அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ் - புதிய பகுதி- 1 - ஆண்-பெண் உறவின் நிகழ்கால மாற்றங்களை அலசும் தொடர்

ஆண்-பெண் உறவின் நவீன வடிவத்திற்கான உதாரணம் இது. ஒரு ஆண் பெண்ணிடம் பேசினாலே அது காதல்தான், காதல் என்றாலே அதன் இறுதி இலக்கு திருமணம்தான் என்றிருந்த நிலையெல்லாம் மாறிவிட்டது. இன்று ஆண்-பெண் உறவில் ஏராளமான அடுக்குகள் வந்திருக்கின்றன.
அந்த காபிக் கோப்பையின் கடைசி மிடறையும் குடித்து முடித்தான் வசந்த். அவள் வரவில்லை. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாக அந்த காபி ஷாப்பில் ஒரே ஒரு காபியோடு காத்திருக்கிறான். ஜென்சி தான் வரப்போவதில்லை என்பதை வாட்ஸப்பில் தெளிவாகவே சொல்லியிருந்தாள். ஆனாலும் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொள்ளக்கூடும் என்ற மிச்சமிருக்கும் சிறு நம்பிக்கையின் பொருட்டு காலையிலிருந்து காத்திருக்கிறான்.
வசந்த் அமர்ந்திருந்த மேசைக்கு எதிர் மேசையில் அப்போதுதான் மீசை முளைத்த இளைஞன் ஒருவன், தான் அழைத்து வந்த பெண்ணை இறுக்கமாக அணைத்தபடி பேசிக்கொண்டிருந்தான், அவர்கள் பேசுவது அவர்களுக்கே கேட்குமா என்பது சந்தேகம்தான். வசந்த் அவர்களையே ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் முன்பு அதே மேசையில் வைத்துதான் ஜென்சியைப் பார்த்தான். அப்போது ஜென்சியும்கூட இப்படி ஒருவனுடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். வசந்த் இப்போது அமர்ந்திருக்கும் அதே மேசையில் அமர்ந்து தனது புதிய இசைத்துணுக்குகளை எழுதிக்கொண்டிருந்தான். தற்செயலாக நிமிர்ந்து பார்க்கும்போது ஜென்சி அவன் முன்னே முழு ஓவியமாக நின்று கொண்டிருந்தாள்.
“நீங்க ரெட் புல்தானே? மியூசிஷியன்?”
வசந்த் அவளின் அசாத்தியமான அழகில் வாய்திறந்து மெய்மறந்து பார்த்தான். அவன் எழுதிய இசைத்துணுக்குகள் மேக்புக்கிலிருந்து பறந்துவந்து அவனது காதுகளில் மட்டும் ரீங்காரமிட்டன.
“எக்ஸ்கியுஸ் மீ!''
‘‘யெஸ். ஆமாம், நான்தான். உங்கள மாதிரி அழகானவங்களுக்கும் என்ன தெரிஞ்சிருக்கேன்னு ஆச்சர்யமாயிடுச்சு, அதான்” என்றான்.
“நீங்கதா ன் இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸராச்சே... உங்கள தெரியாத யங்ஸ்டர்ஸ் இருப்பாங்களா? என்ன, ஒன் மில்லியன் ஃபாலோயர்ஸ் இருப்பாங்களா?”
“ஃபாலோயர்ஸ்லாம் வருவாங்க, போவாங்க. உங்கள மாதிரி நேர்ல அடையாளம் கண்டு பேசுறவங்கதான் எனக்கு எப்பவும் ஸ்பெஷல்.”
அவர்களுக்கிடையே உரையாடல் கொஞ்சம் கொஞ்சமாக நீண்டது. எதிர் மேசையில் இருந்த அந்த இளைஞன் அத்தனை வெறுப்பாய் வசந்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். இன்று வசந்தும் கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் இருந்தான்.
சில மாதங்களிலேயே வசந்தும் ஜென்சியும் நெருக்கமானார்கள். ஜென்சியின் ஃபிளாட்டிலேயே வசந்தும் தங்கிக்கொண்டான். ஒரே ஃபிளாட் என்றால்கூட தனித்தனி அறைகள், தனித்தனிச் சமையல், எப்போதாவது சேர்ந்து சாப்பிடுவார்கள். அதுவும் ஒரு வார இறுதியில் கொஞ்சம் பியரோடு நடு இரவு வரை சாப்பிடுவார்கள். மற்ற நேரங்களில் ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தில் இன்னொருவர் தலையிட மாட்டார்கள்.

அப்படி இருந்தவரை ஒன்றும் பிரச்னையில்லை. சமீபகாலமாக வசந்த் அவளின் தனிப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் தலையிடத் தொடங்கினான். அவள் போகும் நேரம், வரும் நேரம், போனில் பேசும் நேரம், அதுவும் சமீபகாலமாக கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ-வில் வரும் இளைஞனைப் பற்றியெல்லாம் கேட்க ஆரம்பித்தான்.
“நாம் கணவன் மனைவி கிடையாது என்பதை மனசுல வச்சுக்க. நீ என்னை கன்ட்ரோல் பண்ண முடியாது” என ஜென்சி கோபமாகச் சொன்னாள்.
“ஆமாம், நாம ஒண்ணும் கணவன் மனைவி இல்ல, எனக்கும் தெரியும். ஆனா சேர்ந்து வாழ்றோமே, அதுக்கு கொஞ்சம் ஹானஸ்ட்டா இருக்கலாம்ல? எங்க போற, யார்கூட பேசுற, இதெல்லாம் எதுக்கு மறைக்கணும்?”
“இது மறைக்கிறது இல்ல, எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லணும்னு எனக்குத் தோணல. எனக்குன்னு தனிப்பட்ட ஸ்பேஸ் இருக்கு. அதை எப்பவும் திறந்து காட்டணுமின்னு அவசியமில்ல, தட்ஸ் ஆல்” என ஜென்சி உறுதியாக நின்றாள்.
அதற்குப் பிறகு ஜென்சி அடிக்கடி தாமதமாக வரத்தொடங்கினாள். வசந்தின் அழைப்பையும் ஏற்பது இல்லை. ஒரு நாள் தனது அறையிலேயே இளைஞன் ஒருவனுடன் பார்ட்டி செய்தாள். அடுத்த நாள் அதற்காக வசந்த் அவளைக் கோபமாகத் திட்டினான். உடனடியாக தனது ஃபிளாட்டை விட்டு அவனை வெளியேறச் சொன்னாள். அதன் பிறகு அவளிடம் மிக நீண்ட நேரம் மன்னிப்பு கேட்டான், ஜென்சி மாறவேயில்லை. வசந்த நொறுங்கிய மனதோடு வீட்டை விட்டு வெளியேறினான்.
அடுத்த ஒரு வாரம் ஜென்சியாக போன் செய்வாள் என எதிர்பார்த்தான், அழைப்பு வரவில்லை. தன் ஈகோவை விட்டுவிட்டு ‘Sorry, it won't happen again’ என மெசேஜ் அனுப்பினான். ‘Let’s Break Up’ என்று அடுத்த நிமிடமே ஜென்சி ரிப்ளை செய்தாள். ‘ஒரு முறை பேசிப்பார்க்கலாம்' என அதே காபி ஷாப் வரச் சொன்னான். ‘வரமுடியாது, இதுல பேசுறதுக்கு எதுவும் இல்லை' என பதில் அனுப்பினாள். ‘நான் பத்து மணிக்குக் காத்திருப்பேன்' என அவன் வற்புறுத்த, பதிலுக்கு வசந்தின் நம்பரை அவள் பிளாக் செய்தாள்.
ஆண்-பெண் உறவின் நவீன வடிவத்திற்கான உதாரணம் இது. ஒரு ஆண் பெண்ணிடம் பேசினாலே அது காதல்தான், காதல் என்றாலே அதன் இறுதி இலக்கு திருமணம்தான் என்றிருந்த நிலையெல்லாம் மாறிவிட்டது. இன்று ஆண்-பெண் உறவில் ஏராளமான அடுக்குகள் வந்திருக்கின்றன. அதில் காதல் என்பது மிகவும் அரிதானதாக இருக்கிறது. ‘ஃபிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ்’, ‘பெஸ்டிஸ்’, ‘லிவிங் இன் ரிலேஷன்ஷிப்’ என ஒவ்வொரு வகையான உறவுமுறைக்கும் தெளிவான விதிகளும், கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அதையொட்டிதான் அந்த உறவைத் தொடர முடியும். முந்தைய காலங்களைப் போல, ‘நாம் இருவரும் பழகுகிறோம், அதனால் நம்மிடையே எந்த ரகசியங்களும் இருக்கக்கூடாது. என்னைத்தவிர வேறு யாரும் உனக்கு முக்கியமாக இருக்கக்கூடாது’ போன்ற சிறுபிள்ளைத்தனமான கட்டுப்பாடுகளையெல்லாம் இன்றைய ஆண்-பெண் உறவுகளில் காண முடியாது. ஏனென்றால், இன்று ஒரு உறவு மலர்கிறது என்றால் அதன் பின்னால் உள்ளார்ந்த அன்போ, காதலோ இருப்பதில்லை. மாறாக ‘எனக்கும் ஒரு கேர்ள் ஃபிரெண்ட் இருக்கிறாள்', ‘ஒரு பாய் ஃபிரெண்ட் இருக்கிறான்' என்ற பகட்டின் வெளிப்பாடாகவே உறவு தொடங்குகிறது. பரஸ்பர அன்பைவிட, சுய பெருமையே முதன்மையாக இருக்கிறது.
ஆண்-பெண் உறவின் பல்வேறு பரிணாமங்கள் அந்தந்தக் காலத்தைச் சார்ந்து வெளிப்படுபவையே! ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதும், ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் அந்தந்தத் தனிநபரைப் பொறுத்தது என்றாலும் கூட, அது அவர்கள் வாழும் காலத்தின் சமூக, பண்பாட்டு, பொருளாதாரச் சூழலுடன் நேரடியாகத் தொடர்புடையது. எந்த ஒரு காலமும் அதன் முந்தைய காலத் தொடர்ச்சியாகவே இருக்கும். இரு வேறு காலத்திற்கு இடையிலான மாற்றங்கள் என்பவை பெரும்பாலும் சீரானவை. அப்படித்தான் முந்தைய காலங்கள் இருந்தன.
ஆனால் இந்த டிஜிட்டல் காலம், அதன் முந்தைய காலத் தொடர்ச்சியை முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டு விலகி இருக்கிறது. முந்தைய கால மதிப்பீடுகள், நம்பிக்கைகள், விழுமியங்கள் என எதற்கும் இங்கு மதிப்பில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றையெல்லாம் எந்த விதத் தயக்கமும் இல்லாமல் கேள்வி கேட்கும் வெளி ஒன்று இன்றைய காலத்தில் உருவாகியிருக்கிறது. நான் எனது காலத்தில் கேள்வி கேட்கத் தயங்கிய ஒரு நம்பிக்கையை என் மகன் சுலபமாக நிராகரித்துவிட்டுச் செல்கிறான். அது அவனுக்கு எந்த விதக் குற்றவுணர்ச்சியையும் கொடுக்கவில்லை. அவன் அப்படி இருப்பதை அவனது புதிய காலம் அரவணைத்துப் பாதுகாக்கிறது. நான் எனது பால்ய காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். அது பழுப்பேறிய நிழற்படமாய் சுவரில் ஆடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இளைஞன் ஒருவன் ‘பிரேக் அப் பார்ட்டி’க்கான அழைப்பிதழை அனுப்பியிருந்தான். “என்னடா, இதுக்கெல்லாம் பார்ட்டியா?” என்றேன். “சார், கடந்த ஒரு வருஷமா எவ்வளவு ஸ்ட்ரெஸ்டா இருந்தேன்னு உங்களுக்குத் தெரியாது. எனக்கான வாழ்க்கையை வாழ முடியல சார். இன்னொருத்தர பத்தியே சிந்திச்சுக்கிட்டு, அவங்களுக்குத் தேவையானதை மட்டுமே பண்ணிக்கிட்டு எப்படி சார் எல்லா நேரமும் இருக்க முடியும்? அதுவும் என் கேர்ள் ஃபிரெண்ட் இருக்காளே, அவளுக்கு சினிமாவுல வர்ற மாதிரியே லவ் பண்ணணும். இதெல்லாம் நம்மால முடியாது சார்” என்றான்.
“ஒரு உறவு என்பதே சகிச்சுக்கிறதுதானே, ஒருத்தர ஒருத்தர் சகிச்சுக்கிட்டு, புரிஞ்சுக்கிட்டு, ஏத்துக்கிட்டு வாழ்றதுதானே அந்த உறவ நீட்டிக்கச் செய்யும். அப்பதானே ஒருத்தர்கூட நீண்ட நாள் நல்ல உறவோடு வாழ முடியும்?” என்றேன்.

“ஏன் சார் ஒருத்தர்கூடவே நீண்ட நாள் உறவுல இருக்கணும்? கொஞ்ச நாள் பழகலாம், இல்லனா பிரேக் அப் பண்ணிட்டு வேற ஒருத்தர்கூட பழகலாம். ஒருத்தரையே காதலிச்சு, அவங்களையே கல்யாணம் பண்ணிட்டு இருப்பதெல்லாம் 80’ஸ் கிட்ஸோட பூமர்தனம் சார்” என்றான்.
விவாகரத்தைக் கொண்டாடி, கணவனின் புகைப்படத்தைக் கிழித்தெறிந்து போட்டோஷூட் நடத்திய பெண்ணை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நட்பை உருவாக்க சமூக வலைதளங்கள் பிரதானமாக உதவும் இன்றைய சூழலில் இரண்டு பேருக்கிடையே உறவுகள் ஏற்படுவது மிகவும் சுலபமாகிவிட்டது. அதேபோல ஒரு உறவிலிருந்து பிரிவதும் எளிதாகிவிட்டது.
ஆண்-பெண் உறவுமீதான இன்றைய இளைஞர்களின் எண்ணங்கள் இப்படித்தான் இருக்கின்றன. அவர்களின் குடும்பச் சூழ்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த சமூக, பொருளாதார மாற்றங்களின் விளைவாக மிகவும் சுயநலமானவர்களாக இன்றைய இளைஞர்கள் மாறியிருக் கிறார்கள். சிறு வயதிலிருந்தே அவர்கள் கேட்டது அனைத்தும் கிடைக்கும் சூழலைப் பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுத்ததால், மிக அரிதாகவே ஏமாற்றங் களையும் தோல்விகளையும் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் ஒரு உறவிலும்கூட அவர்கள் மிகவும் சுய நலமாகவே யோசிக்கிறார்கள். ‘உனக்காக நான் ஏன் கஷ்டப்படணும்' என்ற எண்ணம் இருப்பதால், அவர்கள் எதையும் செய்வதற்கோ, விட்டுக் கொடுப்பதற்கோ தயாராக இல்லை. அதே போலவே அந்த உறவில் எழும் சிறு ஏமாற்றங்களையும்கூடப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மிக விரைவாக நிதானமிழக்கிறார்கள். அதனால் அந்த உறவு பாதிக்கப்படும்போது அதைச் சரி செய்யக்கூடப் பொறுமை யில்லாமல் உடனடியாக அதிலிருந்து வெளியேற நினைக்கிறார்கள்.
தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்குப் பிறகு திருமணத்திற்கு முன்பாகவே ஆண்-பெண் சேர்ந்து வாழும் போக்கு நகரங்களில் அதிகமாகியிருக்கிறது. ‘லிவிங் டுகெதர்’ என்பது நார்மலைஸ் ஆகிக்கொண்டிருக்கிறது. என் அனுபவத்தில், உறவுச் சிக்கல்களுக்கான ஆலோசனை பெற திருமணமான வர்களைவிட இப்படி லிவிங் டுகெதரில் இருக்கும் தம்பதிகளே பெரும்பாலும் வருகின்றனர். அந்த அளவிற்கு ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது சகஜமாகி இருக்கிறது. இந்த உறவு பெரும்பாலும் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை, தெரிய வந்தாலும் அவர்களின் விருப்பத்தையும் மீறி இந்த உறவு தொடர்கிறது.
சம்பந்தப்பட்ட இரண்டு தனிப்பட்ட நபர்களின் தேர்வாக இந்த உறவு இருப்பதால், இதனால் ஏற்படக்கூடிய அத்தனை விளைவுகளுக்குமே அவர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் இந்த உறவிற்குள் ஏற்படுகிற வன்கொடுமைகளும், அத்துமீறல்களும் பெரும்பாலும் பொதுச் சமூகத்தின் கவனத்திற்கு வருவதில்லை. சமீபத்தில் இப்படி லிவிங் டுகெதரில் இருந்த பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பானதையும் பார்த்திருப்போம். அதிகரித்துவரும் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து இந்த உறவிற்கு சமூகப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூகத்திற்கு இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், ‘அதிகரித்துவரும் இந்த உறவிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப் பரிசீலிக்க வேண்டும். நவீன கால ஆண்-பெண் உறவுகளின் புதிய வடிவங்களையும் திருமணம் என்ற அமைப்பினுள் கொண்டு வர சிவில் சமூகம் முயற்சி செய்ய வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார்.
மூன்று வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்துவிட்டு திடீரென ஒரு நாள் “நாம் இத்துடன் பிரிந்துவிடுவோம்” என அவன் சொன்னதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் கடும் மன அழுத்தத்துடன் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணை கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றி அவளுடைய வீட்டில் ஒப்படைத்தோம். இப்படி ஏராளமான ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு ஒன்றாக வாழும் ஆண்-பெண் இடையே இதுபோன்ற ஏராளமான ஏமாற்றங்களும், அத்துமீறல்களும் இருக்கின்றன. அதில் இரண்டு தரப்பினருமே பாதிக்கப்படுகிறார்கள். இந்த உறவின் மீதான களங்கப் பார்வையைப் போக்கினால்தான் இதன் சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு தீர்வு காண முடியும்.
யாரும் யாருடனும் பழகுவதும் பிரிவதும் எளிதாகிவிட்ட இந்தக் காலத்திலும்கூட பிரிவின் இருளில் தனியாய்த் தவிக்கும் ஏராளமான இளம் நெஞ்சங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை அந்த உறவு என்பது பகட்டிற்கானதல்ல, மாறாக மானசீகக் காதலின் அடிப்படையிலானது. அவர்களின் வழியாகத்தான் காதல் இன்னும் இங்கு மிச்சமிருக்கிறது.
- உறவாடுவோம்...
உங்கள் உறவு எப்படி?
இது ஒரு எளிய சோதனை. உங்களுக்கும் உங்களது துணையருக்குமான உறவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இந்த சோதனை உதவும். இங்குள்ள ஐந்து கேள்விகளுக்கும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதிலளியுங்கள்.
A. நீங்கள் அனுப்பிய மெசேஜைப் பார்த்தும் உங்கள் துணையர் பதிலளிக்காமல் இருந்தால், அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
1. வேறு முக்கியமான வேலையில் இருக்கலாம் என நினைப்பேன்.
2. ‘என்னைவிட அப்படியென்ன வேலை முக்கியம்' என நினைப்பேன்.
3. ‘ஏன் பதிலளிக்கவில்லை' என போன் செய்து சண்டை போடுவேன்.
4. வேண்டுமென்றே என்னை அலட்சியம் செய்வதாகக் கருதுவேன்.
B. உங்கள் அலைபேசிக்கு நீங்கள் வைத்திருக்கும் பாஸ்வேர்டை உங்கள் துணையருக்கு தெரியப்படுத்துவீர்களா?
1. நிச்சயமாக. துணையரின் பெயரையோ, பிறந்த நாளையோதான் பாஸ்வேர்டாக வைத்திருப்பேன்.
2. தேவைப்படும்போது தெரியப்படுத்துவேன்.
3. துணையர் அவர் போன் பாஸ்வேர்டை தெரியப்படுத்தினால், நானும் தெரியப்படுத்துவேன்.
4. துணையருக்குத் தெரியாமல் மிக ரகசியமாக வைத்திருப்பேன்.
C. உங்கள் துணையருக்குப் பிடித்த பாட்டு டிவியில் ஓடினால் என்ன செய்வீர்கள்?
1. சத்தமாக வைத்து துணையரை அழைத்து இருவரும் ஒன்றாகப் பாடி ரசிப்போம்.
2. துணையர் இருந்தால் அவருக்காக சகித்துக்கொண்டு பார்ப்பேன்.
3. அது துணையருக்குப் பிடிக்கும் என்பதே தெரியாதது போல சேனலை மாற்றுவேன்.
4. ‘இதெல்லாம் ஒரு பாட்டு’ என்று வேண்டுமென்றே அதைக் குறை சொல்லி சேனலை மாற்றுவேன்.

D. உங்கள் துணையர் உங்களுக்கான உணவையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டால் என்ன செய்வீர்கள்?
1. நிறைய பசியில் இருந்திருக்கிறார் என புரிந்துகொண்டு அவர் அருகில் சென்று தட்டிக்கொடுத்து தூங்கவைப்பேன்.
2. என்னைப் பற்றி யோசிப்பதில்லை என ஏக்கம் கொள்வேன்.
3. அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி, எனக்கு சாப்பாடு செய்து தரச் சொல்லி கட்டாயப்படுத்துவேன்.
4. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது அவருடைய உணவையும் நான் சேர்த்து சாப்பிட்டுவிட்டு பழிவாங்கிவிடுவேன்.
E. உங்கள் துணையர் அவரையும் அறியாமல் சிறு தவறுகள் செய்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
1. அது இயல்பானதுதான் என்பதைப் புரிந்து கொண்டு நானே அதை சரி செய்து கொடுப்பேன்.
2. அந்தத் தவறை மென்மையாக சுட்டிக்காட்டி இனி திருத்திக்கொள்ளச் சொல்வேன்.
3. ‘எத்தனை முறை சொன்னாலும் ஏன் இந்த தவறை நீ சரி செய்துகொள்வதில்லை’ என கோபப்படுவேன்.
4. அந்தத் தவறு நடப்பதற்கேற்ற சூழ்நிலையை நானே உருவாக்கி, அவரைத் தவறு செய்ய வைத்து திட்டுவேன்.
மதிப்பெண் என்ன சொல்கிறது:
ஒவ்வொரு கேள்விக்கும், முதல் பதிலை நீங்கள் தேர்வு செய்தால் உங்களுக்கு ஒரு மதிப்பெண். போலவே இரண்டாம் பதிலுக்கு இரண்டு மதிப்பெண், மூன்றாம் பதிலுக்கு மூன்று மதிப்பெண், நான்காவது பதிலுக்கு நான்கு மதிப்பெண். மொத்த மதிப்பெண்ணைக் கணக்கிடுங்கள்.
* மொத்த மதிப்பெண்கள் 5-க்குள் இருந்தால்: உங்கள் உறவு ஆரம்பகட்ட தேனிலவு நிலையில் இருக்கிறது.
*6 முதல் 10-க்குள் இருந்தால்: தேனிலவு நிலையிலிருந்து எதார்த்த நிலைக்கு வரத்தொடங்கியிருக்கிறீர்கள்.
*11 முதல் 15-க்குள் இருந்தால்: எதார்த்த சூழலை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு வந்திருக்கிறீர்கள்.
*16 முதல் 20-க்குள் இருந்தால்: எதற்காக இந்த உறவில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
திருச்சி மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இளநிலை மருத்துவப்படிப்பை (MBBS) திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியிலும், முதுநிலை மனநல மருத்துவப் பட்டப்படிப்பை (MD Psychiatry) சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியிலும் முடித்தவர். தற்போது சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் மனநலத்துறையின் துறைத்தலைவராகப் பணிபுரிகிறார். மனநல மருத்துவரான இவரின் மனைவியுடன் இணைந்து சென்னை அண்ணாநகரில் மனநல கிளினிக் ஒன்றை நடத்திவருகிறார். இவரின் 15 புத்தகங்கள் இதுவரை உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ளன. ‘நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?', ‘இன்ஸ்டா', ‘மனச்சோர்வு', ‘நம் காலத்துக் குழந்தைகள்', ‘காதல் இன்று என்னவாக இருக்கிறது?' போன்ற இவருடைய புத்தகங்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை.