மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை 31- கத்தியின்றி, ரத்தமின்றி, சப்தமின்றி வரும் ஆபத்து, சீனியர் சிட்டிசன்களே உஷார்!

முதுமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
News
முதுமைக்கு மரியாதை

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

சென்னை ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர், 12-வது தெருவில் வசித்தவர் 81 வயது சிவகாமி சுந்தரி. வீட்டில் இவர் தனியாக இருந்த நிலையில் பட்டப்பகலில் கொலை செய்யப்படுகிறார். காவல்துறைக்குத் தகவல் கிடைக்கிறது. காவல் துறையினர் விசாரணையில் இறங்கு கின்றனர். கொலை செய்யப் பட்டவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், இரண்டு லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. காவல்துறைக்கு இது கொஞ்சம் சவாலான வழக்காக மாறுகிறது.

இந்த வழக்கில் துப்புத்துலக்க தனிப்படைகள் அமைக்கப் படுகின்றன. அந்த வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளைப் பார்க்கிறார்கள். அதில் நீலநிற சட்டை அணிந்த ஒருவர், முகத்தில் நீலநிற முகக்கவசம் அணிந்த நிலையில், நீலநிற குடை பிடித்துக்கொண்டு, அந்தப் பகுதியில் தொடர்ந்து நான்கு நாள்கள் சுற்றிக்கொண்டிருந்தது பதிவாகி இருக்கிறது. சந்தேகம் எழுகிறது. அதே நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் பேசும் காட்சியும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக, கொலை செய்யப் பட்ட பெண்ணின் வீட்டின் கதவு, வேலை செய்யும் பெண் செல்வதற்காகத் திறக்கப்பட்டபோது, அந்த நீலநிற சட்டைக்காரர் வீட்டுக்குள் செல்லும் காட்சியையும் கேமரா காட்டுகிறது. சந்தேகம் உறுதியாகிறது. காவல் துறையினரின் முழு கவனமும் நீலநிற சட்டை ஆள்மீது பாய்கிறது.

 பிரேம் ஆனந்த் சின்ஹா
பிரேம் ஆனந்த் சின்ஹா

காவல்துறையினர், பழைய கொலைகாரர்களின் பட்டியலைப் பார்க்கின்றனர். கைரேகையை வைத்தும் கொலைகாரன் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மற்றும் மருமகளிடம் கேமராவில் பதிவான படத்தைக் காட்டி, யார் என்று தெரிகிறதா என்று கேட்கிறார்கள். இதுவரை இந்த முகத்தைப் பார்த்ததே இல்லை என்கிறார்கள் அவர்கள். கண்காணிப்பு கேமராவின் ஆய்வு தொடர்கிறது.

அந்த நீலநிற சட்டைக்காரன் வீட்டை விட்டு வெளியில் வருகிறான். சற்று தூரம் நடந்து சென்று ஒரு ஆட்டோவில் ஏறுகிறான். அந்த ஆட்டோ நம்பரை குறித்துக்கொள்கிறார்கள். ஆட்டோ டிரைவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

நீலநிற சட்டைக்காரனின் கேமரா பதிவுப் படத்தை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி பகுதியில் உள்ள ஆட்டோக் காரர்களிடம் காட்டி விசாரிக்கிறார்கள். அவர்கள் கொடுத்த தகவலின்படி நீலநிற சட்டைக்காரனின் வீடு எது என்று தெரிகிறது.

காவலர்கள் சென்ற நிலையில் நீலநிற சட்டைக்காரர் வீட்டில் இல்லை. செல்போன் தொடர்பும் துண்டிக்கப் பட்டிருக்கிறது. அந்த வீடு கண்காணிக்கப் படுகிறது. காவலர்கள் காத்திருக்கிறார்கள். கொலை நடந்த 48 மணி நேரத்தில் அவர் கைது செய்யப்படுகிறார். பெயர் சக்திவேல். வயது 45. கொலைக்காரன் இவன்தான் என்று உறுதியாகிறது.

விசாரணை தொடங்குகிறது. அங்கே இன்னோர் அதிர்ச்சியும் காத்திருக்கிறது. தில்லை கங்கா நகர் சிவகாமி சுந்தரி கத்தியின்றி, ரத்தமின்றி, சப்தமின்றி கொலை செய்யப்பட்டது போல 2021-ம் ஆண்டு கே.கே.நகர் பாரதிதாசன் காலனியைச் சேர்ந்த 79 வயது சீதாலட்சுமியும் சக்திவேலால் கொலை செய்யப் பட்டிருப்பது தெரிய வருகிறது.

அவரும் வீட்டில் தனியாக இருந்தவர். அவரின் மகள் புவனேஸ்வரி துபாயில் உள்ளார். மகன் சிவகுமார் அடையாறில் குடும்பத்துடன் வாழ்கிறார். சீதாலட்சுமியின் தனிமையைப் பயன்படுத்தி கொலை செய்துள்ளார் சக்திவேல். அவருக்கும் உடலில் காயங்கள் இல்லை. வாய் மற்றும் மூக்கைப் பொத்தி மூச்சுத் திணறவைத்து தீர்த்துக்கட்டி இருக்கிறார். சீதாலட்சுமி கொலை வழக்கில் போலீஸிடம் சிக்காமல் தப்பியதால், அடுத்து சிவகாமி சுந்தரியை யும் கொலை செய்யத் துணிந்துள்ளார் சக்திவேல்.

``சக்திவேல் ஒரு சைக்கோ மனம் படைத்தவர். வயதான பெண்களைக் கொலை செய்து, கொள்ளையடிக்க வேண்டும் என்று முதலிலேயே திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். கேமராவில் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் முகக்கவசம், குடையால் முகத்தை மறைத்தபடி செயல்பட்டுள்ளார். கொள்ளை மட்டும் அடித்தால், பாதிக்கப்பட்டவர்கள் தன்னை அடையாளம் காட்டிவிடுவார்கள் என்பதற்காக கொடூரமாக கொலை செய்துள்ளார்.

சக்திவேலை போன்ற கொடூர மனம் படைத்தவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். இதுபோன்று வேறு ஏதாவது குற்றச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளாரா என்று மேலும் விசாரணை நடத்தப் படுகிறது’’ என்கிறார்கள் தமிழக காவல் துறையினர்.

கொலை நடந்த 48 மணி நேரத்துக்குள் குற்றவாளியைக் கைது செய்திருக்கிறது காவல்துறையால் அமைக்கப்பட்ட தனிப்படை. இந்தத் தனிப்படையில் முக்கிய அங்கம் வகித்த தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க, வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டோம்.

முதுமைக்கு மரியாதை
முதுமைக்கு மரியாதை

``இப்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் முக்கிய இடங்களிலும் சாலை சந்திப்புகளிலும் சிசிடிவிகளை பொருத்தியிருக்கிறோம். தொடர்ந்து அவற்றைக் கண்காணித்தும் வருகிறோம். அப்படித்தான் இந்தக் கொலை யாளியையும் கண்டுபிடித்தோம். கூட்டுக் குடும்பங்கள் அரிதாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு செல்போன் அவசியமாகி விட்டது. செல்போன் உபயோகிக்கும் முதியோர், முக்கியமான எண்களை உடனடியாக எடுத்துப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது அவசியம். அதேபோல் நெருங்கிய நண்பர்களுடனும் குடும் பத்தினருடனும் இணைந்து வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து உதவிகளை, தேவை களைப் பகிரலாம்.

பெண்களுக்கு எதிரான குறிப்பாக தனிமையில் இருக்கும் முதியோருக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள் வதற்கு உதவியாகத் தமிழகக் காவல்துறை `காவலன் SOS’ என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பை டௌன்லோடு செய்வதன் மூலம் ஆபத்திலிருக்கும் நேரத்தில், அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப் பட்டவர்களுக்குக் காவல்துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும் என்பதால் தனியாக இருக்கும் அனைத்துப் பெண்களுமே இந்த ஆப்பை டௌன்லோடு செய்து வைத்துக்கொள்வது நல்லது.

ஆபத்தில் இருக்கும்போது இணைய வசதி இல்லையே, எப்படி நம்மைப் பற்றிய தகவல்கள் காவல்துறைக்குக் கிடைக்கும், ஜி.பி.எஸ் எப்படிச் செயல்படும் என்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம். உங்கள் போனில் இணைய வசதி இல்லாத நேரத்திலும், நீங்கள் `SOS’ பட்டனை அழுத்துவதன் மூலம் உங்களை பற்றிய தகவல்கள் காவல் கட்டுப்பாட்டு மையத்துக்குக் குறுஞ் செய்தியாக (SMS) சென்றுவிடும். காவல் கட்டுப் பாட்டு மையத்துக்குத் தகவல் சென்ற சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் பகுதிக்குக் காவல் அதிகாரிகள் வந்து உங்களைப் பாதுகாப்பார்கள்.

முதுமைக்கு மரியாதை 31- கத்தியின்றி, ரத்தமின்றி, சப்தமின்றி வரும் ஆபத்து, சீனியர் சிட்டிசன்களே உஷார்!

செல்போன் பயன்படுத்தும் விஷயத்தில் பிள்ளைகள், வயதான பெற்றோர்களுடன் நேரம் ஒதுக்கி இப்படிப்பட்ட அப்ளிகேஷன்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுத்தருவது முக்கியமான கடமை’’ என்றவர் தொடர்ந்து...

``எல்லாருக்குமே தெரிந்த காவல்துறையின் 100 எண்ணுக்கு, உங்கள் தெருவில் சந்தேகப்படும் படியான நபர்கள் நடமாடினால் உடனே தகவல் தெரிவிக்கலாம். 100-க்கு டயல் செய்தவுடன் உங்களுக்கான உதவி காவல்துறை யின் மூலம் நிச்சயம் கிடைக்கும். மேலும், முதியோர்கள் தனியாக வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தகவல் சொல்லலாம். அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் ரோந்து பணியில் இருக்கும்போது கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்.

மேலும், உங்கள் குடியிருப்பில் உள்ளவர்களின் வசதிக்கேற்ப கண்காணிப்பு கேமரா பொருத்திக் கொள்வது சிறந்தது. பெருகி வரும் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழக காவல்துறை அவர்களின் பாதுகாப்புக்கு மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. இன்றைக்கு மட்டுமல்ல... என்றைக்கும் முதியோருக்கு நண்பனாகக் காவல்துறை செயல்படும்’’ என்றார்.

- தோள் கொடுப்போம்...

முதுமைக்கு மரியாதை 31- கத்தியின்றி, ரத்தமின்றி, சப்தமின்றி வரும் ஆபத்து, சீனியர் சிட்டிசன்களே உஷார்!

சுற்றுலா செல்லும் முதியோர் கவனத்துக்கு...

கோடையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது வீட்டில் உள்ள சீனியர் சிட்டிசன்களை தனிமையில் இருக்கவிடாமல் அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். அப்படி அழைத்துச் செல்லும் இடங்களில் சீனியர் சிட்டிசன்களின் பாதுகாப்பு குறித்து சென்னை யைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் என்.சிவ ராஜன் பகிர்ந்த தகவல்கள்...

காரில் செல்வதைத் தவிர்த்து ரயிலில் பயணம் செய்யுங்கள். அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பானது.

நீங்கள் செல்லக்கூடிய ஊரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை லிஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எந்த இடத்துக்குச் செல்லலாம் என்பது போன்ற தகவல்களைக் குறித்துக்கொண்டு அதற்கான நேரத்தையும் ஒதுக்கி உங்கள் வசதிக்கேற்ப முதியோர்களை அழைத்துச் செல்லுங்கள்.

மலை வாசஸ்தலங்களுக்கு செல்வதைத் தவிர்க்கலாம். எந்த மாதிரியான சீதோஷ்ண நிலை அவர்களின் உடல்நலத்துக்கு ஆகாது என்பதைத் தெரிந்துகொண்டு அந்த இடங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

முதியோரில் பலர் ரெகுலராக மருந்து மாத்திரைகளை எடுக்கக்கூடும். அவற்றை மறக்காமல் பயணத்தின்போது எடுத்துச் செல்லுங்கள். குடும்ப மருத்துவரின் தொடர்பு எண்ணை கையோடு வைத்திருங்கள். இது அவசர காலத்தில் ஆலோசனை கேட்க உதவும்.

காலையில் வெயிலுக்கு முன்பாக அல்லது வெயில் குறைந்த பிறகு மாலை நேரத்தில் அழைத்துச் செல்லுங்கள். எங்கே சென்றாலும் தண்ணீர் பாட்டிலை மறந்துவிடாதீர்கள்.

வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக வெளிச்சத்தால் வயதானவர்களின் கண்கள் கூசும். பழக்கப்படாத இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லும்போதும் படிகளில் ஏறி இறங்கும்போதும் கூடுதல் கவனம் தேவை.

முதுமைக்கு மரியாதை 31- கத்தியின்றி, ரத்தமின்றி, சப்தமின்றி வரும் ஆபத்து, சீனியர் சிட்டிசன்களே உஷார்!

மூத்த குடிமக்களுக்கு வரிச் சலுகை உண்டா?

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நேரம் இது. ‘வருமான வரி கட்டும் சீனியர் சிட்டிசன்கள் எந்த விதத்தில் வரிச் சலுகை பெறலாம்’ என்று சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ரேவதி ரகுநாத னிடம் கேட்டோம்...

“இந்தியாவில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர் சீனியர் சிட்டிசன்களாகவும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சூப்பர் சீனியர் சிட்டிசன்களாகவும் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவும் வகையில், வருமான வரிச் சட்டத்தின்கீழ் அரசாங்கம் பல வருமான வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி ஏதும் இல்லை. சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான வரு மானத்துக்கு வரி ஏதும் இல்லை.

மூத்த குடிமக்களுக்கு மருத்துவம் மிக அவசியம் என்பதால், சுகாதாரக் காப்பீட்டு (மெடிக்கல் இன்ஷூரன்ஸ்) பிரீமியத்தில் வரி விலக்கு உண்டு. சாதாரண குடிமக்களுக்கு சுகாதாரக் காப்பீட்டு தொகை ரூ.25,000 என்று இருக்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி விலக்கு கிடைக்கும். அதேபோல, ரூ.50,000 வரை மருத்துவ சிகிச்சை செலவுகள் செய்திருந்தால், அதற்கும் வரிச் சலுகை கிடைக்கும். அடுத்ததாக முதியோர் களைத் தாக்கும் சிறுநீரக செயலிழப்பு, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ‘பார்க்கின்சன்ஸ்’ எனப்படும் உடல் உறுப்புகளில் செயலிழப்பு, ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய், ரத்தம் உறையாமல் போய்விடும் ஹீமோபிலியா போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று ஒரு லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம்.

அடுத்து, 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள சீனியர் சிட்டிசன்கள் வரி செலுத்தும்போது வங்கி நிறுவனத்தில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கு மற்றும் வைப்புத்தொகை மீதான வட்டி வருமானம், தபால் அலுவலகத்தில் வைத்திருக்கும் வைப்புத் தொகையின் மீதான வட்டி வருமானம் ஆகியவற்றுக்கு ரூ.50,000 வரை வரி விலக்கு கோரலாம்” என்றார்.