மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பத்தல... பத்தல... மினிமலிசம் - 9 - இதயத்துக்கு இதமான பரிசுகள்!

பரிசுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பரிசுகள்

பரிசுகளை சிறந்த முறையில் வழங்குவது எப்படி என்பதைக் கண்டறிந்தோம். குறைந்தபட்ச மனநிலை யுடன் பரிசுகளைச் சிறப்பாகப் பெறுவது என்பதைப் புரிந்துகொள்வதும் இதற்குச் சமமாக முக்கியமானது

இதோ வந்துவிட்டது வேலன்டைன்ஸ் டே. அடுத்து மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம் என ஏராளமான இனிமையான நாள்கள் பின்தொடரும். அது மட்டுமா? பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்களும் உண்டு. இந்த இனிய நாள்களில் ஒருவர் மீது ஒருவர் நம் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசுகளை வழங்கவும் பெறவும் திட்டமிட வேண்டும்தானே? அதற்கும் மினிமலிசத்தில் வழிமுறைகள் உள்ளன.

மினிமலிஸ்ட் பரிசு வழங்கும் விதி

பரிசு வழங்குதல் என்பது நம் ‘அன்பு மொழி’களில் ஒன்று என நமக்குச் சொல்லப் பட்டிருக்கிறது. அதன் விளைவாக, நாம் அன்பின் நுகர்வோராகிவிட்டோம். ‘நான் உன்னை நேசிக்கிறேன். எனவே, நான் வாங்கிய இந்த விலையுயர்ந்த பளபளப்பான பொருளை உனக்களிக்கிறேன்!’ - அன்பை எப்படி பண்டமாக்கி இருக்கிறோம்!

பரிசு வழங்குவது என்பது ஒரு பரிவர்த்தனை தான். ஆனால், அன்பு என்பது பரிவர்த்தனை அல்ல. அன்பு என்பது மொழி மற்றும் பொருள் உடைமைகளுக்கு அப்பாற்பட்டது. உண்மையில் அதை நம் எண்ணங்கள், செயல்கள் மற்றும் நோக்கங்களால் மட்டுமே காட்ட முடியும்.

பரிசு கொடுப்பது என்பது அன்பின் மொழி அல்ல. பங்களிப்புதான் அன்பின் மொழி. நாம் அனைவரும் நாம் விரும்பும் நபர்களின் வாழ்க்கையில் பங்களிக்க விரும்புகிறோம். சில நேரங்களில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு பரிசை வாங்குவதையும் அது உள்ளடக்கி யிருக்கிறது. அது கடமைக்காக அல்ல... மதிப்பு சேர்க்கும் ஒரு விருப்பத்தின் காரணமாக அமைய வேண்டும். ஆனால், பெரும்பாலும் பரிசு என்பது சோம்பேறித்தனமான குறுக்கு வழியாகவே பயன்படுத்தப்படுகிறது. அது அன்பின் உண்மையான செயலுக்குரிய அதே தாக்கத்தை ஏற்படுத்தாது. அறிவார்ந்த முறை யில் பார்த்தோமானால், வைர ஆபரணத்தைப் பரிசளிப்பது அன்புக்குச் சான்றாகாது என்பதை நாம் அறிவோம். அர்ப்பணிப்பு, நம்பிக்கை, புரிந்துணர்வு - இவையே அன்பின் வெளிப்பாட்டு அறிகுறிகள்.

அன்பு என்பது என்ன? அந்த அன்புக்குரிய மற்றொரு நபர் உங்களைப் போலவே உண்மை யானவர் என்று இதயத்தின் வெளிப்பாட்டி லிருந்து உருவாகிறார். ஒரு குறிப்பிட்ட நபரை நேசிப்பதற்கும், அவருடைய துக்கமும் மகிழ்ச்சியும் உங்களுக்குச் சொந்தமானதைப் போலவே அடையாளம் காணவும், உங்கள் இதயம் (உண்மையில் மூளைதான்) அப்ரூவல் அளிக்க வேண்டும்.

பத்தல... பத்தல... மினிமலிசம் - 9 - இதயத்துக்கு இதமான பரிசுகள்!

ஒருவருக்கு பரிசு வழங்குவதே தவறு என்று அர்த்தம் இல்லை. ஆனால், அந்தப் பரிசை அன்புடன் தொடர்புபடுத்தி உங்களை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். அன்போ, காதலோ அப்படி வேலை செய்யாது. மாறாக, அதை பங்களிப்போடு இணைக்கவும். பங்களிப்பதற் கான சிறந்த வழி பரிசுதான் என்றால், மினி மலிசத்தை உங்கள் குறுக்கே நிற்க விடாதீர்கள்.

ப்ரியத்துக்குரியவருடன் இருப்பதே சிறந்த நிகழ்காலம். எனவே, அனுபவங்களை மட்டுமே பரிசளிக்க முடிவு செய்தால் எப்படி இருக்கும்? உங்கள் விடுமுறை எவ்வளவு மறக்கமுடியாததாக இருக்கும்? இந்த அனுபவங்கள் பற்றி யோசி யுங்கள்... இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகள், நீங்களே சமைத்த உணவு, சர்ப்ரைஸாக ஒரு சிறப்புக் காலை உணவு, கால் பிடித்துவிடுதல், மசாஜ், திட்டமிடாமல் எங்கேனும் அழைத்துச் செல்வது, ஒரு மாலை நேரத்தில் கவனச்சிதறல் இல்லாமல் பேசுவது (ஸ்வீட் நத்திங்ஸ்), வித்தி யாசமான ஒரு திருவிழாவுக்கு அழைத்துச் செல்வது, சூரிய உதயம் பார்ப்பது, பனிச்சறுக்கு, நடனம், குழந்தைகளை உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்வது... இப்படி, நீங்கள் விரும் பும் ஒருவருக்கு வேறு என்னென்ன அனுபவங் களை வழங்க முடியும்? யோசியுங்கள்.

இதுபோன்ற இனிய அனுபவங்களே உங்களுக்கும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கும் இடையிலான பிணைப்பை உருவாக்கி வலுப்படுத்துகின்றன. பொருள் பரிசுகளைவிட இந்த அனுபவங்களில் நீங்கள் அதிக மதிப்பைக் காண்பீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களும் அதிக மதிப்பை இதில் காண்பார்கள். ஆகவே, அனுபவங்களைப் பரிசளியுங்கள். அதேபோல சில அனுபவ பரிசுகளில் உங்கள் உடல் உழைப்பைப் பயன்படுத்தலாம். ஒரு புகைப்பட ஃபிரேமை பரிசளிப்பதற்கு பதிலாக, நீங்களே ஓர் ஓவியம் வரைந்து பரிசளிக்கலாம். அதற்காக ‘கவித’ எழுதி களேபரப்படுத்த வேண்டாம்!

பொருள்தான் கொடுக்க வேண்டும் என்றாலும்கூட, தேவையற்ற பொருள்களுக்குப் பதிலாக நல்ல சுவையான டார்க் சாக்லேட் அல்லது சிறப்பான காபி பவுடர் போன்ற நுகர்பொருள்களைப் பரிசளிக்கலாம்.

எதைக் கொடுத்தாலும் அதை விரும்பி வேண்டு மென்றே செய்ய வேண்டும். அதுதான் மினிமலிஸ்ட் கிஃப்ட் கிவிங் விதியின் புள்ளி. நீண்டகாலமாக, நாம் விரும்பும் நபர்களுடன் செலவழிக்காத நேரத்தை ஈடுசெய்ய முயல வேண்டும். உண்மையில் ஏன் அதைக் கொடுக்கிறோம் என்று புரியாமல், கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, எதையாவது கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் சிக்கக்கூடாது இல்லையா? குறிப்பிட்ட பரிசை வழங்குவதன் நோக்கம் என்ன? அந்தப் பரிசைப் பெறுகிறவருக்கு மதிப்பு கிடைக்குமா? இது அவர்களுக்குத் தேவையா? இவை முக்கியமான கேள்விகள். நீங்கள் எதைக் கொடுத்தாலும் - பரிசுகள் அல்லது பங்களிப்பு - நீங்கள் உண்மையில் என்ன பரிசளிக்க முயற்சி செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு புன்னகை ரிட்டர்ன் கிஃப்ட் ஆகக் கிடைக்க வேண்டும்தானே!

மினிமலிஸ்ட் கிஃப்ட் பெறுதல் விதி

பரிசுகளை சிறந்த முறையில் வழங்குவது எப்படி என்பதைக் கண்டறிந்தோம். குறைந்தபட்ச மனநிலை யுடன் பரிசுகளைச் சிறப்பாகப் பெறுவது என்பதைப் புரிந்துகொள்வதும் இதற்குச் சமமாக முக்கியமானது. அதுதான் குறைந்தபட்ச பரிசு பெறுதல் விதி! நீங்கள் சிறந்த பரிசுகளைப் பெற விரும்பினால், சிறந்த பரிசுகளைக் கேட்க வேண்டும்.

ஆனால், விலையுயர்ந்த பரிசுகளைக் கேட்க வேண்டும் என்று அர்த்தப்படுத்த வேண்டாம். உங்களை நேசிக்கும் நபர்கள் உங்களுக்குப் பரிசுகளை வழங்க விரும்புகிறார்கள். நீங்கள் அவர்களை அனுமதிக்கலாம். ஆனால், நீங்கள் அவர்களுக்குச் சரியான திசையைச் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்களால் உங்களுக்கு அர்த்தமுள்ள ஒன்றைக் கொடுக்க முடியும். பரிசு வேண்டாம் என்று சொல்வதற்கு பதிலாக, சரியான பரிசுகளுக்கு ஓகே சொல்லுங்கள்.

உங்களுக்குப் பிடித்த இடங்கள் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். உங்களுக்குப் பிடித்த தொண்டு நிறுவனத்தை பற்றியும், உங்கள் பெயரில் அவர்கள் எவ்வாறு நன்கொடை அளிக்கலாம் என்பதை பற்றியும் சொல்லுங்கள். மற்றொரு மொபைல்போன், அல்லது ஒரு கேட்ஜெட்டைவிட இவை உங்கள் இருவரையும் நன்றாக உணரச் செய்யும்தானே... வாழ்நாளுக்கும் மறக்க முடியாத நினைவுகளை அளிக்கும்தானே!

- இனிதே வாழப் பழகுவோம்...

நம்ப வேண்டாம்!

இந்த போன் உங்கள் வாழ்க்கையையே மாற்றும் என்பது போன்ற விளம்பரங்கள் முழுக்க முழுக்க உண்மையே. ஆனால், நேர்மறையாக அல்ல - எதிர்மறையாக!

ஒரு நல்ல வாழ்க்கையை வாழ மற்றுமொரு புதிய போன் தேவையில்லை என்பது உங்களுக் குத் தெரியும். பழைய போன் நன்றாக வேலை செய்யும்போது புதிய போன் வாங்க வேண்டிய தில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். பழைய கார் அவ்வளவு பளபளப்பாக இல்லை என்பதற்காக, புதிய கார் தேவையில்லை என்ப தும் உங்களுக்குத் தெரியும். நம்மை மகிழ்விக்க டேப்லெட், தொலைக்காட்சி, லேப்டாப் மற்றும் பிற கேட்ஜெட்டுகளின் புதிய வரவு தேவை யில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.

பல்வேறு நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் தங்கள் தயாரிப்புகளில் நம்மை ஈர்க்க ஓர் அவசர உணர்வை உருவாக்க லட்சக்கணக் கில் செலவழிக்கின்றன. ஆனால், நாம் அதற்கு மயங்க வேண்டியதில்லை. நம்மிடம் இல்லாததை விட நம்மிடம் உள்ளவற்றில் கவனம் செலுத்த லாம். நமக்குத் தேவையான அனைத்தையும் நாம் ஏற்கெனவே வைத்திருக்கிறோம் என்பதை மீண்டும் நினைவில்கொள்ளுங்கள்.

சில நேரங்களில் பொருள்கள் உடைந்தோ, தேய்ந்தோ, பழுதாகியோ போகின்றன. அப்படி நிகழும்போது, குறைந்தபட்சம் மூன்று வாய்ப்புகள் உள்ளன.

1. ரிப்பேர் செய்யுங்கள்... பிரேக்குகள் மாற்றப்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் புதிய காரை வாங்க மாட்டீர்கள், இல்லையா? மொபைல் போன் உள்பட மற்ற பொருள்களுக்கும் இதுவே பொருந்தும்.

2. பரிமாற்றம் (எக்ஸ்சேஞ்ச்) செய்யுங்கள்... பயன்படுத்தாத மொபைலை வீட்டிலேயே மின்குப்பையாக வைத்திராமல், அதைக் கொடுத்துவிட்டு மற்றொன்றை வாங்குங்கள்.

3. வாங்குங்கள்... கடைசி முயற்சியாக இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். அதையும் நாம் கவனமாகச் செய்யலாம். புதிதாக அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, ஏற்கெனவே பயன் படுத்தப்பட்ட - ஆனால், நன்றாகச் செயல்படுகிற பொருள்களை வாங்கலாம். அல்லது உள்ளூர் தயாரிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.