சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“எனக்கு இவர் துணை... இவருக்கு நான் துணை... இதுதான் நிரந்தரத் துணை!”

ரேவதி – சங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேவதி – சங்கரன்

வெளியூர் வேலையில வீட்டுச் சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்ட இவருக்கு, சமைக்கவே தெரியாத நான் ஜோடியா சேர்ந்தேன். எங்க வாழ்க்கையில அப்போ ஆரம்பிச்ச காமெடி, இப்போவரை தொடருது

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

இளமை ஊஞ்சலாடுகிறது... ரேவதி – சங்கரன் ஜோடியின் அந்நியோன்யத்தைப் பார்க்கையில் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. உடலுக்குத்தானே வயது மூப்பெல்லாம்... உள்ளத்துக்கு ஏது... அதனால்தான் 80-களிலும் ‘இளமை திரும்புதே’ என டூயட் பாடிக்கொண்டிருக்கின்றனர் இந்த க்யூட் கப்பிள். அகவை கூடக் கூட அன்பும், ஒருவர்மீதான மற்றொருவரின் அக்கறையும் கூடுவது முன்னுதாரணத் தம்பதியாக ரேவதி – சங்கரன் மீதான மதிப்பைக் கூட்டுகிறது.

நடிகை, பாடகி, நடனக்கலைஞர், சின்னத்திரை தொகுப்பாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், கிராமிய வாழ்வியலின் சிறப்புகளை எடுத்துரைப்பவர் என்று பன்முகம் கொண்ட ரேவதி, 81 வயதிலும் துடிப்புடன் இயங்குவது ஆச்சர்யம். கணக்காளரான கணவர் சங்கரனுக்கு வயது 87. பணி ஓய்வுக்குப் பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து, இப்போதும் பிஸியாக நடித்துவருகிறார் இவர்.

``முதுமையில் தனிமை வாழ்க்கை சுகமா... சுமையா?’’

“இது அவரவர் வாழ்க்கைமுறையையும் மனப்பக்குவத்தையும் பொறுத்தது. பெற்றோர், பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள், உறவுகளெல்லாம் சீஸனுக்கு வந்துட்டுப் போகிற பறவைகள்போல. பலவிதமான பறவைகளும் வந்துட்டுப் போனாத்தான் சரணாலயத்துக்கு அழகு. அதேசமயம், தனக்கே உண்டான வனப்புடன் எல்லா காலத்துலயும் அந்தச் சரணாலயம் உற்சாகமா பிரகாசிக்கும். அதுபோலத்தான் எங்க ரெண்டு பேரின் பிணைப்பும். இந்தத் தனிமை வாழ்க்கையில எங்க அன்பையும் பாசத்தையும் இன்னும் இன்னும் ஆழமா வெளிப்படுத்துறோம்!”

- தங்களின் வாழ்வையும் மனதையும் செதுக்கிக்கொண்ட பக்குவத்தை முன்னுரையாகப் பேசும் ரேவதியும் சங்கரனும், தங்கள் இல்லறத்திலிருந்து நமக்கான பாடம் சொல்ல நிறைய சுவாரஸ்யங்களையும் சங்கதிகளையும் வைத்துள்ளனர்.

“வெளியூர் வேலையில வீட்டுச் சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்ட இவருக்கு, சமைக்கவே தெரியாத நான் ஜோடியா சேர்ந்தேன். எங்க வாழ்க்கையில அப்போ ஆரம்பிச்ச காமெடி, இப்போவரை தொடருது. 19 வயசுல காலேஜ் முடிச்சதுமே எனக்குக் கல்யாணம். அந்த 1960-கள்ல பெண்களுக்குச் சமையல் தெரிஞ்சுருக்கணும்கிறது எழுதப்படாத விதி. ‘மெதுவா கத்துக்கலாம், நான் பார்த்துக்கிறேன்’னு இவர் கொடுத்த நம்பிக்கைதான் திருமண பந்தத்துமேல எனக்கிருந்த தயக்கத்தை உடைச்சுது.

“எனக்கு இவர் துணை... இவருக்கு நான் துணை... இதுதான் நிரந்தரத் துணை!”

இவர் என்னைப் பெண் பார்க்க வந்தப்போ, ‘அதிகமா பேசுறா; இவளுக்கு மாட்டுப் பல்லுடா...’னு இவரோட அக்கா இவர்கிட்ட சொல்லியிருக்காங்க. கல்யாணத்துக்கு அப்புறமா இதை என்கிட்ட சொன்னார். ‘அப்போ ஏன் என்னைக் கட்டிக்கிட்டீங்க?’னு கேட்டேன். ‘யாரோ ஒருவர் பெத்து வளர்த்த பெண்ணை, அது சரியில்லை, இது சரியில்லைனு குறை சொல்ல நான் யார்?’னு வெள்ளந்தியா சொன்னார். அப்போ இவர் சொன்னதுலயே ரொம்ப முக்கியமானது... `நாம புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தாலும் உன் தனித்தன்மையைக் காப்பாத்திக்கிறது உன் பொறுப்புதான்' என்பது. இப்படித் தொடக்கத்துலயே என்னை இம்ப்ரெஸ் பண்ற மாதிரி ஆழமா நங்கூரம் போட்டு மனசைக் கவர்ந்துட்டார்...” வெட்கத்துடன் சொல்லும் ரேவதிக்குப் பூர்வீகம் மதுரை. அதனால்தானோ என்னவோ, வீட்டிலும் ‘மீனாட்சி ராஜ்ஜியம்’தான்.

“எனக்குப் பூர்வீகம் கும்பகோணம். ஆனா, வளர்ந்தெல்லாம் கொல்கத்தாவுல. சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட் முடிச்சுட்டு, பரபரப்பா வேலையே கதினு இருந்தேன். பெரிசா வெளியுலகத்துல கலக்காம இருந்த எனக்கு, ரேவதிதான் வாழ்க்கைமீதான விசாலமான பார்வையைக் கொடுத்தாங்க. மனுஷங்க மதிப்பையும் புரியவெச்சாங்க” தனக்கும் சேர்த்தே பேசி மனைவி அதகளம் செய்வதால், சுருக்கமாகப் பேசிவிட்டு அவருக்கு வழிவிடுகிறார் சங்கரன்.

``எங்க ரெண்டு பசங்களும் பச்சிளம் குழந்தைகளா இருந்தப்போ, எண்ணெய் தேய்ச்சுவிட்டு குளிப்பாட்டுறது, தூங்க வெக்கிறதுனு தாய் ஸ்தானத்துலயும் இவர் பொறுப்பா செயல்பட்டார். உன் திறமையை உனக்குள்ளயும், வீட்டுக்குள்ளயும் மட்டுமே வெச்சுக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லைனு தட்டிக்கொடுத்தார். அதனாலதான் 30 வயசுக்கு அப்புறமா விளம்பரப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.

“எனக்கு இவர் துணை... இவருக்கு நான் துணை... இதுதான் நிரந்தரத் துணை!”

ஒருமுறை இயக்குநர் கே.பாலசந்தர் சார்கிட்டேருந்து அழைப்பு வந்துச்சு. இவர்தான் என்னைக் கூட்டிட்டுப்போனார். ‘நான் நடிக்கிறதா..?’னு கே.பி சார் கொடுத்த வாய்ப்பை ஏற்க மறுத்தேன். ‘இவ நல்லா பாடுவா, ஆடுவா சார்...’னு எனக்காக இவர் சிபாரிசு பண்ணினார். ‘இந்தக் காலத்துல இப்படியொரு புருஷனா?’னு இவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட பாலசந்தர் சார், என்னை வம்படியா அவர் சீரியல்ல நடிக்கவெச்சார். ஷூட்டிங் முடிஞ்சு நடுசாமத்துல தாமதமா நான் வீட்டுக்கு வந்தா, அதுக்குள்ளாற சமையல் செஞ்சுவெச்சு காத்துகிட்டிருப்பார். நாலு பேர் நாலுவிதமா நினைப்பாங்க, பேசுவாங்கன்னு இவர் கவலைப்படலை.

இவர் தனியார் கம்பெனியில ஜெனரல் மேனஜரா பெரிய பொறுப்பு வகிச்சார். நல்லா சம்பாதிச்சார். 1993-ல் ரிட்டயர்மென்ட் எடுத்தவர், ‘இத்தனை காலமா குடும்பத்துக்காக நீ ரொம்பவே சிரமப்பட்டிருக்கே. இனி குடும்பத்தை நான் பார்த்துக்கிறேன். உனக்குப் பிடிச்சதை இன்னும் ஆர்வமா பண்ணு’னு சொன்னார். இசைப் பேருரை (ஹரிகதா காலட்சேபம்) வழங்குறது, ஆன்மிக சொற்பொழிவுனு அதுக்கப்புறமாத்தான் நிறைய மேடைகள் ஏறினேன். கணவனைவிட மனைவி அதிகமா சம்பளம் வாங்கினாலும், புகழ்பெற்றாலும்கூட பல குடும்பங்கள்ல சண்டை வருவதுண்டு. ஆனா, என் வளர்ச்சியை இவர் பெருசா கொண்டாடினார். மேடை நிகழ்ச்சியில நான் பேசிக்கிட்டிருக்கும்போது, எனக்காக ஃப்ளாஸ்க்ல கொண்டுவந்த பாலை, கூட்டத்துக்குத் தெரியாம கொடுத்து தெம்பூட்டுவார். வஞ்சகம் இல்லாத மனுஷன் இவர். யாராச்சும் போன் செஞ்சா, ‘நான் ரேவதியோட கணவர் சங்கரன் பேசுறேன்’னு தன்னடக்கமா சொல்லுவார். அப்பவும் சரி, இப்பவும் சரி... நாலு பேருக்குத் தெரிஞ்ச முகமா நான் இருக்கிறதுக்குக் காரணமே இவர்தான். ‘குடும்பப் பெண்ணா லட்சணமா வீட்டுலயே இரு’னு பழைமைவாதியா இவர் சொல்லியிருந்தா, இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா?” தன் வளர்ச்சிக்கு நிழலாக இருக்கும் கணவர்மீதான அன்பை அடுக்குகிறார் ரேவதி.

“இப்போ நான் நல்லாவே சமைப்பேன். ஆனாலும், என்னைக்காச்சும் சொதப்பிடுவேன். கடந்த 60 வருஷத்துல பேச்சுக்குக்கூட இந்த மனுஷன், என் சமையல் நல்லாயில்லைனு சொன்னதேயில்லை. இது என்மீதான பாசமா, பயமான்னுதான் இப்பவரைக்கும் தெரியலை...” நையாண்டியாக ரேவதி நிறுத்த, `மனைவியிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?' என்று சங்கரனிடம் கேட்டேன்.

“நல்லா பாடுவா. கேட்க ஆனந்தமா இருக்கும். இப்போல்லாம் சரியா காது கேட்கலை. அதனால, இவ பேசுறதும் பாடுறதும் சரியா கேட்கிறதில்லை. இதுவும் ஒருவகையில வசதியா போச்சு” என்றார் குசும்பாக.

“இப்போல்லாம் அடிக்கடி நினைவு தப்பிடுது. இவ பேருகூட மறந்துடுது. தெரியாத்தனமா, விமலா, கமலானு சொல்லிட்டா பெரிய வம்பா போயிடும். அதனால, சேஃப்டிக்காக ‘டார்லிங்’னுதான் கூப்பிடுவேன். ரேவதியும் சந்தோஷமா எடுத்துப்பா...” என்று சங்கரன் வெடிச் சிரிப்புடன் சொல்ல... “வயசானாலும், இளமை உணர்வுடன் பாசமா கூப்பிடுறீங்கனு நினைச்சா, உங்க மனசுல பல பெண்கள் இருக்காங்கபோல. உங்களைப் போலவே நானும் மறதியில வேற ஆண் பெயரைச் சொல்லி உங்களைக் கூப்பிட்டா என்ன பண்ணுவீங்க...?” கணவரிடம் ரேவதி கிண்டலாகக் கேட்க, “அப்போ எனக்கு மறதி இன்னும் அதிகமாகிடும். அதையெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டேன்” என பவ்யமாகிறார் சங்கரன்.

“ஒருமுறை ஞாபகமறதியில என் பிறந்தநாளுக்கு ஒரு மாசத்துக்கு முன்பே பரிசு கொடுத்தார். ‘அதனால என்ன... அன்பா கொடுத்திருக்கேனேன்னு பாராட்டுவியா...’னு இவர் அசடு வழிய, ‘அப்படியெல்லாம் பெருந்தன்மையா எடுத்துக்க மாட்டேன்’னு செல்லமா கோவிச்சுகிட்டேன். இதுதான் நான். என்னைச் சமாளிக்கிறது கஷ்டம்னாலும், இவரைத் தவிர எனக்குப் பொருத்தமான புருஷனா இன்னொருத்தர் கிடைச்சிருக்கவே மாட்டாங்க. இவருக்கும் என்னைத் தவிர, கமலா, விமலானு வேறு ஒரு பெண் அமைஞ்சிருக்கவும் வாய்ப்பில்லை. இதுக்குப் பேருதான் பிராப்தம். வயசான காலத்துல சிரிச்சு சந்தோஷப்பட இப்படியான தமாஷெல்லாம் தேவைதான்” என்று யதார்த்தம் சொல்லிச் சிரிக்கிறார் ரேவதி.

“ரேவதி மூலமா எனக்கும் விளம்பரப் படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சுது. 30-க்கும் அதிகமான விளம்பரப் படங்கள்ல நடிச்சிருக்கேன். பல விளம்பரங்கள்ல நாங்க சேர்ந்து நடிச்சிருக்கோம். ஆனா, எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். ரொம்ப குறைவான படங்கள்தான் பார்த்திருக்கேன்” என்னும் சங்கரனிடம், பிடித்த நடிகை யார் எனக் கேட்டேன். நீண்ட யோசனைக்குப் பிறகு,

“டி.ஆர்.ராஜகுமாரி...” என்கிறார் லேசான புன்னகையுடன்.

“நான் நடிச்ச `மிடில் கிளாஸ் மாதவன்' படத்தை தியேட்டர்ல ஒண்ணா பார்த்தோம். அது தவிர நாங்க சினிமாவுக்குப் போன நினைவு பெரிசா இல்லை. ஆனா, கல்யாணத்துக்கு முன்பு இவர் சினிமா பெருசா பார்க்கலைங்கிறதையும், டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான் இவரோட கனவுக் கன்னிங்கறதையும் என்னால நம்ப முடியலை. சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, பத்மினியை எல்லாம் தெரியாதுனு இவர் சொல்லுறது நம்புற மாதிரியா இருக்கு?

‘மிஸ் சென்னை’ பட்டம் பெற்ற பிறகு, த்ரிஷா நிறைய விளம்பரப் படங்கள்ல நடிச்சாங்க. அந்தப் பொண்ணுடன் நான் ஒரு சமையல் விளம்பரத்துல நடிச்சேன். அதைப் பத்தி இவர்கிட்ட சொன்னதுதான் போதும். அடிக்கடி த்ரிஷாவைப் பத்திக் கேட்பார். இவருக்குப் பிடிச்ச நடிகைகள் லிஸ்ட்டுல த்ரிஷாவும் இருக்க வாய்ப்பிருக்கு. இப்ப அடக்கமா பொய் சொல்றார்னு நினைக்கிறேன்” என்று கலகலப்பூட்டும் ரேவதி, முதன்முறையாகப் பேட்டி கொடுக்கும் தன் கணவர் சங்கரனின் பேச்சை ரசித்துக் கேட்கிறார்.

“நான் அல்லி ராணி மாதிரி. இவர் ரொம்பவே சாஃப்ட் நேச்சர். கோபமே பட மாட்டார். கோபம் வந்தா நான் ரொம்ப கத்திடுவேன். ஆனா, எவ்ளோ சண்டை போட்டாலும், கொஞ்ச நேரத்துலயே சண்டையை மறந்துட்டு சகஜமா இவர்கிட்ட பேச ஆரம்பிச்சுடுவேன். எந்தப் பிரச்னையையும் நாள் கணக்கா தகிக்க விட மாட்டோம். பண விஷயத்துல எனக்குப் பெருசா அனுபவமோ, புத்திசாலித்தனமோ கிடையாது. அதனால, ஒருநாளும் அவர் என்னைக் கடைக்கு அனுப்ப மாட்டார். தினமும் காய்கறிகளை வாங்கிட்டு வர்றது மட்டுமில்லாம, அதை நறுக்கி வெச்சுட்டு, என்ன சமையல் பண்ணணும்னு சொல்லிடுவார். பாதி வேலை முடிஞ்சுடுச்சுனு இவர் விருப்பத்துக்கு ஏற்ப மீதி வேலையை நான் பண்ணிடுவேன்.

“எனக்கு இவர் துணை... இவருக்கு நான் துணை... இதுதான் நிரந்தரத் துணை!”

நான் வேலையா இருந்தா, காபி போட்டுக் கொடுப்பார். மசாலாப் பொரி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி அதை செஞ்சு கொடுப்பார். அதைச் சாப்பிட்டுக்கிட்டே கதை பேசி பொழுதைக் கழிப்போம். நிறைய புத்தகம் படிப்போம். கம்யூட்டர்ல நிறைய விஷயங்களை ஆர்வமா கத்துப்பேன். எங்க வீட்டுல வளர்க்கிற மூலிகைச் செடிகளையும் இவர் அக்கறையா கவனிச்சுப்பார். ரெண்டு பேரும் தனியாத்தான் வாழுறோம். ஆனா, வெறுமையை ஒருநாளும் உணரலை. நிறைய விட்டுக்கொடுத்தால்தான், வீட்டுல சந்தோஷம் பெருகும். அப்படித்தான் எங்க வாழ்க்கையை சந்தோஷமா அமைச்சுகிட்டோம்.” முதுமையிலும் இனிமையான வாழ்க்கைக்கு வழி சொல்லும் ரேவதி...

“வயசான காலத்துல பெண்களுக்கு உடல்நல பாதிப்புகள் அடிக்கடி வரும். அப்போ கைபிடிச்சு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போய் அனுசரணையா கவனிச்சுக்க கணவரைப்போல உறுதுணையா வேற யாராலயும் இருக்க முடியாது. இவருக்குச் சரிவர காது கேட்காட்டியும், எனக்கானதைப் பார்த்துப் பார்த்துச் செய்வார். வயசான காலத்துல தலை சாஞ்சு ஆசுவாசப்பட எல்லாருக்குமே அன்பான தோள் தேவை. அந்த வகையில எனக்கான பிடிப்பு எல்லாமே இவர்தான். வெளிநாட்டுல வசிக்கிற எங்க ரெண்டு பசங்களும் அப்பப்போ வந்து எங்களைப் பார்த்துட்டுப் போவாங்க. அவங்க சந்தோஷத்துல நாங்க எந்த வகையிலும் சுமையா இருக்க விரும்பலை. எனக்கு இவர் துணை; இவருக்கு நான் துணை. இதுதான் நிரந்தரத் துணை!

குறைபட்டா எல்லாமே குறைதான். நிறைவு காண விரும்பினா, வெறுமையிலும் சந்தோஷம் காணலாம். பிள்ளைகள் நம்மைக் கேட்டுப் பிறக்கலை. அதனால, அவங்களுக்கு நாம செஞ்ச கடமைகளை நினைவுகூரக் கூடாது; அவங்க தயவை எதிர்பார்த்தும் வாழக் கூடாது. ஓய்வுகாலத்துல கடன் சுமை இருக்கக் கூடாது. தங்குறதுக்குக் கூரையாச்சும் இருக்கணும். பிறரை எதிர்பார்க்காத அளவுக்குப் பணம் இருந்தாலே போதும். கிடைச்ச வாழ்க்கையை வரமா ஏத்துக்கணும்; முதுமையும் ஒரு வரம்தான்” என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறார்.

“ஒவ்வொரு பூவும் ஒருவித அழகு. செடியோட வளைவு நெளிவை இயற்கையின் படைப்பா நினைச்சு ரசிக்கிற மாதிரி, ஒருத்தரோட குறைகளையும் பக்குவமா எடுத்துக்கிட்டா, யார் மேலயும் துவேஷம் வரவே வராது. நல்லதை நினைப்போம்; நல்லதையே செய்வோம். எல்லோருக்கும் வாழ்க்கை வசந்தமா அமையும். வாழ்த்துகள்” என்று ரேவதியும் சங்கரனும் கைகூப்பிச் சொல்லும் வார்த்தைகள், இ்ல்வாழ்க்கைக்கான பேருண்மைகள்.

முதுமைக்கு மரியாதை!