Published:Updated:

கொரோனாவை மிஞ்சும் விவாகரத்துத் தொற்று... வரமா, சாபமா?

விவாகரத்து
பிரீமியம் ஸ்டோரி
விவாகரத்து

கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் இல்லாத குடும்பங்களே இருக்க முடியாது

கொரோனாவை மிஞ்சும் விவாகரத்துத் தொற்று... வரமா, சாபமா?

கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் இல்லாத குடும்பங்களே இருக்க முடியாது

Published:Updated:
விவாகரத்து
பிரீமியம் ஸ்டோரி
விவாகரத்து

கொரோனா எனும் பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, அடிக்கடி கைகளைக் கழுவுவது, ஆறடி இடைவெளி, முகக்கவசம் என கடந்த இரண்டாண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்கிடை யில் சத்தமே இல்லாமல் இன்னொரு தொற்றும் பரவிக்கொண்டிருக்கிறது. அதன் பெயர் விவாகரத்துத் தொற்று.

அமெரிக்காவின் பிரவுன் யுனிவர் சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் ரோஸ் மெக் டெர்மாட் தலைமையிலான குழு, விவாகரத்து தொடர்பான ஓர் ஆய்வை மேற் கொண்டது. அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு விவாகரத்துத் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதென்ன விவாகரத்துத் தொற்று என்கிறீர்களா?

குடும்ப உறுப்பினரோ, நெருங்கிய நண்பரோ விவாகரத்து செய்திருக்கும் பட்சத்தில், உடனிருக்கும் நபர்களுக்கும் மணமுறிவு எண்ணம் எழுவதுதான் விவாகரத்துத் தொற்று. இந்த எண்ணத்துக்கு `விவாகரத்துத் தொற்று' (Divorce Contagion) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘அதெல்லாம் வெளிநாட்டு விவகாரம்... நம்மூர்ல எல்லாம் இப்படி நடக்குமா’ என்று கேள்வி எழுப்பினால் நீங்கள் வேற்று கிரகவாசி யாகப் பார்க்கப்படுவீர்கள். சீனாவிலிருந்து கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்ததுபோல, விவாகரத்துத் தொற்றும் மேற்கத்திய நாடுகளி லிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து பல வருடங்கள் ஆகின்றன என்கிறார்கள் சட்டம் படித்தவர்கள்.

கொரோனாவை மிஞ்சும் விவாகரத்துத் தொற்று... வரமா, சாபமா?

``தமிழகத்தில் விவாகரத்துத் தொற்று சமூகப் பரவலாக மாறி பல வருடங்கள் ஆகின்றன. கடந்த சில வருடங்களில் விவாக ரத்து வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பது உண்மைதான். அப்படி மணவிலக்கு கேட்டு வருவோரில் வயதானவர்களும் இருப்பது இன்னும் ஆச்சர்யம்'' - கொரோனாவை மிஞ்சும் ஷாக் டேட்டாவுடன் ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.

``விவாகரத்து முடிவெடுத்து வழக் கறிஞரை அணுகுவோ ருடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ, நண்பர்களோ துணைக்கு வருவது இயல்பு. அப்படி வருவோர், சில நாள்களில் தங்களுக்கும் வாழ்க்கையில் பிரச்னை என்றும் விவாகரத்து வேண்டும் என்றும் முடிவுக்கு வருவதையும் கடந்த சில வருடங்களில் அதிகம் பார்க்கிறோம்.

கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் இல்லாத குடும்பங்களே இருக்க முடியாது. அப்படிப் பிரச்னைகள் வரும்போது, வீட்டி லுள்ள பெரியவர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ, அவர்களுக்குள் சமாதானம் பேசி, சண்டைகளைத் தீர்த்துவைத்த காலம் இன்று இல்லை. மாறாக, அப்படி அறிவுரை சொல்பவர் விவாகரத்து செய்தவராக இருந்து விட்டால், தன் அனுபவத்தை அவர்களுக்கு உதாரணம் காட்டி, `சரிப்படாத வாழ்க்கையில எதுக்கு கஷ்டப்படணும்... நான் டைவர்ஸ் பண்ணிட்டு, இன்னிக்கு சந்தோஷமா இல்லையா... இன்னிக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை' என்பது போன்ற வார்த்தை களால் மனதை மாற்றுகிறார்கள்'' - விவாக ரத்துத் தொற்றுக்கான தொடக்கம் சொல்லும் ஆதிலட்சுமி, அடுத்தும் அதிர்ச்சித் தகவலோடு தொடர்கிறார்.

‘`மகளின் விவாகரத்து வழக்குக்காக துணைக்கு வந்த அந்த அம்மாவுக்கு 65 வயதிருக்கும். மகளின் வழக்கு முடிந்து விவாகரத்து உறுதியான நிலையில், தனக்கும் விவாகரத்து வேண்டும் என்றார். அவர் சொன்னதை என்னால் நம்பவே முடிய வில்லை. ‘என்ன சொல்றீங்க... நிஜமாதான் சொல்றீங்களா... இந்த வயசுல ஏன் இப்படியொரு முடிவு...’ என அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினேன். ‘மகளோட வாழ்க்கைக்காகத்தான் இத்தனை வருஷங்கள் பொறுமையா இருந்தேன். இப்ப அவ வாழ்க்கையும் நல்லா இல்லை. என் வாழ்க்கை யும் நல்லா இல்லை. இனி நான் யாருக்காகப் பார்க்கணும்?’ என்று அவர் சொன்னதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது’’ என்று சொல்லி சற்றே இடைவெளிவிட்ட ஆதிலட்சுமி, தொடர்ந்தார்...

ஆதிலட்சுமி
ஆதிலட்சுமி

‘`இந்த விஷயத்தை இரண்டு விதமாக அணுகலாம். கொஞ்சமும் பொருந்திப்போகாத உறவை பல வருடங்களாக சகித்துக் கொண் டிருப்பார்கள். பிரிய நினைத்தாலும் அந்த முடிவை எடுப்பதில் அத்தனை வருடங்களாக அவர்களுக்கு இருந்த தயக்கம், அருகிலிருக்கும் ஒருவர் எடுக்கும்போது இவர்களுக்கும் தகர்கிறது. காலம் தாழ்த்திய முடிவு என்றாலும் விரும்பாத வாழ்க்கையில் இருந்து விடுபட அப்போதாவது அவர்களுக்கொரு தைரியம் வருவதை ஒருவகையில் பாராட்டலாம். அதே நேரம், பிரச்னையை அணுகும்விதம் என்பது நபருக்கு நபர் வேறுபடும். சாதாரண விஷயத்தைக்கூட பூதாகரமாக்கி, அதை நிரந்தர பிரிவு வரை கொண்டு செல்ல நினைக் கிறவர்களைப் பார்த்து, மற்றவர்களும் அதே முடிவை எடுப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

புகழின் உச்சியில் உள்ள சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று மக்களின் ஆஸ்தான நபர்களின் விவாகரத்து, அவர் களின் மீது அபிமானம் கொண்டவர்களை பாதிப்பதும் நடப்பதுண்டு.

ஒரு பிரபலத்தின் விவாகரத்து, ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பேசப்படும்போது மனக் கசப்பில் இருக்கும் தம்பதியர் அவர்களை அறியாமலேயே விவாகரத்து முடிவை நோக்கி நகரவும் வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க ஒரே வழி, நம் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கை யோடு பொருத்திப் பார்க்காமல் இருப்பது மட்டும்தான்’’

- தொற்றைத் தடுக்கும் வழி சொல்லும் ஆதிலட்சுமி, விவாகரத்து வழக்குக்காக தன்னிடம் வருவோரை முதல் ஒன்றிரண்டு முறை மட்டுமே உறவினர்கள், நண்பர்களுடன் வர அனுமதிக்கிறார். அடுத்தடுத்த சந்திப்பு களின்போது சம்பந்தப்பட்ட தம்பதியருக்கு மட்டுமே அனுமதி.

திருமணத் தொற்று தவிர்க்கப்பட்டாலே, விவாகரத்துத் தொற்று குறையும்!

‘`விவாகரத்துத் தொற்று பற்றி பேசுவதற்கு முன் ‘திருமணத் தொற்று’ பற்றியும் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தேவையற்ற விவாகரத்துகளைத் தடுப்பது குறித்துப் பேச வேண்டுமென்றால் தேவையற்ற திருமணங்கள் குறித்தும் பேச வேண்டும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த, காக்னிட்டிவ் பிஹேவியரல் மற்றும் செக்ஸ் தெரபிஸ்ட் சுனிதா மேனன்.

``விவாகரத்துத் தொற்று என்பதை நான் வேறு விதமாகப் பார்க்கிறேன். ஒருவர் தான் அனுபவிக்கும் வலி, வேதனையை சகித்துக் கொள்ள முடியாமல் திருமண உறவிலிருந்து வெளியேற நினைக்கிறார். அதே பிரச்னையை அனுபவிக்கும் இன்னொரு நபருக்கும் அந்த நபரின் முடிவு ஒரு தைரியத்தைக் கொடுப்பதால் அவரும் அதை நோக்கி நகர்வதை நான் பாசிட்டிவ்வாகவே பார்க்கிறேன். `துன்புறுத்தும் இந்த உறவி லிருந்து என்னாலும் வெளியேற முடியுமா' என யோசிக்கிறார்கள். திருமண உறவில் பிரச்னைகளோடு விவாகரத்து செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பத்துடன் என்னிடம் கவுன்சலிங்குக்கு வருவோரிடம் ‘இந்தத் திருமணத்தில் இருந்துகொண்டு அதன் பாதகத்தை அனுபவிப்பதா, விவாகரத்து செய்துவிட்டு அதன் சாதகத்தை அனுபவிப் பதா - இரண்டில் எது என முடிவு செய்யுங்கள்’ என்பேன்.

சுனிதா மேனன்
சுனிதா மேனன்

திருமணம் என்ற உறவில் இருப்பதன் சாதகங்களையும் விவாகரத்து தரும் பாதகங் களையும் பற்றிதான் மக்கள் பெரும்பாலும் யோசிக்கிறார்கள். அதேசமயம், சரிப்பட்டு வராத திருமண உறவைத் தொடர்வதில் உள்ள பாதகங்களையும், விவாகரத்து செய்வதால் ஏற்படும் சாதகங்களையும் யோசித்தால் இந்தக் குழப்பம் வராது. அதற் காக, விவாகரத்து செய்துவிட்டால் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறிவிடும் என்றும் நினைக்க வேண்டாம். அந்த வாழ்க்கையிலும் பிரச்னைகள் இருக்கும். விவாகரத்தானவர்களில் எத்தனையோ பேர், ‘மறுபடி கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்’ என்று சொல்வதையும் கேட்கிறேன்’’

- மனித உளவியல் பகிர்பவர், விவாகரத்துத் தொற்று என்பதைவிட ‘மந்தை மனநிலை’ (Herd Mentality) என்று சொல்வது சரியாக இருக்கும் என்கிறார்.

தொடர்ந்து பேசிய சுனிதா மேனன், ‘`திருமணம் என்ற விஷயத்தைத்தான் நான் தொற்றாகப் பார்க்கிறேன்.பெண்ணுக்கு 24-25 வயதானால் போதும்... ‘உன் வயசுப் பொண் ணுங்களுக்கெல்லாம் கல்யாணமாயிடுச்சு. குழந்தையே பெத்துட்டாங்க’’ என்று சொல்லிச் சொல்லியே அவளைத் திருமணத்துக்குள் தள்ளுகிறார்கள். திருமணம் வேண்டுமா, வேண்டாமா என்ற சாய்ஸ் அவளுக்கு வழங்கப்படுவதே இல்லை. ‘எல்லா பொண் ணுங்களும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க, குழந்தை பெத்துக்கறாங்க... நீயும் அப்படியே பண்ணு’ என்ற அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால்தான் திருமணத்தைத் தொற்று என்கிறேன்.

வாழ்க்கைத்துணை வேண்டுமா என முடிவெடுப்பதில் தொடங்கி, அவரைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்வரை முதலில் பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும். திருமணத் தொற்று தவிர்க்கப்பட்டாலே, விவாகரத்துத் தொற்றும் குறையும்’’ என்கிறார்.

*****

உள் அறை விசாரணை... இதுவும் ஒரு காரணம்

பல திரைப்படங்களில் பார்த்திருப்போம், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்... பார்வையாளர்களுக்கான வரிசையில் வழக்குக்கு சம்பந்தமில்லாத பொது மக்களும் அமர்ந்து அந்த விசாரணையைப் பார்ப் பார்கள். ஆனால், திரைப்படங்கள் காட்டுவது போல எல்லா வழக்குகளையும் பொதுமக்கள் இப்படிப் பார்க்க முடியாது.

நீதிமன்றங்களில் ‘இன்கேமரா புரொசீடிங்ஸ்’ என்றொரு முறை உண்டு. அதாவது குடும்பநல வழக்குகள், போக்ஸோ உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் என குறிப்பிட்ட சில வழக்குகளை நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தரப்பினரோடு உள் அறையில் வைத்து விசாரணை நடத்துவார்கள். பார்வையாளர்களோ, மூன்றாம் நபர்களோ இந்த விசாரணையைப் பார்க்க முடியாது. குடும்பநல நீதிமன்றங்களிலும் இன்கேமரா விசாரணை வசதி உண்டு. ஆனால், உயர் நீதிமன்றத்தில் எந்த வழக்குக்கும் இன்கேமரா விசாரணை கிடையாது. ஆனாலும் உயர் நீதிமன்றத்திலும் விவாகரத்து உள்ளிட்ட குடும்பநல வழக்குகள் சிலவற்றை விசாரிக்கும் போது பெரும்பாலான நீதியரசர்கள் தங்கள் வேலைகள் முடிந்தபிறகு தனி அறையில் இன்கேமரா முறையில் விசாரிப்பதும்கூட, இத்தகைய சம்பவங்கள் மற்றவர்களை பாதிக்காமலிருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான்.

விவாகரத்துத் தொற்று... அவள் விகடன் கருத்துக்கணிப்பு

குடும்ப உறுப்பினரோ, நெருங்கிய நண்பரோ விவாகரத்து செய்திருக்கும்பட்சத்தில், உடனிருக்கும் நபர்களுக்கும் மணமுறிவு எண்ணம் ஏற்படும் என்றும், இந்த எண்ணத்துக்கு ‘விவாகரத்து தொற்று’ (Divorce Contagion) என்றும் பெயர் வைத்திருக்கிறது அமெரிக்காவின் பிரவுன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் ரோஸ் மெக்டெர்மாட் தலைமையிலான ஆய்வுக்குழு. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என `அவள் விகடன்' வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன்படி...

கொரோனாவை மிஞ்சும் விவாகரத்துத் தொற்று... வரமா, சாபமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism