``நான் கொஞ்ச நாளைக்கு முன்பு, ஒரு திருநங்கையோட வீடியோவை பார்த்தேன். அதில், பிறக்கும்போதே அவங்களோட ஆணுறுப்பு சிறியதாக இருந்தாகவும், அதனாலதான் அவங்க திருநங்கையாக மாறுனதாகவும் சொன்னாங்க. என்னோட பையனுக்கு இப்போ ஆறு வயசாகுது. பிறந்ததுல இருந்து அவனோட உறுப்பு கொஞ்சம் சின்னதா இருக்கு. அவன் வளர்ந்த பிறகு திருநங்கையாகிடுவானா... பயமா இருக்கு டாக்டர்'' என்றொரு மெயில், uravugal@vikatan.com-க்கு வந்திருக்கிறது. இவருடைய சந்தேகத்துக்கு பதில் சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.
``டிரான்ஸ்ஜெண்டர் எனப்படும் மாற்றுப் பாலினத்தவர்களின் உடல், ஜெனிடிக் மற்றும் ஹார்மோன் ஆகியவற்றை மருத்துவ முறைப்படி பரிசோதனை செய்தால், இவர்கள் ஆண் அல்லது பெண் என ஒரு பாலினத்தைச் சார்ந்தே இருப்பார்கள். ஆனால், `என் உடம்பு ஆணாக இருந்தாலும் பெண்ணாக உணர்கிறேன்' என்பார்கள். சமுதாயம் இவர்களின் உடலமைப்பை வைத்து ஆண்/ பெண் என்று சொன்னாலும், `நான் ஆணில்லை / நான் பெண்ணில்லை' என்று நினைப்பார்கள்.
இந்த நிலையை மருத்துவம், `Gender Identity Crisis' என்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை மருத்துவரீதியாக இதுவரை கண்டறியவில்லை. `ஜெனிடிக் கோளாறு' என்கிற தியரி ஒன்று இருக்கிறது. ஆனால், அது உண்மை கிடையாது. தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது, குழந்தையின் செக்ஸ் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு நிகழ்ந்திருந்தால், பின்னாளில் டிரான்ஸ்ஜெண்டர் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. இதுவும் நிரூபிக்கப் படவில்லை.
சிலர் இன்டர்செக்ஸையும், டிரான்ஸ்ஜெண்டரையும் குழப்பிக் கொள்கிறார்கள். அது வேறு, இது வேறு. இன்டர்செக்ஸ் நிலையில், ஆணாக இருந்தால், ஆணுறுப்பு முழுமையாக வளர்ந்திராமல் பெண்ணுறுப்பும் சேர்ந்து வளர்ந்திருக்கும். பெண்ணாக இருந்தால், பெண்ணுறுப்பு முழுமையாக வளர்ந்திராமல் ஆணுறுப்பும் சேர்ந்து வளர்ந்திருக்கும்.
திருநங்கை ஒருவரின் காணொளியைப் பார்த்ததால், அவருடைய பேச்சையும் உங்களுடைய மகனுடைய உறுப்பின் அளவையும் இணைத்துப் பார்த்து பயப்படுகிறீர்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. அந்தத் தகவலைச் சொன்னவர் ஒரு மருத்துவர், அல்லது டிரான்ஸ்ஜெண்டர் தொடர்பாக ஆராய்ச்சி செய்த அறிவியலாளர் என்றால் நீங்கள் பயப்படுவதில் அர்த்த மிருக்கிறது. அப்படியில்லாதபட்சத்தில் நீங்கள் இப்படி பயப்படுவது தேவையற்றது. தவிர, உங்கள் மகனுக்கு இப்போது 6 வயதுதான் ஆகிறது. அவன் வளர்ந்த பிறகு, அவனுக்கு விறைப்புத்தன்மை வரும்போது ஆணுறுப்பின் நீளம் 5 செ.மீ இருந்தால் போதும். இன்னமும் உங்கள் பயம் தீரவில்லையென்றால் பாலியல் மருத்துவரை நேரில் சந்தியுங்கள்.