மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை- 30 - “மாதத்தில் 25 நாள்கள் பிஸி!” - 78 வயது `ஓச்சிற செல்லம்மாள்’ பாட்டி

`ஓச்சிற செல்லம்மாள்’ பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
`ஓச்சிற செல்லம்மாள்’ பாட்டி

`இந்த வயதிலும் இப்படி சம்பாதிக்கிறீர்களே...’ என்று ஆச்சர்யப் படுபவர்கள் ஒருபக்கம் என்றால், ‘இந்த வயதில் இப்படி ஓடி ஓடி சம்பாதிக்க வேண்டுமா...’ என்று அக்கறையுடன் கேட் பவர்கள் ஒருபக்கம்.

‘வீடு, வாசல்னு நல்லபடியா நடந்துட்டு இருந்தா போதும்’ என்று பல முதியவர்களும் எண்ணும் வயதில், தினம் தினம் திருமணம், கோயில் விழாக்கள், விசேஷங்களில் நாதஸ்வரம் வாசித்து அசத்தி வருகிறார், செல்லம்மாள் பாட்டி. கேரள மாநிலம், கொல்லத்தை அடுத்த ஓச்சிற பகுதியில் வசிப்பவரின் நாதஸ்வர வீடியோக்கள் வைரலாக, இப்போது சமூக வலைதள செலிபிரிட்டியாக வும் வலம் வருகிறார். கல்வி முதல் தொழில் வரை `வயது தடையில்லை’ என்பதை எத்தனையோ முறை எழுதியிருக்கிறோம். `வைரல் ஆவதற்கும் வயது தடையில்லை’ என 2கே ரூல் எழுதி தன்னைக் கொண்டாட வைத்துக்கொண்டிருக் கிறார் 78 வயது செல்லம்மாள் பாட்டி.

“எங்கள் பரம்பரையே நாதஸ்வரம், தவில் வாசிக்கும் பரம்பரைதான். முன்னர் நான் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என மூன்று மாநிலங்களுக்கும் நாதஸ்வரம் வாசிச்கச் செல்வேன்.

75 வயதை தொட்டபோது, இனி பயணங்களைக் குறைத்துக்கொள்ளலாம் என மூன்று வருடங்களுக்கு முன் முடி வெடுத்தேன். இப்போது கேரளாவில் மட்டும் நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன். கேரளா முழுக்கச் செல்கிறேன் என்றும் சொல்லலாம்’’ என்று சிரிக்கும் பாட்டிக்கு, கச்சேரி இல்லாத நாள்கள் குறைவு. கடந்த 65 ஆண்டுகளாக நாதஸ்வரம் வாசித்து வரும் இவரை கேரள மாநிலத்தில் ‘ஓச்சிற செல்லம்மாள்’ என்று வாஞ்சையாக அழைக்கிறார்கள் அவர் ரசிகர்கள்.

`ஓச்சிற செல்லம்மாள்’ பாட்டி
`ஓச்சிற செல்லம்மாள்’ பாட்டி

“ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்தேன். பிறகு 13 வயதில் இருந்தே முழு நேரமாக நாதஸ்வரம் இசைக்கத் தொடங்கிவிட்டேன். முதன்முதலாக தமிழ்நாட்டில் அம்பாசமுத்திரத்தில சுப்பிரமணியன் குருவிடம் நாதஸ்வரம் படித்தேன். இன்னும் பல குருக்களிடம் இக்கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். தமிழ்நாட்டில் கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி எனப் பல இடங்களில் வாசித்துள்ளேன்.

கர்நாடக திருமணங்களில் மூன்று நாள்களுக்கு நாதஸ்வர இசை இருக்கும். நாங்கள் குழுவாக நாதஸ்வரம் வாசிக்கச் செல்லும்போது நான் மட்டும் பெண் ணாக இருந்தாலும், தங்குவதற்கு தனி அறை ஏற்பாடு செய்து கொடுப்பதில் இருந்து மரியாதை வரை ஒரு கலைஞராக என்னைக் கொண்டாடுவார்கள். இது வரை பத்தாயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் வாசித்திருக்கிறேன். இதில் 16,008 ராகங்கள் உள்ளன. எனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ராகங்கள் தெரியும். சங்கராபரணம், கல்யாணி, காம்போதி ராகங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நிறைய ஸ்வரமும் தெரிந்தால் நாம் சுதந்திரமாக வாசிக்க முடியும்” என்பவர், தன் ஆரோக்கியம் பற்றிப் பகிர்ந்தார்.

``ஒரு மாதத்தில் எனக்கு 25 நாள்கள் வரை நிகழ்ச்சிகள் இருக்கும். திருமண வீடுகளில் வாசிக்க எட்டாயிரம் ரூபாய் வரை கொடுப் பார்கள். `இந்த வயதிலும் இப்படி சம்பாதிக்கிறீர்களே...’ என்று ஆச்சர்யப் படுபவர்கள் ஒருபக்கம் என்றால், ‘இந்த வயதில் இப்படி ஓடி ஓடி சம்பாதிக்க வேண்டுமா...’ என்று அக்கறையுடன் கேட் பவர்கள் ஒருபக்கம். என் உடல் எனக்கு ஒத்துழைக்காதபோது, அதையும் மீறி என்னை வருத்தி நான் ஒரு வேலையைச் செய்தால் அது தவறு. அது நாதஸ்வரம் என்றில்லை... வீட்டு வேலைகளும்கூட. காரணம், வயதாக ஆக சுகவீனங்களுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் நம்மை நாம் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், என் உடலும் நானும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, அந்த உடலுக்குத் தேவையில்லாத ஓய்வை நான் திணிக்கக் கூடாது அல்லவா? மூச்சுப்பிடித்துதான் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும். ஆனால், அதில் இதுவரை நான் எந்தக் கஷ்டத்தையும் உணரவில்லை. எப்போதும்போல என்னால் வாசிக்க முடிகிறது. எனக்கு உடல்நலத் தொந்தரவுகள் எதுவும் இல்லை. அதற்கு, பிடித்ததைத் தொடர்ந்து செய்வதால் கிடைக்கும் மனநலமும் கூட காரணமாக இருக்கலாம்’’ - வயதுக்கான அனுபவங்களை அழகாகக் கோத்துச் சொல்கிறார் செல்லம்மாள் பாட்டி.

முதுமைக்கு மரியாதை- 30 - “மாதத்தில் 25 நாள்கள் பிஸி!” - 78 வயது `ஓச்சிற செல்லம்மாள்’ பாட்டி

‘`முன்னர் நான் குழந்தைகளுக்கும், பெண் களுக்கும் நாதஸ்வரம் கற்றுக்கொடுத்தேன். பலரும், மூச்சுப்பிடித்து வாசிக்கக் கஷ்டமாக இருப்பதாக பாதியிலேயே சென்றுவிடுவார்கள். அப்போதெல்லாம், கடவுள் புண்ணியத்தால் நான் வாசிக்கிறேன் என்று தோன்றும். என் மருமகள் இப்போது குழந்தைகளுக்கு நாதஸ்வரம் சொல்லிக்கொடுக்கிறார். இதோ... இது என் மருமகள் எனக்கு வாங்கித் தந்த நாதஸ்வரம்தான்’’ என்று பெருமையுடன் சொல்பவர், தன் குடும்பம் பற்றியும், உறவு பேணல் பற்றியும் பகிர்ந்தார்.

“என் அப்பா நாணுபிள்ளை தவில் வாசித்தார். என் கணவர் சிவன் பிள்ளை நாதஸ்வர கலைஞர். கணவர் இருந்த வரை, நானும் அவரும் ஜோடியாக நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம். எங்களுக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள் என ஏழு பிள்ளைகள். ஆறு பிள்ளைகளுக்குத் திருமணம் முடிந்து விட்டது. ஒரு மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறோம். என் மகன்கள் தவிலும், மகள்கள் நாதஸ்வரமும் வாசிப்பார்கள். என் மருமகள், ‘மதுரை ஆனந்தி’ என்ற பெயரில் இப்போது நாதஸ்வர பிரபலமாகிவிட்டார். மகன் பிரசாத்தும், மருமகள் ஆனந்தியுமாக இப்போது வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாகச் செல்கிறார்கள். மகள் கலாவதிக்கு கேரள தேவசம்போர்டு கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் வேலை கிடைத்துள்ளது. முன்னர், எனக்கும் அந்த வேலை கிடைக்கும் வாய்ப்பு வந்தது. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பால் என்னால் அந்த வேலைக்குச் செல்ல முடியவில்லை. இப்போது என் பிள்ளைகள் எல்லோரும் ஆளாகிவிட்டார்கள். ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கிறார்கள். உறவுகள் பெரும் பலம் என்று உணர்ந் திருக்கிறார்கள்.

பிள்ளைகள் முதல் பேரப் பிள்ளைகள் வரை, ’ரெஸ்ட் எடுங்க...’ என்று குரல் மாற்றிக் குரல் எனக்குக் கேட்டுக் கொண்டே இருக்கும். என்றாலும், நாதஸ்வரம் வாசிக்காமல் என்னால் தூங்க இயலாது என்று அவர்களுக்குத் தெரியும்’’ - பேச்சு முடிந்ததும் செல்லம்மாளின் மூச்சு நாதஸ்வர இசையாகிறது.

முதுமை எனும் பூங்காற்று!

- தோள் கொடுப்போம்...

காணாமல்போனவரைக் கண்டுபிடித்த வளையல்!

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கு வயது 77. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவர் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கடைசியில் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸாரிடம் வயது மூப்பின் காரணமாக ராஜேஸ்வரிக்கு ஞாபக மறதி குறைபாடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதுமைக்கு மரியாதை- 30 - “மாதத்தில் 25 நாள்கள் பிஸி!” - 78 வயது `ஓச்சிற செல்லம்மாள்’ பாட்டி

வழக்கைப் பதிவு செய்த போலீஸார், ராஜேஸ்வரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய வாட்ஸ்அப் குரூப்பிலும் ராஜேஸ்வரியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே இரவு 11 மணியளவில் ராஜேஸ்வரியைப் பார்த்துள்ளார். உடனடியாக அரும்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார்.

அரும்பாக்கம் போலீஸார் ராஜேஸ்வரியின் குடும்பத்தினருடன் நேரில் சென்று அவரை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மூதாட்டியிடம் எப்படி வந்தீர்கள் என விசாரணை செய்ததில், அவரால் பதில் தெரிவிக்க முடிய வில்லை. இந்த நிலையில்தான் வயது முதிர்வால் ஏற்படும் ஞாபக மறதியால் அடிக்கடி முதியவர்கள் காணாமல் போவதை உணர்ந்த அரும்பாக்கம் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய தே.பிரகாஷ், ராஜேஸ்வரிக்கு 400 ரூபாயில் ஒரு வளையல் வாங்கி அதில், குடும்பத்தாரின் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.

 தே.பிரகாஷ்
தே.பிரகாஷ்

காணாமல் போனவர்களை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் இந்த வளையல் திட்டத்தை அறிமுகப்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷுடன் பேசினோம்... “காணாமல் போகிறவர்களை பற்றிய பதிவுகள் காவல் நிலையத்துக்கு அடிக்கடி வரும். வயதில் மூத்த அவர்களைப் பார்க்கும்போது மனது கஷ்டப்படும். அவர்களுக்கு சரியாக பதில் சொல்லத் தெரியாது. உடனே அவர்களைச் சரியான இடத்தில் சேர்த்து பாதுகாப்பாகவும் வைக்க முடியாது. அதற்கான சின்ன தீர்வாகத்தான் குடும்பத்தாரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து அப்படி ஒரு வளையல் செய்து கொடுத்தேன்” என்றவர்...

“ராஜேஸ்வரி போன்ற நிலையில் இருக்கும் வயதானவர்களுக்கு அவரவர் குடும்பத்தாரே இப்படி ஒரு வளையல் செய்து அணிவிக்கலாம். காவல்துறை என்றில்லை. வளையலில் இருக்கும் தொடர்பு எண்ணைப் பார்த்து யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு உடனே உதவலாம். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, பேசத்தெரியாத குழந்தைகளுக்கும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும்கூட இப்படி ஒரு வளையல் செய்து அணிவிக்கலாம்” என்றார்.சென்னையிலிருந்து மாற்றலாகி தற்போது திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார் காவல் உதவி ஆய்வாளர் தே.பிரகாஷ்.

 ஸ்பூர்த்தி அருண்
ஸ்பூர்த்தி அருண்

மாடிப்படிகளில் உடற்பயிற்சி!

“முதியோர் சிலருக்கு தினமும் வாக்கிங் செல்வது வழக்கமாகி இருக்கும். அவர்கள் கோடைக்காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் வாக்கிங் செல்வது நல்லது. அப்படி முடியாதவர்கள் அப்பார்ட்மென்ட்டைச் சுற்றி இடமிருந்தால் அங்கே நடக்கலாம், மொட்டை மாடியில் நடக்கலாம், வீட்டிலுள்ள மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம், தோப்புக்கரணம் போடலாம், நின்ற இடத்தில் ஜாகிங் செய்யலாம்.

இந்தப் பயிற்சிகளை முடிந்த மட்டும் செய்தால் போதும். குறிப்பாக மாடிப் படிகளில் ஏறி இறங்க நினைப்பவர்கள் எளிதாக ஏறி இறங்க வசதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். படிக்கட்டுகள் எல்லாம் சம அளவாக இருக்க வேண்டும். இல்லை யென்றால் அடி சறுக்கும். ‘நான் தினமும் 40 நிமிடங்கள் வாக்கிங் செல்வேன்’ என்று 40 நிமிடங்களுக்கும் மாடிப்படிகளில் ஏறி இறங்கக் கூடாது. இதனால் மூட்டுவலி, தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இறங்கும்போது அவசரப்படக்கூடாது

ஒவ்வொருவரின் உடல்வாகும் வயதும் வேறுபடும் என்பதால் முதல் நாள் சிறிது நேரம் மட்டும் நடந்து, பிரச்னை ஒன்றுமில்லை என்றால் அடுத்தடுத்த நாள்கள் உங்களால் முடியும் என்கிறபோது நேரத்தைக் கூட்டிக்கொள்ளலாம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

முதியோர் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 14567

மூத்த குடிமக்கள் தங்களுக்கு நேரிடும் பிரச்னைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து உதவிகள் பெற 14567 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயனடையலாம். முதியோர் இல்லங்கள், பராமரிப்பு மையம் பராமரிப்பாளர்கள், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள், வலி நிவாரண மையங்கள் குறித்து முதியோர்களுக்குத் தேவைப்படும் தகவல்கள், அரசு திட்டங்களைப் பெறும் வழிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்கள், பராமரிப்பு சட்டம் குறித்த வழிகாட்டுதல்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு, ஆதரவற்ற இடரில் உள்ள முதியோர் மீட்பு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் துன்புறுத்தப்படும் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து பிரச்னைகளைத் தீர்க்க வழிகாட்டுதல் போன்ற சேவைகளை வழங்க 14567 என்று எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.