மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முதுமைக்கு மரியாதை 32 - “ரிட்டயர்மென்ட் வயதில் நம்பிக்கையில்லை!” - எழுத்தாளர் ராஜேஷ்குமார்

எழுத்தாளர் ராஜேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்தாளர் ராஜேஷ்குமார்

தோள் கொடுப்போம்... துணை நிற்போம்!

“முதுமை என்றால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் இருக்கிறது. 60 வயதுக்கு மேல் ஆனாலே வேலை செய்ய முடியாது என அரசாங்கமே ஓய்வு கொடுக்கிறது. அதே நேரத்தில் முக்கியப் பதவிகளில் உள்ள ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், முதல்வர்களுக்கு அந்த விதிமுறைகள் இல்லை. முதுமையை கணக்கில் கொண்டால் 60 வயதுக்கு மேற்பட்டோர் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற விதியைக் கொண்டு வரலாமே?” - 75 வயதிலும் தன் க்ரைம் நாவல் போலவே தடதடவென்று அதிரடி சரவெடியாகப் பேசத் தொடங்கினார் எழுத்தாளர் ராஜேஷ்குமார். கோவை, வடவள்ளி பகுதியில் உள்ள தன் வீட்டில் நம்மை உற்சாகமாக வரவேற்றார் உற்சாக எழுத்தாளர்.

“ரிட்டயர்மென்ட் வயதில் எனக்கு நம்பிக்கையில்லை. இளமை, முதுமை என்று நாம்தான் கோடு போடுகிறோம். 60 வயதில் வந்த வியாதிகள் எல்லாம் இப்போது 20 - 30 வயதுகளில் வரத் தொடங்கிவிட்டன. என்னைப் பொறுத்த வரை, மனதளவில்தான் வயது குறித்த எண்ணங்கள் வருகின்றன. இப்போது கதை எழுதும்போது, இன்றைய நிலவரத் துக்கு என்னை அப்டேட் செய்து கொண் டிருக்கிறேன். அளவுக்கு மீறினால் என்ன ஆபத்து ஏற்படும் என்ற அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு குறித்து ஒரு கதை எழுதி வருகிறேன். மனிதன் எந்திரமானால், எந்திரன் மனிதனாகிவிடுவான்’’ என்றவர், தன் ஆரோக்கியம் குறித்துப் பகிர்ந்தார்.

’’முதுமையில் நாவடக்கம், புலனடக்கம் இரண்டும் அவசியம். இப்போது எனக்கு 75 வயதாகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பே ரத்த அழுத்தம் வந்துவிட்டது. இரவில் தூக்கம் கெட்டு எழுதுவதால் ரத்த அழுத்தம் வந்தது. ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. அது உங்கள் உடல் முன்வைக்கும் ஒரு புகார். ‘அதிகம் வேலை செய்கிறாய். உப்பு அதிகம் சேர்த்துக் கொள்கிறாய். அதை குறைத்துக்கொள்’ என்று சொல்லும் உடலின் எச்சரிக்கை. அந்தப் புகாரை நாம் மதிக்க வேண்டும். மதித்து, அதற்கேற்ப நடந்தேன். ‘பயப்பட வேண்டாம். இனிமேல் நான்கு இட்லி ஒரு மாத்திரை. இதுதான் உங்கள் உணவு’ என மருத்துவர் கூறியதை பின்பற்றினேன். ஆறு மாதங்களுக்கு முன்பு எனக்கு சர்க்கரையும் வந்திருக்கிறது. வயதானால் இது இயல்புதான். டீ, காபியில் நோ சர்க்கரை, இனிப்புகளுக்கு டாடா, அளவாக பழங்கள் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருவதன் பலனாக, ஆறு மாதங்களாக உடலில் சர்க்கரை அளவு சரியாக உள்ளது.

புலனடக்கம், நாவடக்கம் அவசியம் என்பதை முழுமையாக உணர்ந்தவன் நான். மருத்துவர்களே என்னுடைய கட்டுப்பாட்டை பார்த்து ஆச்சர்யப் படுவர். காரணம் அவரிடம் வரும் மற்ற முதியவர்கள், வீட்டில் யாருக்கும் தெரியாமல் இனிப்பு, ஐஸ்க்ரீம் சாப்பிட்டு சர்க்கரையை அதிகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். சிறு வயதில் நாம் சாப்பிடாத இனிப்புகளா? நினைவு தெரிந்த நாளில் இருந்து நாம் எத்தனை லட்டுகள் சாப்பிட்டிருப்போம். இளம் பிராயத்தில் என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றை இந்த வயதில் விட்டுவிட வேண்டும்; அப்போது என்னவெல்லாம் பிடிக்காதோ அவற்றையெல்லாம் இப்போது சாப்பிட்டாலே ஆரோக்கியம் வந்துவிடும். எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். மூன்று வேளையும் மைசூர்பாக் சாப்பிட்ட நாள்கள் உள்ளன. இப்போது இனிப்பைத் தொடுவதில்லை. மாறாக பாகற்காய், நெல்லி, வெந்தயம் சாப்பிடு கிறேன். கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் மூலம் கிடைக்கும் ஆரோக் கியம் வயதாகும் உணர்வை மறக்கடித்து விடும். நான் இதில் கடுமையாக இருப்பேன். மனைவியே கூட, ‘எதற்காக இவ்வளவு ஸ்ட்ரிக்டாக இருக்கிறீர்கள்?’ என்பார். அதனால்தான் இளமையாக இயங்க முடிகிறது. சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ் வில் 75 நிமிடங்கள் இடைவிடாமல் மேடையில் நின்று பேசினேன். இருமல், கொட்டாவி ஏதும் வரவில்லை. மாணவர் களும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார்கள்’’ என்பவரின் ஒரு நாள் எப்படி இருக்கும்?

ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்

``முன்பெல்லாம் 24 மணி நேரத்தில் 16 மணி நேரம் எழுதிக்கொண்டேதான் இருப்பேன். என்னுடைய 52-வது வயது வரை நள்ளிரவு 1 மணிக்குத்தான் தூங்கு வேன். 4 மணி நேரம்தான் தூங்குவேன். 5 மணிக்கு எழுந்துவிடுவேன். எல்லா பத்திரிகைகளும் கதைகளுக்கு அட்ட வணை வாங்கிச் சென்று விடுவார்கள். இப்போது என்னுடைய அன்றாடம் மாறிவிட்டது.

பலர் அதிகாலை எழுவதுதான் ஆரோக்கியம் என்பார்கள். உண்மையில் ஒருநாளுக்கு 6 - 7 மணி நேரம் தூங்குவது தான் ஆரோக்கியம். நான் இப்போது தினசரி காலை 8 மணிக்கு எழுவேன். உடனே பச்சை தண்ணீரில் பற்களின் ஈறுகளை மசாஜ் செய்வேன். இப்படிச் செய்வதால் ஈறுகள் இறுகி பற்கள் வலிமை யாகும். இதுவரை எனக்கு பல்வலி வந்தது இல்லை. எந்தப் பல்லும் சொத்தை ஆனது கிடையாது. ‘75 வயதிலும் 40 வயதுக்காரரின் பல் போல வலிமையாக இருக்கிறது’ என மருத்துவரே சொல்வார். மசாஜ் முடித்து, பல் துலக்கிவிட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பேன். வீட்டைச் சுற்றி அரை மணி நேரம் நடைப்பயிற்சி செல் வேன். காகம், குருவிகள், நாய்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பேன். செடி களுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டுக் குளிக்கச் செல்வேன். 9 மணியளவில் பூஜை அறையில் அரை மணிநேரம் சம்மணம் போட்டு பூஜை செய்வேன்.

9.30 மணிக்கு காலை உணவு. நான்கு இட்லி அல்லது ஒரு கரண்டி மாவில் ஒரே ஒரு தோசை அல்லது சிறிது பொங்கல். பிறகு எழுதச் சென்றுவிடுவேன். தினசரி காலை 11 மணிக்கு நாட்டுத் தக்காளியை விதைகள் நீக்கி அரைத்து சாறு குடிப்பேன். அதில் சிறிதளவு உப்பு, மிளகு சேர்த்துக் கொள்வேன். இதன் மூலம் சிறுநீரக சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையும் வராது. காலை, மாலை சர்க்கரை இல்லாமல் அரை டம்ளர் காபி குடிப்பேன். மதியம் 1.30 மணியளவில் ஒரு கை அளவு சாப்பாடு, 3 கை காய்கறிகள். எதையும் உமிழ்நீருடன் நொறுங்கச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகி வயிறு உங்களை வாழ்த்தும். வாரத்துக்கு ஒருநாள் மத்தி மீன், 2 வாரங்களுக்கு ஒருமுறை சிறிது சிக்கன், மட்டன். தினமும் மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் 4 பாதாம், 2 வால்நட், 6 பிஸ்தா சாப்பிட்டுவிட்டு 2 - 4 மணிவரை தூங்குவேன். மாலை காபி குடித்து முகம் கழுவிவிட்டு மீண்டும் பூஜை அறையில் 5 நிமிடம் அமர்ந்து தியானம் செய்வேன். கூரியர் அனுப்பும் பணிகளை முடித்து, அரை மணிநேரம் நடைப்பயிற்சி செல்வேன். இரவு 8 மணிக்கு 2 சப்பாத்தி சாப்பிட்டு, பாதாம், பிஸ்தா கலந்த பால் குடித்து மீண்டும் சிறிது நேரம் எழுதுவேன். 10 மணிக்குப் படுத்துவிடுவேன். ஆனால், மூளை 1 மணிக்கு தூங்கியே பழக்கப்பட்டி ருப்பதால், உடனே தூக்கம் வராது. அப்படியே கதைகளைப் பற்றி யோசித்து யோசித்து சோர்வாகித் தூங்கிவிடுவேன். இப்போது ஒரு தொடர் முடித்துவிட்டு தான் அடுத்த தொடரை தொடங்கு கிறேன்’’ - பவளவிழா வயதிலும் அவர் ஆரோக்கியத்துக்கான காரணம் புரிந்தது.

``முன்பு நான் வீட்டு வாசலை தாண்டி னாலே வாசகர்கள் பிடித்துக்கொள் வார்கள். எங்குமே செல்ல முடியாது. இப்போது காலங்கள் ஓடிவிட்டன. என்னுடைய தோற்றம் மாறிவிட்டது. இருப்பினும் வாசகர்கள் என்னை கண்டு பிடித்துப் பேசுகிறார்கள். ஒருநாள் காலை வீட்டு வாசல் முன்பு நின்றுகொண்டிருந்த போது, கட்டட வேலைக்குச் செல்லும் மேஸ்திரி தோளில் மண்வெட்டி போட்டுக் கொண்டு தன் சித்தாள் மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண் ணின் பெயர் அருள்மொழிசெல்வி. அருகில் வந்தவர், ‘சார் நீங்கள் ராஜேஷ் குமாரா?’ எனஆச்சர்யத்துடன் கேட்டார். ‘ஆளே மாறிட்டீங்க. உங்க நாவலை படிச்சு நான் நிறைய கத்துக்கிட்டேன், உலகத்தை புரிஞ்சுக்கிட்டேன், தைரிய மானேன்’ என்றார். பாமர மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதைவிட சிறந்த இலக்கியம் என்ன இருக்கிறது’’ என்பவர், தாத்தா ராஜேஷ்குமார் பற்றி சொன்ன போது இன்னும் பிரகாசமானார்.

``என் வயதுக்கு மீறிய வேலைகளில் எல்லாம் ஈடுபட மாட்டேன். மிகவும் அருகில் உள்ள அவசியமான நிகழ்வுகளுக்கு மட்டும் செல்வேன். வங்கி உள்பட அனைத்து வேலைகளையும் எளிமைப்படுத்திவிட்டேன்.

எங்கள் குடும்பத்தில் யாருக்குமே தவறான பழக்கவழக்கங்கள் இல்லை. எல்லாருமே `டீட்டோலர்'. என் அப்பா, அம்மா மிகவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்து சென்ற வாழ்க்கையைத்தான் நான் இன்று பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எந்த வேலையாக இருந்தாலும் காதலித்து செய்தால் மன அழுத்தம் ஏற்படாது. எங்கள் வீட்டில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனைவி என் காதுக்குக் கொண்டு வராமல், அவராகவே சரி செய்துவிடுவார். என்னுடைய வேலையை அவரின் வேலையாக எடுத்துக் கொண்டு நினைவூட்டுவார். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படுவார். அதனால் நான் எனக்கு ஏற்படும் காயங்கள் குறித்து கூட அவரிடம் சொல்ல மாட்டேன். மகன்கள் சென்னையில் உள்ளனர். தினசரி போனில் பேசுவார்கள். ‘சண்டே காலிங்’ (Sunday Calling) என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எந்நேரமானாலும் பேரன்களிடம் பேசிவிடுவோம்.

வயதாகும்போது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் பேச்சை குறைக்க வேண்டும். புளியம்பழத்தில் அந்தப் பழத் துக்கும், ஓட்டுக்கும் உறவே இருக்காது. அதுமாதிரி பற்றும் பாசமும் இல்லாமல் இருந்தாலே அழுத்தங்கள் குறைந்து நிம்மதி பிறக்கும். எந்த ஒரு விஷயம் கோபப்படுத்துகிறதோ அதை வீட்டில் தவிர்த்துவிடுங்கள். முதுமையில் பொறுமை மிகவும் அவசியம். யாராவது அழைத்தால் மட்டுமே ஒரு விவகாரத்தில் நம் கருத்தை சொல்ல வேண்டும்” - அழுத்தமான ஆலோசனையுடன் முடித் தார் ராஜேஷ்குமார்.

- தோள் கொடுப்போம்...

ராஜேஷ்குமார், தனலட்சுமி
ராஜேஷ்குமார், தனலட்சுமி

அட்ஜஸ்ட்மென்ட் முக்கியம்!

ராஜேஷ்குமார் மனைவி தனலட்சுமி கூறுகையில், “நான் அவருக்கு அப்படியே நேர் எதிர். அவர் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்றிருப்பார். எனக்கு வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். கோயிலுக்குச் சென்றால்கூட அங்கு சுத்தம் செய்ய லாமா எனக் கேட்பேன். எங்கள் வீட்டில் வேலைக்கு ஆள் இருந்தால்கூட நம் வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். உட்கார்ந்தால், உட்கார்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும் என்பதால் முடிந்த வேலைகளைச் செய்துவிடுவேன்.

இளமையில் எப்படி இருந்தோமோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறோம். அவ்வப்போது ஏற்படும் மூட்டுவலியின்போதுதான் வயதானது தெரியும். எளிமைதான் எங்கள் இருவருக்கும் பிடிக்கும். நாங்களேதான் காய்கறி வாங்கி வருவோம். என்னை விட, இவர் ஒவ்வொரு காயாகப் பார்த்துப் பார்த்து வாங்குவார். முன்பு வாரத்தின் ஏழு நாள்களும் ஏழு கோயில்களுக்குச் செல்வோம். இப்போது வீடுதான் கோயில். ஒரு நாவல் எழுதி முடித்தவுடன் சினிமா கூட்டிச் செல்வார். கடைசியாகச் சென்றது, அவர் எழுதிய கதையை மையமாக வைத்து எடுத்திருந்த ’யுத்த சத்தம்’ படம். மிகவும் போரடித்தால்தான் டி.வி பார்ப்பேன். மகன்கள் வந்தால் எங்காவது அழைத்துச் செல்வார்கள். எதுவாக இருந்தாலும் நாங்கள் இருவருமே அட்ஜஸ்ட் செய்து கொள் வோம்” என்றார்.

மனதுக்குப் பிடித்த வேலையால் மறதியை விரட்டலாம்!

``மூக்குக் கண்ணாடியை எங்கே வைத் தோம்? நேற்று சந்தித்த அந்த உறவினரின் பெயர் என்ன? சமீபத்தில் டி.வியில் பார்த்த அந்தப் படத்தின் பெயர் மறந்துவிட்டதே? - இப்படிப்பட்ட விஷயங்கள் நடுத்தர வயதில் ஏற்படும் நிலையில், முதுமைப் பருவத்தில் இன்னும் அதிகமாவது ஏன்?'' என்ற கேள்விக்கு சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் மு.அருணாசலம் அளித்த விளக்கங்கள்...

``அறுபது வயதுக்கு மேல் 40 சதவிகிதம் பேருக்கும் எழுபது வயதுக்கு மேல் 70 சதவிகிதம் பேருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். ஒரு விஷயத்தைப் பேச ஆரம்பித்து எதற்காக அதைப் பேசினோம் என்பது தெரியாமல் போகும். இப்படி தொடர்பில்லாமல் பேசுவது அதிகமாகும்போது மற்றவர்களிடம் பேசுவதற்கே சங்கடப்படுவார்கள். அமைதியாகிவிடுவார்கள். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம்.

குறிப்பாக நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து, புகை பிடித்தல் ஆகிய காரணங்களால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவது அதிகமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு ஞாபக மறதி அதிகமாகும். இது தவிர்க்க முடியாதது என்றாலும் உடலுக்கு உடற் பயிற்சி செய்வது போல் நமது மூளைக்கு தினமும் பயிற்சி அளிப்பது மூலம் அதை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்.

 மு.அருணாசலம்
மு.அருணாசலம்

சமீபத்தில், 102 வயதில் இந்திய-அமெரிக்க புள்ளியியல் நிபுணரான கலியம்பூடி ராதாகிருஷ்ண ராவ் (சி.ஆர்.ராவ்), நோபல் பரிசுக்கு நிகரான 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச புள்ளியியல் பரிசைப் பெற்றுள்ளார். எப்படி அவரால் முடிந்தது? முடிந்தால் முடியாதது ஒன்றுமில்லை என்கிற ஆர்வம், தேடல்...

சீனியர் சிட்டிசன்களைப் பொறுத்தவரை ஓரமாக ஒதுங்கிவிடாமல் இளவயதில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த விஷயத்தைக் கற்றுக் கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள நினைத்து அது முடியாமல் போயி ருக்கலாம். அதை இப்போது கற்றுக் கொள்ளலாம். உங்கள் பேரக்குழந்தைகள் அந்த மொழியைப் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களோடு சேர்ந்து நீங்கள் அந்தப் பாடங்களைப் படிக்கலாம். இசைக் கருவியை வாசிக்க வேண்டும் என்று நினைத்து, முடியாமல் போனவர்கள் இப்போது கற்றுக்கொள்வதற்கு வயது ஒன்றும் தடையாக இருக்காது.

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றியோ, தோல்வியோ... உங்கள் அனுபவங்களைத் தொகுத்து எழுதலாம். அந்த அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் உதவும். இப்படி உங்களுக்குப் பிடித்த விஷயங்களை அதற்கான நேரத்தை ஒதுக்கிச் செய்து கொண்டிருக்கும்போது சீரான ரத்த ஓட்டம் மூளைக்குக் கிடைத்து, மூளையில் உள்ள செல்கள் புத்துணர்வு பெறும். நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள்.

ஞாபகமின்மையைத் தவிர்க்க, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்காக தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம். கடந்து போன நாள்களை நினைத்துக் கவலைப்படாமல் இன்றைய வாழ்க்கையை சந்தோஷமாக நினையுங்கள். பிடித்த பணிகளைச் செய்து கொண்டே இருக்கும்போது உங்கள் ஆயுள் நீடிக்கும். அந்த நிலையுடன் எளிமையாக, யதார்த்தமான வாழ்க்கை நடத்துங்கள். மறதியை விரட்டுங்கள்” என்றார்.