Published:Updated:

சில்லென்ற பயணம்; தித்திக்கும் முத்தம்; தனிமையில் இனிமை... மழைக்காலம் இப்படியாக!

`மழையில் நனையும் பனிமலரைப் போல, என் மனதை நனைத்தேன் உன் நினைவில்தானே’ எனப் பாடிக்கொண்டே, கணவனும் மனைவியும் கரம் பிடித்துக்கொண்டு, மழையில் ஆடி மகிழுங்கள்.

மழை
மழை

ழை வருவதை அறிந்து மயில் ஆடுவதைப் போல, குழந்தைகள் மட்டுமல்ல, நம் எல்லோரின் மனமும் குதூகலத்தில் கூத்தாடும். குறிப்பாகக் காதல் தம்பதியர்களுக்குக் குளிர்காலம் எப்படியோ அப்படித்தான் இந்த மழைக்காலமும். கணவனும் - மனைவியுமாக, காதலன் - காதலியுமாக இணைந்து ரொமான்ஸ் ரகசியங்களைப் பேசி, மழைக்காலத்தை அனுபவிப்பதில் கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே... உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது புரியும். இதோ தென்மேற்குப் பருவமழைக்கான காலம் ஆரம்பமாகிவிட்டது. சுட்டெரித்த சென்னை கூட, இன்று சில்லென மாறியிருக்கிறது.

மழை
மழை

மழையில் பயணம்!

பேருந்து, கார், ரயில்கள் என எதிலாக இருந்தாலும் மழை பெய்துகொண்டிருக்கும்போது பயணிக்கும் சுகம் சொர்க்கம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் மழையை அனுபவிப்பதே இல்லை. மழை பெய்ய ஆரம்பிக்கும்போதே, இடம் தேடி ஒதுங்கிக் கொள்கிறோம். அல்லது வீட்டிலேயே அடைந்துகொள்கிறோம். மழையின் சாரலை தன் முகத்தில் வாங்கியபடி, ஜன்னலோர பயணத்தை ஒருமுறை அனுபவித்துப் பாருங்கள்.

குளிர் காலத்தில் குல்ஃபி ஐஸ் சாப்பிடுவதைப்போல, அந்த ரம்மியமான அனுபவம் உங்களை அப்படியே கிரங்கடிக்கச் செய்துவிடும். வெகுதூரம் பயணிக்க முடியாவிட்டாலும், மழை பெய்யும்போது கணவன், மனைவியும் கார் எடுத்துக்கொண்டு, அருகில் இருக்கும் காபி ஷாப் வரையாவது சென்று, சில்லென்ற சூழலுக்கு இதமாக, சூடாக ஒரு கப் காபியை சாப்பிட்டு வரலாம். ரொமான்டிக்கான இந்தச் சூழலில், உங்களுக்கே தெரியாமல் நீங்கள் உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்துகொண்டிருப்பீர்கள். முடிந்தால் மழைக்காலத்துக்கு ஏற்ற சுற்றுலாத் தலத்தை தேர்வு செய்து, அங்கு பயணியுங்கள்.

மழை
மழை

ஜன்னல் கதவருகே கதை பேசுங்கள்!

மழையில் நனைந்தபடி வெளியில் செல்வது சுகம் என்றால், வீட்டில் இதமாய் இருப்பது வேறுமாதிரியான சுகம். மழைக்காலம் வழக்கமான சீதோஷ்ண நிலையைவிட, மனதுக்கும், உடலுக்கும் இதம் தருவதாக இருக்கும். வெளியில் சென்று மழையை அனுபவிக்க விருப்பம் இல்லாதவர்கள், தங்களின் துணையுடன் வீட்டிலேயே உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம். இருவருமாக இணைந்து கணவனுக்குப் பிடித்ததை மனைவியும், மனைவிக்குப் பிடித்த உணவுகளைக் கணவனும் அக்கறையுடன் தயார் செய்து ஆசை ஆசையாய் பரிமாறலாம்.

இந்த இரவு விருந்து ஏற்பாட்டை ஜன்னல் ஓரங்களில் அமைத்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். மழையின் சங்கீதத்துடன், கேண்டில் லைட் டின்னரில் உணவுகளை ருசித்து மகிழும்போது நீங்கள் உணர்வுபூர்வமாய் உணர்வீர்கள்.

மழை நேரத்தை முத்தங்களால் அலங்கரியுங்கள்!

மழை
மழை

வார்த்தைகள் அவசியமற்ற தருணத்தில், பேச்சுக்கு அணையிடும் இயற்கை கருவியாக இருப்பது முத்தம் மட்டுமே. அப்படியான முத்தங்களை இந்த மழைக்காலங்களில் ஒருவொருக்கொருவர் பரிமாறிக் கொள்வதில் தயக்கமே காட்டாதீர்கள். மழை நேரங்களில் பால்கனிகள், ஜன்னல் ஓரங்கள் எப்படி ரம்மியமானவையோ, அப்படித்தான் முத்தங்களில் முத்தெடுக்கப் படுக்கையறையும். மழை வரும் சமயம் முத்த விளையாட்டுடன், உடலுறவு கொள்வது அந்த நேரத்துக்கு மட்டுமல்ல, உறவின் ஆயுள் உள்ள வரை சுகம் தரக் கூடியதாக இருக்கும். மனமுவந்து கொடுக்கும் முத்தம் மகத்தானது மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் ஆதாரம்.

பொழுதுபொக்கில் திளையுங்கள்!

மழைவரும் சமயம் எல்லோரும் வழக்கமாகச் செய்யும் விஷயம் பாடல்களைக் கேட்பது. பயணம் செய்துகொண்டிருக்கும் சமயத்தில் மழை வந்துவிட்டால் `அந்திமழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ என்கிற மழைப்பாடலை உடனே கேட்கத் தோன்றும். அதுவும் மழைக்கால பாடல்களை துணையுடன் கேட்டு மகிழ்வதில் கிடைக்கும் சுகம் அலாதியானதாக இருக்கும். ஹெட்செட்டின் ஒருமுனை கணவனின் காதிலும், மறுமுனை மனைவியின் காதிலும் பகிர்ந்திருக்க, மெல்லிய பாடல்கள் காதுகளில் ஒலிக்க, மழைச்சாரல் முகத்தில் தெறிக்க, இருவரின் நெருக்கமும் ஆனந்தத்தை அளிக்க... இப்படியான ரம்மியமான தருணம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததாய் இருக்கும்.

மழை
மழை

மழை நேரங்களில் ஒன்றாய் புத்தங்களை வாசிப்பதும், அதுபற்றிய உரையாடல்களைத் தொடர்வதும் சுவாரஸ்யமான உணர்வையே ஏற்படுத்தும். திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இருப்பவர்கள், வீட்டின் அறையை அதற்கேற்ற மாதிரி அமைத்து, கை நிறைய நொறுக்குத் தீனிகளுடன் அருகருகே அமர்ந்து நாள் முழுவது திரைப்படங்களில் மூழ்குங்கள். இதுவும் ஒரு தனி சுகம்தான்.

மழையில் நனையுங்கள்!

'மழையில் நனையும் பனிமலரைப் போல, என் மனதை நனைத்தேன் உன் நினைவில்தானே’ எனப் பாடிக்கொண்டே, கணவனும் மனைவியும் கரம் பிடித்துக்கொண்டு, மழையில் ஆடி மகிழுங்கள். அப்போது கிடைக்கும் துணையின் ஸ்பரிசம், கோடி கொடுத்தாலும் கிடைக்காது. தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரில் குத்தி விளையாடி இருவரும் குழந்தையாய் மாறுங்கள். இதுவெல்லாம்தான் மழைக்காலத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாட சிறந்த தருணங்கள். மழையில் கைகோத்துக் கொண்டு, சின்னதாக ஒரு வாக்கிங் போய்வருவதும், இருவருக்குமான அன்யோன்யத்தை அதிகப்படுத்தும். ஒரு குடைக்குள் இருவர் நிற்கும்போது கிடைக்கும் கதகதப்பும், அரவணைப்பும் உறவின் ஆழத்துக்கே இருவரையும் அழைத்துச் செல்லும். 

இந்த மழைக்காலம், உங்கள் இருவருக்குமானதாய் அமையட்டும்!.