மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை -24 - பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் தாத்தா- பாட்டிகள் தினம்!

தாத்தா- பாட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தாத்தா- பாட்டிகள்

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

தாத்தா - பாட்டியுடன் விளையாடி அவர்களுடைய கதைகளைக் கேட்டு வளர்ந்த தலைமுறை இனி இருக்குமா என்கிற சூழ்நிலையில் தாத்தா - பாட்டிகளின் தினத்தை, பேரன் பேத்திகளுடன் ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கிறது இந்துஸ்தான் குழும இன்ஸ்டிட்யூட்டின் ஓர் அங்கமாக சென்னை, செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் இயங்கும் இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி.

“வழக்கமாக பேரன்ட்ஸ் மீட்டிங்கின்போது தொய்வாக வரும் குழந்தைகள் தாத்தா - பாட்டி தினத்தில் உற்சாகமாகக் கலந்துகொள்வதைப் பார்க்கும்போது எங்களுக்கும் குழந்தைகளின் உற்சாகம் தொற்றிக் கொள்ள 2014-ம் ஆண்டு முதல் தாத்தா - பாட்டிகளின் தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்” என்று நம்மிடம் பேச ஆரம்பித்தனர் பள்ளியின் நிர்வாகிகள்...

“மேலை நாடுகளில் ப்ரீகேஜி வகுப்பில் படிக்கும் குழந்தைகள், அவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்லும்போது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியைப் போன்று நடத்து வார்கள். அதை எங்கள் பள்ளியிலும் நடத்தும்போது பெற்றோர்களுடன் தாத்தா - பாட்டிகளும் அதிக அளவில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்ததைக் காண முடிந்தது. அதேபோல் காலை நேரத்தில் பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளைவிட தாத்தா - பாட்டி களுடன் வரும் குழந்தைகள் வகுப்பில் உற்சாகமாக இருப்பதை உணர்ந்தோம். இதைக் கண்ட நிர்வாகத்தினர், பெற் றோரின் விவரங்களுடன் பள்ளி பதிவேடுகளில் தாத்தா - பாட்டிகளின் விவரங்களைச் சேர்க்கும்படி சொன் னார்கள். அத்துடன் பள்ளிக்குச் சேரும் முதல் நாளன்று பெற்றோருடன் தாத்தா - பாட்டிகளையும் அழைப்போம்.

முதுமைக்கு மரியாதை -24 - பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் தாத்தா- பாட்டிகள் தினம்!

முதல் நாளன்று பெற்றோருடன் வரும் குழந்தைகள் அடம்பிடித்து பள்ளியில் நுழைய, தாத்தா - பாட்டிகளுடன் வரும் குழந்தைகள் சந்தோஷமாக நுழைவார்கள். இந்த நிலையில் இந்தப் பள்ளியை உருவாக்கிய சேர்மனின் அம்மா பிறந்த நாளை (செப்டம்பர் மாதம் 24-ம் தேதி) ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட அவரைச் சந்திப்போம். அப்போது அவர், `இந்த நாளை என்னோட கொண்டாடு வதைவிட குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடலாமா...’ என்றார். பள்ளியின் தலைவர் டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி எங்கள் பள்ளியில் செப்டம்பர் மாதம் 24-ம் தேதியை தாத்தா - பாட்டிகளின் தினமாக தொடர்ந்து கொண்டாடி வருகிறோம்” என்றவர்கள், இந்த தினத்தால் பள்ளி ஆசிரியர்கள் அடையும் பலன் களையும் விவரித்தார்கள்.

“வேலைக்குச் செல்லும் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்தைகளைப் பார்த்த வுடன், ‘ஹோம் வொர்க் முடிச்சிட்டியா... எக்ஸாம் எப்போ வருது...’ என்கிற கேள்விகளே அதிகமிருக்கும். தாத்தா - பாட்டிகள் அந்தக் குழந்தைகளிடம், ‘லஞ்ச் நல்லாயிருந்ததா... நிறைய தண்ணி குடிச்சியா... ரெஸ்ட் ரூம் போனியா’ என்பது போன்ற கேள்விகளைக் கேட் பார்கள். ஒரு குழந்தையை எப்படிப் பரா மரிக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என பெற்றோர்களைவிட, தாத்தாக்கள், பாட்டிகள் நன்கு அறிந்து வைத்திருப் பார்கள். இதனால் பெற்றோரிடம் அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட தாத்தா - பாட்டியிடம் அடங்கிவிடும்.

கொரோனா காலத்தில் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தியபோது பெற்றோரை விட, வீட்டிலிருந்த தாத்தா - பாட்டிகளே எங்களுக்கு அதிகம் உதவினார்கள். பெற்றோருக்கு ஆன்லைன் வகுப்புக்கான நேரம் மட்டும்தான் தெரியும். ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எந்த வகுப்பில், எந்த ஆசிரியர் பாடம் நடத்து கிறார் என்பது வரை தெரியும். சில பெற்றோர், ‘அவங்க தாத்தா - பாட்டிகள் செல்லம். நாங்க எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள்’ என்பார்கள். உண்மையில், பெரியவர்களிடம் குழந் தைகள் செல்லமாக வளர்ந்தாலும் அவர்கள் சொன்னால் கேட்பார்கள். வகுப்பில் நாங்கள் பாடம் நடத்தும்போது அதிகம் கேள்விகள் கேட்பது தாத்தா - பாட்டிகளுடன் வளரும் குழந்தைகளாக இருக்கிறார்கள். தெளிவான மனநிலை யுடன் நிதானமாக இயங்குவார்கள். ஆரோக்கியமாகச் செயல்படுவார்கள்” என்றவர்களிடம் தாத்தா - பாட்டிகள் தினம் குறித்து கேட்டோம்.

முதுமைக்கு மரியாதை -24 - பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் தாத்தா- பாட்டிகள் தினம்!

“இந்த தினம், முதியோருக்கு கொடுக்கப் படும் மரியாதை என்பதையும் கடந்து, தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள முதியோர்களின் அவசியத்தைப் பெற் றோர்களுக்கு உணர்த்தியது. நமது பாரம்பர்யம், கலாசாரத்தை வளரும் தலைமுறைகளுக்குக் கடத்துகிறது. தலை முறை இடைவெளியைக் குறைக்கிறது. குறிப்பாக, பேரன்ட்ஸ் டே நடத்தும்போது வகுப்புக்கு வரும் பெற்றோர், எங்களிடம் எந்தவிதமான கேள்விகளைக் கேட்பார்கள் என்றுதான் அந்த நாளை எதிர்கொள்வோம். ஆனால், தாத்தா - பாட்டிகள் தினம் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து அதை உற்சாகத்துடன் கொண்டாடுகிறோம். காரணம், எங் களுக்கு அவர்கள்தான் பலவகையிலும் உறுதுணையாக இருக்கிறார்கள்” என்றவர்கள் நிறைவாக...

“நம் வாழ்வில் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம் நம் தாத்தா - பாட்டிகள். அதிகரித்து வரும் தனிக் குடும்பங்களால் நம் குழந்தைகளுக்கு தாத்தா - பாட்டி வரத்தை அளிக்க இந்தத் தலைமுறை பெற்றோர்கள் தவறி விடுகின்றனர். அதை மீட்டெடுப்பது அவசியம். அதைத்தான் நாங்கள் சிறிய அளவில் செய்து கொண்டிருக்கிறோம்” என்றனர்.

- தோள் கொடுப்போம்...

சர்வதேச தாத்தா - பாட்டிகள் தினம் தொடங்கியது எப்படி?

1970-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த மரியன் மெக்வேட் என்பவர், முதியோர்களின் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்குச் சொல்ல விரும்பினார். அதற்காக தாத்தா - பாட்டிகளுக்கு ஒரு நாளை அறிவிக்குமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் மனு கொடுத்தார். இந்த நிலையில் தாத்தா - பாட்டிகளின் வாழ்க்கை, சவால்கள் மற்றும் எதிர்காலத்துக்கான ஆசைகள் பற்றி அறிய 1973-ம் ஆண்டில், முதல் தாத்தா - பாட்டி தினம் மேற்கு வெர்ஜீனியா வில் அறிவிக்கப்பட்டது.

1978-ம் ஆண்டில் தேசிய தாத்தா - பாட்டிகள் தினத்தை அறிவிப்பதற்கான மசோதா வில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கையெழுத்திட்டார், செப்டம்பர் மாதம் 10-ம் தேதி கொண்டாடப்படும் இந்தத் தினத்தில் “ஒவ்வொரு குடும்பத்தின் பெரியவர் களுக்கும் குடும்பத்தின் தார்மிக தொனியை அமைக்கும் பொறுப்பு உள்ளது. மேலும், நமது தேசத்தின் பாரம்பர்ய விழுமியங்களை அவர் களின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தை களுக்கு கடத்த இந்த நாள் உதவ வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டது.

ஆங்கிலம்... எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்! - 7 - பி.எஸ்.ராமமூர்த்தி

தற்போதைய வாழ்க்கை முறையில் பெரும் பாலான இல்லங்களில் தாத்தா - பாட்டி Vs பேரன் - பேத்திகளின் உறவு செல்போன்களிலும் வாட்ஸ்அப் கால்களிலும் தொடர்கிறது. குழந்தை களின் பெற்றோர், தாத்தா - பாட்டியுடன் பேசும் போது தாய்மொழியில் பேச வலியுறுத்தினாலும் பேரன் - பேத்திகளின் உரையாடலில் அதிக பட்சமான ஆங்கில வார்த்தைகள் கலந்தே இருக்கின்றன.

 பி.எஸ்.ராமமூர்த்தி
பி.எஸ்.ராமமூர்த்தி

குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் குழந்தைகளின் உரையாடல் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும் நிலையில் அவர்கள் பேசுவதைப் புரிந்துகொண்டு அவர்களுடன் சரளமாக உரையாட முடியாமல் பலர் சிரமப் படுகின்றனர். ஆனால், அந்தக் குழந்தைகளின் மூலமும் ஆங்கிலத்தை நாம் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.

உதாரணத்துக்கு... தாத்தாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் போய் அவரிடம் பேசுகின்ற பேத்தி, “தாத்தா... நீங்க எப்படி இருக்கீங்க? போன வாரம் உடம்பு சரியில்லை என்று சொன்னீங்களே. டாக்டரிடம் சென்றீர்களா?” என்பதை ‘Grandpa... How are you? You said you were not well last week. Did you go to the doctor?” என்று கேட்க... பேத்திக்கு தமிழில், “ஆமாம் கண்ணா. நான் டாக்டரிடம் சென்றேன். சில பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன” என்று கூற நினைப்பதை ஆங்கிலத்தில் ‘Yes dear. I went to the doctor. Some tests have been done’ என்று சொல்லலாம். அடுத்து, பேத்தி “எப்போது அதனுடைய ரிப்போர்ட்ஸ் / ரிசல்ட்ஸ் நீங்கள் பெறுவீர்கள்?” என்பதை ‘When will you get the results?’ என்று ஆங்கிலத்தில் கேட்க தாத்தா, “ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்பதை ‘I am awaiting the results’ என்றோ அல்லது ‘I am waiting for the results’ என்றோ பதில் கூறலாம். இங்கே முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ‘awaiting’ என்று சொல்லும்போது ‘for’ என்ற வார்த்தையைச் சேர்க்கக்கூடாது. ‘waiting’ என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது ‘for’ என்னும் வார்த்தையை கட்டாயம் சேர்க்க வேண் டும். அவ்வளவுதான். அதற்கடுத்து, “சரி தாத்தா. பார்த்துக் கொள்ளவும். எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்பதை ‘Okay grandpa. Take care and keep me informed’ என்று கூறி முடிப்பார்.

இதில் ‘Keep me informed’ என்ற சொற்களை மூன்று விதமாகப் பயன்படுத்தலாம். எல்லாம் ஒரே அர்த்தத்தைத்தான் உணர்த்தும். அவை... Keep me informed அல்லது Keep me posted அல்லது Keep me updated என்று பயன் படுத்தலாம். மேற்கண்ட வார்த்தையை அடிக்கடி நாம் உபயோகப்படுத்துவதால் மூன்றையும் அறிந்துகொள்வது அவசியமாகவும் பயனுள்ள தாகவும் இருக்கும்.

தொடர்ந்து பேசலாம்...