பிரிந்த காதலர் மீண்டும் வந்தால், நீங்கள் முடிவெடுக்க இந்த 7 கேள்விகள் உதவும்! #RelationshipGoals

விலகிச் சென்றவர்கள் நெருங்கிவந்தால் என்ன செய்யலாம், மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தரலாமா?

எல்லா காதலும் 'ஹேப்பிலி எவர் ஆஃப்டர்' வகையறாவுக்கு உட்பட்டு வருவதில்லை. சேர்ந்த காதலைவிடவும் பிரிந்த காதல்களும் பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும் காதலும்தான் இன்றைய சூழலில் அதிகம். மாடர்ன் சமூகத்தில், 'பிரேக் அப்' என்ற வார்த்தை மட்டுமே எளிமையாகிவிட்டது.
பிரேக் அப்பை எதிர்கொள்பவர்களில், மூன்று வகையினர் இருக்கின்றனர். முதல் வகையினர், பிரேக் அப்புக்குப் பிறகு சில காலங்கள் எடுத்துக்கொண்டு தங்களுடைய பிரிவிலிருந்து மீள்பவர்கள். அடுத்தவர்கள், பிரேக் அப் தந்த நினைவுகளிலேயே சுழன்றுகொண்டிருப்பவர்கள். அடுத்தது, மீண்டும் பழைய உறவைத் தேடி செல்பவர்கள். அந்த வகையில் பழைய உறவை மீண்டும் உயிர்ப்பித்துக்கொள்ள நினைப்பவர்களின் இணையர்களுக்கான கட்டுரைதான் இது.

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 'விலகிச் சென்றவர்கள் நெருங்கிவந்தால் என்ன செய்யலாம். மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தரலாமா. அந்த உறவை நீட்டித்துக் கொள்வது சரிதானா' என நினைத்து குழப்பம் அடைபவர்களுக்கான கட்டுரைதான் இது.
இப்படியானவர்கள், கீழ்க்காணும் கேள்விகளை உங்களுக்கு நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். கிடைக்கும் விடைகளைப் பொறுத்து, முடிவுகளை எடுங்கள்.

எதற்காக நீங்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டீர்கள்?
சிலர் சிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டைபோட்டு, தவறான புரிதல்களால் பிரிந்திருப்பார்கள். இன்னும் சிலர், 'கொஞ்ச நாள் பிரிந்திருக்கலாம்' என முடிவு செய்துவிட்டு, காலம் கடந்த பின்னரும் ஈகோ காரணமாகவோ தயக்கம் காரணமாகவோ பேசாமல் விலகி இருப்பார்கள். இவற்றில் ஏதோவொன்றுதான் உங்களுடைய பிரிவுக்குக் காரணம் என்றால், நீங்கள் மீண்டும் இணைவதில் தயக்கம் தேவையில்லை. சில உறவுகள் நம்பிக்கையின்மை காரணமாக, மோசமான சண்டை சச்சரவுகளுக்குப் பின் பிரிந்திருக்கும். அப்படித்தான் நீங்கள் பிரிந்திருந்தீர்கள் என்றால், மீண்டும் இணைய வேண்டுமா என்பதை யோசித்துக்கொள்ளவும்.

இணையர் மீண்டும் உங்கள் தேடி வந்ததன் பின்னணி என்ன?
பெரும்பாலான நேரத்தில் இணையர் மீண்டும் வருவதற்கான காரணமாகப் பிரிவு தந்த வேதனை, வேலை அல்லது குடும்பம் சார்ந்த பிரச்னைகள், இணையரின் நேர்மையை உணர்ந்துகொண்டமை, அடுத்தகட்ட உறவுக்குத் தயாராகி அதில் ஏற்பட்ட முறிவு போன்றவைதாம் இருக்கும். காரணம் தெளிவாகவும் நேர்மையாகவும் இருக்கும்பட்சத்தில், மீண்டும் இணைவது தவறில்லை. அந்தக் காரணம், உங்களைப் புண்படுத்தாத வரையில் மீண்டும் இணைய தயக்கப்பட வேண்டாம்.

