Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - 8 - பெற்றோரின் திறமைகளை மற்றவர்களுக்குச் சொல்லுங்கள்!

தோள் கொடுப்போம்...  துணை நிற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - நாட்டியக் கலைஞர்கள் சாந்தா - தனஞ்ஜெயன்

முதுமைக்கு மரியாதை! - 8 - பெற்றோரின் திறமைகளை மற்றவர்களுக்குச் சொல்லுங்கள்!

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்! - நாட்டியக் கலைஞர்கள் சாந்தா - தனஞ்ஜெயன்

Published:Updated:
தோள் கொடுப்போம்...  துணை நிற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

முதுமையிலும் இளமை என்பதற்கு உதாரணமாக வாழ்பவர்கள் பிரபல பரதக் கலைஞர்கள் சாந்தா தனஞ்ஜெயன் மற்றும் தனஞ்ஜெயன் தம்பதியர். சமீபத்தில் முத்தமிழ் பேரவையின் 41-வது விழாவில் ‘நாட்டிய செல்வம்’ விருது பெற்றுள்ள, பலருக்கும் எடுத்துக்காட்டாக, வழி காட்டியாக வாழும் இவர்களிடம் பேசினால் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

``சமீபத்தில் விளம்பரப் படப் பிடிப்புக்காக கோவா சென்றிருந் தோம். படப்பிடிப்பின்போது ஆக்‌ஷன் என்றதும் எங்களின் ரியாக்‌ஷனைப் பார்த்த குழுவினர், `நாங்க எதிர்பார்த்ததைவிட பிரமாதம். இந்த வயசிலே எப்படிங்க ரெண்டு பேரும் உற்சாகமா இருக்கீங்க’ என்ற கேள்வியை எழுப்பினார்கள். அவர் களுக்கு நாங்கள், `உற்சாகம்தான் மனிதனைத் தூண்டி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். அதற்கு வயசு ஒரு தடையே இல்லை’ என்றோம்.

இந்த உற்சாகத்துக்கு மிக முக்கிய காரணம் எங்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கும் கலை. ஒன்றாகப் படித்தோம். ஒன்றாக வளர்ந்தோம். ஒரே துறையைத் தேர்ந்தெடுத்தோம். அந்த வகையில் கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து ஒரே வேலையைச் செய்யும் போது புதுப்புது எண்ணங்கள் தோன்றுகின்றன. அதைச் செயல்படுத்தும் போது புது உற்சாகம் பிறக்கிறது” என்கிறார்கள் 80 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் சாந்தாவும், 84 வயதைக் கடந்த தனஞ்ஜெயனும்.

பரதக்கலையின் மூலம் உலகில் உள்ள பலரை சந்தித்திருக்கும், இன்றுவரை பலரை சந்தித்துக் கொண்டிருக்கும் இவர்கள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தார்கள்...

முதுமைக்கு மரியாதை! - 8 - பெற்றோரின் திறமைகளை 
மற்றவர்களுக்குச் சொல்லுங்கள்!

``எல்லோருக்கும் தனித்திறமை இருக் கிறது. இதில் வயது ஒரு பொருட்டே இல்லை. எந்த வயதிலும் அதை நிலைப் படுத்த மற்றவர்களின் தூண்டுதலும் அவசியம். உதாரணத்துக்கு... இன்று வெளிநாட்டில் இருக்கும் மகனோ, மகளோ... உள்நாட்டில் இருக்கும் பெற்றோரை வசதியான முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் நிலை இருக்கிறது. அது போதும் என நினைக் கிறார்கள். அப்படிச் சேர்த்துவிடும்போது பெற்றோரின் தனித்திறமையை முதியோர் இல்லத்தில் உள்ள நிர்வாகத் தினரிடம் தெரிவிக்கலாம்.

‘சார்... எங்கப்பாவுக்கு நல்லா பாட வரும். டிவியில் யாராவது பாடினா... தப்பா பாடுறாங்கன்னு சில நுணுக்கமான விஷயங்களைச் சொல்லுவார். எங்கம்மா கணக்குல புலி. வாய்க்கணக்கா பல டிஜிட்டல்களைச் சொல்லி பிரமிக்க வைப்பாங்க’ என்று சொல்லும்போதே பெற்றோரின் முகத்தில் உற்சாகம் பிறக்கும். வயதை மறந்து நிமிர்ந்து உட்காருவார்கள். இன்று பல முதியோர் இல்லங்களில் நேரத்தை வீணடிக்காமல் இருக்க பல நிகழ்ச்சிகள், கூட்டுப் பயிற்சிகள் நடக்கின்றன. அதில் உங்கள் பெற்றோரின் திறமைகள் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும்.

இன்று சிக்கன் 65, பிரியாணி மசாலா, வத்தல் குழம்பு பேஸ்ட் என்று பல உணவுப் பொருள்கள் பாக்கெட்டில் அடைக்கப் பட்டே வருகின்றன. அதையேதான் பலரும் பயன்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். உங்கள் வீட்டில் மருமகளிடமோ, மகளிடமோ, `இந்தப் பொருள்களையெல் லாம் வாங்கிக்கொடு... நான் சொல்ற மாதிரி செய்... பிரியாணி மணக்கும் பாரு’ என்று கேளுங்கள். அவர்களே ஆச்சர்யப்படும்படி பல விஷயங்கள் நடக்கும். சமையற்கலை மட்டுமல்ல... பெண்கள் தங்களுக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்குத் தங்களால் முடிந்த அளவு சொல்லிக் கொடுக்கலாம்.

அதேபோல் முதுமைப் பருவத்தினர் நடைப்பயிற்சியின்போது கடற்கரையில், தெருக்களில் செல்லும்போது வழியில் காணும் பிளாஸ்டிக் கழிவுகளை, பேப்பர்களை, கற்களை அகற்றலாம். இரண்டு நாள்கள் இதைச் செய்தால் மூன்றாம் நாள் நம்முடன் நடைப் பயிற்சிக்கு வரும் பலர் அதைப் பின்பற்றுவார்கள். இதை நாங்கள் பெசன்ட் நகரில் இருக்கும்போது செய்தோம். அது ஓர் இயக்கமாக மாறியது” என்றவர்கள் தங்களின் முதுமைப் பருவத்துக்கே உரிய சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

```எந்த வயதிலும் கணவன் - மனைவிக் கும் இடையே புரிந்துகொள்ளும் மனப்பான்மை அவசியம். காலையில் எழுந்ததும் காபி வரவில்லையென்று சத்தம் போடக் கூடாது. மனைவிக்கும் என்னை மாதிரியே வயதாகி வருகிறது என்று நினைத்துக்கொள்வேன். வரும்போது வரட்டும் என்று இருந்து விடுவேன்” என்றார் தனஞ்ஜெயன்.

``எங்களைப் பொறுத்தவரை எனக்குத் தெரிந்தவர்கள், அவருக்கும் தெரிந்தவர் களாக இருப்பார்கள். அவர்களிடம் நேரில் பேசும்போதோ, போனில் பேசும்போதோ இரண்டு பேரும் மாறி மாறி பேசுவோம். அவர்களின் அனுபவங் களை நாங்கள் கேட்கும்போதும், எங்கள் அனுபவங்களை அவர்களுக்குச் சொல்லும்போதும் உறவுகள் பலப்படும்.

முதுமைக்கு மரியாதை! - 8 - பெற்றோரின் திறமைகளை 
மற்றவர்களுக்குச் சொல்லுங்கள்!

எங்கள் வயதையொத்தவர்களிடம் பேசும்போது வயதாகிவிட்டது என்பதை அவர்களுக்கு உணர்த்த மாட்டோம். உங்களால் முடியாது என்று சொல்லவும் மாட்டோம். ஒவ்வொருவரின் வயதும் மனதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதன்படி அவர்கள் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு உறுதுணை யாக இருக்க வேண்டுமே தவிர, நம் வார்த்தைகள் அவர்களுக்கு உபத்திரவமாகி விடக் கூடாது” என்கிறவர்கள் தற்போது சென்னை, முட்டுக்காடு, கிழக்குக் கடற்கரை சாலைக்கு குடிபெயர்ந்திருக் கிறார்கள்.

அடையாறு வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருள்களை எந்த இடத்தில் எப்படி வைப்பது என்பதில் அவர்களின் ஈடுபாடும், இந்தப் பொருளை இங்கே வைத்தால் நன்றாக இருக்கும் என்ற ஒருமித்த யோசனைகளும் அவர் களின் முதுமைக்கு ஒரு புது அத்தி யாயத்தைக் கொடுத்திருக்கிறது.

- துணை நிற்போம்...

*****

ரிட்டயர்மென்ட் வில்லா வாங்கும் முன்..!

சமீபத்தில் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட செய்தி அது. கோவையின் புகழ்பெற்ற ரிட்டயர்மென்ட் ஹோம் ஒன்றில், தன் சொத்துகளை எல்லாம் விற்று ஒரு வில்லா வாங்கி செட்டில் ஆனவரின் அனுபவம். ‘வீடு வாங்க வைக்க, வாங்கிய பின் என, ஆரம்பத்தில் எல்லாம் சூப்பராகத்தான் இருந்தது. ஒரு கட்டத்தில், நாம் அவர்களைத்தான் அண்டியிருக்கிறோம் என்ற நிலை வந்தபோது அவர்கள் முகம் மாறியது. மெஸ் சார்ஜ், சர்வீஸ் சார்ஜ், டிரைவர் சார்ஜ், நர்சிங் சார்ஜ் எல்லாம் இந்த 20 வருடங்களில் 400% அதிகமாகிவிட்டது. அவர்களைக் கேள்வி கேட்டாலோ, சேவையைக் குறை சொன்னாலோ நமக்குத்தான் மன உளைச்சல் வரும் எனும் அளவுக்கு எதிர்வினை இருக்கும். பணத்தையும் கொடுத்துவிட்டு அவர்களை அனுசரித்துப்போவது கொடுமை’ என்று ஒரு முதியவர் தன் அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.

முதுமைக்கு மரியாதை! - 8 - பெற்றோரின் திறமைகளை 
மற்றவர்களுக்குச் சொல்லுங்கள்!

இந்த நிலையில் ரிட்டயர்மென்ட் வாழ்க்கையில், அமைதியான ஓர் இடத்தில், தங்களுடைய உணவு, மருத்துவம், உடற்பயிற்சி, ஆன்மிகம், மெயின்டனன்ஸ் என எல்லா தேவைகளும் பூர்த்தியாகப்பெற்று வாழ பலரும் நாடும், ரிட்டயர்மென்ட் கம்யூனிட்டி வில்லாக்கள்/அபார்ட்மென்ட்களை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பகிர்கிறார், திருச்சியில் உள்ள பொன்னி டெல்டா ரிட்டயர்மென்ட் கம்யூனிட்டியின் புராஜெக்ட் டைரக்டர் ஹரிஹரன்.

``ரிட்டயர்மென்ட் கம்யூனிட்டியை பொறுத்தவரை மூன்று மாடல்கள் உள்ளன.

1. லீஸ் மாடல்

குறிப்பிட்ட காலத்துக்கான ஒப்பந்தமான லீஸ் மாடலில் எல்லா சேவைகளும் கட்டண அடிப்படையில் வழங்கப்படும். ஒவ்வொரு முறை ஆட்கள் மாறும்போதும், அவர்களுக்கான தேவைகளைப் பொறுத்து கட்டணமும் மாறுபட அதிக வாய்ப்புள்ளது.

2. சேல் மாடல்

இந்த முறையில், ஒரு ரிட்டயர்மென்ட் கம்யூனிட்டியில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி உங்களுக்கான தேவைகளை நீங்களாகவோ, அந்த கம்யூனிட்டியில் உள்ள சர்வீஸ்களில் உங்களுக்குத் தேவையானதை மட்டுமோ பெற்றுக்கொள்ளலாம். விலையேற்றத்தை பொறுத்து சர்வீஸ் கட்டணங்கள் மாறுபடும்.

3. செல்ஃப் மேனேஜ்மென்ட் கம்யூனிட்டி மாடல்

இதில், அஸோசியேஷன் மூலம் ஒரு கான்ட்ராக்ட் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலமாகத் தேவைப்படும் அனைத்து வசதிகளும், சேவைகளும் வழங்கப்படும். அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

முதுமைக்கு மரியாதை! - 8 - பெற்றோரின் திறமைகளை 
மற்றவர்களுக்குச் சொல்லுங்கள்!

கவனிக்க வேண்டியவை...

கம்யூனிட்டி அமைந்துள்ள இடம் முக்கியம். பிள்ளைகள், உறவினர்கள் வந்து செல்ல வேண்டும், நீங்கள் அடிக்கடி வெளியே சென்று வர வேண்டும் என்றால், அதற்கு ஏற்றார்போல போக்குவரத்து வசதியை பரிசீலிக்க வேண்டும்.

கிராமம் போன்ற அமைதியான இடம், சிறு நகரம், மாநகரம் என நீங்கள் வசிக்க விருப்பப்படும் இடம், உடற்பயிற்சிக் கூடம், ஆன்மிகக் கூடம் என உங்களின் ஆர்வம், விருப்பம், தேவை என அனைத்தையும் பரிசீலித்து ஓர் இடத்தை `டிக்' செய்ய வேண்டும்.

5 ஸ்டார் வரை கொடுக்கப்படும் சேவைகளில், உடல் நிலை முதல் வருமானம் வரை என உங்களுக்கு எந்த மாதிரியான கம்யூனிட்டி தேவை, பொருந்தும் என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

சைவம், அசைவம், பத்திய சமையல், உப்பில்லாத உணவு, சர்க்கரை இல்லாத உணவு என உணவு விஷயத்தில் எந்த அட்ஜெஸ்ட்மென்ட்டும் செய்து கொள்ளாமல், உங்களுக்குத் தேவையானது எங்கு கிடைக்கிறதோ அதையே தேர்ந்தெடுக்கவும்.

மருத்துவ வசதி, மருத்துவ தேவைகள் அந்த கம்யூனிட்டியில் எந்தளவுக்கு சிறப்பாக வழங்கப் படுகின்றன என்பது மிக முக்கியம். மருத்துவ ஆலோசனை மட்டும் போதுமா, கேர் டேக்கர்கள் வேண்டுமா என உங்கள் தேவைகளை தெளிவாக எடுத்துச் சொல்லி, அது அங்கு சாத்தியமா என்று தெரிந்துகொள்ளவும்.

இதுபோன்ற ரிட்டயர்மென்ட் கம்யூனிட்டியில் பெரும்பாலும் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும். அதில் ஒன்றிரண்டு நாள்கள் தங்கி, ஏற்கெனவே அங்கிருப்பவர் களின் அனுபவம், உங்களுடைய நேரடியான அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கலாம்.

குறிப்பு: நடுத்தர வயதினருக்கே, வீடு மாற்றுவது பெரும் சுமை. எனவே, சில வருடங்கள் ஒரு கம்யூனிட்டியில், பின்னர் சில வருடங்கள் வேறு ஒரு கம்யூனிட்டியில் என்று மாறுவது முதியவர்களுக்கு மிகவும் கசப்பான அனுபவமாக அமைந்துவிடும். எனவே, ஒரு முடிவு எடுக்கும் முன்னர் பல விஷயங்களையும் பரிசீலிக்கவும். மேலும், அக்ரீமென்ட், செட்டில்மென்ட் போன்றவற்றை வழக்கறிஞர் ஆலோசனை யின் பேரில் முடிவு செய்யவும்.’’

வாசகர்களின் முதுமை அனுபவங்கள்...

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

முதுமை குறித்த உங்கள் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், வித்தியாசமான நபர்கள், உணர்வுகள், உதவிகள், கடமைகள், கருவிகள் என்று எதுவாக இருந்தாலும் பகிரலாம் என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம். ஏராளமான அனுபவங்கள், அறிவுரைகள்... அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில...

ஓய்வுநிலையில் உற்சாகம்!

தமிழக அரசுப் பணியில்‌ 33 ஆண்டுகள் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி 1994-ல் ஓய்வு பெற்றேன். 58 வயது தானே ஆகிறது... இன்னும் வாழ வேண்டிய நாள்கள் அதிகம் என்று அப்போது நினைத்தேன். நாளிதழ்களைப் படிக்கும் பழக்கம்கொண்ட நான், வேலைவாய்ப்பு விளம்பரங்களையும் படிக்க லானேன். ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் தேவை‌ என்ற விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டேன். இன்று அந்த நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். மனதளவில் உற்சாகமாக இருக்கிறேன். - அ.சம்பத், சின்னசேலம்

பாதுகாப்பைத் தரும் வாட்ஸ்அப் குரூப்!

எழுபதைக் கடந்த நிலையில் நானும், அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் அனைவரும் ஓய்வுபெற்றவர்கள். அனைவரின் பிள்ளைகளும் வெளிநாட்டிலும், வெளியூரிலும் வேலை பார்ப்பவர்கள். நாங்கள் அனைவரும் அக்கம்பக்கத்து வீட்டினர் மற்றும் தெருவில் உள்ள மற்றவர்களும் இணைந்து வாட்ஸ்அப் குழு அமைத்துள்ளோம். உடல்நிலை சரியில்லை என்றாலோ, ஏதாவது ஒருவருக்கு உதவி என்றாலோ உடனுக்குடன் போன் செய்தோ, வாட்ஸ்அப்பிலோ தகவல் தெரிவிப்போம்.

பகல் நேரத்தில் அறிமுகம் இல்லாத நபர்கள் யாராவது தண்ணீர் கேட்டு வந்தாலும் உடனே பக்கத்து வீட்டினரை கூப்பிட்டுக் கொள்வோம். தெரிந்த பிளம்பர், பால்காரர், பேப்பர்காரர் பற்றிய தகவல்களை விசாரித்து வைத்துள்ளோம். வீட்டு வேலைக்கு அனைவரும் ஒரே பெண்ணை வைத்துள்ளோம். அவரிடம் வீட்டு விஷயம் எதுவும் பேசுவதில்லை. வெளிப்பக்கம் பூட்டி வைத்து ஜாக்கிரதையாக இருப்போம்.

கொரோனா காலத்திலும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் காய்கறி, மாத்திரைகள் வாங்க உதவி செய்து கொண்டோம். யாராவது வீட்டைக் கண் காணிப்பதாகத் தெரிந்தால் காவல்துறை போன் நம்பரையும் வைத்துள்ளோம். முது மையை பாதுகாப்புடன் ரசித்து வாழ்கிறோம். - எஸ்.மாரிமுத்து, சென்னை-64

எல்லோரிடமும் அன்பு பாராட்டுவோம்!

எனக்கு 77 வயதாகிறது. என் கணவருக்கு 87 வயது. மகன்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். என் கணவர் ஏர்ஃபோர்ஸில் இருந்து ரிடையர் ஆனவர். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே இரண்டு வீடுகளும், மாடியில் இரண்டு வீடுகளும் கட்டி குடி வைத்துள்ளோம். இவர்கள் அனைவரும் எங்களுக்கு மிகவும் ஒத்துழைப் பாக உள்ளனர். மாலை நேரத்தில் பல வருடங்களாக நாங்கள் இருவரும் டியூஷன் நடத்தி வந்தாலும் புதிதாக யார் வந்தாலும் விசாரித்துவிட்டுதான் அனுப்புவார்கள்.

நவராத்திரி சமயத்தில் கொலு வைத்து அக்கம் பக்கம் உள்ள அனைவரையும், டியூஷன் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களையும் அழைத்து தாம்பூலம் கொடுப்போம். ஜாதி மதம் பாராமல் அனைவரையும் கூப்பிடுவோம். அது மட்டுமல்ல... எங்கள் வீட்டில் மாம்பழம், கொய்யா காய்க்கும் காலங்களில் பறித்து அக்கம் பக்கத்தில் உள்ள அனைவருக்கும் கொடுப்போம்.

முதியவர்கள் என்று நாமே மற்றவர்களிடமிருந்து ஒதுங்காமல் எல்லோரிடமும் வயது வித்தியாசமின்றி பழகினால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம். ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி பழகினால் நமக்கு நல்லது. நம்மை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு நெருக்கமாக இருப்பது போன்ற அக்கம்பக்கத்தாருடன் தோழமை பாராட்டினால் அவர்களே நமக்கு பாதுகாப்பு அரணாக இருப்பார்கள் என்பதே இதற்கு உதாரணம்.

என் மகன்கள் நாங்கள் வீடு கட்டும்போது ‘நாங்கள் இந்தியா வரப்போவதில்லை... எதற்காக வீடு கட்டு கிறீர்கள்?’ என்று கேட்டனர். இப்போது அவர்களே ஆச்சர்யப்படுகின்றனர்.

- சுகந்தாராம், சென்னை-59

அனுபவங்களைப் பகிரலாமே!

இவர்களைப்போல் முதுமையை மனதார ஏற்றுக் கொண்டு நடை போடுபவர்களில் நீங்களும் ஒருவரென்றால், உங்களுடைய அனுபவங்கள் மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே!

முதுமை குறித்த உங்கள் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், வித்தியாசமான நபர்கள், உணர்வுகள், உதவிகள், கடமைகள், கருவிகள் என்று எதுவாக இருந்தாலும் பகிரலாம். பிரசுரமாகும் ஒவ்வொன்றுக்கும் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:

முதுமைக்கு மரியாதை, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism