ள எரித்திரியா என்ற நாட்டில், அரசு அக்ரிகல்சுரல் பாலிடெக்னிக் ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் நானும் குழந்தை களும் அவருடன் அந்த நாட்டில் வசித்து வந்தோம்.

அந்த நாட்டு மக்கள் மிகவும் அன்பானவர்கள். எங்கள் வீட்டின் பக்கத்தில் இருந்த குடும்பத்தார் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் ‘காபி செரிமனி’ என வைப்பார்கள். எங்களையும் அழைப்பார்கள். அந்த நிகழ்ச்சியில், காபி கொட்டைகளை வறுத்து, சிறு உரலில் பொடி செய்து, காபி தயாரிப்பார்கள். அதன்பின் சிறு, சிறு கோப்பைகளில் அனைவருக்கும் காபி வழங்குவார்கள். இது ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என தொடரும். இந்த நேரத்தில் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

டெலிவிஷன் போன்றவை அந்த நாட்டில் அதிகம் பிரபல மாகாத காலம். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே சிறந்த பொழுதுபோக்கு. பஸ்ஸில் பயணிக்கும்போது, கர்ப்பிணிகள், குழந்தையை வைத்துள்ள பெண்கள் மற்றும் வயதானவர்கள் வந்தால் ஆண் - பெண் வித்தியாசம் இல்லாமல், எழுந்து உட்கார இடம் கொடுப்பார்கள். அவர்கள் சொல்வது நமக்குப் புரியவில்லை எனில் தோளில் தட்டி உட்காரச் சொல்வார்கள். நடக்கும்போது, நம்முடைய கால் அவர்கள் மேல் பட்டால் கூட, நம்மை முந்திக்கொண்டு ‘சாரி’ சொல்வார்கள். அதாவது, அவர்கள் நம் பாதைக்குக் குறுக்கே வந்துவிட்டதாகக் கருதி. இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த நாட்டை விட்டு வந்து பதினேழு ஆண்டுகள் ஆனாலும் அந்த அன்பான மக்கள், அவர்களின் பண்பால் எங்கள் மனதில் எப்போதும் உயர்ந்து நிற்கிறார்கள்.

- இல.தமிழ்க்குயில், சங்கராபுரம்