Published:Updated:

விவாகரத்து, தோல்வியல்ல... கற்பிதங்கள் களைவோம்!

விவாகரத்து
பிரீமியம் ஸ்டோரி
விவாகரத்து

#Lifestyle

விவாகரத்து, தோல்வியல்ல... கற்பிதங்கள் களைவோம்!

#Lifestyle

Published:Updated:
விவாகரத்து
பிரீமியம் ஸ்டோரி
விவாகரத்து

2016-ம் ஆண்டு பிபிசி வெளியிட்ட ஓர் அறிக்கை, உலக அளவில் இந்தியாவில்தான் விவாகரத்துகள் மிகவும் குறைவு என்று கூறியது.

அந்த அறிக்கையின்படி, சராசரியாக இந்தியாவில் நடக்கும் 1,000 திருமணங்களில் 13 மட்டுமே விவாகரத்து வரை செல்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கையில், இது ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாகத் தெரிய லாம். ஆனால், நடைமுறை இப்படியில்லை என்பதுதான் யதார்த்தம்.

ஒரு திருமண உறவில் வாழவே முடியாத சூழல் வரும்போது, அதை முறித்துக்கொள்ளும் உரிமை, இந்தியாவில் இன்றளவும் பல பெண் களுக்குக் கிடைப்பதில்லை. சமூகம் மற்றும் பொருளாதாரம் என அதற்கு இரண்டு தடைகள் இருக்கின்றன.

பொருளாதார சுதந்திரத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் இருக்கும் சமத்துவம் குறித்து உலகப் பொருளாதார மன்றம், 2020-ம் ஆண்டில் நடத்திய ஓர் ஆய்வில், 153 நாடுகளில் இந்தியாவுக்கு 112-வது இடம் கிடைத்தது. பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் இல்லாத ஓர் இந்தியப் பெண், தன் கணவனின் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறாள்.

அடுத்தது சமூக அழுத்தம். அவதூறு பேச்சுகள், உறவினர்களால் ஒதுக்கப்படுவது, சுற்றியிருக்கும் ஆண்களின் தவறான பார்வை மற்றும் அணுகுமுறை என்று அனைத்தையும் அவள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சமூகத்தின் வார்த்தைகளுக்கு பயந்து, குழந்தைகளின் கல்வி, நலன் போன்ற செலவுகள் உட்பட பொருளாதாரச் சிக்கலுக்கு பயந்து, உறவுக்காரர்களால் ஒதுக்கப்படுவதற்கு பயந்து... இப்படி பயந்து பயந்தே வாழ்ந்து முடிப்பவர்கள் எத்தனையோ பேர்.

`கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்ற தவறான போதனையில் எத்தனையோ பெண்களின் நிம்மதி மட்டு மல்ல, தனக்காக வாழும் உரிமையும் பறிக்கப் படுகிறது.

 பூர்ண சந்திரிகா,  சாந்தகுமாரி
பூர்ண சந்திரிகா, சாந்தகுமாரி

அப்படியானால் விவாகரத்து என்பது வாழ்வின் தோல்வியா?

இதுகுறித்துப் பேசிய மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா, ``சில விஷயங்களை நாம் தமிழர் கலாசாரம் என்ற பெட்டிக்குள் அடக்கிவைத்துள்ளோம். பெரும்பான்மை யான பெண்கள், எத்தனை துன்பங்கள் வந்தாலும், விவாகரத்து என்ற முடிவை எடுப்பதில்லை. அரிதாகச் சில பெண்கள் அந்தத் திருமண உறவில் தொடர்ந்தால் தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ ஆபத்து வரும் என்ற நிலைக்குத் தள்ளப்படும்போது பிரிவைப் பற்றி யோசிக்கிறார்கள்.

அப்படி, அந்த முடிவை எடுக்கும்போது, குடும்பத்தார், சுற்றம், காவல்துறையினர், சட்ட ஆலோசகர்கள், உளவியல் ஆலோச கர்கள் எனப் பலரும் சமாதானம் செய்து, பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்த்து வைப்பதையே நல்ல தீர்வாகக் கையில் எடுக்கிறார்கள். ‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்போ... உனக்காக இல்லாட்டாலும் உன் பிள்ளைகளுக்காகப் பொறுத்துக்கோ’ என்ற எக்ஸ்ட்ரா அட்வைஸோடு அந்தப் பெண்ணை மூளைச்சலவை செய்து சரிபட்டு வராத உறவுக்குள் திரும்பத் தள்ளி விடுகிறார்கள். ஓர் ஆணுக்குக் குடிப்பழக்கம் இல்லை, அடிக்க மாட்டார், மற்ற பெண் களோடு உறவு கிடையாது என்றாலே அவர் ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ என்று அர்த்த மாகாது. மேற்சொன்ன பழக்கங்கள் இல்லாத கணவருடன் சேர்ந்து வாழ்வதில் என்ன பிரச்னை என்று கேள்வி கேட்கப்படுகிறாள் பெண். இவற்றையெல்லாம் தாண்டி, இரு வருக்கும் உறவு சுமுகமற்றுப் போக பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை சகித்துக் கொண்டு வாழ முடியாமல், பிரிந்து வருவ தற்கான வாய்ப்பை இந்தச் சமூகம் பெண் ணுக்கு வழங்குவதில்லை. அதையும் மீறி அவள் அந்த உறவை முறித்துக்கொண்டால், அந்தப் பெண் மீதுதான் இந்தச் சமூகம் குற்றம் சுமத்துகிறது.

இந்த மனநிலை மாற வேண் டும். மகிழ்ச்சியற்ற வாழ்வை விட்டு விலகுவது பெண்ணின் உரிமை. அதைப் புரிந்துகொண்டு இந்தப் போராட்டத்தில் அவளுக்கு சட்டம் முதல் சமூகம் வரை அனைத்தின் ஆதரவும் தேவை” என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவாகரத்து, தோல்வியல்ல...
கற்பிதங்கள் களைவோம்!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி, “நம்முடைய சமூக அமைப்பில், விவாகரத்து என்பது குற்றச்செயலாக, குடும்ப கௌரவத்தைச் சீர்குலைக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், குடும்ப நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இந்த 35 ஆண்டுகளில், சமூகத்தின் பார்வையில் ஒரு மாற்றம் வந்துள்ளதை உணர்கிறேன். தேவைப்பட்டால் விவாகரத்து வரை செல்வதில் தவறில்லை என்ற மனநிலை ஓரளவுக்கு வந்துள்ளது. இருப்பினும், ‘அந்தக் காலத்துல நாங்கெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழலையா’ என்று மகளுக்கு அறிவுரை சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். இந்தப் பார்வையில் மாற்றம் வர வேண்டிய நேரம் இது.

இன்று, குடும்ப வன்முறை செய்கிற ஆணோடு வாழ மாட்டேன் என்று சொல்லக் கூடிய துணிச்சல் பெண்களுக்கு வந்துள்ளது. கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரமே காரணங்கள். விவாகரத்து என்று வந்தால், குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவும் பல  பெண்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி, குழந்தை உடனடியாகத் தாயிடம்தான் ஒப்படைக்கப் படும். அதோடு, ஒரு பெண் குடும்ப வன்முறைக்கு ஆளானது நிரூபிக்கப்பட்டால், அவள் வசிக்கும் வீட்டு வாடகையைக்கூட அந்த ஆணையே கொடுக்க வைக்க முடியும்.

விவாகரத்து, தோல்வியல்ல...
கற்பிதங்கள் களைவோம்!

ஒரு பெண்ணுக்கு அவருடைய வாழ்க்கை தான் முக்கியம்.  பாலியல் வன்முறையையோ, அடிமைத்தனத்தையோ, சுய மரியாதையின்மையோ, பாலியல் அதிருப்தியையோ சகித்துக்கொண்டு, அந்தப் பந்தத்தை அவள் தொடர வேண்டிய அவசிய மில்லை.

அதேநேரம், பழகியவுடனே திருமணம் செய்துகொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு முன்பே விவாகரத்து செய்கிற பெண்களும் இருக்கிறார்கள். இவையெல்லாம், தவிர்க்கப்படக் கூடியவை. அதீத குடிப்பழக்கம், வன்முறை, திருமணம் தாண்டிய உறவு ஆகியவை இருந்தால், அந்த உறவைத் தொடர வேண்டிய

தில்லை. ஆனால், இவற்றைத் தாண்டி விட்டுக்கொடுத்தல் தேவைப்படும் இடங்களில், இருவரும் விட்டுக் கொடுத்து, புரிந்துகொண்டு வாழ முடியும். அவற்றுக்கெல்லாம் விவாகரத்து வரை யோசிக்க வேண்டியதில்லை” என்கிறார்.

திருமணம் என்பதை ஒரு வெற்றி யாகவோ, சாதனையாகவோ பார்க்கத் தேவையில்லை. திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக் கும் இடையிலான ஒப்பந்தம். இருவருடைய வாழ்க்கைப் பாதை யிலும் அது ஒரு பகுதி. அந்தப் பாதையில் இடையூறுகள் வரலாம். இருவரும் சேர்ந்து அவற்றைக் களைந்து கடப்பதுதான் அந்தப் பயணத்தை நிறைவு செய்யும்.

மாறாகக் கொஞ்சம்கூடச் சரிப் பட்டு வராத அந்தப் பயணத்தை, கஷ்டப்பட்டுக் கடப் பதைத் தவிர்த்துவிட்டு வாழ்வின் அடுத்தகட்டத்தைப் பார்க்க வேண்டியது அவசியம்.

தனக்கு மகிழ்ச்சியளிக்காத, நிம்மதியற்ற உறவிலிருந்து வெளியேறுவதும் அதன் பிறகு தனக்குரிய வாழ்வை மீண்டும் அமைத்துக்கொள்வதும் பெண்ணின் உரிமை. தனக்குச் சிறிதும் பொருத்தமற்ற உறவிலிருந்து வெளி யேறுவதன் மூலம் அவர் விடுதலை யடைகிறார்.

அது தோல்வியல்ல... புதிய பயணத்துக்கான ஆரம்பம்.

****

வாழ்ந்துகாட்டுவதே பதிலடி - காயத்ரி ரகுராம்

விவாகரத்துக்குப் பிறகு, ஒரு பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் பார்வையே மாறிவிடுகிறது. பிரிவு, அது தந்த அதிர்ச்சியி லிருந்து மீண்டு வருவது மிகப் பெரிய சிரமம். நானும்கூட அப்படியொரு காயத்திலிருந்து மீண்டு வந்தவள்தான். விவாகரத்துக்குப் பிறகு, முத்திரை குத்தப்படுவது, பல அவப்பெயர்களுக்கு ஆளாவது என அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்னொரு திருமணத்தைப் பற்றி யோசிக்கப் பிடிக்காத அளவுக்கு இந்தச் சமூகம் என்னை தவறாகப் பேசியுள்ளது.

நாம் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும். இந்தச் சமூகத்தில், ஒரு பெண்ணைத் தனியாக முன்னேற யாரும் விடமாட்டார்கள். சொந்த குடும்பத்தினராகவே இருந்தாலும் கை கொடுக்க மாட்டார்கள். நாம் வளர்ந்து, வாழ்ந்து காட்டுவதே, அவதூறு பேசுபவர்களுக்குக் கொடுக்கும் பதிலடியாக இருக்கும்.

காயத்ரி ரகுராம் - நளினி
காயத்ரி ரகுராம் - நளினி

இந்தத் தலைமுறைப் பெண்கள் தெளிவானவர்கள் - நடிகை நளினி

விவாகரத்துக்குப் பிறகு, நான் மிகவும் நொறுங்கிப் போயிருந் தேன். அண்ணியென்று அழைத்தவர்களே தவறாக அணுகியிருக் கிறார்கள். அனைத்தை யும் கடந்து, இரண்டு குழந்தை களையும் வளர்த்து ஆளாக்கினேன். எனக்குள் ஒரு தைரியசாலி இருப் பதையே விவாகரத்துதான் எனக்கு உணர்த்தியது.

நம்மால் நம் குழந்தைகள் பாதிக்கப் படக் கூடாது. அவர்களுக்கு சொத்து களைச் சேர்க்க வேண்டியதில்லை. கல்வி, நம்பிக்கை, தைரியத்தைக் கொடுப்பதுதான் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இந்தக் காலத்துப் பெண்கள் தெளி வாகவே இருக்கிறார்கள். அவர்கள் திருமணமானவுடன், குழந்தை பெற்றுக்கொள்வதில் அவசரம் காட்டு வதில்லை.

ஒருசில ஆண்டுகள் வாழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகே, குழந்தை பெற்றுக் கொள் கிறார்கள். காரணம் அவர்கள் படித் தவர்களாக, தைரியமானவர்களாக, சுதந்திரமானவர்களாக, இருக்கிறார்கள். இது மிகவும் நல்ல விஷயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism