காதலும் காமமும் குழைத்ததில் ஜனித்தவர்கள்தான் நாமெல்லோரும். காமத்தைத் தள்ளி வைத்துவிட்டு இங்கு யாரும் வாழ்ந்துவிட முடியாது. `காமத்துக்கு மரியாதை' என்ற தலைப்பில் கடந்த 20 வாரங்களாகக் காமம் தொடர்பான புரிந்துணர்வையும், அதில் எழக்கூடிய பல சந்தேகங்களுக்கு நிபுணர்களின் உதவியுடன் தீர்வுகளையும் விகடன் டிஜிட்டல் வழியே சொல்லி வந்தோம். தொடர் முடிந்த பிறகும் வாசகர்களின் கேள்விகள் வந்தவண்ணம் இருக்கவே, `காமத்துக்கு மரியாதை' தொடரை சீஸன் 2 எனத் தொடர ஆரம்பித்திருக்கிறோம். வழக்கம்போல உங்கள் பிரச்னைகளை uravugal@vikatan.com-க்கு மெயில் செய்யுங்கள். இந்த சீஸனில் பதிலளிக்கவிருப்பவர் பாலியல் மருத்துவர் காமராஜ்.

``புதிதாகத் திருமணமான தம்பதியரிடம் மட்டுமல்லாமல், திருமணமாகி சில வருடங்களான தம்பதியர் மத்தியில்கூட `மாதவிடாய் நேரத்தில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாமா' என்கிற சந்தேகம் இருக்கிறது. `இந்த நாள்களில் உறவுகொண்டால் கணவனுக்கு ஜன்னி வந்துவிடும்' என்று நம்புகிறவர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். இது சரியா, தவறா என்று தெரிந்துகொள்வதற்கு முன்னால், மாதவிடாயினால் ஆணுக்குப் பிரச்னை வரும் என்பதற்குப் பின்னால் இருக்கிற பின்னணியை அறிந்துகொள்வோம்.
சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரைக்கும் மனிதர்கள் காடுகளில்தான் வசித்து வந்தார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். இந்தக் காலகட்டத்தில் மனிதர்கள் பெரு மழை, நெருப்பு என்று அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய இயற்கைக்கு அச்சப்பட்டதைப் போலவே பெண்களின் மாதவிடாய் குறித்தும் பயந்தார்கள்.
ஏனென்றால், அக்காலத்தில் மிருகங்களுக்கு அருகே மனிதர்கள் வசித்தார்கள் என்றே சொல்லலாம். அப்போது, கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நிகழ்ந்துவிட்டால், அந்த ரத்த வாடையை சில பல கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் இருக்கிற கொடிய விலங்குகள்கூட மோப்பம் பிடித்து வந்துவிடும்.
அதனால், அந்தப்பெண்ணை மட்டும் மாதவிடாய் நாள்கள் முடிகிற வரைக்கும் மலை உச்சியிலோ, உயரமான மரத்தின் மீதோ தங்க வைப்பார்கள். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு, எந்தக் காரணத்துக்காகச் செய்தோம் என்பதை மறந்துவிட்டு செயலை மட்டும் ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது, காடுகளை விடுத்து கிராமங்களில் குடியேறிய பிறகும் மாதவிடாய் நாள்களில் பெண்ணை தனியே இருக்க வைத்தார்கள். அதன் நீட்சியாக `பீரியட்ஸ் நேரத்துல இதைத் தொடாதே; அதைத் தொடாதே' என்று புதிது புதிதாகக் கட்டுப்பாடுகளையும் விதிக்க ஆரம்பித்தார்கள். அவற்றில் ஒன்றுதான், `மாதவிடாய் வர்றப்போ உறவு வெச்சுக்கிட்டா கணவனுக்கு ஜன்னி வந்துடும்' என்கிற கட்டுக்கதையும்.

சரி, பீரியட்ஸ் நேரத்தில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாமா என்றால், `தாராளமாக வைத்துக்கொள்ளலாம்' என்பதுதான் மருத்துவம் சொல்லும் உண்மை. மாதவிடாயின்போது வெளியேறுகிற ரத்தம் சுத்தமானது. அதில் எந்தக் கழிவும் இல்லை. அதனால், உறவுகொள்ளும் கணவனுக்கு எந்தத் தீங்கும் தொற்றும் ஏற்படாது.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? மாதவிடாய் நேரத்தில் உறவு வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படும் என்பதுதான் நிஜம். அந்த நாள்களில் பெண்களுக்கு வரக்கூடிய தசைப்பிடிப்பு, வலி ஆகியவை கட்டுப்படும். எப்படி என்கிறீர்களா? உறவின் உச்சக்கட்டத்தின்போது உடலானது மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன்கள் வலி நிவாரணிபோல செயல்பட ஆரம்பிக்கும். கூடுதலாக, அந்த நாள்களில் ஏற்படக்கூடிய மூட் ஸ்விங்ஸும் குறையும்.
நான் மேலே சொல்லியிருப்பது தம்பதியருக்கு மட்டும்தான் பொருந்தும். பலருடன் உறவு வைத்துக்கொள்பவர்களுக்குக் கிருமித்தொற்று, பால்வினை நோய்கள் என்று பல ஆபத்தான நோய்கள் வருவதற்கு அதிகமான வாய்ப்பிருக்கிறது.
கருத்தரித்த புதிதில் உறவுகூடாது. அப்படி வைத்துக்கொண்டால் கரு கலைந்துவிடும் என்பார்கள் சிலர். எந்தக் காலகட்டத்திலும் உறவைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. பூமி சுற்றிக் கொண்டிருந்தாலும் நம் கையில் இருக்கிற காபி கப் கீழே விழுவதில்லை. இதே மாதிரிதான் உறவும். பெற்றோர் உறவுகொள்வதால், தாயின் கருப்பைக்குள் வளர்ந்து கொண்டிருக்கிற அந்த மிக மிகச் சிறியதான கருவுக்கு எந்தப் பாதிப்பும் வராது.

அதற்கான எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை. உறவுகொண்டால், மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும். அதனால், மனமும் உடம்பும் மகிழ்ச்சியாக இருக்கும். சில பெண்களுக்கு 40 வாரம் தாண்டியும் பிரசவ வலி வராது. அவர்கள் உறவுகொள்ளும்போது, விந்தணுக்கள் கருப்பை வாயில்பட்டவுடனே அது சுருங்கி விரிய ஆரம்பிக்கும். உடனே பிரசவ வலியும் வந்துவிடும்.
சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும்போது, அபார்ஷன் ஆவதுபோல அடிக்கடி ரத்தப்போக்கு ஏற்படும். அவர்கள் உறவுகொள்ளாதிருப்பது நல்லது. இன்னும் சிலருக்குக் கருப்பையில் கிருமித்தொற்று ஏற்படலாம் என்று மகப்பேறு மருத்துவர் எச்சரித்திருந்தால், அந்தத் தம்பதியரும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளாமலிருப்பதே நல்லது. மற்றபடி எப்போதும் செக்ஸ் நல்லதே..!'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
தொடர்ந்து மரியாதை செய்வோம்!