Published:Updated:

‘`அனுசரித்துச் செல்வதுதான் அன்பான வாழ்க்கை!’’ - அனுபவம் பகிரும் ‘90’ தம்பதி

வத்சலா - நாராயணசாமி தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
வத்சலா - நாராயணசாமி தம்பதி

முதுமைக்கு மரியாதை! - 4 - தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

‘`அனுசரித்துச் செல்வதுதான் அன்பான வாழ்க்கை!’’ - அனுபவம் பகிரும் ‘90’ தம்பதி

முதுமைக்கு மரியாதை! - 4 - தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

Published:Updated:
வத்சலா - நாராயணசாமி தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
வத்சலா - நாராயணசாமி தம்பதி

“இந்தியாவில் மூன்றில் ஒரு முதியவர் நிதி சார்ந்த பிரச்னைகள், பிள்ளைகள் தனிக்குடித்தனம் செல்வது, கையில் பணம் இல்லாமை மற்றும் வீட்டில் தனியாக இருப்பது போன்றவற்றால் மனச் சோர்வுக்கு ஆளாகிறார்கள். முதலில் மகனாலும், அடுத்தபடியாக மருமகளாலும், அதற்கடுத்தபடியாக சுற்றத்தாராலும் முதுமைப் பருவத்தில் உள்ளவர்கள் ஏதோ ஒருவிதத்தில் அவமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், இயல்பான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக்கூட மற்றவர்களை நம்பியிருக்கும் கால கட்டாயத்தில் முதியவர் களுக்குத் துணையிருப்பது அவர்களுடைய மனோபலம் ஒன்று மட்டுமே” என்கிறார் சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.

இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த வத்சலா - நாராயணசாமி தம்பதி. வத்சலாவின் வயது 91. அவர் கணவர் நாராயணசாமியின் வயது 95. தமிழகக் கல்வித்துறையில் பணியாற்றிய வத்சலா, இந்த வயதிலும் சில கல்வி நிறுவனங்களில் கெளரவப் பொறுப்பில் இருக்கிறார். நாம் இவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தபோது ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து வந்தவருக்குச் சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்...

“என் மாமனார் என்.தர்மராஜன். 1957-ம் ஆண்டு பத்ம விருது பெற்றவர். ஹிராகுட் அணையைக் கட்டியவர்களில் முக்கியமானவர். எனக்கு 1958-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த வீட்டுக்குப் பின்பக்கம் சங்கர மடம் இருக்கிறது. அந்த ஆண்டு மடத்துக்கு விஜயம் செய்த மஹா பெரியவா, மூன்று நாள்கள் தங்குவதற்கு எங்கள் வீடு கிடைக் குமா என்று மடத்தைச் சேர்ந்த வர்கள் கேட்டார்கள். அந்த ஆண்டு எங்களுக்கு தலைதீபாவளி என்பதாலும் அந்த நேரத்தில் நான் தி.நகரில் இருக்கும் என் தாய்வீட்டுக்குச் சென்று விடுவேன் என்பதாலும் பரமாச்சார்யர் தங்குவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார் என் அப்பா.

‘`அனுசரித்துச் செல்வதுதான்
அன்பான வாழ்க்கை!’’ - அனுபவம் பகிரும் ‘90’ தம்பதி

நாங்கள் தி.நகர் சென்றுவிட்டோம். தலைதீபாவளி என்பதால் எங்களைப் பார்க்க வட இந்தியாவில் இருந்த என் மாமனார் நேரே இந்த வீட்டுக்கு வந்துட்டார். இங்கே மஹா பெரியவாவைப் பார்த்ததும் என் மாமனாருக்கு ஆச்சர்யம். அவரிடம் ஏதோ சொல்வதற்கு முன் பெரியவா, ‘பத்ம உங்க அனுமதியில்லா மல் இங்கே வந்துட்டேன்’ என்று கூறியிருக் கிறார். அதைக் கேட்டதும் என் மாமனார், ‘இது உங்க வீடு. எத்தனை நாள் வேணாலும் தங்கிக்கலாம்’ என்று பதில் சொல்ல... மூன்று நாள்கள் தங்குவதாக இருந்த மஹா பெரியவா பதினெட்டு நாள்கள் தங்கி விட்டார். பெரியவா இருந்த இடம் என்பதால் நாங்கள் இருக்கும் வரை இந்த வீட்டை விற்கக் கூடாது என்கிற முடிவுக்கு வந்துட்டோம். இன்னும் இந்த வீட்டிலேயே வசிக்கிறோம்” என்று ஒரு கணம் அமைதி யானார் வத்சலா.

அவரைத் தொடர்ந்த நாராயணசாமி, “இன்னிக்கும் இந்த வீட்டில் தனிமையாக இருப்பதாக நாங்கள் உணர்ந்ததில்லை. இந்த வயது வரைக்கும் நாங்கள் தெம்பாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் பெரியவா ஆசீர்வாதம் என்பது என் மனைவியின் நம்பிக்கை. நான் அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு ஒரே மகன்... அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு 62 வயது. அவரின் இரண்டு பெண் பிள்ளைகளும் அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார்கள். அவ்வப்போது வருவார்கள். என்னைவிட என் மனை விக்கு தைரியம் ஜாஸ்தி. அடிக்கடி எங்கே யாவது வெளியூர் போய் விடுவோம்” என்றவரைத் தொடர்ந்தார் வத்சலா...

‘`அனுசரித்துச் செல்வதுதான்
அன்பான வாழ்க்கை!’’ - அனுபவம் பகிரும் ‘90’ தம்பதி

“நான் நன்றாக கார் ஓட்டுவேன். 15 வய திலேயே கற்றுக்கொண்டேன். எனக்கு 70 வயதானபோது என் பையன் இந்தியா வந்திருந்தார். அப்போது தமிழ்நாடு முழுக்க காரிலேயே சுற்றினோம். என் தம்பியும் அமெரிக்காவில்தான் இருக்கிறார். அதனால் பலமுறை அமெரிக்காவுக்குப் போயிருக்கிறோம். நான் கல்வித்துறையில் பணியாற்றியபோது லண்டனில் ஒரு வருடம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி பிரிட்டன் முழுக்க சுற்றிப் பார்த்துவிட்டோம்.

அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமல்ல... ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா நாடு களில் உள்ள முக்கியமான இடங்கள்... எகிப்து, மெக்ஸிகோ போன்ற இடங்களுக் கும் சென்றிருக்கிறோம். அந்த இடங்களில் வசிக்கும் மூத்த குடிமக்கள் தனித்துச் செயல்படுவதைப் பார்க்கும்போது எங்களுக்கும் தெம்பு வந்துவிடும். இந்தியா வில் உள்ள எல்லா நகரங்களையும் பார்த்துவிட்டோம். பயணங்கள் நிறைய அனுபவங்களையும் தனித்து வாழ்கிற மனோபலத்தையும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன” என்கிறார் உற்சாகமாக.

“இப்போது சில வருடங்களாக வெளியூர்களுக்குத் துணையில்லா மல் போக முடிவதில்லை. கொரோ னாவுக்கு முன்புகூட அதிகாலை வேளையில பீச்சுக்குப் போய்விடு வோம். முடிந்தவரை நடப்போம். மூச்சுப்பயிற்சி செய்வோம். கொரோனா நேரத்தில் நாங்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. எங்களையும் யாரும் பார்க்க வர வில்லை. அப்போதுதான் கொஞ்சம் தனிமையை உணர்ந்தேன்” என்ற நாராயணசாமியிடம், ``அதான் நான் இருக்கேனே’’ என்று ஆறுதல் சொன்னார் வத்சலா.

``இன்று உலகத்தில் எல்லோரும் தங்களின் வாழ்க்கைத்தேவைக்காக ஓடிக்கொண்டேதான் இருக்கிறார் கள். அவர்களைப் பிடித்து வைக்க முடியாது. உங்கள் பிள்ளைகள், உங்களுடன் இருக்க விரும்பினால் இருக்க விடுங்கள். ஆனால், அவர்கள் உங்களோடே இருக்க வேண்டுமென கட்டாயப்படுத்தாதீர்கள்.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் இருந்தது. இப்போது எல்லாமே கூண்டுக் குடும்பங்களாக மாறி விட்டன. அனுசரித்துச் செல்வது தான் அன்பான வாழ்க்கை. இது எங்கள் அனுபவத்தில் உணர்ந்தது. எங்களைப் பொருத்தவரை மனதுக்கு என்றைக்குமே வயதாகாது” என்றவர் களின் தனிமையான வாழ்க்கை, தனித்துவமாகவே இருக்கிறது. முதுமைப் பருவத்தில் உள்ளவர் களுக்கு முன்னுதாரணமாக மிளிர்கிறது.

- துணை நிற்போம்...

‘காவல் கரங்கள்’...

முதியோர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் 1253 என்ற எண்ணும், பிற மாவட்டங்களுக்கு 1800-180-1253 என்ற எண்ணும் பொது சேவை எண்ணாக ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தவிர காணாமல் போன முதியோர் களைக் கண்டுபிடிக்க சென்னை காவல் துறையினரால் ‘காவல் கரங்கள்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவல் கட்டுப் பாட்டு அறையின்கீழ் செயல்படும் இந்தத் திட்டத்தில் ரோந்துப் பணியில் சுமார் 700 ரோந்து வாகனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் மூலம் சாலையோரங்களில் ஆதரவில்லாமல் இருக்கும் நபர்கள் மீட்கப்படுகின்றனர். இதற் கான தொடர்பு எண்: 94447 17100

‘`அனுசரித்துச் செல்வதுதான்
அன்பான வாழ்க்கை!’’ - அனுபவம் பகிரும் ‘90’ தம்பதி

சீனாவில் மூத்தோர் ராஜ்ஜியம்!

குடும்ப சூழலைப் பொருத்தவரை இந்தியாவின் சாயல்தான் சீனாவில். பெற்றோர், பெரியவர்களைப் பார்த்துக்கொள்வது நம் நாட்டைப் போலவே இங்கும் மகனின் கடமைதான். என்றாலும், பெரியவர்கள் எப்போதும் பிள்ளைகளைச் சார்ந்து இருப்பதில்லை. தமது வேலையைத் தாமே பார்த்துக்கொள்கின்றனர். அந்த ஓயாத உழைப்புதான் அவர்களின் சராசரி ஆயுட்காலத்தை 100 என்று வைத்திருக்கிறது.

100 வயதைத் தாண்டிய பலரை சீனாவில் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். அந்த வயதிலும் படுக்கையில் விழாமல் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள் என்பதுதான் இன்னும் ஆச்சர்யம். சீனர்களும் ஜப்பானியர்களும் தானே நடந்து சென்று கல்லறையில் படுத்துக்கொண்டால்தான் உண்டு என்று சொல்வார்களே... அது உண்மைதான்.வயதான தாத்தா, பாட்டிகள் சைக்கிள் ஓட்டுகிறார்கள். தமக்குத் தேவையான பொருள்களை அவர்களே வாங்கி வருகிறார்கள்.

பெரியவர்களைக் கொண்டாடுகிறது சீன நாடு. தாய், தந்தை தன்னுடன் இருப்பது பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்கள். குழந்தைக்கு இரண்டு தாத்தா, பாட்டிகளின் அரவணைப்பும் ஒரே வீட்டில் கிடைக்கிறது. 100 பேர், 50 பேர் கொண்ட கூட்டுக்குடும்பங்கள் இங்கு வெகு சாதாரணமான விஷயம். வேலைச்சூழல் காரணமாகப் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனியாக வசிக்க நேர்ந்தால், வாரம் ஒரு தடவை சென்று பார்த்துவிடுவதை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். அதற்காக வெள்ளி அல்லது சனிக்கிழமை இரவு கிளம்பிவிடுவார்கள். நாம் ஞாயிறன்று வேலைக்கு வரச் சொன்னால் மறுத்துவிடுவார்கள்.

அதோடு முதியவர்களை, தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்கிறார்கள். அது சினிமாவானாலும் சரி, சுற்றுலாவானாலும் சரி. நடக்க முடியவில்லை என்றால் தள்ளுவண்டியில் வைத்தாவது கூட்டிப் போகிறார்கள். பொதுவாகவே, சீனர்களுக்குக் குடும்ப ஒற்றுமை மிக அதிகம். மூன்று தலைமுறையினர் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது சீனர்களிடம் சர்வ சாதாரணம்.

நட்பைவிட குடும்ப ஒற்றுமைக்குத்தான் இங்கே முதலிடம். ஒரு தோழமையுடன் சினிமா, உணவகம் செல்லுதல் என்பதைவிட தன் மனைவி, மாமியார், தன் குழந்தைகளுடன் உணவருந்துவதே அவர்களுக்குப் பிடித்தமான விஷயமாக இருக்கிறது.

விகடன் பிரசுரம் வெளியீடு

- சீனா: அண்ணன் தேசம் நூலில் சுப மோகன்

*****

‘`அனுசரித்துச் செல்வதுதான்
அன்பான வாழ்க்கை!’’ - அனுபவம் பகிரும் ‘90’ தம்பதி

பாத்ரூம் பயம், மலச்சிக்கல், பற்களில் பிரச்னை...

முதியோருக்கான கோடைக்கால உணவுமுறை எப்படி இருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த, கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்...

``முதுமைப் பருவத்தில் உள்ளவர்களுக்குக் கோடைக் காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவு தேவைப்படும். ஆனால், பெரும்பாலானவர்கள் நாள் முழுக்க அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள், மாலை

6 மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதைப் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அதற்கு காரணம், அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டும் என்பதாலும், இரவு நேரத்தில் தூக்கம் கெட்டுவிடும் என்பதாலும் தண்ணீர் குடிக்க விரும்பமாட்டார்கள். அதைவிட முக்கிய காரணம் கழிவறை சென்றால் வழுக்கி விழுந்துவிடுமோ என்கிற பயம். இப்படி தண்ணீர் போதுமான அளவு குடிக்காத காரணத்தால் மலச்சிக்கல் ஏற்படும்.

இதைத் தவிர்க்க அதிக அளவு தண்ணீர் குடிப்ப துடன் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, பழவகை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சிலர் இவற்றையும் அதிக அளவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பலருக்கு பற்களில் பிரச்னை இருக்கும். அவர்களால் நார்ச்சத்துள்ள உணவுகளை நன்றாக மென்று சாப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் பழ வகைகளை மிக்ஸியில் அரைத்து சாப்பிடலாம். காய்கறி களை வேகவைத்து, கூழாக்கி சாப்பிடலாம். இது மலச்சிக்கலைப் போக்க பெரிதும் உதவும்.

குறிப்பாக, கோடைக்காலத்தில் மாவுச்சத்து அதிகம் உள்ள அரிசியை முடிந்த அளவு குறைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்வதும் நல்லது. இதைப்போலவே கொழுப்புச் சத்து அதிகம் உள்ள எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவற்றைக் குறைத்துக்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இரவு உணவை 7.30 மணிக்குள் எடுத்துக் கொள்வது நல்லது. படுப்பதற்கு முன் தண்ணீர் அதிகம் சேர்த்த பால் அருந்தலாம். முதுமைப் பருவத்தில் செரிமான பிரச்னையுடன் கோடையின் தாக்கமும் இருக்கும் என்பதால் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மிக அவசியம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism