Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 5 - நாளைய முதியோர் கவனத்துக்கு...

 நாளைய முதியோர் கவனத்துக்கு
பிரீமியம் ஸ்டோரி
நாளைய முதியோர் கவனத்துக்கு

- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

முதுமைக்கு மரியாதை! - 5 - நாளைய முதியோர் கவனத்துக்கு...

- தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

Published:Updated:
 நாளைய முதியோர் கவனத்துக்கு
பிரீமியம் ஸ்டோரி
நாளைய முதியோர் கவனத்துக்கு

முதுமைக்கு மரியாதை பகுதியைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர் ஒருவர் சமீபத்தில் நம்மைத் தொடர்பு கொண்டார். ``நான் எழும்பூர் நீதிமன்றத் துல குமாஸ்தாவா இருந்து ரிடையர்டா கிட்டேன். இப்போ எனக்கு 72 வயசு. பென்ஷன் வருது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மனைவி இறந்துட்டாங்க. பையனுக்குக் கல்யாணம் செஞ்சதும் அவன் தனியா போயிட்டான். அவன் வீட்டுல தங்கலாம்னு கேட்டேன். அவன் பொண்டாட்டி எனக்கு ஒரு கண்டிஷன் போட்டாள். `பென்ஷன் பணம் மொத்தத்தையும் மாசாமாசம் நமக்குக் கொடுத்துட சொல்லுங்க. மூணு வேளையும் சாப்பாடு போட்டுட லாம்’னாள்.

 வி.எஸ். நடராஜன்
வி.எஸ். நடராஜன்

எனக்கு வெளியுலகம் தெரியாது. வேற வழியும் இல்ல. ஒப்புக்கிட்டேன். எனக்கு அவங்க ஃபிளாட்ல சின்னதா ஓர் அறை ஒதுக்கினாங்க. மூணு வேளை யும் சாப்பாடு வந்துடும். சாப்பிட்டேனா, அது நல்லாயிருக்கா - இல்லையா, தூங்கினேனா - எழுந்தேனான்னு எதைப் பத்தியும் கவலைப்பட மாட் டாங்க. என் துணியை நானே துவைக்கறதுல ஆரம்பிச்சு, என் ரூமை, பாத்ரூமை சுத்தம் செய்யுறது வரை நான்தான் செய்துக்கணும். தவிர மருத்துவச் செலவு, டீ, காபி, முகச்சவரம்னு தினசரி பயன் பாட்டுக்கான செலவை நான்தான் செய்துக்கணும். பையன்கிட்ட கேட்டா `என் பொண்டாட்டிகிட்ட கேளுங்கப்பா’ன்னுவான். சில நேரம் தருவாள். பல நேரம் தர மாட்டாள். ஆசைப்பட்டது எதையும் வாங்கி சாப்பிட முடியாது. வெளியில போக வர காசு இல்ல. வெளியுலக தொடர்பும் இல்லாம வீட்லயே முடங்கிட்டேன். இப்போ நாள்களை எண்ணிக்கிட்டிருக்கேன். என் பேரு, ஊரு எதையும் உங்க புக்ல போடாதீங்க” என்றார் பலவீன மான குரலில்.

``அன்பும் பாசமும் கூட்டுக் குடும்பமும் உடைந்துவரும் இன்றைய சூழ்நிலையில் பல முதியவர்கள் இப்படித்தான் ஒரே வீட்டில் தனியாக வசிக்கிறார்கள். தனிமையில் இருப்பவர்களுக்கு முதுமை யின் விளைவுகள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்பது ஆராய்ச்சியாளர் களின் கருத்து. தொடர்ந்து தனிமையில் இருப்பவர்களுக்கு மனச்சோர்வும், மறதி நோயும் வர வாய்ப்பு அதிகமாகும்” என்று இதுகுறித்து பேசிய சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர்

வி.எஸ்.நடராஜன், அவரைச் சந்திக்க வந்த ஒருவரின் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

``அவருக்கு 80 வயசு இருக்கும். பார்க்க நல்ல பர்சனாலிட்டியா இருந்தாலும், கொஞ்சம் பலவீனமா இருந்தார். அவ ரோட தினசரி வாழ்க்கைமுறை பத்தி பேசிவிட்டு... `என்னன்ன மாத்திரைகள் சாப்பிடுறீங்க?’ என்றேன்.

`எனக்கு ஒண்ணும் தெரியாது. என் வொய்ஃகிட்டே கேளுங்க. அவங்க நேரத் துக்குக் கொடுப்பாங்க. சாப்பிடுவேன்’ என்றார். உணவுமுறை பற்றிக் கேட்ட போது, `அவங்க சமைச்சுப் போடுறதைச் சாப்பிடுவேன்’ என்றார்.

`வெளியே எங்கேயாவது போவீங்களா?’ என்றேன்.

`அவங்க அழைச்சுட்டுப் போனா போவேன்’ என்றார்.

இப்படி என்னுடைய கேள்வி ஒவ் வொன்றுக்கும் அவருடைய பதில், மனைவியைச் சார்ந்ததாகவே இருந்தது. அவரிடம், `சார்... உங்களை மாதிரிதான் அவங்களுக்கும் வயசாகிட்டு வருது. எத்தனை நாளைக்குத்தான் உங்க வேலை யையும் அவங்க சேர்த்துச் செய்வாங்க. உங்க வேலையை உங்களால முடிஞ்ச அளவுக்கு நீங்களே செய்துக்கப் பழகிக் கோங்க’ என்றேன். `உதாரணத்துக்கு... காலையில் எழுந்ததும் உங்க போர்வையை நீங்களே மடிச்சு வைக்கலாம். தனியா வெளியே போக முடிஞ்சா பால், காய்கறி வாங்கிட்டு வரலாம். துவைச்ச துணியை மடிச்சு வைக்கலாம். மாடியில செடிகள் இருந்தா மாலை நேரத்துல தண்ணி ஊத்த லாம். இத்தனை நாள் இல்லாவிட்டாலும் இப்ப நீங்க வீட்ல இருக்கறதாலே இதை யெல்லாம் செய்யப் பழகிக்கோங்க. அது தான் உங்களுக்கும் நல்லது, உங்க மனைவிக் கும் நல்லது’ என்று அனுப்பி வைத்தேன்.

இவரைப் போல் பலரும் மனைவியைச் சார்ந்தே இருந்துவிடுவதால் மனைவி இல்லாதபோது வெறுமையைச் சட்டென்று உணர்ந்து அதிலிருந்து மீள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். எந்த வயதாக இருந்தாலும் தன் வேலை களைத் தானே செய்துகொள்கிறவர்களுக்கு இந்த வெறுமை ஏற்படாது என்பதே உண்மை” என்றவர், வீட்டில் முதுமைப் பருவத்தில் உள்ளவர்களிடம் வளரும் பருவத்தினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை விவரித்தார்.

முதுமைக்கு மரியாதை! - 5 
- நாளைய முதியோர் கவனத்துக்கு...

``இன்றைய தலைமுறையினருக்கு ஆயிரம் அவசர வேலைகள் இருக்கத்தான் செய்கின்றன. வீட்டில் இருக்கும் முதியவரிடம் ஆபீஸுக்குப் புறப்பட்டுப் போகும்போது, `அப்பா ஆபீஸ் கிளம்ப றேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றாலே போதும். அன்றைய நாள் அவர்களுக்கு இனிய நாளாகத் தொடங்கும். வீட்டுக்குத் திரும்பியதும், `என்னப்பா மதியம் சாப்பிட் டீங்களா... சாயந்திரம் எங்கயாவது போயிட்டு வந்தீங்களா... டிவி-யில இன்னிக்கு என்ன ஸ்பெஷல் நியூஸ்’ என்று கேட்டுவிட்டு அவர்கள் சொல்வதை ஐந்து நிமிடங்கள் கேட்டால் போதும். அதுவே மகன் தன்னை யும் மதிக்கிறான் என்கிற நிறைவைத் தரும். உங்களுக்கு நேரமிருந்தால் அவர்களை வெளியில் அழைத்துச் செல்லலாம். அவர்கள் விரும்பியதை வாங்கிக் கொடுக்கலாம். பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாள்களில் சின்னதாகப் பரிசு தரலாம். அவர்களிடம் ஆசீர்வாதம் பெறலாம். முதுமைக்கு இளைஞர்கள் தரும் மிகச் சிறந்த மரியாதை இதுதான்’’ என்றவர்...

வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி, நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று நம்மிடம் பேசிய முதியவரின் பிரச்னைக் குத் தீர்வு சொன்னார். ``குழந்தை பிறந்ததுமே அது முதுமையின் வாழ்க்கையில தன் முதல் படியைத் தொடங்கிடுது. பல பருவங்களைத் தாண்டி குழந்தை முதுமையடையுது. மரணம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குது. மரணம் அறிவித்துவிட்டு வருவதும் இல்லை; மரணம் இவ்வுலக வாழ்வில் புதியதும் இல்லை.

மரணத்தைக் காட்டிலும் மரண பயம் கொடுமை. என்றோ, எங்கேயோ எப்படியோ ஏற்படப்போகும் மரணத் தைப் பத்திக் கவலைப்படுறதுல எந்தப் பலனும் இல்லை. `வந்தால் வரட்டும் போடா’ என்கிற மனோ தைரியத்துடன் மரணத்தை வரவேற்க எதிர்கொள்ளப் பழகிக்கொள்ளணும்.

நீங்க தரும் பணத்துக்கு உங்க குடும்பத்தாரிடம் கேள்வி கேட்கிற உரிமை உங்களுக்கு இருக்கு, கேளுங்க. சரியான பதில் இல்லைன்னா

உங்களப் பாதுகாக்க ஆயிரமாயிரம் உள்ளங்கள் இருக்குங்கறதை மறந்துடா தீங்க. முழு நம்பிக்கையோடு செயல் படுங்க. மகிழ்ச்சியா இருங்க” என்றார் முத்தாய்ப்பாக.

- துணை நிற்போம்...

******

‘கூட்டுக் குடும்ப கிச்சன்’... பெரியவர்களுக்கான வீட்டுச் சாப்பாடு!

திருச்சியில், தனித்து வாழும் பல முதியவர்களின் பசியைப் போக்கிவருகிறது ‘கூட்டுக் குடும்ப கிச்சன்’ கேட்டரிங் சர்வீஸ். காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவை ஆரோக்கியத்துடன் சமைத்து, டோர் டெலிவரி செய்யும் இந்த கேட்டரிங் சர்வீஸுக்கு ஊருக்குள் நல்ல பெயரும் வரவேற்பும் இருக்கிறது. ‘`பெரியவங்களுக்கு பல உடல்நலப் பிரச்னைகளும் இருக்கும் என்பதால, உப்பு, காரம், எண்ணெய், சர்க்கரைனு எல்லாத்தையும் பார்த்து பார்த்துதான் சமைக்கிறோம். திருச்சி மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள சுமார் 110க்கும் அதிகமான வீடுகள்ல தினமும் எங்க சமையல்தான்’’ என்கிறார், உணவகத்தின் உரிமையாளர் உமா மகேஸ்வரி.

‘’காலையில் ஐந்து மணிக்கு வேலையை ஆரம்பிச்சிடு வோம். ஃப்ரெஷ்ஷான காய்கறிகள், வீட்டிலேயே தயாரிக்கிற மசாலாக்கள், கணவன், மனைவி, தம்பி, கொழுந்தனார்னு எங்க வீட்டு உறவினர்கள் மேற் பார்வையில் தயாராகும் சமையல்னு இந்த வீட்டு சமையல் தயாரிப்பு முறைதான் எங்களோட சிறப்பு. காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல்... கூடவே முடக்கத்தான், வல்லாரை, காளான் போன்ற சத்துமிக்க தோசைகள் செஞ்சு கேரியர்ல பேக் பண்ணிடு வோம். காலை 7 - 9 மணிக்குள் டெலிவரி செஞ்சிடுவோம். டெலிவரி செய்யும்போது, வாடிக்கையாளர்கள் மதிய உணவுக்குக் கொடுக்குற ஆர்டர் வாங்கிட்டு வந்துடுவோம். மதிய சாப்பாடு 12 - 1 மணிக்குள் டெலிவரி ஆகிடும். அடுத்து, இரவு உணவு தினமும் ஒரு பழத்துடன் நேரத்துக் குத் தயாராகிடும். கேரியரை வெந்நீர்ல அலசுறது, உணவின் தரம், சுவை, தேவைக்கேற்ப மெனுவை மாற்றிக்கிற வசதி, நியாயமான விலை, குறைவான மசாலா, எண்ணெய்னு இந்தக் காரணங்களால் எல்லாம் தான் முதியவர்களுக்குப் பிடிச்ச கேட்டரிங் சர்வீஸா எங்களால இயங்க முடியுது’’ என்றவரிடம், ‘அதென்ன ‘கூட்டுக் குடும்ப கிச்சன்?’ ‘ என்று அந்தப் பெயர் பற்றிக் கேட்டோம்.

 உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

‘’வீட்டுச் சாப்பாடு, குறிப்பா முதியவர்களுக்கு ஏற்ற மாதிரி சமைச்சுக் கொடுக்கலாம் என்ற ஐடியாவை என் நண்பர் சொன்னப்போ, ஹோம்லியான ஒரு பெயர் வைக்கலாம்னு யோசிச்சோம். நாங்க எங்க குடும்பத்தோடு சேர்ந்து இந்த வேலைகளைப் பண்ணுறதாலயும், குடும்பத்துல ஒருத்தருக்கு சமைச்சுக் கொடுக்குற மாதிரிதான் எங்க கஸ்டமர் களுக்கு, குறிப்பா பெரியவங்களுக்கு சமைச்சுக் கொடுக்கிறோம் என்பதாலயும் இந்தப் பெயர் வெச்சோம்.

கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பிச்சப்போ, 60 வயதுக்கு மேற்பட்டவங்கதான் எங்களுக்குப் பெரிய வரவேற்பு கொடுத்தாங்க. இன்னிக்கு அவங்கதான் எங்களோட 80% வாடிக்கையாளர்கள். ஒவ்வொருத்தருக்கும் அவங்க தேவை என்னன்னு கேட்டு, பார்த்துப்பார்த்து ரெடி பண்ணுவோம். நம்பிக்கையான எங்க டெலிவரி ஆள்கள், போனதும் கேரியரை வெச்சுட்டு வந்துட மாட்டாங்க. சில முதியவர்களால மெதுவா வந்துதான் டெலிவரியை வாங்கிக்க முடியும். அதுவரை பொறுமையா காத்திருப்பாங்க. சில பெரியவர்களுக்கு கேரியரை திறக்குறது சிரமமா இருக்கும்; அவங் களுக்கு வேண்டியதை செய்து கொடுத்துட்டுத்தான் வருவாங்க. எங்க வாடிக்கையாளர்களோட பிள்ளைகள் பலர் வெளிநாட்டுல இருக்காங்க. ‘எங்க அப்பா, அம்மா சாப்பாட்டு பிரச்னை உங்களால தீர்ந்துச்சு, பத்திரமா பார்த்துக்கோங்க’னு சொல்லும் போது, அந்த நம்பிக்கையைக் காப்பாத்தணும்ல?!” என்கிறார் உமா மகேஸ்வரி மனப்பூர்வமாக.

******

முதுமைக்கு மரியாதை! - 5 
- நாளைய முதியோர் கவனத்துக்கு...

முதியோர்களுக்கொரு காப்பகம்...

குடும்பத்தினரிடன் வெளியில் அழைத்துச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களைப் பராமரிக்க சில மையங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சென்னை மயிலாப்பூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம்.

``திருமண விழா, கோயிலுக்குச் செல்வது மற்றும் சுற்றுலா செல்வது போன்ற நாள்களில் இந்த மையத்தில் சேர்த்துவிட்டால் முதியவர்களை நன்கு கவனித்துக் கொள்வோம். வெளிநாடு செல்லும்போது அப்பா - அம்மா அல்லது தாத்தா - பாட்டியைத் தனியாக விட்டுவிட்டுப் போக நினைப்பவர்கள் இம்மையத்தில் சேர்த்துவிடலாம்.

இந்த மையத்தில் முதியவர்களின் மனநலம் பேண, மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது. சிறு குழுவாகப் பிரிந்து சிறு சிறு விளையாட்டுகளின் மூலம் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கவும் இங்குள்ள நூலகத்தில் உள்ள பல்வேறு தலைப்பிட்ட நூல்களைப் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முதியவர்களுக்குத் தகுந்தவாறு மதிய உணவு வழங்கப்படுகிறது.

மேலும், முதியவர்களுக்கு ஏற்படும் அவசரத் தொல்லை களுக்கும் நீண்ட நாள்களாகத் தொடர் சிகிச்சை பெற்றுவரும் முதியவர்களுக்கு இல்லம் தேடி சிகிச்சை அளிப்பது இந்தப் பராமரிப்பு மையத்தின் தனிச்சிறப்பு” என்கிறார்கள் முதியோர் இல்லத்தைப் பராமரித்து வருபவர்கள். தொடர்புக்கு: 72996 77700

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism