Published:Updated:

“சாதி தோற்றது... காதல் வென்றது!”

செல்வன் - இளமதி
பிரீமியம் ஸ்டோரி
செல்வன் - இளமதி

வீட்ல சொன்னா எப்படியாவது புரிஞ்சிப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, சாதியைக் காரணம் காட்டி எங்க வீட்டுல காதலுக்கு ஒத்துக்கலை

“சாதி தோற்றது... காதல் வென்றது!”

வீட்ல சொன்னா எப்படியாவது புரிஞ்சிப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, சாதியைக் காரணம் காட்டி எங்க வீட்டுல காதலுக்கு ஒத்துக்கலை

Published:Updated:
செல்வன் - இளமதி
பிரீமியம் ஸ்டோரி
செல்வன் - இளமதி

மார்ச் 9, 2020. ஒரு காதல் சினிமாவின் இறுதிக்காட்சியைப் போல, கரம்கோத்துத் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கத் தயாரானார்கள் செல்வனும் இளமதியும். உருகி உருகிக் காதல் செய்து, அது திருமணத்தில் முடிந்த சந்தோஷம் அவர்களுக்கு ஒரு நாள்கூட நீடிக்கவில்லை. பெண் வீட்டார் என்று சொல்லிக்கொண்டு திபுதிபுவென வந்தவர்கள், இருவரையும் தனியே பிரித்து அடித்து காரில் இழுத்துச் சென்றனர். ‘இருவரையும் கொன்று வீசிவிடுவோம்’ எனக் கடும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இத்தனைக்கும் காரணம் ஒரு காதலும், அதையொட்டி நடந்த சாதி மறுப்புத் திருமணமும்தான்.

இளமதி ஆதிக்கச்சாதி. செல்வன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். சாதி என்னும் கொடூரக் கரங்களால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகப் பிரித்து வைக்கப்பட்ட அந்த இளம் தம்பதியினர், அப்போதும் பிடிவாதமாக தங்களுடைய காதலில் உறுதியாக நின்றனர். காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என, காதலுக்காக மீண்டும் ஒரு போராட்டத்தில் இறங்கினர். ஒன்றரை ஆண்டுக்காலப் போராட்டத்தின் இறுதியில் காதலே வென்றது.

“சாதி தோற்றது... காதல் வென்றது!”

செல்வன் - இளமதி தம்பதியரைச் சந்திக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகிலுள்ள தர்மாபுரி கிராமத்திற்குச் சென்றேன். வீட்டின் முன்பக்கச் சுவரில் பெரியார், அம்பேத்கரின் ஓவியங்கள் சிரித்தபடி நம்மை வரவேற்றன. அளவான ஓட்டு வீடு. பூசப்படாத செங்கல் சுவருடன் இருந்த அந்த வீடு முழுக்கக் காதல் விரவிக் கிடந்தது. வாஞ்சையாய் நம்மை வரவேற்ற செல்வன் - இளமதி தம்பதியர் சேர்ந்து சூடாக ஒரு கப் காபி போட்டுக் கொடுத்துவிட்டு, பேச ஆரம்பித்தனர்.

‘‘காட்டன் மில் ஒண்ணுலதான் நான் முதல்ல இளமதியைப் பார்த்தேன். ஆரம்பத்துல நண்பர்களாக இருந்த நாங்க ரெண்டு பேரும், ஒரு கட்டத்துல காதலிக்க ஆரம்பிச்சோம். பேசிப் பழகி ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டு, நான் என்ன சாதி, என்னோட குடும்பப் பின்னணி எல்லாம் முதல்ல இளமதிகிட்ட சொன்னேன். என் வீட்டுக்கு வந்து பார்த்தாதான் என் குடும்பத்தோட நிலைமை தெரியும்னு அவங்களை என் வீட்டுக்கும் கூட்டிட்டுப் போனேன். அம்மா, பாட்டிகிட்ட இந்தப் பொண்ணைத்தான் லவ் பண்றேன். கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன். ‘இதெல்லாம் சரியா வருமா. தேவையில்லாத பிரச்னை வரும்’ன்னு வீட்ல பயந்தாங்க. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு நாங்க ரெண்டு பேரும் உறுதியா இருந்தோம்” எனப் பேச, இளமதி குறுக்கிட்டார்.

“சாதி தோற்றது... காதல் வென்றது!”

“வீட்ல சொன்னா எப்படியாவது புரிஞ்சிப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, சாதியைக் காரணம் காட்டி எங்க வீட்டுல காதலுக்கு ஒத்துக்கலை. என்னை வேலைக்குப் போக வேணாம்னு சொன்னதோட, மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. உடனே நான் செல்வன்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். மேட்டூர் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல எங்களோட ஆவணங்களைக் கொடுத்து, கல்யாணத்துக்கான ஏற்பாடுகளைச் செஞ்சோம். அது எப்படியோ எங்க வீட்டுக்குத் தெரிஞ்சதால அவசர அவசரமா கல்யாணம் செய்ய வேண்டியதாப் போச்சு. கல்யாணம் நடந்துட்டா எங்க வீட்டுல ஏத்துப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, எங்க கல்யாணத்தன்னைக்கு நடந்த விஷயங்கள் அவ்ளோ கொடூரமா இருக்கும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை” என்று சொல்லும்போது இளமதியின் குரலில் இன்னும் பதற்றத்தின் மிச்சம்.

தொடர்ந்து பேசிய செல்வன், “நான் திராவிடர் விடுதலைக்கழகத்தில் இருக்கேன். காலையில மேட்டூர் பெரியார் படிப்பகத்துல கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அன்னைக்கு ராத்திரி 9 மணி இருக்கும். இளமதியோட சொந்தக்காரங்க 40-50 பேர் வந்து, எங்க அமைப்பைச் சேர்ந்தவங்களை அடிச்சு, என்னையும் இளமதியையும் பிரிச்சுக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அம்மா, பாட்டி, தம்பின்னு சாதாரண குடும்பம் என்னோடது. குடும்பப் பின்னணி, பொருளாதாரம் என எதுவும் இல்லை. எங்க அமைப்போட தலைவர் கொளத்தூர் மணி எப்படியாவது நம்மளைக் காப்பாத்திடுவாருன்னு நினைச்சேன். அதேநேரம் இளமதியின் மனசை அவங்க வீட்டில் மாத்திட்டா என்ன பண்றதுன்னு பதற்றமாவும் இருந்துச்சு. அதேமாதிரி நாலு நாள் கழிச்சு இளமதி ஸ்டேஷனுக்கு வந்து `எங்க அம்மா - அப்பாவோட போறேன்’னு சொல்லிடுச்சு. எனக்கு ஒரே ஷாக்” என்றார்.

“சாதி தோற்றது... காதல் வென்றது!”

இடைமறித்த இளமதி, “என்கிட்ட ‘அவன்கூட நீ போனீன்னா அவனைக் கொன்னுடுவோம். உன்னையும் சேர்த்துக் கொன்னு போட்ருவோம்’ன்னு மிரட்டினாங்க. நான் அந்தச் சமயத்துல ரொம்ப பயந்துட்டேன். எங்க அம்மா அப்பா அப்போ கூட இல்லை. சொந்தக்காரங்கதான் மிரட்டுனாங்க. என்னை செல்வன் கிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டு வந்து, என் மனசை மாத்துறதுக்காக ஒருவாரம் ஒரு சொந்தக்காரங்க வீட்ல என்னை வச்சிருந்தாங்க. அதுக்குள்ள இவர் கேஸ் கொடுத்து எங்க வீட்டு சைடுல 18 பேர் ஜெயிலுக்குப் போயிட்டாங்க. உன்னாலதான் இத்தனை பேர் ஜெயிலுக்குப் போனாங்கன்னு சொல்லி இன்னும் பிரச்னை பெரிசாச்சு. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. அதனாலதான் ஸ்டேஷன்ல ‘எனக்கு செல்வன்கூடப் போக விருப்பம் இல்லை’ன்னு சொல்லிட்டேன். கல்யாணம் நடந்த அன்னைக்கு நாங்க பார்த்துக்கிட்டதுதான, அதுக்கப்புறம் நாங்க ஒன்றரை வருஷமா பார்க்கவோ, பேசிக்கவோ இல்லை. இவரைப் பிரிஞ்சபிறகு வீட்ல தனியா அழுதுகிட்டே இருப்பேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய செல்வன், “அந்தப் பொண்ணு வீட்ல இல்ல. நாமக்கல்ல இருக்காங்க, சொந்தக்காரங்க வீட்ல இருக்காங்கன்னு ஆளாளுக்கு ஒரு ஊரைச் சொன்னாங்க. அவங்க சொன்ன இடத்துக்கெல்லாம் போய் இளமதி இருக்கான்னு தேடிப் பார்ப்பேன், நாம் எந்த திசையில போய்த் தேடுறது, எங்கயாவது நம்ம கண்ல தென்படாதான்னு. ஆனா, அவங்க வீட்டுக்குள்ளதான் இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது. இருந்தாலும் இளமதி வந்துடுவான்னு காத்திருந்தேன். அதேமாதிரி கடைசியில் காதல் வென்றது; சாதி தோற்றது” என்றார்.

“சாதி தோற்றது... காதல் வென்றது!”

இளமதி, “ஒன்றரை வருஷம் கழிச்சு ப்ரெண்ட்ஸ் மூலம் அவர்கிட்ட பேசினேன். முதல் வார்த்தையே ‘உங்களுக்குக் கல்யாணம் ஆச்சா’ன்னுதான் கேட்டேன். ஏன்னா ‘அந்தப் பையன் கல்யாணம் பண்ணிட்டான்’னு எங்க வீட்ல சொல்லியிருந்தாங்க. ‘அப்படியெல்லாம் உன்னை விட்டுட்டுப் போயிடுவனா’ன்னு அவர் கேட்டப்பதான் எனக்கு உயிரே வந்துச்சு. நான் வருவேன்னு அவர் காத்திருந்தது தெரிஞ்சதும் மறுபடியும் சேர முயற்சியெடுத்தோம். கடைசியில நாங்க போராடி ஒண்ணாச் சேர்ந்தோம். ரொம்ப நாளைக்கு அப்புறமா அன்னைக்குத்தான் மனசுவிட்டுச் சிரிச்சேன். பக்கத்துல போய் அவர் கையைப் புடிச்சுக்கிட்டேன், இனிமே அவர் கையை விடக்கூடாதுன்னு. சாதியை வெச்சு எங்களைப் பிரிச்சாங்க. ஆனால் காதலை வெச்சு நாங்க மறுபடி சேர்ந்தோம்.

“சாதி தோற்றது... காதல் வென்றது!”

இன்னும் எங்க வீட்டுல என்கிட்ட பேசலை. அவங்க என்கிட்ட பேசாம இருக்கிறதுதான் ஒரே குறையா இருக்கு. கூடிய சீக்கிரம் அவங்க என்கிட்ட பேசுவாங்கன்னு நம்புறேன். அவருக்கு சொந்தமா தொழில் செய்யணும்னு ஆசை. எல்லாப் பிரச்னையும் முடிஞ்சு வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பிச்சிருக்கோம். இதே காதலோட நாங்க கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் ஒரே ஆசை” என்று சொல்லும் இளமதியின் கரங்களை அன்புடன் பற்றிக்கொள்கிறார் செல்வன்.

காதலின், சாதிக்கு எதிரான போராட்டத்தின் உறுதி அதில் தெரிகிறது.