``முதுமையின் கடைசித் தேடல்..!'' - மாற்றம் கொடுத்த அம்மாவின் கடிதம்! #MyVikatan

முதியோர் இல்லத்திலிருந்து வந்திருந்த, அம்மாவின் கடிதத்தை, அலட்சியமாகப் பிரித்து படிக்கத்தொடங்கினான் அகிலன்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
இரவு 9 மணி. முதியோர் இல்லத்திலிருந்து வந்திருந்த, அம்மாவின் கடிதத்தை, அலட்சியமாகப் பிரித்து படிக்கத்தொடங்கினான் அகிலன்.
அன்புள்ள மகனுக்கு,
உன் அம்மா கண்ணீருடன் எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இது கடிதமல்ல, ஒரு தாயின் மனக்குமுறல். நீ நலமாக இருக்கிறாயா? உன் மனைவி மற்றும் குழந்தைகளை கேட்டதாகச் சொல். நீ என்னை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாய். ஆனால் நானோ நீண்ட நேரமாக, அங்குதான் நின்று கொண்டிருந்தேன். நீ திரும்பிவந்து என்னை அழைத்துச் சென்றுவிடுவாய் என்ற நம்பிக்கையில மனதில் ஆழமாக இருந்தது.

வாசலில் நிழலாடும் போதெல்லாம், நீதான் வந்துவிட்டாயோ என கதவிடுக்கின் வழியே உன்னைத் தேடிப்பார்த்து ஏங்குகிறேன். நரைத்த தலைமுடி, சுருங்கிய கன்னங்கள், மங்கிய விழிகள், வளைந்த முதுகு என என் உடலுக்கு வயது கூடினாலும், மனதிற்கு வயது குறைந்துகொண்டுதான் செல்கிறது. முதுமைதந்த தள்ளாட்டத்தினால் என்னால் நடக்க முடியவில்லை. சாப்பிடும் நேரங்களில் கை நடுக்கத்தால் சாதத்தை சிந்திவிடுகிறேன்.
பிறர் உதவியின்றி என்னால் குளிக்க முடியவில்லை. அதனால் என் உடலில் துர்நாற்றம் வருகிறது. என் பேச்சைக் கேட்க நேரமில்லாமல் நீ ஓடிக்கொண்டிருப்பதால், எனக்கு நானே தனியாக பேசிக்கொள்வது புலம்பலாகத் தெரிகிறது. காது கேட்கும்திறன் குறைந்துவிட்டது. ஞாபக மறதி அதிகமாகிவிட்டது. முழங்கால் வலியுடன் சர்க்கரை நோயும் அழையா விருந்தாளியாக ஒட்டிக்கொண்டது. இதைத்தவிர நான் தவறேதும் செய்யவில்லை.

நேற்றைய மருமகள் இன்றைய மாமியார். இன்றைய மருமகள் நாளைய மாமியார் என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ளாததால்தான் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் உருவாகின்றன. புரிதல் இல்லாத உறவில் விரிசல் வருவது இயல்புதான். அந்த விரிசலுக்குப் பிரிவு ஒருபோதும் தீர்வாகாது. பெற்ற மகனே என்னை புரிந்துகொள்ளாதபோது எங்கிருந்தோ வந்த மருமகளைக் குறைகூறி என்ன பயன்?
எப்போதும் உன் சந்தோசம் மட்டுமே என் சந்தோசம். உன்னை நம்பி வந்த பெண்ணை நன்றாகப் பார்த்துக்கொள். உன்னை என் உயிருக்குள் அடைகாத்து, உதிரத்தை பாலாக்கி, பாசத்தில் தாலாட்டி, பல இரவுகள் தூக்கத்தைத் தொலைத்து, உனக்காக வாழ்ந்த எனக்கு, கடல்நீரைக் கடன் வாங்கி உன் கண்ணீரில் நன்றிக்கடன் செலுத்தவேண்டாம். சாகும்வரை உன்னுடன் இருப்பதற்கு அனுமதி கொடுத்தால்போதும். 30 வருடத்திற்குமுன் என் பெற்றோரைப் பிரிந்து உன் அப்பாவைக் கரம் பிடித்தேன்.

எங்களின் இல்லற இன்பத்திற்கு சான்றாக நீ என் மடியில் மகனாகப் பிறந்தாய்... யார் கண் பட்டதோ தெரியவில்லை. எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் உன் அப்பாவைப் பறிகொடுத்தேன். உனக்கு நற்பண்புகளைச் சொல்லிக்கொடுத்தத் தந்தைக்கு, 10 வயதில் நீ கொல்லி பிடித்துச் சென்றதை, என்னால் இன்றளவும் மறக்கமுடியாது. அன்று நீ இருக்கும் தைரியத்தில் உன் அப்பாவின் பிரிவைத் தாங்கிக்கொண்டேன். அன்றுமுதல் நீ மட்டுமே என் உலகமாய் இருந்ததால்தான் என்னவோ, இன்று உன் பிரிவைத் தாங்கும் சக்தி, எனக்கு மனதளவிலும் இல்லை. உடல் அளவிலும் இல்லை.
உனக்கான சுதந்திரத்தைக்கொடுத்து பறக்கச்செய்த என்னை முதியோர் இல்லம் என்னும் தங்கக் கூட்டிற்குள் அடைத்துவிட்டாயே.சுகன்யா நடராஜன்
பெண்ணாய் பிறந்தவளுக்கு பிரிவு ஒன்றும் புதிதல்ல என்பதை நான் நன்கு அறிவேன். இளமையில் என் பசிமறந்து, உன் வயிறை நிரப்பினேன். முதுமையில் நீ கொடுக்கும் ஒரு கைப்பிடிச்சோற்றுக்காக காத்திருக்கிறேன். நகரின் பெரிய பள்ளிக்கூடத்தைத் தேடிப்பிடித்து படிக்க வைத்தேன். அதனால்தான் நீயும் தேடித்தேடிப் பிடித்தாய் எனக்கான முதியோர் இல்லத்தை. அன்று நீ புத்தகத்தை சுமக்க, நான் வறுமையை சுமந்தேன். இன்று உனக்கு சுகமான வாழ்வு கிடைத்துப்போக, நான் சுமையாகிவிட்டேன்.

உன் வீட்டு நாய் முடங்கும் இடத்தைக்கூடத் தர விருப்பமில்லாமல், என்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டாய். நான் இங்குவந்து ஒரு வாரகாலம்தான் ஆகிறது. ஆனால் ஒரு யுகம் கடந்தது போல் உள்ளது. உன் அருகில் இருப்பதே, எனக்கு வரப்பிரசாதம் என்பதை அறிவாயோ? தினந்தோறும் உன் முகம் பாராமல், உன் குரல் கேளாமல் நான்படும் வேதனையை வார்த்தைகளில் விவரித்து சொல்லிவிடமுடியாது.
உனக்கான சுதந்திரத்தைக்கொடுத்து பறக்கச்செய்த என்னை முதியோர் இல்லம் என்னும் தங்கக் கூட்டிற்குள் அடைத்துவிட்டாயே. முதியோர் இல்லத்தைப் பற்றி, நீ அறிந்திடாத உண்மைகளைப் பற்றி சொல்கிறேன் கேள். அன்றைய காலத்தில் ஆதரவற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் முதியோர் இல்லம். இன்றோ இரக்கமில்லாத மகன், அன்பில்லாத மருமகள், அக்கறையில்லாத உறவுகளால் முதியோர் இல்லங்கள் நிரம்பிக்கிடக்கின்றன.

இங்கிருக்கும் பலர் பணக்கஷ்டத்தாலும், மனக்கஷ்டத்தாலும் வந்திருக்கின்றனர். பிள்ளைகள் பெற்றோரைத் தூக்கி எறிய ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். ஆனால் பெற்றோர்களோ பிள்ளைகளைக் குறைகூற ஒரு காரணத்தையும் தேடுவதில்லை. இங்கு மூன்று வேளையும் அறுசுவை உணவளிக்கின்றனர். அது சிறுபிள்ளையில் நீ எச்சில் செய்த உணவிற்கு இணையாகாது. இங்கு முழுவசதி கிடைத்தாலும், அது உன் வீட்டு தாழ்வாரத்தின் கீழ் இருப்பது போன்று நிறைவானதாக இல்லை.
பொழுதுபோக்கு சாதனங்கள் பல இருந்தும், அவை பேரப்பிள்ளைகளோடு கொஞ்சி விளையாடுவதற்கு நிகராகாது. என்னைச் சுற்றி ஆயிரம் ஆட்கள் இருந்தாலும், அநாதையாக இருப்பதுபோல உணர்கிறேன். உன்னை கருவறையில் பத்துமாதம் சுமந்து பத்திரமாகப் பார்த்து வளர்த்து ஆளாக்கியதற்கு, நீ கொடுக்கும் பரிசு முதியோர் இல்லம். பிரசவவலியைக்கூடத் தாங்கிக்கொண்டேன். ஆனால் நீ உயிரோடிருக்கும்போதே என்னை ஆதரவற்றவளாக்கி அனாதையாக்கிவிட்டுச் சென்ற வலியைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.

நம் நாட்டில் நாள்தோறும் புற்றீசல்போல முதியோர் இல்லங்கள் பெருகிகொண்டிருப்பது பெருமைக்குரிய விஷயமல்ல. கவலைக்குரியது. கவனத்திற்குரியது. முதியோர் இல்லம் என்பது நம் சமுதாயத்தின் சாபக்கேடு. இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு, மீண்டும் கூட்டுக்குடும்பங்கள் உருவாவது மட்டுமே. அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
நம் நாட்டில் தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் போராடுகிறோம். அத்தியாவசியமான ஒன்றை கண்டும் காணாததுபோல கடந்துசெல்கிறோம். முதியோர் இல்லங்கள் அழியும்போது, உறவுகள் பலப்படும். உறவுகள் பலப்படும்போது, நம் நாட்டின் கலாசாரமும் பாரம்பரியமும் பாதுகாக்கப்படும். முதுமையின் கடைசித் தேடல் அன்பான பேச்சும் அக்கறையான கவனிப்பும்தான். பெற்றோர்களின் உடல் தளரும்போது, ஊன்றுகோலாய் இருக்க வேண்டிய பிள்ளைகளே அவர்களை வெறுத்து ஒதுக்குவது நியாயமல்ல.

தாய் என்னும் தெய்வத்தை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, கோயிலுக்குச் சென்று வரம் கேட்கும் உங்கள் அறியாமை இருளை யார் அகற்றுவது? அருகிலிருக்கும் தாய்க்கு சேவை செய்யாமல், சமூக வலைதளங்களில் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து சொல்லி என்ன பயன்? இதையெல்லாம் நீ உணர்ந்து தெளியும்போது, உன்னருகே நான் இருப்பேனா என்றுத் தெரியாது. ஏனென்றால் இளமை யாருக்கும் நிரந்திரமில்லை, முதுமை வெகு தூரமுமில்லை. காலத்தை கடல்போல கடந்து கரைஒதுங்கி இருக்கும் கட்டுமரங்கள் நாங்கள்.
பெற்ற பிள்ளைகளை பத்திரமாய் கரைசேர்க்க, கலங்கரை விளக்கமாய் காத்துக்கொண்டிருக்கிறோம். காய்ந்து போன இலைகளை காம்புகள் உதிர்த்துவிடுவதுபோல, எங்களை இல்லங்களில் தள்ளிவிட்டு, ஏதோ சாதனை புரிந்ததுபோல மார்தட்டிக்கொள்வது சரியா? எந்த சூழ்நிலையிலும் பெற்றவர்களை கைவிடாமல் பார்த்துக்கொள்ளும் பிள்ளைகள் கிடைத்துவிட்டால், வாழும் வாழ்வு சொர்க்கமாகிவிடும்.
மகனே, இறுதியாக உனக்கு ஒரு கதை சொல்கிறேன்..
``முதுமையின் காரணமாக, சில நாட்களில் இறந்துபோக போகும் தன் தாயை, மலை உச்சியில் விட்டுவிட்டு வருவதற்காக, தன் முதுகில் சுமந்து கொண்டு சென்றான் ஒருவன்.

போகும் வழியில் அந்த வயதான தாய், சிறுபிள்ளைபோல இலைகளை பிய்த்துக்கொண்டே செல்கிறாள். அதைப் பார்த்து எரிச்சலடைந்த மகன், தாயை திட்டுகிறான். அப்போது அவள், "மகனே, என்னை மலை உச்சியில் இறக்கிவிட்டுத் திரும்பும்போது, நீ பாதை தெரியாமல் தடம் மாறிப் போய்விடக்கூடாது. உனக்கான அடையாளத்திற்காகத்தான், இந்த இலைகளைப் பிய்த்துக்கொண்டே வருகிறேன்." என்று அமைதியாகக் கூறினாள்.
மகனோ தாயின் பேச்சில் நிலைகுலைந்து போனான். சாகும் தறுவாயிலும் தன்னை நினைத்து வருந்தியத் தாயை, கட்டியனைத்துக் கதறினான்.தனக்கு பிள்ளைகள் தீங்கிழைத்தாலும், அவர்களுக்கு நல்லதை நினைத்து வழிகாட்டுபவர்கள் பெற்றோர்கள் என்பதை புரிந்துகொள்... இனிமேலாவது முதியோர் இல்லங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கடிதத்தை முடிக்கின்றேன்.
இந்தக் கடிதம் உனக்கானது மட்டுமல்ல, பெற்றவர்களை பாரமாக நினைத்து, அவர்களை 'முதியோர் இல்லம்' என்னும் சிறையில் தள்ளிவிடும் அனைத்து மகன்களுக்கும் சமர்ப்பணம்.
- இப்படிக்கு உன் வரவை எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருக்கும் தாய்…

பின்குறிப்பு: இந்தக் கடிதத்தை படித்ததும், உன் மகன் கண்ணில் பட்டுவிடாமல் கிழித்து விடு... ஏனென்றால் எதிர்காலத்தில், என்னைப்போல் நீயும் உன் மகனுக்குக் கடிதம் எழுதும்நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
கடிதத்தைப் படித்து முடித்தபோது அகிலனின் கண்கள் சிவந்திருந்தது. இதயம் கனத்திருந்தது. அம்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் மனதில் சவுக்கடியாய் விழுந்திருந்தது. தான்செய்த பெரும் தவற்றை எண்ணி அவன் வருந்தியபோது, மெல்ல விடிந்து கொண்டிருந்தது. அது அவனுக்கான புது விடியலாக இருந்தது.
படுக்கையைவிட்டு எழுந்து சட்டையை மாற்றிக்கொண்டு கிளம்பினான்.
"என்னங்க பால் பாக்கெட் வாங்கப்போறீங்களா?" என்ற மனைவிடம்,
"இல்லை" என்றான் அகிலன்.
"அப்புறம்..?"
"அம்மாவைக் கூட்டிட்டு வரப்போறேன்"என்று சொல்லிவிட்டு, அவள் பதிலுக்குக்கூட காத்திராமல் தெருவில் இறங்கி, விறுவிறுவென நடந்தான்.
- சுகன்யா நடராஜன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.