Published:Updated:

`வயதும் நேரமும் அல்ல; காமத்துக்கு இதுதான் ரொம்ப முக்கியம்!' - காமத்துக்கு மரியாதை - 17

Couple (Representational Image) ( Photo by Marcelo Chagas from Pexels )

`தினமும் உறவுகொண்டால் உடம்பு வீக்காகிடும்னு வாட்ஸ்அப் ஃபார்வேர்ட்ல பார்த்தேனே டாக்டர்' என்று தயங்கினீர்கள் என்றால், அந்தக் கூற்றுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லையென்பதுதான் என்னுடைய பதில். செக்ஸ் வாழ்க்கை குறையும்போதுதான் திருமண வாழ்க்கையில் பிரச்னை வரும் வாய்ப்புகள் அதிகம்.

`வயதும் நேரமும் அல்ல; காமத்துக்கு இதுதான் ரொம்ப முக்கியம்!' - காமத்துக்கு மரியாதை - 17

`தினமும் உறவுகொண்டால் உடம்பு வீக்காகிடும்னு வாட்ஸ்அப் ஃபார்வேர்ட்ல பார்த்தேனே டாக்டர்' என்று தயங்கினீர்கள் என்றால், அந்தக் கூற்றுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லையென்பதுதான் என்னுடைய பதில். செக்ஸ் வாழ்க்கை குறையும்போதுதான் திருமண வாழ்க்கையில் பிரச்னை வரும் வாய்ப்புகள் அதிகம்.

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Marcelo Chagas from Pexels )

தன் இணையுடன் காமம் சுகிப்பதற்கு இதுதான் காலம் என்கிற வரையறையெல்லாம் கிடையாது. அதேபோல வயதிலும் வரையறை கிடையாது என்கின்றன பாலியல் தொடர்பான ஆய்வுகள். காலத்தைப் பற்றிப் பேசுகையில் குறுந்தொகையில் இடம்பெறும் மழைக்காலப் பாடல்கள் இரண்டு நினைவுக்கு வருகின்றன. `கார்காலத்தில் வருவேன்' என்று கூறிவிட்டுப் பொருளீட்டச் செல்கிறான் தலைவன். ஆனால், கார்காலம் ஆரம்பித்த பிறகும் அவன் திரும்பி வரவில்லை. காடுகளோ கார்காலத்துக் கொன்றை மலர்களைப் பூத்துச் சொரிந்தன. `காடுகள் கொன்றை மலர்களைப் பூத்தாலும் நீ இதைக் கார்காலம் என்று நம்பாதே. ஏனென்றால், தலைவன் பொய் உரைக்க மாட்டான்' என்று சொல்லி, தலைவியைத் தேற்றுகிறாள் தோழி. தலைவனை இப்படி உயர்த்திச் சொன்னால் தலைவி நம்பத்தானே செய்வாள். காதலும் காமமும் இயற்கையைக் காட்டிலும் தன் இணையைத்தான் நம்பும் போலும்.

இன்னொரு பாடலோ, பெருமழை பெய்யும் கார்காலத்தில் ஆண் மான்கள் பெண் மான்களைத் தழுவியபடி கிடக்க, ஆண் யானைகளோ தத்தம் பெண் யானைகளோடு சேர்ந்து அழகிய மலைப் பக்கங்களை அடைந்தனவாம் என்று கார்காலத்தையும் காமத்தையும் குழைத்துக்கொண்டாடுகிறது. மனிதர்களின் காமத்துக்குக் கார்காலம் வரைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குத் தனிமையும் துணையும் போதும். தினம் தினம் கார்காலம்தான்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Andrea Piacquadio from Pexels

அடுத்து வயது. இந்த இடத்தில் இயக்குநர் விசுவின் `வரவு நல்ல உறவு' படம் நினைவுக்கு வருகிறது. பேரன், பேத்தி எடுத்த பிறகும் மனைவி மீது அத்துணை காதலாக இருக்கும் விசுவின் கதாபாத்திரம். `புது வீட்லேயும் நமக்கு தனி ரூம் வேணும்' என்று விசு கேரக்டர் சொல்வதைப் பார்க்கும்போதே, `ப்பா... எத்தனை வயசானாலும் நாமளும் இப்படித்தான் அன்னியோன்னியமா இருக்கணும்' என்று நினைக்கத் தோன்றும்.

பாலியல் மருத்துவர் காமராஜ் பேசுகையிலும் இதையே சொல்கிறார். அதாவது, கணவன், மனைவிக்கு இடையேயான காமத்தில் காலமும் வயதும் கிடையவே கிடையாது. சூழலும் அவர்கள் விருப்பமும் மட்டுமே முக்கியம். தம்பதி விருப்பப்பட்டால் தினமும்கூட தாம்பத்திய உறவு கொள்ளலாம். துணை இருந்தால் காமத்தை வாழ்வின் கடைசி நாள் வரைக்கும்கூட அனுபவிக்கலாம் என்கிறார் அவர்.

பாலியல் மருத்துவர் காமராஜ்
பாலியல் மருத்துவர் காமராஜ்

``திருமணமான புதிதில் தாம்பத்ய உறவுக்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் காலம் நகர நகர வேலையில் அடுத்தடுத்தக் கட்டம், குழந்தை, அவர்கள் படிப்பு, சொந்த வீடு கட்டுதல் என்று அவற்றின் மீது சென்றுவிடும். அதாவது, செக்ஸின் முக்கியத்துவம் குறையாது. நம் கவனம் மற்ற விஷயங்களின் பக்கம் சென்றுவிடும். வெளிநாடு, வெளியூர் என்ற பிரிவுகள் இன்றி கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்பவர்கள் விரும்பினால் தினமுமே உறவுகொள்ளலாம். இதனால், சம்பந்தப்பட்ட தம்பதியின் வாழ்நாள் 10 வருடங்கள் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் சீராக இருக்கும். படபடப்பு, மன அழுத்தம் குறையும். விளைவு, மாரடைப்பு வருவதும் 50 சதவிகிதம் குறையும். இன்னும் முக்கியமாக ஆண்களுக்கு புராஸ்ட்டேட் கேன்சரும் பெண்களுக்கு கருப்பை கேன்சரும் வருவதற்கான வாய்ப்பும் குறையும்.

தினமும் உறவுகொள்வது நல்லது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தினமும் சாப்பிடுவது, தூங்குவதுபோலத்தான் உறவுகொள்வதும். `தினமும் உறவு கொண்டால் உடம்பு வீக்காகிடும்னு வாட்ஸ்அப் ஃபார்வேர்ட்ல பார்த்தேனே டாக்டர்' என்று தயங்கினீர்கள் என்றால், அந்தக் கூற்றுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லையென்பதுதான் என்னுடைய பதில். செக்ஸ் வாழ்க்கை குறையும்போதுதான் திருமண வாழ்க்கையில் பிரச்னை வருவதற்கும், திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது.

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

அடுத்து வயதானவர்களுக்கான தாம்பத்ய உறவுக்கு வருகிறேன். இவர்கள் தாம்பத்ய உறவைத் தவிர்ப்பதை, `வயதானவர்கள் ஏன் சைக்கிள் ஓட்டுவதில்லை' என்பதுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம்.

வயதான பிறகு சைக்கிள் ஓட்டினால் விழுந்துவிடுவோம் என்கிற பயம். இதேதான் காமத்திலும். முயற்சி செய்து முடியாமல் போய்விடுமோ என்கிற பயம். அடுத்து, அவர்களிடம் சைக்கிளே இல்லாமல் இருக்கலாம். அதாவது லைஃப் பார்ட்னரை இழந்திருக்கலாம். மூன்றாவதாக, `இந்த வயசுல சைக்கிள் ஓட்டினா பார்க்கிறவங்க சிரிக்க மாட்டாங்களா' என்கிற தயக்கம். அதாவது, வயதான பிறகும் தாங்கள் செக்ஸ்கொள்வது பிள்ளைகளுக்கோ, மற்றவர்களுக்கோ தெரிந்தால் கேலி செய்வார்கள் என்கிற அச்சம்.

செக்ஸ் இளைஞர்களுக்கு மட்டுமேயானது அல்ல. வயதான பிறகும் அதே உணர்வோடுதான் இருக்கிறோம். வயதான பிறகு யாரும் அசெக்ஸுவலாக மாறுவதில்லையே.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தனியறை, தனிமை தேவை. சில வீடுகளில் அம்மா ஒரு பிள்ளை வீட்டிலும், அப்பா இன்னொரு பிள்ளை வீட்டிலும் வசிப்பார்கள். தம்பதிக்கிடையே காமத்துக்கான சரியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

பல பிரச்னைகள் வராமல் தடுப்பதற்கான தாம்பத்ய ரகசியம் காமத்தில்தான் ஒளிந்துகொண்டிருக்கிறது. அதனால்தான், பாலியல் மருத்துவர்கள் நாங்கள், `Sex a day keeps the doctor and lawyer away' என்போம். அதாவது, தினமும் உறவுகொண்டால் மருத்துவரையும் வழக்கறிஞரையும் தள்ளி வைக்கலாம் என்பதே அதற்கு அர்த்தம். `தினமும் முடியலை டாக்டர்' என்பவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுங்கள். காமம் நல்லது'' என்கிறார் மருத்துவர் காமராஜ்.

காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசிக்கொண்டிருக்கிறோம். கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.

மரியாதை செய்வோம்!