மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்பிதங்கள் களையப்படும்! - 9 - ஆண் சொன்னால், இயல்பு... பெண் சொன்னால், நெருடல்!

கற்பிதங்கள் களையப்படும்
பிரீமியம் ஸ்டோரி
News
கற்பிதங்கள் களையப்படும்

- காதலிலும் ஏன் இந்த ஆணாதிக்கம்? - எதார்த்த தொடர்

- கீதா இளங்கோவன்

வேலன்டைன்ஸ் டே வருகிறது. ஊரெங்கும் காதல் வாசம்! என்னை விட இருபது வயது குறைந்த தோழி யொருவர், தான் ஒருவரை நேசிப்ப தாகக் கூற, மிகுந்த மகிழ்ச்சியுடன் கை குலுக்கினேன். `உன் ஆளுகிட்ட சொல்லிட்டே தானே?’ என்று கேட்டேன். `இன்னும் இல்ல, சொல்ல ரொம்ப தயக்கமா இருக்கு...’ என்று இழுத்தார். `ஏன்?’ `சொன்னா எங்கே என்னை தப்பா நினைச்சுடுவாரோன்னு பயமா இருக்கு...’ என்று மென்று முழுங்கி னார்.

- கீதா இளங்கோவன்
- கீதா இளங்கோவன்

பல பெண்களுக்கு இந்த பயம் இருப்பதைப் பார்க்கிறேன். வேலன் டைன்ஸ் டே, காதல் சினிமாக்கள், தாஜ்மஹால், அம்பிகாபதி - அமராவதி என்று காதலைக் கொண்டாடும் இந்த ஆணாதிக்க சமுதாயம், ஒரு பெண் தானாக ஆணிடம் போய் புரொபோஸ் செய்வதையோ, தான் அவனை விரும்புகிறேன் என்று சொல் வதையோ, ரசிப்பதில்லையே, ஏன்? ஆண்தான் பெண்ணிடம் காதலைச் சொல்ல வேண்டும், அதனை பெண் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. காதலைச் சொல்வதுகூட பெண்ணின் தேர்வாக இருக்கக் கூடாது என்று எண்ணுகிறது. இது மிகப் பெரிய கற்பிதமாக நிறுவப்பட்டு இன்று வரை பெண்களை அச்சுறுத்துகிறது.

பெண், தான் விரும்பும் ஆணிடம் போய் புரொபோஸ் செய்தால் `அவளா வர்றா!’ என்று இளக் காரமாகவும், `வலிய வந்து சொல் றாளே... அப்புறம் எப்படி நல்ல பொண்ணா இருப்பா ?’ என்று அவளது `ஒழுக்கத்தை’ கேள்விக்குறியாக்கியும், `இப்படி இன்னும் எத்தனை பேர்கிட்ட சொல்லியிருப்பாளோ’ என்ற ஐயத்துடனும்தான் பொதுப்புத்தி பார்க்கிறது. தன்னிடம் வந்து காதலைச் சொல்லும் பெண்ணை இன்றைக் கும் பல ஆண்கள் சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். தன்மேல் நம்பிக்கையில்லாத தன்மையினாலா, இல்லை ஊடகங்களின் மூளைச்சலவையினாலா என்று தெரிய வில்லை. திரைப்படங்களில் இன்னும் கதாநாயகர்கள்தான் பெண்களிடம் சென்று காதலைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாயகனிடம் புரொபோஸ் செய்யும் அறிவார்த்தமான நாயகிகளை சில படங்கள் காட்டியுள்ளனதான். ஆனாலும் பெரும்பான்மை அப்படி இல்லை.

கல்லூரிகள், பணியிடங்கள் என்று பல தளங்களில் பெண்ணும், ஆணும் இணைந்து பழகும் சூழல் இன்று இயல்பாகியுள்ளது. தனது அலைவரிசைக்கு ஒத்துவரும் ஆண்மீது பெண்ணுக்கும், பெண்மீது ஆணுக்கும் ஈர்ப்பு வருவது சகஜம். இதில் ஆண் மட்டும்தான் தனது காதலை பெண்ணிடம் போய் சொல்ல வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருப்பது என்ன நியாயம்? ஆண் சொல்லும்போது அது இயல்பானதாகவும், பெண் சொல்லும்போது அது நெருடலாகவும் பார்க்கப்படுகிறது. காதல் என்பது பெண் ஆண் இருவருக்கும் வரும் இயற்கையான உணர்வு. இதைப் பெண் மறைத்து ஆணாக வந்து சொல்லும் வரை காத்திருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சமுதாயத்தின் எதிர்பார்ப்புக்குப் பின்னால் நுட்பமான அரசியல் இருக்கிறது. பெண், தன் இணையைத் தேர்வு செய்வதை அனுமதிக்கக்கூடாது, ஆணின் தேர்வை அவள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். ஏற்கெனவே ஆண் - பெண் மூளை களில் புகுத்தப்பட்டிருக்கும் `கற்பு’ என்ற கருத்தாக்கத்தை வைத்து இதை பூசிமொழுகு கிறது.

காதலை ஆண் சொல்லி அதை ஏற்றுக் கொள்ளும் பெண்தான் `ஒழுக்கரீதியில்’ சரியானவள். தானாகப் போய் சொல்லும் பெண் `ஒழுக்கமற்றவள்’ என்ற பொதுப்புத்தி யின் கற்பிதம் பெண்கள் மற்றும் ஆண்களின் மூளைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. இதனால் பெண்கள் காதலைச் சொல்லவே தயங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கற்பிதங்கள் களையப்படும்! - 9 - ஆண் சொன்னால், இயல்பு...
பெண் சொன்னால், நெருடல்!

பெண் காதலைச் சொல்லக் கூடாது என்று எப்படி கற்பிக்கப்பட்டுள்ளதோ... அதே போலத்தான் காதலை மறுதலிப்பதிலும் உள்ளது. பெண் ஒருவனைக் காதலித்தால் அவனைத்தான் கடைசிவரை காதலித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கற்பிதம் அவளின் அடிப்படை உரிமைக்கு உலைவைக்கிறது. பெண் ஒருவனைத் தேர்ந் தெடுத்து, காதலித்து இருவரும் மனமொத்து பழகும்போது ஏதோ ஒரு கட்டத்தில் அவனுடன் ஒத்துப்போகாது என்று உணர் கிறாள்; பிரிய முற்படுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆணும், அவர்களை அறிந்த நெருக்கமானவர்களும் அவளைக் காய்ச்சி எடுப்பார்கள். `அவனுக்கு என்ன குறை? எதனால பிரேக்-அப் செஞ்சே? ரொம்பத்தான் திமிர் உனக்கு’ என்று விமர்சிப் பார்கள். எதனால் பிரியும் முடிவை எடுக் கிறாள் என்பது சம்பந்தப்பட்ட இருவரும் தொடர்புடைய விஷயம். இதில் மூன்றாவது மனிதர் கருத்து சொல்ல உரிமையில்லை. இன்னும் சொல்லப்போனால், அவள் தன்னைப் பிடிக்க வில்லை என்று கூறிவிட்ட பிறகு அதற்கான கார ணத்தை, காதலன் துருவிக் கேட்பதுகூட அநாகரிகம்.

அவளே ரொம்ப யோசித்து, தனக்குள் போராடி, இனி முடியவே முடியாது என்ற நிலை வரும் போதுதான் பிரியும் முடிவை எடுப்பாள். அவளது முடிவை மதிக்காமல், ஒரு பெண் எப்படி தன் காதலனை வேண்டாம் என்று சொல்ல முடியும்; அவன் இப்படித்தான் என்று காதலிக்கும் முன்பு தெரியவில்லையா என்று ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். இதற்குப் பின்னால் இருப்பது `அந்த ஆண் இன்னும் காதலிக்கிறான் இல்ல, அவனை நீ எப்படி மறுக்கலாம்? உனக்கு அந்த உரிமை இல்லை’ என்ற ஆணாதிக்க உளவியல்தான். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழைமைவாத கூற்றின் பிரதி பலிப்புதான், பெண் வாழ்க்கை முழுக்க ஒருவனைத்தான் காதலிக்க வேண்டும் என்பதும், அவனையே கல்யாணம் செய்ய வேண்டும் என்பதும். இந்தக் கற்பிதம் மிக செயற்கையானது. சிலருக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாமே தவிர எல்லோருக்கும் சாத்தியப்படாது. பெண்ணுக்கு பல காதல்கள் வரலாம். பல பிரேக்-அப்களும் வரலாம். முடிவில் தெளிவு உள்ள இணையருடன் அவள் வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது, முன்முடிவுடன் அவளைத் தூற்றாமல், `ரொம்பத்தான் அலையறா’ என்று வன்மத் துடன் சேற்றைவாரி இறைக்காமல் அது அவள் உரிமை என்பதை உணர வேண்டும். உள்ளார்ந்த அன்புடன் நம் பெண்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் தோழர்களே.

முதல் பத்தியில் குறிப்பிட்ட என் தோழிக்குச் சொன்ன ஆலோசனையைத் தான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன் அன்புத் தோழிகளே. உங்களுக்கு ஒருவரைப் பிடித்திருந்தால் அவராக சொல்லட்டும் என்று காத்திருக் காமல் உங்கள் விருப்பத்தை அவரிடம் கூறுங்கள். அவருக் கும் விருப்பம் இருந்தால் மகிழ்ச்சியாக உறவைத் தொடருங்கள், அவருக்கு இஷ்டம் இல்லாவிட்டால் நாகரிகமாக விலகிவிடுங்கள். காதலில் இருக்கும்போது ஒருவேளை ஒத்துவராது என்று தோன்றினால், பிரேக்-அப் செய்து விடுங்கள். விமர்சனங் களுக்கு பயந்து `அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்’ என்று கல்யாணம் செய்து கொண் டால் காலத்துக்கும் சிரமப்பட வேண்டி யிருக்கும். எனவே சிந்தித்து முடிவெடுங்கள்.

முடிவாக ஒன்று, ஆண் காதலைச் சொல்லும்போது ஒரு பெண் மறுத்தாலும், காதலிக்கும்போது ஒத்துவராது என்று பிரிந்து சென்றாலும் அவளை கொலை செய்வதும், ஆசிட் வீசி அவளைச் சிதைப்பதும் மிகக் கொடூரமான மனநிலை. ஆணாதிக்கத்தின் உச்சம் இது. இவற்றை வன்மையாகக் கண்டித்து சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். அத்துடன் இனியும் இது போன்ற கொடுமை நடக்காமல் தடுக்க, பெண்களின் காதல் உரிமைகளை ஆண் களுக்குப் புரியவைக்க வேண்டியதும் மிக முக்கியம்.

- களைவோம்...