Published:Updated:

மனைவியின் சம்மதமின்றி உடலுறவு... குற்றமா? - மௌனம் காக்கும் மத்திய அரசு...

மனைவியின் சம்மதமின்றி உடலுறவு... குற்றமா?
பிரீமியம் ஸ்டோரி
மனைவியின் சம்மதமின்றி உடலுறவு... குற்றமா?

மனைவியின் விருப்பமின்றி கணவர் வல்லுறவில் ஈடுபடுவது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்ணைக் காயப்படுத்தும்.

மனைவியின் சம்மதமின்றி உடலுறவு... குற்றமா? - மௌனம் காக்கும் மத்திய அரசு...

மனைவியின் விருப்பமின்றி கணவர் வல்லுறவில் ஈடுபடுவது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்ணைக் காயப்படுத்தும்.

Published:Updated:
மனைவியின் சம்மதமின்றி உடலுறவு... குற்றமா?
பிரீமியம் ஸ்டோரி
மனைவியின் சம்மதமின்றி உடலுறவு... குற்றமா?

‘மனைவியின் சம்மதமில்லாமல் கணவன் உடலுறவுகொள்வது குற்றமாக்கப்பட வேண்டும்’ என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில், தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் மத்திய அரசு மெளனம் காத்துவருவது, பெண்ணியச் செயற்பாட்டாளர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில், மத்திய அரசால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாததற்கு என்ன காரணம்?

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் ஏராளம். அவற்றிலும், வெளியுலகின் கவனத்துக்கே வராத குடும்பப் பாலியல் வல்லுறவுகள் இன்னும் அதிகம். அந்த வகையில், குற்றங்களை நிகழ்த்துபவர்களில் பெரும்பாலும் கணவர்களாகவும், பாதிக்கப்படுபவர்கள் மனைவிகளாகவும் இருக்கிறார்கள். மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவர் உடலுறவுகொள்வது, ‘மேரிட்டல் ரேப்’ (Marital Rape) என்று குறிப்பிடப்படுகிறது. ‘மேரிட்டல் ரேப்’ கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது, ‘‘என் முதலிரவில் பெரும் கொடுமையை அனுபவித்தேன். அவரிடம் பேசுவதற்கு முயன்றேன்... ஆனால், அன்றைய இரவு என் விருப்பம் இல்லாமல் மூர்க்கத்தனமாக ஏழு முறை அவர் என்னைப் பாலியல் வல்லுறவு செய்தார். காலையில் என்னால் படுக்கையிலிருந்து எழக்கூட முடியவில்லை... உடல் முழுக்க மரண வலி ஏற்பட்டது!’’ என்று கதறினார்.

மனைவியின் சம்மதமின்றி உடலுறவு... குற்றமா? - மௌனம் காக்கும் மத்திய அரசு...

இதேபோல பாதிக்கப்பட்ட மற்றொரு பெண், தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், கேரளா உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில், ‘மனைவியின் விருப்பத்தையும், உணர்வுகளையும் அவரின் கணவர் மதிக்கவில்லை. மனைவியின் உடல் தனக்குச் சொந்தம் என்ற எண்ணத்தில் அவர் இருந்திருக்கிறார். நவீன சமூகத்தில், கணவனும் மனைவியும் சமம். மனைவியின் உடல் தனக்குச் சொந்தம் என்ற எண்ணத்தில் அவரது விருப்பமில்லாமல் உடலுறவுகொள்வது வல்லுறவுச் செயல்’’ என்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில்தான், ‘மனைவியின் விருப்பமில்லாமல் பாலுறவுகொள்வது குற்றமாகக் கருதப்பட வேண்டும்’ என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2015-ல் வழக்கு தொடர்ந்தன.

‘எவையெல்லாம் பாலியல் வன்கொடுமைகள்’ என்று இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 375 வரையறுத்துள்ளது. பெண்ணின் சம்மதமில்லாமல் உடலுறவுகொள்ளுதல், பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக உடலுறவுகொள்ளுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்களின் மூலமாக இணங்கவைத்து உடலுறவு கொள்ளுதல், பெண் மயக்கநிலையில் இருக்கும்போது உடலுறவுகொள்ளுதல், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை அவளது சம்மதத்துடன் அல்லது சம்மதம் இல்லாமல் உடலுறவுகொள்ளுதல், தனது விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணுடன் உடலுறவுகொள்ளுதல்... ஆகியவை பிரிவு 375-ன் கீழ் கிரிமினல் குற்றங்கள். இவற்றில் சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில்தான், ‘மனைவியின் விருப்பமோ, சம்மதமோ இல்லாமல் அவருடன் கணவர் உடலுறவுகொள்வது குற்றச்செயல் அல்ல என்கிற விதிவிலக்கு நீக்கப்பட வேண்டும்’ என்பதுதான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு.

இந்த வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் இருப்பதால், ஆறாண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. ‘மாநில அரசுகள் மற்றும் பல அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டுத்தான் இது பற்றி முடிவெடுக்க முடியும்’ என்பதே நீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறும் பதில். இதற்காக, மத்திய அரசு பலமுறை கால அவகாசம் பெற்ற நிலையில், சமீபத்தில் மீண்டும் கால அவகாசம் கோரியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்போவதாகத் தெரிவித்தனர். வரும் மார்ச் 2-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகியிடம் பேசினோம். ‘‘கணவனின் உடைமை மனைவி, ‘தன் உடல்மீது பெண்ணுக்குச் சுதந்திரம் இல்லை, கணவர் பாலியல் உறவுகொள்ள மனைவியின் விருப்பம் தேவையில்லை; இதற்கான உரிமம்தான் திருமணம்... என்பன போன்ற கருத்துகள் சமத்துவத்துக்கு எதிரானவை. அதேபோல, ‘மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் பாலியல் செயல்களில் ஈடுபடுவது குற்றம் என்று சட்டம் வந்துவிட்டால், குடும்பக் கட்டமைப்பு தகர்ந்துவிடும்’ என்பது ஆணாதிக்கத்தின் நிலைப்பாடு. அதுதான், மத்திய அரசின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. பல்வேறு அமைப்புகளிடம் ஆலோசனை நடத்தி, தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதாக மத்திய அரசு சொல்கிறது. ஆனால், மத்திய அரசு ஆலோசனை பெறும் பட்டியலில் பெண்கள் அமைப்புகளே இல்லை’’ என்றார் கொந்தளிப்புடன்!

வாசுகி, காயத்ரி ரகுராம்
வாசுகி, காயத்ரி ரகுராம்

பா.ஜ.க-வின் கலை மற்றும் கலாசாரப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் நம்மிடம், ‘‘மனைவியின் விருப்பமின்றி கணவர் வல்லுறவில் ஈடுபடுவது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்ணைக் காயப்படுத்தும். அமெரிக்காவில் சட்டப்படி இது கடும் குற்றம். இந்தியாவில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்கள் பலரும் வெளியே சொல்வதில்லை. விவாகரத்தான பெண்ணையே தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் இந்தச் சமூகத்தில், இத்தகைய கொடுமைகளை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ளும் சூழலில்தான் பெண்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழல் மாற வேண்டும்... அந்த மாற்றம் உடனடியாக நிகழாது. அதற்குக் கொஞ்சம் காலம் தேவை. அதேபோல, பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, இந்தப் பிரச்னையில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அதற்குக் கால அவகாசம் தேவை. நிச்சயமாக மத்திய அரசு பெண்களின் உரிமையை நிலைநாட்டும்” என்றார்.

நியாயமான ஒரு நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு மத்திய அரசுக்கு இவ்வளவு தயக்கம் ஏன்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism