Published:Updated:

`பிசி பிசினு ஹலீதா கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே மாட்டேங்றா!’ `சில்லுக்கருப்பட்டி’ இயக்குநரின் அம்மா

ஹலீதா ஷமீம் தன் அம்மா மரியம் அல் ஆசியாவுடன்
ஹலீதா ஷமீம் தன் அம்மா மரியம் அல் ஆசியாவுடன்

''விடிய விடிய ஷூட்டிங்ல இருப்பா. காலையில வீட்டுக்கு வந்து ஃபிரெஷ்ஷாயிட்டு அப்படியே செமஸ்டர் எக்ஸாமுக்குப் போவா. அப்படியும் ஒரு செமஸ்டர் எழுத முடியாததால, கோல்டு மெடலை மிஸ் பண்ணிட்டா. அந்த அளவுக்கு படிப்புலேயும் கெட்டிதான்.''

சில தினங்களாக எங்கெங்கு நோக்கினும் 'சில்லுக்கருப்பட்டி'யும் அதன் நாயகி, இயக்குநர் ஹலீதா ஷமீம் பற்றிய பேச்சாகவும்தான் இருக்கிறது. உங்களை இயக்குநராக எங்களுக்குத் தெரியும். 'ஒரு மகளாக உங்களைப்பற்றி தெரிந்துகொள்ள உங்கள் அம்மாவிடம் பேச வேண்டுமே' என்றதும், ''மை காட்... எங்கம்மாகிட்ட பேசப்போறீங்களா... அப்படியே, எனக்குப் பனிமழையில நனையிற மாதிரி இருக்குங்க'' என்று உற்சாகம் காட்டியவர், அடுத்த நிமிடம் தன் அம்மா மரியம் அல் ஆசியாவின் தொலைபேசி எண்ணை அனுப்பி வைத்தார். ஹலீதாவின் அம்மாவைத் தொடர்புகொள்கையில், அவருடைய மூத்த சகோதரி பெனாசிர் பேகமும் நம்மிடம் பேச, சில்லுக்கருப்பட்டிப் பந்தலில் பனங்கற்கண்டு மழை பொழிந்ததுபோல டபுள் ட்ரீட் தமாக்கா... இப்போது பேட்டிக்குள் போவோம்.

ஹலீதா ஷமீம்
ஹலீதா ஷமீம்

உங்க மகளோட சினிமா ஆர்வத்தைத் தெரிஞ்சுக்கிட்ட முதல் தருணம்...

''அவளுக்கு பத்து வயசு இருக்கும். அப்போ நான் அ.தி.மு.க-வுல எம்.எல்.ஏ-வா இருந்தேன். அந்த வேலை நிமித்தமா நான் சென்னைக்குப் போறப்போ எல்லாம், ரெண்டு மூணு பக்கத்துக்கு கதை எழுதி, அந்த பேப்பர்ஸை என்கிட்ட கொடுத்து, 'மா... இதை மணிரத்னம் சார்கிட்டே கொடுங்க, ஷங்கர் சார்கிட்டே கொடுத்திட்டு வாங்க' ன்னு சொல்லுவா. இந்தப் பேப்பரைக் கொண்டுபோய் அவ்ளோ பெரிய டைரக்டர்ஸ்கிட்ட கொடுக்க முடியாதுன்னு அந்தக் குழந்தைகிட்ட எப்படி சொல்றது? சொன்னாலும் அவளுக்குப் புரியுமா என்ன? அதுக்காக என்னால பொய்யும் சொல்ல முடியாது. நீ எழுதின கதைகள் எல்லாத்தையும் பத்திரமா எடுத்து வையும்மா. நீ வளர்ந்தப்புறம் நீயே நேர்ல போயி அவங்ககிட்ட உன் கதைகளைக் கொடுன்னு சொல்லுவேன். பாவம், குழந்தை முகம் வாடிப்போயிடும்.''

ஹலீதா படிப்புல எப்படி?

''ரொம்ப நல்லா படிப்பா. ஊட்டியில டென்த் வரைக்கும் படிச்சா. அதுக்கப்புறம் சினிமாவுல அசிஸ்டன்ட் டைரக்டர் சான்ஸ் தேடணும்னு சொல்லி சென்னைக்கு படிக்க வந்துட்டா. ஆனா, நாங்க கோயம்புத்தூர்ல நர்சிங் காலேஜ் நடத்திட்டு வர்றதால அவங்கப்பாவுக்கு மக டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசை. ஆனா, ஹலீதாவுக்கு சினிமாதான் விருப்பம்னு தெரிஞ்சதும் அவரும் மனசு மாறிட்டாரு. சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில எலெக்ட்ரானிக் மீடியா 5 வருஷ கோர்ஸ் கிடைச்சது அவளுக்கு. அஞ்சு வருஷம் படிப்புலயே லாக் ஆயிட்டா, சினிமாவுல என்ட்ரி கொடுக்கிறது லேட்டாயிடும்னு எஸ்.ஆர்.எம்-ல பி.எஸ்ஸி எலெக்ட்ரானிக் மீடியா படிச்சா.

ஹலீதா ஷமீம் தன் அம்மா மற்றும் அக்காவுடன்
ஹலீதா ஷமீம் தன் அம்மா மற்றும் அக்காவுடன்

அப்போகூட புஷ்கர் காயத்ரியோட 'ஓரம் போ' படத்துல அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தா. விடிய விடிய ஷூட்டிங்ல இருப்பா. காலையில வீட்டுக்கு வந்து ஃபிரெஷ்ஷாயிட்டு அப்படியே செமஸ்டர் எக்ஸாமுக்குப் போவா. அப்படியும் ஒரு செமஸ்டர் எழுத முடியாததால கோல்டு மெடலை மிஸ் பண்ணிட்டா. அந்த அளவுக்கு படிப்புலேயும் கெட்டிதான்.''

காட்சி மொழியில் ஒரு கவிதை... 5 விகடன் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்படும் `சில்லுக் கருப்பட்டி'!

ஹலீதா சினிமாத்துறைக்கு வந்தப்போ எப்படி உணர்ந்தீங்க?

'' ஆரம்பத்துல கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. அவகூட ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கெல்லாம் போயிடுவேன். ஒரு நாள் 'இன்னும் எவ்ளோ நாள் என்கூடவே வருவீங்கம்மா. என் மேல நம்பிக்கை வெச்சு அனுப்புங்கம்மா'ன்னு சொன்னா. அவ ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு. அவ மனசுக்குப் பிடிக்கலைன்னா அந்த இடத்துல இருக்கவே மாட்டா. எதுக்காகவும் என் பொண்ணு அவ சுயத்தை விட்டுக்கொடுக்க மாட்டா.

Halitha shameem with her Mom
Halitha shameem with her Mom

ரொம்பத் துணிச்சலான பொண்ணு. அவ எது சொன்னாலும், செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும். வீட்ல அவதான் சின்னவ. அவளுக்கு மேல கல்யாணமான அக்கா இருக்கா. ஆனா, எல்லாருக்கும் ஹலீதா சொல்றதுதான் சரின்னு படும். தெளிவான பொண்ணு. நிறைய புத்தகங்கள் வாசிப்பா. 'ஏலே', 'மின்மினி'னு பிசியாக இருக்கிறதால கல்யாணத்தைப்பத்தி மட்டும் யோசிக்கவே மாட்டேங்கிறா. அதுவும் நடந்துட்டா, நான் ரொம்ப சந்தோஷமாயிடுவேன்.''

'சில்லுக் கருப்பட்டி' பார்த்ததும் எப்படி ஃபீல் பண்ணீங்க?

பிரிவியூ ஷோ பார்த்ததும் எனக்கு சந்தோஷத்துல வார்த்தையே வரலை. அழுகைதான் வந்துச்சு. கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து ஆசீர்வாதம் செஞ்சேன். ஹலீதா என்கிட்ட எதையும் சர்ப்ரைஸா தான் சொல்லுவா. 'சில்லுக்கருப்பட்டி' விஷயத்துலயும் அப்படித்தான். ஆனா, அவங்க அக்காகிட்ட எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ணிப்பா'' என்றவர், தன் மூத்த மகளிடம் போனைக் கொடுத்தார்.

அக்கா குடும்பத்துடன் ஹலீதா ஷமீம்
அக்கா குடும்பத்துடன் ஹலீதா ஷமீம்

''எட்டாவது படிக்கிறப்போவே என் தங்கை, 'ஒரு புல்லாங்குழலின் புதுராகம்'னு ஒரு கவிதைத் தொகுப்பு எழுதியிருக்கா. காலேஜ் படிக்கிறப்போ, குறும்படங்கள் எடுக்க ஆரம்பிச்சுட்டா. என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி அவளோட கனவுகள் பத்தி நிறைய பேசுவா. அவளையும் சில்லுக்கருப்பட்டி படம் பத்தியும் பாராட்டி வர்ற ட்வீட்டையெல்லாம் நான்தான் அவளுக்கு ஃபார்வர்டு பண்ணிக்கிட்டிருக்கேன். அந்தப் படத்தை இதுவரைக்கும் நான் எட்டு தடவை பார்த்துட்டேன். என் தங்கை எழுதுற வசனங்களுக்கு நான் விசிறி. அவளுக்கு அன்புங்கிற விஷயத்து மேல நம்பிக்கை அதிகம். அதைத்தான் சில்லுக்கருப்பட்டியில சொல்லியிருக்கா. ஹலீதாவோட அக்காதானே நீங்கன்னு மத்தவங்க கேட்கிறப்போ ரொம்பப் பெருமையா இருக்குங்க'' என்பவரின் குரலில் தங்கை மீதான பிரியம் பொங்கிவழிகிறது.

சினிமா விமர்சனம்: சில்லுக் கருப்பட்டி
அடுத்த கட்டுரைக்கு