Published:Updated:

முதுமைக்கு மரியாதை! - தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

தோள் கொடுப்போம்...  துணை நிற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

புதிய பகுதி - 1

முதுமைக்கு மரியாதை! - தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

புதிய பகுதி - 1

Published:Updated:
தோள் கொடுப்போம்...  துணை நிற்போம்!
பிரீமியம் ஸ்டோரி
தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

குழந்தைகளை தெய்வத்துக்கு நிகரானவர்கள் என்பார்கள். அதேபோல் முதியோரை அந்தக் குழந்தைகளுக்கு நிகராகச் சொல்வார்கள். குழந்தைப் பருவம் போல முதுமைப் பருவமும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் முதியோரை ஒதுக்கியே வைத்துள்ளனர். அவர்களை அரவணைத்துப் பாதுகாக்காமல், புறக்கணித்து ஓரங்கட்டுகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கான உணர்வு, உணவு, உதவி, உடல்நலம், மனநலம், பாதுகாப்பு, பரிந்துணர்வு என அத்தனையையும் பேசும் பகுதியாக... அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்கும் வழிகாட்டியாக... `முதுமைக்கு மரியாதை' ஆரம்பமாகிறது.

முதுமைப் பருவம் என்பது ஒரு வாய்ப்பு... ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், பலரும் அதை சாபமாகவே கருது கின்றனர். அதை நினைத்து நினைத்து உடைந்து போகின்றனர். குழந்தைப்பருவம், இளமைப் பருவம், வாலிபப் பருவம் போல முதுமைப் பருவத்தையும் மனதார உணர்ந்து, சாதாரண மாக எதிர்கொள்ளத் துணிந்துவிட்டால், நிச்சயமாக முதுமைப் பருவமும் வரமே.

வி.எஸ்.நடராஜன்
வி.எஸ்.நடராஜன்

இன்றைய காலகட்டத்தில் முதியோர் நலம் குறித்த வாழ்க்கை முறை, அவர்களை அணுக வேண்டிய விதம், மருத்துவ உதவி குறித்த விளக்கத்தை, ‘முதுமைக்கு மரியாதை’ தொடரின் முதல் அத்தியாயத்தில் பகிர்ந்து கொள்கிறார், சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.

``முதியோர் நலம் என்றதும் எனக்கு ஒரு சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. என்னை சந்திக்க ஒருவர் வந்திருந்தார். மிடுக்கான தோற்றம். துள்ளலான செயல்கள். சரளமான பேச்சு.

`என்ன வயது?’ என்றேன்.

‘எழுபது’ என்றார்.

‘என்ன பிரச்னை?’ என்றேன்.

‘பிரச்னை ஒண்ணுமில்லை... நான் நார்மலா தான் இருக்கேன். நல்லா சாப்பிடறேன். நல்லா தூங்கறேன். தினமும் நடக்கறேன். வாரத்துக்கு ஒரு தடவை பீச்சுக்குப் போறேன். நினைச்சப்போ கோயிலுக்குப் போறேன். பென்ஷன் வருது. தேவையானதுக்குச் செலவு செய்றேன்’ என்றார்.

`சரி... எதுக்காக என்னைப் பார்க்க வந்தீங்க?’ என்றேன்.

’வீட்டுல இருக்கறவங்க உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்காங்க. உங்களைப் பார்த் துட்டு வரச் சொன்னாங்க. 50, 60 வயசுக்கு மேல அப்பப்ப மருத்துவப் பரிசோதனை தேவைனு நீங்க ஒரு பேட்டியில சொல்லியிருந் தீங்களாம். அதுக்காகத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்’ என்றார்.

அவரை முழுதாகப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவரிடம், ‘அனைத்தும் நார்மல். உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றேன்.

அவர், ‘உங்களைப் பார்க்க வந்ததற்கு ஏதாவது எழுதி கொடுங்கள். அட்லீஸ்ட் ஒரு டானிக்காவது எழுதிக் கொடுங்கள்’ என்றார்.

சரி என்று அவரது திருப்திக்காக எழுதிக் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு சிரித்தார். அதில், ‘தினமும் நீங்கள் கடைப்பிடிக்கும் வழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். மகிழ்ச்சி’ என்று எழுதிக் கொடுத்திருந்தேன். இது, முதுமையின் ஒருபக்கம். அதற்கு இன்னொருபக்கமும் இருக்கிறது” என்று தொடர்ந்தார்...

“கடந்த வருஷம் ஒருவர் வந்தார். வழக்கமாக வயதானவர்கள்தான் என்னைத் தேடி வருவார்கள். அவரைப் பார்த்தால் வயதானவர் போல் தெரியவில்லை. ஆனால், வயதானவரின் அத்தனை அறிகுறிகளும் அவரிடம் இருந்தன.

`என்ன வயசு சார், உங்களுக்கு...’

`நாற்பத்தேழு’ என்றார்.

`என்ன சார் பிரச்னை?’

`ஒண்ணா, ரெண்டா... நான் அனுபவிக்கிற கஷ்டத்தைப் பட்டியல் போட்டு சொல்லணும். அவ்வளவு கஷ்டங்கள் டாக்டர்’ என்றார்.

`ஒவ்வொண்ணா சொல்லுங்க... எல்லாத் தையும் சரி செய்துடலாம்’ என்றேன்.

முதுமைக்கு மரியாதை! - தோள் கொடுப்போம்...  துணை நிற்போம்!

`பசியில்லை... சரியா தூக்கம் வரலை. மலச்சிக்கல் இருக்கு. சாப்பிட்டா நெஞ்செல்லாம் எரியுது. கைகால்கள்ல ஒருவித நடுக்கம் வருது. குடும்பத்துலேயும் நிறைய பிரச்னைகள். சம்பாதிக்கிற பணம் போதலை. ஒரே பையனும் சரியில்லை. மனசு முழுக்க பாரம். நிறைய சிகரெட் பிடிப்பேன். கொஞ்ச நாளா குடிக்க ஆரம்பிச்சுட்டேன். நேத்து கீழே விழுந்துட்டேன். உடம்பு பூரா வலி. நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்’ என்றார்.

`சரியான நேரத்துலதான் வந்திருக்கீங்க. இளமையில் முதுமை என்பார்கள். அந்த நிலைக்கு நீங்க வந்திருக்கீங்க. உங்களோட பிரச்னை என்னென்ன நீங்களாகவே தெரிஞ் சுக்க முடியுது. குடிக்கறதால எல்லா பிரச்னையும் தீரவே தீராது. முதல்ல அதை நிறுத்துங்க. அதுக்கப்புறம் நல்லா பசியெடுக்கும். வாய்வு பிரச்னை வராது. மலச்சிக்கல் இருக்காது. அதுக்கு முன்னாடி உங்க உடம்பை முழுசா செக் பண்ணுங்க. சுகர் இருக்கலாம், பிரஷர் இருக்கலாம். வயித்துல புண் இருக்கலாம். என்ன இருக்குன்னு முதல்ல தெரிஞ்சுப்போம். அதுக்குப் பிறகு உடம்பு ரீதியா ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம். உங்க குடும்பத்தோராட சேர்ந்து மனம்விட்டுப் பேசி கலந்தாலோசிக்கலாம். பையனோட விருப்பத்தைக் கேட்டு அவனுக்கு என்ன தேவையோ அதை உங்களால முடிஞ்ச அளவு செய்யுங்க. காலை நேரத்தில் வாக்கிங் போங்க. முடிஞ்ச அளவு உடற்பயிற்சி செய்யுங்க. நல்லா தூக்கம் வரும். ஃபுல் பாடி செக்கப் பண்ணிட்டு ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வாங்க’ என்று அனுப்பி வைத்தேன்.

சென்றவர் இரண்டு மாதங்கள் கழித்து திரும்பி வந்தார். மெடிக்கல் ரிப்போர்ட்டையும் ட்ரீட்மென்ட் விவரத்தையும் காண்பித்தார். எதிர்பார்த்தபடி லிவரில் பிரச்னை இருந் திருக்கிறது. குடியை முழுவதுமாக நிறுத்திவிட்டு, லிவருக்கான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர் ஓரளவு தெளிவாக இருந்தார். பேச்சில் தன்னம்பிக்கை தெரிந்தது. இளமையில் முதுமைக்குச் சென்றவர் மீண்டும் இளமைக்குத் திரும்பியதை உணர்ந்தேன்.

இந்த இரண்டும் மனித வாழ்க்கையில் பலருக்கும் நடக்கிற விஷயங்களாக இருந்தாலும் முதுமை என்கிற பருவத்தை அடைகிறபோது நமக்குள் நடக்கும் சில விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்வது முக்கியம்” என்றவர்...

“முதுமை என்பது எப்போது தொடங்குகிறது என்று என்னிடம் பலர் கேட்பார்கள். அவர் களுக்கு நான் சொல்லும் பதில்... முதுமைக்கு வயதில்லை. அது ஒரு பருவம். அவ்வளவுதான். நம் நாட்டில் 58 வயதுக்கு மேல் முதுமைப் பருவம் தொடங்குகிறது என்று அரசாங்கம் ஒரு கோடு போட்டிருக்கிறது. இது ஒரு குறியீடுதானே தவிர, வயதானவர்கள் என்று சொல்ல முடியாது. இந்த வயது வரம்பும் இப்போது மாறிக்கொண்டேதான் இருக்கிறது. 60 என்கிறார்கள். இதுவும் மாறலாம்.

வயதை வைத்தோ, தோற்றத்தை வைத்தோ சொல்ல முடியாத நிலையில் எதை வைத்துதான் சொல்வது என்ற கேள்வி எழலாம். ஆனால், ஒருவருக்கு வயது ஆக ஆக எல்லா உறுப்புகளின் செயல்திறன்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே போகும். குறையாதது ஒருவருடைய மனநிலை மட்டும்தான். மனம் மட்டும் எப்போதும் எதையாவது எண்ணி ஓய்வின்றி அசை போட்டுக்கொண்டே இருக்கும். அதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

முதுமையில் மனம் ஒரு குரங்கு போல் என்பார்கள். வேறு சிலர் மனம் ஒரு மதம் பிடித்த யானையைப் போல் என்பார்கள். வேறு சிலரோ பாலைவனத்தில் கானல் நீரில் தண்ணீரைத் தேடி அலையும் மானைப் போல என்பார்கள். முதுமையை நலமுடன் கடக்க வேண்டும் என்றால் முதலில் அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ஒருவரின் மனோ பலத்துக்கு மரணத்தைக் கூட வெல்லும் சக்தி உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்து வந்த ஒரு முதியவருக்கு வயிற்றுவலிக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், ஆபரேஷன்போது வயிற்றில் புற்றுநோய் தீவிர நிலையில் இருந்ததால் அறுவை சிகிச்சை எதுவும் செய்ய முடியவில்லை. உறவினர்களிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டு, பெரியவரிடம் வாய்வுத் தொல்லை என்று மருந்து கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து மறுபரிசீலனைக்கு அவர் வரவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து முதியவரின் உறவினர் மூலம் அவரை நேரில் சென்று பார்த்தபோது அவர் வயல் காட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு உள்ளதைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன் அவரிடம் தெரிவித்திருந் தால், அவர் மனம் பலம் இழந்திருக்கலாம், அவர் நோயை அதுவே தீவிரப்படுத்தி இருக்கலாம்... எதுவும் நடந்திருக்கலாம்.

ஆரோக்கியமாக வாழ்ந்து, முதுமையை முடிந்தளவுக்குத் தள்ளிப்போட நாம் நம்மை முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதைச் செய்து முடிக்க அல்லது சாதித்துக் காட்ட முதலில் மனதில் அதீத உறுதி வேண்டும்.

நம் முயற்சியில் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற எண்ணத்தை நம் ஆழ் மனத்தில் விதைக்க வேண்டும். பின்பு அதே உறுதியில், நாம் நினைத்ததைச் செயல்படுத்த வேண்டும். இதைத் தவறாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் முதுமையையும் வெல்ல முடியும்” என்றவர்...

“ஆனால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் மனத்தில் தோன்றும் மாற்றங்கள் குறித்தும் முதியோர்களும் அவர்களைச் சார்ந்த இளையோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என்றார் முத்தாய்ப்பாக...

முதுமை என்பது முடிவல்ல. அதுவும் ஓர் ஆரம்பமே. சுமையல்ல... சுகமே. இதையெல்லாம் எடுத்துணர்த்தும்விதமாக நம்மிடையே நடை போடுபவர்களும் இருக்கத்தான் செய் கிறார்கள். அதை முதியவர்களுக்கு மட்டு மல்லாமல் குழந்தைகள், இளையவர்கள், வாலிபர்கள் என அனைவருக்குள்ளும் கடத்தும்போதுதான் முதுமைக்கு மரியாதை உறுதிப்படுத்தப்படும். முதியவர்களுக்கான உதவி, உணவு, உடை, உபகரணங்கள், மகிழ்ச்சி என அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்யும்போதுதான், முதுமை என்பது ஆரம்பமே என்பதும் அனைவராலும் உணரப் படும். அதை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.

- துணை நிற்போம்...

உயரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை

* ‘இந்தியாவில் முதியோர் 2021’ என்ற தலைப்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கை, 2021-ம் ஆண்டில் இந்தியாவில் 6.7 கோடி ஆண்கள் மற்றும் 7.1 கோடி பெண்கள் உட்பட கிட்டத் தட்ட 13.8 கோடி முதியவர்கள் உள்ளனர் என்கிறது.

* 2011-ம் ஆண்டில் தமிழகத்தில் 75.10 லட்சம் என்றிருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2021-ம் ஆண்டில் 1.04 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2031-ம் ஆண்டில் 1.42 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இப்போது தமிழ்நாட்டில் 13.6 சதவிகிதம் என்று உள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2031-ம் ஆண்டில் 18.2 சதவிகிதமாக உயர்ந்து, இந்தியாவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism