முதுமைக்கு மரியாதை -25 - முதுமையில் தனிமை… ‘முதலுதவிகளை’க் கற்போம், முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்!

- வித்யா சுப்ரமணியம்
சுமார் முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை படிப்பு முடிந்தபின் இளைஞர்கள் ஏதேனும் தேர்வுகள் எழுதி வங்கிகள், மத்திய மாநில அரசுத்துறைகள் அல்லது ரயில்வேயில் மற்றும் தனியார் நிறுவனங்களில் நல்ல வேலை கிடைத்து, கூடியவரை சொந்த ஊரி லேயே பணியிடமும் கிடைத்து குடும்பத்துட னேயே இருந்து, திருமணம் செய்து கூட்டுக்குடித்தன மாக மகிழ்வுடன் வாழ்ந்தவரைக்கும் முதியவர்கள் பாதுகாப்புடன் இருந் தார்கள். ஆண் வாரிசற்று, பெண்களை மட்டுமே பெற்றவர்கள்கூட, பெண்கள் திருமணமாகி சென்ற பிறகு, நெருங்கிய சொந்தங்களும் பந்தங்களும் தங்களுக் கருகில் இருந்ததால் ஒருவருக்கொருவர் துணையாகவே இருந்தனர்.
பிறகு, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் என்று வேலை கிடைத்து, அங்கேயே செட்டில் ஆக ஆரம்பித்தனர். கூட்டுக் குடும்பங்கள் குலையத்தொடங்கின. ஆண்டுக்கொரு முறையாவது ஊரையும் பெற்றோர் உற்றாரையும் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்து, தகவல்தொழில்நுட்பப் புரட்சியால், ஆண்டுக்கொரு முறை என்பதும் அருக ஆரம்பித்துவிட்டது. வெளி நாடுகளுக்குப் பயணிக்க ஆரம்பித்தபிறகு அறவே இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. வெளி நாடுகளுக்கு மேற்படிப்புக்காகச் செல்பவர்கள், அங்கேயே நல்ல வேலை கிடைத்து, குடியுரிமை உட்பட அனைத்தும் பெறுவதும், கணினிப் பொறியியல் உள்பட பலவகையான படிப்புகளைப் படித்த இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் இணைவதும், பின்னர் அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளுக்குச் செல்வதும் பிறகு அங்கேயே நிரந்தரமாக ஒரு வேலை தேடிக்கொண்டு தங்கள் மனைவி குழந்தைகளுடன் அங்கேயே வாழத் தொடங்குவதும் அதிகரித்தது.

தங்கள் பிள்ளைகள் அல்லது பெண்கள் வெளி நாடுகளில் நற்படிப்பும் நல்ல வேலையுடனும் இருப்பதை இங்குள்ள பெற்றோரும் பெருமையாக எண்ணி மகிழ்ந்தனர். அதே பெற்றோர் முதுமை யடையும்போது அவர்களில் பலர் வசதியான முதியோர் இல்லங்களில் வாழவேண்டிய சூழலை இயல்பாக ஏற்றுக்கொண்டனர். தனது பெரிய சொந்த வீட்டைவிட்டுச் செல்ல விரும்பாதவர்கள் தனிமையில் வாழ்வதற்குப் பழகி கொண்டனர். உடலில் தெம்பிருந்து, யாருடைய தயவுமின்றி வாழும்வரை தனிமை இனிமையாகவே இருக்கும். ஒருகட்டத்தில் முதுமையின் அவஸ்தைகள் அதிகரிக்க, தனிமை பலருக்கும் ஒரு சுமையாகவே மாறக்கூடும்.
சமீபத்தில் பிரபல பாடகி திருமதி வாணி ஜெயராமின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. குழந்தைகள் என்று யாருமில்லாதவர், கணவரும் மறைந்த பிறகு தனிமையில் வாழவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டிருந்தது அநாயாச மரணம்தான் என்றாலும் அவரது நெற்றிக்காயம் சந்தேகத்துக்கு இடமாகியது. அந்தக் கடைசி நிமிடத்தில் அவருக்கு என்ன செய்ததோ என்கிற வேதனை அவரின் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

என் ஒன்றுவிட்ட அண்ணாவும் அண்ணியும் தனியாகவே வாழ்ந்து வந்தனர். எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த அண்ணா ஒருநாள் ஃப்ரிட்ஜி லிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்துக் குடிக்கும்போது மயங்கி அப்படியே பின்புறமாக மல்லாந்து விழ, அடுத்த நிமிடம் உயிர் பிரிந்திருக்கிறது. கீழே விழுந்த வேகத்தில் அவரது மண்டையிலும் அடிபட்டிருந்தது. அநாயாச மரணம் அது. அண்ணா கீழே விழுந்த நேரம் அண்ணி வீட்டில் இருந்ததால் உடனே பெண்களை அழைத்துச் சொல்ல, உடனடியாக டாக்டர் வந்து பார்த்து உயிர் போய்விட்டதாகக் கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட இதேபோலதான் திருமதி வாணி ஜெயராமுக்கும் நிகழ்ந்திருக்கும். அவர் தனிமையில் இருந்த தாலேயே அவரது மரணம் உட னடியாக யாருக்கும் தெரியாமல் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
என் கணவரின் மரணம்கூட அவர் பணி ரீதியாக விழுப்புரத் தில் தனியாகத் தங்கியிருந்த போதுதான் நடந்தது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்திருக்க, அவரது மரணம் எங்களுக்கு இரண்டு தினங்கள் கழித்துதான் தெரியவே செய்தது. அப்போதெல்லாம் மொபைல் போன் வசதி கிடையாது.
முதுமையில் மட்டுமல்ல, உத்தியோகம் காரணமாகக்கூட தனியாக வேறு ஊரில் தங்கி யிருக்க வேண்டிய அவசியம் வயது வித்தியாசமின்றி அனை வருக்கும் ஏற்படும். அப்படி தனிமையில் இருக்க வேண்டிய நிலையில் என்ன மாதிரியான பாதுகாப்புகளையும் விழிப்புணர் வையும் கொண்டிருக்க வேண்டு மென்பதைப் பார்ப்போம்.
நானும் அறுபது வயதைக் கடந்தவள்தான். என் இரண்டு பெண்களுக்குத் திருமணமான பிறகு தனிமையை இனிதாகவும். பயனுள்ளதாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறேன். அதேநேரம் என் பெண்கள் இருவரும் கூப் பிடு தூரத்திலேயே இருப்பதாலும், நினைத்த நேரத்தில் அவர்கள் என் வீட்டுக்கு வந்து செல்வதாலும், எப்போதேனும் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்கள் வந்து நிற்பார்கள் என்பதாலும் நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்ததில்லை. இருந்தாலும் நான் வரும்முன் காக்கும் பல முன்னெச்சரிக்கை விஷயங்களைக் கடைப்பிடித்து வருகிறேன்.
சில தொந்தரவுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் மொபைல் போன் ஒரு பெரிய வரம்தான். நெருங் கிய உறவுகளுடன் சட்டென தொடர்பு கிடைக்க வில்லையென்றாலும் அவசரத்துக்கு நெருங்கிய நட்புகள் அக்கம்பக்கத்தினரைத் தொடர்பு கொண்டு உதவி கோர முடியுமென்பதால் முடிந்த வரை என் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களின் கைபேசி எண்களை வாங்கி என் மொபைலில் பதிவு செய்து வைத்திருப்பேன். தவிர, மொபைலில் எமர்ஜென்சி நம்பர்கள் என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் நமக்கு நெருங்கிய சிலரின் எண்களை சேமித்து வைத்திருப்பது முக்கியம். நமக்கு ஒன்று என்றால் நம் அருகில் இருப்பவர் உடனே அந்த எண்களில் தொடர்பு கொள்ள முடியும்.
வீட்டைச்சுற்றி யாரேனும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொள்வதாகத் தோன்றினால் உடனடியாக அழைத்து உதவி கேட்க வசதியாக, அருகிலுள்ள காவல் நிலையத்தின் எண் மற்றும் உங்களுக்கு அங்குள்ள இன்ஸ்பெக்டர், மற்றும் சில அதிகாரிகளை நன்கு தெரியுமெனில் அவர்களின் எண்களையும் கூட உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். நான் எனக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரிகள் பலரின் எண்களை அவசரத்துக்காகச் சேமித்து வைத்திருக்கிறேன்.
தவிர, முன்பின் தெரியாத யாரையும் நான் என் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. என் வீட்டில் ஏதேனும் ரிப்பேர் வேலைகள் இருந்தாலும்கூட என் நெருங்கிய உறவுகள் மற்றும் நட்புகள் மூலமாகவே நம்பிக்கையான ஆட்களை ஏற்பாடு செய்வேன். அப்படி பழுதுபார்க்க எவரேனும் வரும் சமயத்தில் என் பெண்களையோ அல்லது அக்கம்பக்கம் இருக்கும் என் உறவினர் அல்லது தெரிந்தவர்களையோ சில மணித்துளிகள் என்னோடு வந்து இருக்கும்படி கூறுவேன்.
மிக முக்கியமான ஒன்றைக் கூறியே ஆக வேண்டும். தனியாக வசிக்கும் முதிய வர்கள் தங்கள் வீட்டில் விலையுயர்ந்த தங்க, வைர, நகைகள், வெள்ளிப் பொருள்கள் போன்றவற்றை வைத்திருக் காமல் இருப்பது நல்லது. அவற்றை வங்கியில் பாதுகாப்பாக வைக்கலாம். அதேபோல வீட்டில் அதிக அளவில் பணம் வைத்திருப்பதையும் தவிர்க்கலாம். ஏனெனில் இப்போது சின்னச்சின்ன வியாபாரிகள் முதற்கொண்டு மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்கள் வரை ஜிபே, பேடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது. நம் தெருவுக்கு வரும் பழ வண்டிக்காரர்கள், இளநீர் விற்பவர்கள் கூட தங்கள் வண்டிகளில் கியூ.ஆர்.கோடு வைத்திருக்கிறார்கள். எனவே மிகமிக அவசரத்துக்கு மட்டும் சில நூறு ரூபாய்கள் வைத்துக்கொண்டால் போதும்.

கடைசியாக... தனியே வசிக்கும் முதியவர்கள் தங்கள் சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பு, ஆக்ஸிஜன், நாடித்துடிப்பு அளவுகளை வாரத்துக்கு ஒருமுறையேனும் அதற்கான கருவிகளைக் கொண்டு வீட்டி லிருந்தவாறு தாங்களே செக் செய்து கொள்வது நல்லது அல்லது மாதம் இரு முறையேனும் தங்கள் மருத்துவர்களிடம் சென்று பரிசோதித்துக் கொண்டு தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண் டும். வந்தபின் பதற்றப்படுவதைவிட, வருமுன் காத்துக்கொள்வது நல்லது.
அதோடு நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது கூடியவரை தனியே செல்லாமல் அக்கம்பக்கத்தில் யாருடனாவது செல்வது நல்லது. அப்படி தனியே சென்றாலும் அவசரமாக தொடர்பு கொள்ளவேண்டிய உங்கள் சொந்தங்களின் போன் நம்பர் களை ஒரு காகிதத்தில் எழுதி சிறிய பர்ஸில் வைத்துக்கொண்டு செல்லலாம். மற்றபடி, நல்ல உணவு, தேவையான ஓய்வு, மனதை உற்சாகமாக வைத்திருத்தல், நல்ல புத்தகங்கள் வாசிப்பது, நல்ல சங்கீதம் கேட்பது என்று தங்களை அமைதியாக வைத்துக்கொள்வதும் உடல் நலனுக்கு நல்லது.
இவ்வுலகில் எவரும் சாகாவரம் பெற்று பிறக்கவில்லை. நம்மால் முடிந்தவரை மரணத்தைத் தள்ளிப்போடுகிறோம் அவ்வளவே. நமது கவனக்குறைவால் நமக்கு எதுவும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாதவாறு தனிமையையும் இனிதாக்கிக் கொள்வதற்காவே இந்த முன்னெச் சரிக்கைகள். அத்துடன், திடீர் மரணம் கூடியவரையில் ‘சந்தேக மரணம்’ என்று திகில் கிளப்பி யாருக்கும் தொந்தரவு தராமல் இருப்பதற்கும் இந்த முன் னெச்சரிக்கைகள் உதவக்கூடும்தானே!
- தோள் கொடுப்போம்...