வார்த்தை மட்டுமல்ல... எக்ஸ்ப்ரெஷனும் முக்கியம்!
மீண்டும் இணைவது குறித்து இணையர் உங்களிடம் வந்து பேசும்போது, என்ன மாதிரியான முகபாவத்தை வெளிப்படுத்துகின்றார் என்பதைக் கவனியுங்கள். தேவையில்லாத நாடகத்தன்மை தெரியவந்தால், முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.

உறவிலிருந்தபோது, உங்கள் இருவருக்குமான உறவு எப்படி இருந்தது?
ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது அடிக்கடி நீங்கள் சண்டைபோடுபவராக இருந்திருக்கலாம். அப்படியானவர்கள், மீண்டும் இணைவதில் அர்த்தம் இல்லை. உறவின்போது மிகக்குறைவாகவே சண்டை போட்டிருந்தீர்கள், அதுவும்கூட சிறு சிறு காரணங்களுக்கானதுதான் எனும்பட்சத்தில் அந்த உறவுக்கு அடுத்ததொரு வாய்ப்பு கொடுப்பது நல்லதுதான். ஒவ்வொரு சண்டையின்போதும், இருவரும் எப்படிச் சமாதானமாகின்றீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இருவரில் யாரேனும் ஒருவர் மட்டுமே இறங்கி வரும் சூழல் இருந்திருக்கும்பட்சத்தில், அந்த உறவை மீண்டும் உயிர்ப்பித்துக்கொள்வது சரியாக இருக்காது.

இப்போதும் அதேயளவு காதலோடு நீங்கள் இருக்கின்றீர்களா?
விலகிச்சென்ற காதலிடமிருந்து நீங்கள் வெளிவந்துவிட்டீர்கள் எனும்பட்சத்தில், அதை மீண்டும் உயிர்ப்பித்துக்கொள்ள நினைப்பது வீண். பிரிவிலிருந்து நீங்கள் முழுமையாக மீளவில்லை, பிரிவுக்கு முன்னிருந்த அதே காதல் இப்போதும் உங்களிடம் அப்படியே இருக்கிறது எனும்பட்சத்தில், தாராளமாக நீங்கள் அந்த உறவுக்கு மீண்டுமொரு வாய்ப்பு கொடுக்கலாம்.

பிரிவுக்குக் காரணமான சூழல், இப்போது மீண்டும் அமைந்தால் என்ன செய்வீர்கள்?
ஏற்கெனவே பிரிவதற்கு காரணமான சூழல், இப்போது நிகழுமாயின் அதை எப்படிக் கையாள்வீர்கள் என்பதை இருவரும் அமர்ந்து ஆலோசிக்கவும். மீண்டுமொரு முறை பிரிவு வரக்கூடாது என்ற எண்ணம் இருவருக்கும் எந்தளவு உள்ளது என்பதை உணர்ந்துகொள்ளவும். பிரிவுக்குத் தயாரான நிலையில், உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். இரண்டாவது முறை ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்போகின்றீர்கள் என்பதால், முன்பைவிட கூடுதல் கவனமாக இருக்கவும்.

பிரிவின்போது ஏற்பட்ட மனக்கசப்புகள், இப்போதும் வலி தருகிறதா?
பிரிவின் தாக்கம் மனதளவில் இப்போதும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதா என உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் காதலித்த தருணத்தை நினைவுகூர்ந்து பாருங்கள். அப்படி யோசிக்கும்போது மகிழ்ச்சியான நிகழ்வு அதிகம் ஞாபகம் வருகிறதா, அல்லது மோசமான நினைவுகள் நினைவுக்கு வருகின்றதா என்பதைக் கண்டறியவும். மோசமான நிகழ்வுகள்தான் அதிகம் நினைவிலுள்ளது என்றால், இரண்டாம் வாய்ப்பு தருவதை தவிர்ப்பது சிறப்பு.