Published:Updated:

``பால்கோவாவும் கையுமா என்னைப் பார்க்க வருவாங்க''- மாமியார் புகழ்பாடும் ரச்சிதா!

''என் மாமியார் எப்படா எங்களைப் பார்க்க வருவாங்கன்னு எதிர்பார்த்துக் காத்திட்டிருப்பேன்....''

Rachita with her mother in law
Rachita with her mother in law

'மாமியார் மருமகள் சண்டை' இல்லையென்றால் தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கால்வாசி சீரியல்கள் இல்லை என்றே சொல்லலாம். 'வீட்டுக்கு வீடு வாசப்படி'ங்க. எந்த வீட்ல இல்ல சொல்லுங்க, இருக்கறதைத்தானே காட்டறாங்க' என்கிறீர்களா? சீரியல்களின் ஆன் ஸ்க்ரீன் கதைகள் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும், நாம் இங்கே பேசப்போவது, சீரியல் ஹீரோயின் ஒருவர் ரியல் லைஃபில் மாமியாரை அம்மாவாகக் கருதுகிற கதையை. அந்த ஹீரோயின் மருமகள் வேறு யாருமல்ல, ரச்சிதாதான். 'மாமியார் மருமகள் ஒத்துமையா இருக்காங்க'ன்னு ஊருக்குச் சொல்லி அதுல கண்ணு படறதுக்கா இதெல்லாம்...' என்று சிரித்தவர், 'டச் வுட்' என்றபடி பேசத் தொடங்கினார்.

Rachita with her mother in law
Rachita with her mother in law

''நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச முதல் சீரியலோட ஷூட்டிங் ஸ்பாட்தான் எங்களுக்குள்ள காதல் பூக்கத் தொடங்கிச்சு. புரொபோஸ் செய்தது அவருதான். பிறகு, அவரோட அம்மா அப்பா பெங்களூருவுல இருக்கிற எங்க வீட்டுக்கு வந்தாங்க. எங்களோடது ஜாயின்ட் ஃபேமிலி. முதல் சந்திப்பிலேயே ரெண்டு ஃபேமிலிக்கும் பிடிச்சுப்போச்சு. இதுல வேடிக்கை என்னன்னா, அந்தச் சந்திப்புல ரெண்டு குடும்பங்களும் பேசின வார்த்தைகளை விரல்விட்டு எண்ணிடலாம். ஏன்னா, என்னத்தைப் பேசறது? என் குடும்பத்துக்குச் சுத்தமா தமிழ் தெரியாது. இவரோட அப்பா அம்மாவுக்கு கன்னடம் தெரியாது. பிறகு, எப்படிப் பேசறதாம்?

`` `எப்படி கலர் ஆனீங்க’னு எல்லாரும் கேட்கிறாங்க..!’’ - ரச்சிதா

ஆனாலும், என்னோட மாமியார் மாமனார் முகத்தைப் பார்த்தே, 'நல்ல குடும்பம்'கிற முடிவுக்கு வந்துட்டாங்க என் குடும்பத்துல. என்னோட அம்மாவே அவங்க வாயால இதை எங்கிட்டச் சொன்னாங்க. அதுக்குப் பிறகு, வேறென்ன சொல்றது? இன்னொரு ஹைலைட்டும் இருக்கு. இவர் எங்கிட்ட லவ் புரொபோஸ் பண்ணிட்டு, என் பதிலுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தார். அதை நான் ஏற்றுக்கொண்டது ஒரு அன்னையர் தினத்துல. 'அம்மான்னா எனக்கு உயிர்; அடுத்த இடத்துல நீங்க இருப்பீங்கன்னு நம்பறேன்'னு நான் அந்த நாள்லதான் காதலை ஏத்துக்கிட்டேன். நான் அப்படிச் சொன்னதை அவர் தன்னோட அம்மாகிட்டச் சொல்லியிருக்கார். அந்த செகண்டே என்னோட மாமியார் நெகிழ்ந்துட்டாங்க. 'என் அம்மாகூட உன்னை மகள் மாதிரிதான் நினைப்பாங்க'னு சொல்லச் சொல்லியிருக்காங்க. அன்னைக்குச் சொன்னதுதான், இப்பவரைக்கும் மகளாத்தான் நினைக்கிறாங்க...'' என்றவர் தொடர்ந்தார்.

Rachita with her family
Rachita with her family

''ஷூட்டிங்க்காக நாங்க இங்கே சென்னையில இருக்கோம். என் மாமியார் ஶ்ரீவில்லிபுத்தூர்ல இருக்காங்க. ஆனா, மாசத்துக்கு ஒருதடவையாவது எங்களைப் பார்க்கலைன்னா அவங்களால அங்க நிம்மதியா இருக்க முடியாது. அதனால, எங்க நினைப்பு வர்றப்போ எல்லாம் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவோட கிளம்பி வந்துடுவாங்க. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டா? என் மாமியார் எப்படா எங்களைப் பார்க்க வருவாங்கன்னு எதிர்பார்த்துக் காத்திட்டிருப்பேன். ஏன்னா, அவங்க எங்களோட இருக்கிற பத்து பதினைஞ்சு நாளும், வெறும் வார்த்தைக்காக சொல்லலைங்க, நிஜமாவே என்னை உள்ளங்கையில வைச்சுத் தாங்குவாங்க...'' என்று நெகிழ்கிற ரச்சிதா, இப்போதெல்லாம் நாலு நாள் லீவு கிடைத்தால், பிறந்த ஊரான பெங்களூருவுக்குப் போவதைக் காட்டிலும் புகுந்த வீடான ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லவே விரும்புகிறாராம்.

சரி, நாமளும் டச் வுட்!

`எனக்கு தெரியாது மாமா!' - தினேஷ், ரச்சிதா சுவாரஸ்ய பேட்டி